சென்னையில் திருவையாறு - 2007
'பத்திரிகையாளர் சந்திப்பு'

 

2007, டிசம்பர் 14 காலை 11.30 மணி... சென்னை சவேரா ஹோட்டலில், "சென்னையில் திருவையாறு" கர்நாடக இசை விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு. பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கு களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முயற்சியாகவும் அமைந்துள்ள இந்த இசை நிகழ்ச்சியை 'கலாலயா யு.எஸ்.ஏ', 'நாடக அகடமி' மற்றும் 'லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்' நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மும்மூர்த்திகளின் ஆசியுடன், சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல் மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக, தஞ்சை மண்ணின் தனிப் பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்ட, கரை புரண்டு வரும் ஒரு அற்புத சங்கமமாக இந்நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

"லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்" சார்பாக அதன் நிறுவனர் லஷ்மன், வந்திருந்த இசைக்கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் வரவேற்றுப் பேசினார்.

"சென்னையில் திருவையாறு" கர்நாடக இசைவிழா தொடர்ந்து மூன்றாவது ஆண்டும் சிறப்புற நடைபெற வாழ்த்திப் பேசிய 'நாடக அகடமி' தலைவர் ஆர்.மாரிமுத்து அவர்களுக்கு லஷ்மன் மாலை அணிவித்து கெளரவித்தார்.

அடுத்து பேசிய SIDBI வங்கி பொதுமேலாளர் கே.எம்.நாயர் அவர்கள்," தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் "சென்னையில் திருவையாறு" கர்நாடக இசைவிழாவின் மூன்றாம் ஆண்டு வைபவத்தில் எங்கள் வங்கியும் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட எங்கள் வங்கியின் தென்னிந்திய கிளைகளில், ஆறு கிளைகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. வளர்ந்த மற்றும் வளரும் இசைக்கலைஞர்களுக்கு உதவி ஊக்கமளிக்கும் வகையில், "கலாலயா யு.எஸ்.ஏ", 'நாடக அகடமி' மற்றும் 'லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்' நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த கர்நாடக இசைவிழா மென்மேலும் வளர்ந்து இசைப்பணியாற்ற வேண்டும். இம்மாபெரும் இசைக்கலைஞர்களுக்கு முன்னால் நாங்கள் சிறியவர்களே! இவர்களுடன் இணைவதில் எங்கள் வங்கித்தலைவரும், வங்கியும் பெருமிதம் அடைகிறோம்" என்றார்.

"சென்னையில் திருவையாறு" கர்நாடக இசைவிழா வரும் காலத்தில் தென்னிந்திய கலைஞர்கள் மட்டுமின்றி வடஇந்தியக் கலைஞர்களும் பங்குபெறும் மகத்தான விழாவாக மாறும். மாறவேண்டுமென வாழ்த்துகிறேன்" - என்றார் 'சாக்சோபோன்' கலைஞர் கத்ரி கோபால்நாத். ராஜ் டி.வி இயக்குநர் ரவீந்திரன் அவர்கள் பேசுகையில் ' நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளை எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறோம். எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத மனநிறைவு "சென்னையில் திருவையாறு" நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்பொழுது எங்களுக்கு கிடைக்கிறது.

இந்த கர்நாடக இசைவிழா முழு வெற்றியடைய வாழ்த்துகிறேன்' என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாடகர் உன்னிகிருஷ்ணன்,"இசை ரசிகர்கள் மத்தியில் "சென்னையில் திருவையாறு" மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. வளர்ந்த கலைஞர்கள்,வளரும் இளம் கலைஞர்கள் என கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் மேடை அமைத்து தந்திருக்கின்றனர். இதற்கு காரணமாக விளங்கும் "லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்" நிறுவனர்கள் லஷ்மன், ராமன் மற்றும் இவர்களுடன் இணைந்த 'கலாலயா யு.எஸ்.ஏ', 'நாடக அகடமி' நிறுவனங்களுக்கும், இந்த இசைவிழாவில் பங்கேற்க இருக்கும் விளம்பரதாரர்கள் SIDBI ( இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி), ஹோட்டல் அக்கார்ட்,மெட்ரோ பாலிட்டன், தமிழ் மேட்ரிமோனி, கரூர் வைஸ்யா வங்கி, டெக்கான் கிரானிக்கள், தினமலர், ரேடியோ மிர்ச்சி, சிஃபி.காம்,சென்னை கார்ப்ரேட் கிளப், நாதெள்ள சம்பத் செட்டி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப்+, ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், சக்தி மசாலா, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமணை, கேசியோ, காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், செளபாக்யா, பாஸ்ட் பார்ட்வேர்ட் மீடியா என அனைவருக்கும் எங்கள் கர்னாடக இசைக்கலைஞர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு SIDBI வங்கியின் பொதுமேலாளர் கே.எம்.நாயர் மாலை அணிவித்து கெளரவித்தார். கலாலயா இயக்குநர் கோபிநாதன் அவர்களுக்கு 'நாடக அகாடெமி' தலைவர் ஆர்.மாரிமுத்து மாலை அணிவித்து கெளரவித்தார்.ராஜ் டி.வி இயக்குநர் ரவீந்திரன், கிட்டார் பிரசன்னா அவர்களுக்கு மாலை அணிவித்து கெளரவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் பேசியதாவது...

கிட்டார் பிரசன்னா: சென்னையில் எத்தனையோ சபாக்கள் இருக்கின்றன. இருந்தும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தும் 'லஷ்மன் ஸ்ருதி' கர்னாடக இசையைக் கெளரவிக்கும் வகையில் இப்படியொரு இசைவிழா நடத்தி மூன்றே ஆண்டுகளில் பிரமிக்கும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்.

பாடகி காயத்ரி: எவ்வளவோ பெரியவர்கள் பங்கேற்கும் இப்படியொரு விழாவில் நானும் பங்கேற்பது எனது பாக்கியம்.

மதுரை முரளிதரன்: பாரம்பரிய இசைவிழா என்பதற்கு அடையாளமாக ஓசென்னையில் திருவையாறு" என்ற அற்புதமான தலைப்பில் 'கலாலயா யு.எஸ்.ஏ', 'நாடக அகாடெமி' மற்றும் 'லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்' நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த இசைவிழாவில் நானும் பங்கேற்பது எனது பாக்கியம். இந்த முறை எனது பரத நாட்டிய நிகழ்ச்சியுடன், நாற்பது கலைஞர்கள் பங்கேற்கும் "கிருஷ்ணாவதாரம்" என்ற புதிய நடன நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறேன். கர்னாடக இசைக் கலைஞர்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய விளம்பர அங்கீகாரத்தை தரும் 'லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்', நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ராஜ் டி.வி.நிறுவனத்தாருக்கும் மற்றும் இம்மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனங்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கும் நன்றி.

'பத்ம பூஷன்'பி.எஸ்.நாராயணசாமி: தொடர்ந்து மூன்றாம் முறையாக மற்ற இசைக் கலைஞர்களுக்கு தலைமையேற்று 'பஞ்சரத்ன கீர்த்தனைகள்' பாட வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டும் இசைவிழா நிச்சயம் வெற்றியடையும்.

பத்திரிகையாளர்கள் சார்பில் ரங்கராஜன், டெக்கான் கிரானிக்கள் பகவான்சிங் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் லஷ்மன் நன்றி தெரிவித்தார்.

Schedule - Dec. 2007

Artistes

Tickets

Organisers

Chennaiyil Thiruvaiyaru 2006

Chennaiyil Thiruvaiyaru 2005

Photo Gallery

Thanks

Thiruvaiyaru Home

Feedback Contact Us Home