சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
'தசாவதாரம்' படத்திற்கு நீதிமன்ற நோட்டீஸ்!

இந்துக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளதால் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஸ்கார் ·பிலிம்ஸ் தயாரிப்பில் கே.வி.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள "தசாவதாரம்' படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. ஜாக்கிசான், அமிதாப் பச்சன், மம்முட்டி, விஜய், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்ரதா, அஸின் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இப்படத்தை வெளியிட உலக ஸ்ரீவைஷ்ணவ தர் சம்ரக்ஷனா சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ஸ்வாமி கோவிந்த ராமானுஜ தாசா (நாகை) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: 2008 மே 1-ம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் "தசாவதாரம்' படத்தின் டிரையிலர் காட்டப்பட்டது.இதனை பார்த்த ஏராளமானோரிடம் இருந்து எனக்கு தொலைபேசியில் புகார் வந்தது. இவர்கள் அனைவரும் இந்து மதக் கோட்பாட்டின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளவர்கள். உலகில் உள்ள கோடான கோடி ஸ்ரீவைஷ்ணவர்களால் வழங்கப்படும் தசாவதாரம் ஸ்ரீமன் நாராயணனின் 10 அவதாரங்களைக் குறிக்கும் மந்திரமாகும். வணக்கத்திற்குரிய தசாவதார நாமத்தை திரைப்படத்திற்கு வைத்துள்ளதை நீக்க வேண்டும். ப்ரணவமந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் தலையாய மந்திரம். ஓம் என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவதுபோன்ற காட்சியும், பகவத்கீதை புத்தகத்தின் மேல் கால் வைப்பது போன்ற காட்சியும் இந்து பக்தர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும், மன உளைச்சலையும் அளித்துள்ளது. இக்காட்சிகளை நீக்க வேண்டும்.

படத்தில் ராமானுஜராக நடித்துள்ள கமலஹாசன் உடலில் ஸ்ரீரங்க ரங்கநாதரை கட்டி கடலில் தள்ளிவிடுவதுபோல் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை. சைவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் இடையே சமய மோதல்கள் நடந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதாகவும் கற்பனையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இக்காட்சி சைவ- வைணவ நல்லுறவை குலைத்துவிடும். எனவே தசாவதாரம் படத்தை மே 15-ம் தேதி வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ராஜசூர்யா, சத்யநாராயணா பெஞ்ச் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஸ்வாமி கோவிந்த ராமானுஜ தாசா வழக்கறிஞர் வைக்காமல் அவரே வாதாடினார்.

அப்போது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இடம் பெற்றுள்ள காட்சிகளை விளக்கினார். இதைக் கேட்ட நீதிபதிகளும் சென்னை தணிக்கை குழுவும் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், எழுத்துப் பூர்வமான பதிலை மே 13-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.  

மேலும்