Chennaiyil Thiruvaiyaru Home
 

Press Release

இசை வாத்தியக்கலைஞர்கள் தாங்கள் இசைக்கும் கருவிகளான ஹார்மோனியம், வீணை, வேய்ங்குழல் (புல்லாங்குழல்), ஸிதார், ஸாரங்கி ,ஸரோட், ஜலதரங்கம், வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன், கீபோர்டு மற்றும் பல கருவிகளில் இந்த ஐந்து பாடல்களை இசைத்து வருகின்றனர். சற்று நாம் உற்றுநோக்கில் தென்னிந்திய இசைக் கருவிகளில் இசைக்கப்பட்ட தியாகராஜரின் பாடல்கள் இன்று வட இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது. இவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் எப்படியெல்லாம் மதம், மொழி, நாடு, காலம் இவற்றையெல்லாம் கடந்து சிறப்புற்று விளங்குகிறது என்பதை அறியும்போது எல்லோரும் குறிப்பாக ஒவ்வொரு இசைக்கலைஞனும் பெருமை கொள்கிறான் என்றறியலாம். அப்பெருமை வாய்ந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒவ்வொரு ஆண்டும் தஞ்சைத்தரணியில் அமைந்திருக்கும் திருவையாற்றில் ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்ற பெயரில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அறிந்தோரும் அறியாதோரும், கற்றோரும் கல்லாரும், கனிந்து உருகி களிப்பது ‘தியாகராஜர் ஆராதனை விழா’ என்பது ஆச்சரியம். ஆனால் அதுவே உண்மை.
இறைவனைக் காண இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை. எண் திசையிலிருந்தும் வந்து பண் பாடும் கலைஞர்களின் ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ காண கண் கோடி வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் உள்ளவர்கள்கூட தியாகராஜர் அவர்களின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.
எல்லோரும் திருவையாற்று ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று என்ற நிலையில், சென்னையில் ஏன் அப்படியொரு இசைவிழாவினை மிகப்பெரிய அளவில் நடத்தக்கூடாது என்ற எண்ணப்பாட்டின் விளைவாக, இவ்வரிய கலைத்துறையில் பிரபலமாக விளங்கும் ‘லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்’ , 'நாடக அகாடெமி', ‘ரோட்டரி க்ளப் ஆஃப் மெட்ராஸ் மவுண்ட்’ ‘கலாலயா யு.எஸ்.ஏ’ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல் நம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப் பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்ட வரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.
பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டு வரும் ஒரு அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”.
கர்நாடக சங்கீத கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷன்" பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் பெரியவர் சிறியவர் என்ற வயது பேதமின்றி, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண்/பெண் பேதமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து ‘பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ பாடி திருவையாற்று ஆராதனை விழாவை நம் கண்முன்னே சென்னை காமராஜர் அரங்கில் கொண்டுவர உள்ளார்கள். 2009, டிசம்பர் 18 முதல் 25 வரை நடை பெற உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்த இசை விழாவின் துவக்க நாளான டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் திரு. ஜெகத்ரட்சகன் எம்.ஏ. அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து 5.30 மணிமுதல் 6.30 வரை இந்த இசை சங்கமம் அரங்கேற உள்ளது. இந்நிகழ்வின் துவக்க விழாவிற்கு மட்டும் அனுமதி இலவசம். அனைவரும் வருகை தந்து இறைவனை இசையால் வழிபட இவ்வினிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரங்கில் அமைக்கப்பட உள்ள மேடை அமைப்பு பாரம்பரியம் மிக்க திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னெ கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்நூறு கலைஞர்கள் மேடையில் அமர்ந்து துவக்க விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வகையில் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரங்கில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களும், கலைஞர்களும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடுகின்ற வகையில் அனைவர்க்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் அச்சடிக்கப்பட்ட சிறப்புப் பிரதி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்படுகின்றது.
திருவையாறில் இசை வல்லுனர்களால் இசைக்கப்படும் தியாகராஜர் ஆராதனை விழாவினை நேரில் சென்று காண இயலாத கண்களுக்கு “சென்னையில் திருவையாறு” ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

    முகப்பு                                                       முன் பக்கம் | அடுத்த பக்கம்

Pancha Ratna Kritis

 

 
< Back |   < Home