சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
'தெனாவட்டு'  திரை விமர்சனம்  
 
கிராமத்திலிருந்து வேலைக்காக சென்னை வரும் வெள்ளந்தியான இளைஞன் கோட்டை (ஜீவா), தாதா கைலாசத்திடம் (ரவிகாளே) அவர் தாதா என்று தெரியாமல் தன் நண்பன்(கஞ்சா கருப்பு) உடன் வேலையில் சேர்கிறார். சென்னைக்கு வந்த இரண்டாம் நாளே காயத்ரி (பூனம் பஜ்வா) என்னும் அழகுப் பதுமையைச் சந்தித்து மூன்றாம் நாளே காதலிக்க ஆரம்பிக்கிறார். அம்மணியும் நாயகனுக்கு அதிகத் தொந்தரவு கொடுக்காமல் சீக்கிரமே காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்.காதலியின் தந்தையும் ஒரே காட்சியில் தன் மகளை நாயகன் வசம் ஒப்படைத்து செல்கிறார்.கொலை, கட்டைப் பஞ்சாயத்து என்று இயங்கிவரும் கைலாசத்தின் மகன் ஒரு பெண் பித்தன். பிடித்த பெண்களைக் கடத்திவந்து வன்புணர்ச்சி செய்து அதைப் படம் எடுத்து மகிழும் காமக் கொடூரன். கைலாசத்தின் சுயரூபம் கோட்டைக்குத் தற்செயலாகத் தெரிகிறது. இனி இந்த வேலை தனக்கு வேண்டாம் என்று முடிவுசெய்து ஊருக்குக் கிளம்பும் சமயத்தில் பெண் பித்தனின் பார்வை காயத்ரியின் மீது விழ, கோட்டை அவனைப் பிளந்துகட்டுகிறான். கைலாசம் கோட்டையைத் துரத்துகிறான். திருநங்கைகளின் உதவியாலும் தன் புஜபல பராக்கிரமத்தாலும் கோட்டை கைலாசத்தின் கணக்கை முடிக்கிறான்.

கோட்டையாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஜீவா. மகனை அடித்தவனை வில்லன் ஊரெல்லாம் தேடிக் கொண்டிருக்க அவனிடமே வந்து, தம்பி தப்பு பண்ணிடுச்சி நான்தான் அடிச்சேன் என்று சொல்லும் அந்த கிராமத்து வெள்ளந்தித்தனம் ரசிக்க வைக்கிறது. அதேபோல் பூனத்திடம் காதலை பட்டென்று சொல்லும் இடம். சண்டைக் காட்சிகளில் - யதார்த்தம் இல்லாவிட்டாலும் - அனல் பறக்கிறது.பூனம் பஜ்வா அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்குச் செய்ய ஒன்றுமே இல்லை. பாடல் காட்சிகளில் பங்கு கொள்கிறார். கைலாசத்தின் மகன் தலையைக் கோணிக்கொண்டு திரையில் தோன்றும்போதெல்லாம் தியேட்டரில் சிரிப்பு அலை. ரவி காளே நன்றாகச் செய்திருக்கிறார். போலீசாக வரும் சாய்குமார், தாய் சரண்யா பொன்வண்ணன்,நாயகியின் தந்தை டெல்லி கணேஷ் போன்றோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஜீவாவின் நண்பனாக வரும் கஞ்சா கருப்பு ரகளை. ஆனால் வாயை திறந்தால் டபுள் மீனிங்காக வந்து விழுவதுதான் முகம் சுளிக்க வைக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'உசிலம்பட்டி சந்தையில, 'எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய்' பாடல்கள் கேட்கும்படி உள்ளன. வெற்றியின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளிலும் கூத்தாண்டவர் கோவில் காட்சிகளிலும் நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. ஆனால் பாடல் காட்சிகளில் சோபையிழந்து காணப்படுகிறது. அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் ஜீவாவை ஆக்சன் நாயகனாக அடையாளப்படுத்துகின்றன.

படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருப்பவர் வி.வி.கதிர். இவர்...பல படங்களில் இடம்பெற்ற காட்சிகளை ஒரே படத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறார்... காதல், மோதல், பாத்திரப் படைப்பு எல்லாவற்றையும் ஏற்கனவே பல படங்களில் வந்த மாதிரியே இருக்கும்படியும் ஒரு துளியளவுகூடப் புதிய விஷயங்களோ புதுமையோ இல்லாதபடியும் மிக ஜாக்கிரதையாக கையாண்டிருக்கிறார்... மூளைக்கு வேலை கொடுக்காத அதிரடி மசாலாப் படங்களுக்குப் பேர்போன பேரரசுவின் பாணியை விசுவாசமாகக் கடைப்பிடித்து அவரது உதவியாளராக இருந்ததை நிரூபித்திருக்கிறார்...கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், பஞ்சமில்லாத பஞ்ச் வசனங்கள் (அரைத்த மாவு), பொறி பறக்கும் சண்டை என்று சற்றும் அடிபிறழாமல் மசாலாப் பாதையில் வீறு நடை போடுகிறார்... மசாலா அயிட்டங்கள், விறுவிறுப்பு இரண்டையும் லட்சியமாகக் கொண்டு இய(ங்)(க்)கியிருக்கிறார்...முதலாளியின் பேண்ட், சட்டை போட்ட அடியாட்கள் கையில் அரிவாளுடன் டாட்டா சுமோவில் மாடிக்கட்டிடங்கள் நிறைந்த நகர மையத்தில் சுற்றும் போதும் அவர்கள் மரம் வெட்டிகள் என்று நினைக்கும் அளவுக்கு நமது நாயகனை அப்பாவியாகக் காட்டியிருக்கிறார்...மியூசிக் டீச்சராக வரும் கதாநாயகி பூனம் பஜ்வாவிற்கு அதிக வேலைத் தராமல் பாடல் காட்சிகளில் மட்டும் பங்கு கொள்ளச் செய்திருக்கிறார்... தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் நாயகன். பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் தாதா.தாதாவின் மகன் தன் தங்கை வாழ்க்கையவே நாசமாக்கியவன் என தெரிந்திருந்தும் அவன் மீது தன் சுண்டு விரலைக் கூட நீட்டாத அசிஸ்டெண்ட் கமிஷனர் என கச்சிதமாக கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார்... படத்தின் பல இடங்கள், வசனங்கள் , அருவாள் செய்யும் கதாபாத்திரம் என 'திருப்பாச்சி' சாயலில் படத்தை அமைத்திருக்கிறார்... படத்தின் ஒரேயொரு சிறப்பம்சமாக இதுவரை எந்தப் படங்களிலும் இல்லாத அளவிற்கு திருநங்கைகளைக் கண்ணியமான முறையில் சித்தரித்திருக்கிறார். அதை கூத்தாண்டவர் கோவில் நிகழ்வுகளுடன் இணைத்து பிரதானப்படுத்தியிருக்கிறார்.

இது போதாதா!? மொத்தத்தில்....சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற மனநிலைக்கு பழகிய ரசிகர்களை, இப்படத்தின் மூலம் இயக்குனர் கதிர் வெற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும்