ஐந்து ஆண்டுகளாக வேலை தேடி அலைகிறார் தனுஷ். இதற்கிடையே
நயன்தாராவை பார்க்கிறார். முதல் பார்வையிலேயே காதல்.
தொடர்ந்து செல்கிறார். அவர் பணிபுரியும் சா·ப்ட்வேர்
நிறுவனத்திலேயே தானும் பணிபுரிய முடிவெடுத்து அங்கு
நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துதேர்ச்சி பெறுகிறார்.
வேலை விஷயமாக நயன்தாராவுடன் ஆஸ்திரேலியா செல்லும்
வாய்ப்பு கிடைக்கிறது. மனசுக்குள் முனுமுனுத்துக்
கொண்டிருக்கும் ஐ லவ் யூ மந்திரத்தை நயனிடம் உளறி
கொட்டுகிறார் தனுஷ். ஆனால் தனக்கு அடுத்த மாதம்
திருமணம் என அதிர்ச்சி கொடுக்கிறார் நயன். காதல்
தோல்வியால் தனுஷ் படும் அவஸ்தையை பார்க்க முடியாத அப்பா
ரகுவரன், நயனிடம் பேசுகிறார். ஆனால் நயன் அவரை
அவமானப்படுத்துகிறார். மனமுடையும் ரகுவரன் இறக்கிறார்.
சுனாமியில் மூழ்குகிறது தனுஷின் நிலைமை. அப்பாவின்
நினைவில் வாடும் தனுஷ¤க்கு ஆறுதலாக இருக்கிறார்
நண்பரான கார்த்திக். தனது திருமணத்துக்காக தனுஷை சொந்த
ஊருக்கு அழைத்துச் செல்கிறார். கார்த்திக்கின்
மனைவியாகப் போகிறவர் நயன்தாரா என்பதை அறிந்து
அதிர்கிறார் தனுஷ். இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்
என்பதை குடும்பத்தினரிடம் மறைக்கிறார்கள். தனுஷின்
காதல் ஜெயித்ததா, நண்பனின் திருமணம் நடந்ததா? என்ற
கேள்விக்கு விடை அளிக்கிறது கிளைமாக்ஸ்.சாப்ட்வேர் கம்பெனி, கம்யூட்டர் பாஷைகள் என முதல் பாதி
அல்ட்ரா மாடர்னாக ஆரம்பித்தால் கூட்டுக்குடும்பம்,
கட்டுப்பாடு, கலாச்சாரம் என இரண்டாம் பாதி கதை 'வருஷம்
16' ஸ்டைலில் மனசை வருடுகிறது. 'பொல்லாதவனி'ல்
ஆக்ரோஷமான இளைஞராக பார்த்த தனுஷ், இதில் சா·ப்ட்.
ரகுவரனுடன் அடிக்கடி வாய்ச் சண்டை போடுவது, வேலை
கிடைத்துவிட்டது என சொல்லிவிட்டு 'வாப்பா காபி
சாப்பிடலாம்' என ஓட்டலுக்கு அழைத்து செல்வது, நயன்தாரா
பார்க்கிறார் என்பதற்காக நல்லவனாக நடிப்பது, ரகுவரனை
கேவலமாக நயன் பேசியதும் கொதித்து எழுவது என சராசரி
இளைஞனின் காதல், பாசம், கோபத்தை கண்முன் கொண்டு
வருகிறார் தனுஷ். கம்யூட்டர் இன்ஜினியர், கிராமத்து
பாவாடை தாவணி மங்கை என களம் மாறினாலும் நடிப்பில்
பிரமாதப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. இதில்
கிளாமருக்கு வாய்ப்பில்லை. நடித்திருக்கிறார். தனுஷ்
மீது காதல் பிறக்கும்போது தனது தங்கை, தனுஷை
விரும்புவதால் கடுப்பாவது, காதலை மறைக்க முடியாமல்
தவிப்பது என பல இடங்களில் பளிச்சிடுகிறார்.
இனக்கவர்ச்சியால் தனுஷை லவ்வும் நயன்தாராவின் தங்கையாக
வரும் சரண்யா சில இடங்களில் நயன்தாராவிற்கு
அக்காவாகிறார் நடிப்பில். சில காட்சிகளிலேயே
வந்துபோனாலும் இதயங்களை கனமாக்கிவிட்டு செல்கிறார்
ரகுவரன். 'நீ என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கியாடா?'
என தனுஷிடம் கேட்கும் அந்த ஒரு வசனம் போதும், ரகுவரனின்
நடிப்புக்கு. 'கண்ட நாள் முதல்' கார்த்திக், கருணாஸ்
சீரியசான நண்பர்கள். தாத்தா விஸ்வநாதன், பாட்டி
சுகுமாரி,மனோபாலா உள்ளிட்டவர்களும் மனதில் பதிகிறார்கள்.
யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் 'எங்கேயோ பார்த்த...',
'ஒரு நாளைக்குள்...', 'நெஞ்சை கசக்கி...', 'பெண்ணே
என்னைக்கொடு...' பாடல்கள் ஓ.கே.ரகம். 'பாலாக்காடு
பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா' ரீ-மிக்ஸ் பாடல் நினைவில்
நிற்கிறது. பின்னணி இசை டி.இமான். சித்தார்த்தின்
ஒளிப்பதிவில் ஞானம். செல்வராகவனின் கதை, வசனம்
புதிதல்ல என்றாலும் அவரது திரைக்கதையும், மித்ரன்
ஆர்.ஜவகரின் இயக்கமும் கவனத்தை ஈர்க்கிறது. சில
இடங்களில் உதைக்கும் லாஜிக்கை மறந்து விட்டால் மோகினி
உங்களை வசீகரிப்பாள். |