தங்கத்தாமரைப் பெண்ணே!

 

வாழ்த்துரை

நான் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.என்.சி. மோகன்தாஸ் அவர்களின் எழுத்துக்கு நான் விசிறி.

சிறுகதை, புதினம், வாழ்வு முன்னேற்றக் கட்டுகரைகள் என்று பல்துறைகளிலும் தன் எழுத்து முத்திரையைப் பதித்து வருபவர் திரு. மோகன்தாஸ்.

ஆரம்பம் முதலே மோகன்தாஸின் வளர்ச்சியை கவனித்து – கணித்து – களித்து – ஊக்குவித்து வருபவன் நான்.

எழுத்தை வெறும் சம்பாத்தியத்திற்கும் – பெயர் – புகழுக்கும் மட்டும் பயன்படுத்தாமல் இதைக் களமாக்கி குவைத் ‘Frontliners’ மூலம் இவர் செய்துவரும் நற்பணிகளையும் நானறிவேன்.

குவைத்தில் இந்தியர்களை ஒருங்கிணைத்து நம் அருமை – பெருமை – திறமைகளைப் பிற நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வருடந்தோறும் இவர் வெளியிட்டு வரும் ‘Frontliners’ புத்தகத் தொகுதிகள் மிகப் பிரபலம்.

இப்புத்தகத்தின் 7ஆம் தொகுதி வெளியீட்டிற்காக திருமதி.மேனகாகாந்தி. நல்லி செட்டியாருடன் நானும் சென்று வந்தது மறக்க முடியாது அனுபவம்.

பல பிரபலங்களையும் குவைத்திற்கு அழைத்து கௌரவித்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்குமேல் பல நல்ல காரியங்களுக்கும் ‘Frontliners’ உதவி இருக்கிறது. அத்துடன் போலி ஏஜண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு வந்து கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து ‘Frontliners’ உதவி வருகிறது.

இந்தப் புதினம் தொடராக வந்தபோதே நான் படித்து மகிழ்ந்தேன். சரளமான நடை. யதார்த்தமான கதாபாத்திரங்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கத் தூண்டும் திருப்பங்கள். விறுவிறுப்பான இந்தக் கதை மணிமேகலைப் பிரசுரம் மூலம் நூலாக மலர்வதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்,

அன்புடன்

(ஏ.நடராஜன்)

முன்னாள் இயக்குநர்

சென்னைத் தொலைக்காட்சி

அமெரிக்க வாசகத் தம்பதிகளின் வாழ்த்துரை

வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேடல் அது கிடைத்துவிட்டால் வெற்றியின் பெருமிதம்-இல்லாவிட்டால் வெறுமை, ஏமாற்றம், விரக்தி – பிறகு அது பற்றின் அலசல் – ஆய்வு – அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்று இங்கு அனுபவங்களுக்கும் சம்பவங்களுக்கும் பஞ்சமேயில்லை.

இந்தப் புதினத்தில் எழுத்தாளர் என்.சி.எம்.- நம் வாழ்வின் வசந்த காலமாகிய கல்லூரி நாட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். இளமையின் எழுச்சி – ராக்கிங் என்று சீனியர்கள் படுத்தும் பாடு, ‘நான் அனுபவித்த கொடுமையை நீயும் அனுபவி’ என்கிற ‘பெருந்தன்மை’.

மெடிக்கல் படிப்பு டென்ஷனுக்கிடையே பசங்களின் போக்கிரித்தனம் – பொறுக்கித்தனம் – ஜாலியான வழிசல் – கடலை – மாணவிகளிடம் கையேந்தல் – வெட்டி பந்தா. இதனிடையே மென்மையாய் இழையோடும் காதல், சமூகத் தாக்கம், குடும்ப செண்டிமென்ட், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் – கொஞ்சம் மர்மம் – கொஞ்சம் மனிதாபிமானம் என்று எதையும் விட்டுவைக்காமல் விறுவிறப்பாய் கதை செல்கிறது. அலட்டிக் கொள்ளாத – அனைவருக்கும் புரிகிற – போரடிக்காத – எளிய நடை என்.சி.எம்.மின் ஸ்பெஷாலிட்டி.

கதை வேகமாய் செல்வது சரி, அதே வேகத்திலேயே முடித்திருக்க வேண்டுமா? இன்னும் சில அத்தியாயங்கள் நீட்டியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை,

இந்த நாவல் ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்தபோது வாராவாரம் உடனுக்குடன் படித்து வந்தோம்.

முன்பு தவணைமுறையில் காத்திருந்து புசித்ததை – வார விடுமுறையில் இப்போது ஒரே பந்தியில் ஒரே மூச்சில் படித்து, ரசிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – இந்தப் புத்தகம் மூலம்.

இந்த நூல் வெற்றி பெற மணிமேகலைப் பிரசுரத்திற்கும் என்.சி.எம்.மிற்கும் எங்கள் சார்பிலும் எங்களுக்கு உத்தியோகம் அளித்திருக்கிறது அமெரிக்கா ‘ஒபாமா’ சார்பிலும் வாழ்த்துகள்

அன்புடன்

ஜெ.விஜய் ஆனந்த் அபர்ணா

பிட்ஸ்பர்க், யு.எஸ்.ஏ.

பதிப்புரை

எழுத்து என்பது ஓர் ஆயுதம். புத்தியும் சக்தியும் நிறைந்த அதை முறையாய் – பயனுள்ளதாய் படைப்பது என்பது ஒரு வரம்.

கைவண்ணமும் சொல்வண்ணமும் கொண்டு எழுதிக் குவிப்பவர்கள் இங்கு ஏராளம். நல்ல விஷயங்களையும் புத்திமதிகளையும் எழுத்தில் வடிக்கும் ‘ஊருக்கு உபதேசம்’ பலருக்கும் கைவந்த கலை. ஆனால் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்,

எழுத்து, சொல் ஒன்றாகவும் செயல்பாடு நேர் எதிராகவும் இருப்பதைக் கண்கூடாய்ப பார்க்கிறோம்,

எழுத்தாள நண்பர் என்.சி. மோகன்தாஸ் நல்ல விஷயங்களை வெறும் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்க விரும்புபவர். முயற்சிப்பவர். இங்கும் சரி, குவைத்திலும் சரி சேவை குணமுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்த அமைப்பு மூலம பல நல்ல காரியங்களைச் செய்துவருபவர்.

அதற்கு நானும் மணிமோகலைப் பிரசுரமும் சென்னையில் ஒரு களமாக, பாலமாக இருந்துவருவது பெருமையான விஷயம், நல்லவற்றை எழுத வேண்டும், நல்லவற்றைச் செய்யவேண்டும், நல்லவைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

காதல், சமூகம், நகைச்சுவை, மர்மம், அரசியல் என எல்லா தலைப்புகளிலும் சிறப்பாகப் புதினங்களைப் படைத்துள்ளவரின் இந்த நாவல் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டு ‘தினத்தந்தி ஞாயிறு மலரில்’ தொடராக வந்து மிகுந்த வரவேற்புப் பெற்றது.

கல்லூரிப் பருவம் இனிமையானது. நிறைய நிறைய கற்றுக்கொள்ள, பழக, சந்தோஷம் அனுபவிக்க, வாழ்க்கையை- மனிதர்களை உணர அறியக் கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இங்கே சமூக விரோதிகளின் நுழைவினால் மாணவர்களின் நிம்மதி கெட்டு, சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் இந்தக் கதை விறுவிறுப்பாக காதல், மர்மம் கலந்து கலகலப்பாக சமூக அக்கறையோடு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை மணிமேகலைப் பிரசுரம் பெருமையோடு வெளியிடுகிறது,

அன்புடன்

ரவி தமிழ்வாணன்

பதிப்பாளர், மணிமேகலைப் பிரசுரம்

தங்கத்தாமரை பெண்ணே

1

விடுமுறையின் சோம்பல் ஹாஸ்டல் மரங்களில் பனித்துளியாய் சொட்டிற்று. காக்கை, குருவிகள் சன்னமாய் படபடக்க, கட்டிடங்களின் ஒவ்வொரு பிரிவும் வெறிச்... அமைதிப் பூங்கா!

தோட்டப் பையன் நீருற்றுத் தொட்டியில் வாளியைக் கவிழ்த்து கோரி எடுக்க, வாட்ச்மேன் தன் கூண்டிலிருந்து எழுந்து ஓடிவந்து. “ஏய், ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இங்கே கூடாது. போய் பைப்ல புடிச்சுக்கோ,” என்று விரட்டினான்.

அதற்குள் வாசலில் வேன் உறுமி ஒலி எழுப்ப, “இருப்பா வர்றேன்” என்று ஓடிப்போய்த் திறந்தான்.

“என்ன லோடு? பால் மட்டும் தானா?”

“இல்லை, வெண்ணெய், மோர், தயிர், நெய் என அத்தனையும் உண்டு. வேணுமா?” என்று டிரைவர் மறுபடியும் ஒலி எழுப்பி உள்ளே பாய்ந்தார்.

‘ஹும்...! வாட்ச்மேன்னா எல்லாத்துக்கும் எளப்பமா போச்சு! கேட்டா இவனுங்களுக்குக் கோபம், கேட்காட்டி ‘என்ன தூங்கறியான்னு’ பிரின்ஸ்பால் குரைப்பார்’ முணுமுணுத்தபடி அவன் கதவை மூடினான்.

பெண்கள் விடுதி.

இரண்டாம் பிரிவு கட்டிடம்,அறைக்குள் பார்கவி அரை நிஜாருடன், கொசுவலைக்குள் சுருண்டுக் கிடக்க, குளியல் அறையில் தண்ணீரின் சலசலப்பு. கதவு திறந்து திடீரென அந்தச் சலசலப்பு அதிகமாக – “ஏய்... சுஷ்மா என்னடி இழவு பண்றே...?” என்று பார்கவி முனகினாள். “உன்னோட பெரிய ரோதனை”

“குளியல்” என்று தலை துவட்டினாள். முதுகிலிருந்த ஈர முத்துக்களை ஒத்திஎடுத்து அந்தப் பக்கம் திரும்பி அலமாரியிலிருந்து தாவணி எடுத்தாள்.

“காலங்கார்த்தால் – லீவுல கூட விடமாட்டியோ!”

“வந்து... பிரின்ஸ்பால்கிட்ட காலேஜ் மேகஸின் புரூப்பை கொடுக்கணும்”

“ஹயோ எப்போ பார் படிப்பு எழுத்து என்ன பிறப்போ போ நீ!”

“ரொம்பா சலிச்சுக்காத ராத்திரி முழுக்க படம் பார்க்கறது எவனோடயாவது சாட்டிங் அப்புறம் பகல்ல பீடை மாதிரி தூக்கம் சரி சரி முறைக்காதே இதோ ஆச்சு!”

சுஷ்மா தலையை வாரிக்கொண்டு கதவை மூடிவிட்டு வெளியேறினாள்.

சுரேஷ். பாத்ரூமிலிருநது தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வந்தபோது செல்போன் ஒருமுறை அலறி நின்று போயிற்று. எடுத்துப் பார்த்தான் பிரின்ஸ்பால் மிஸ்ட்கால்!  அவர் எப்போதுமே அப்படித்தான்.

சிக்கனம் – கச்சிதம். சுரேஷிற்கு அந்தக் கல்லூரியும், ஹாஸ்டலும் புதிதல்ல. அங்கு அவன் அடிக்காத லூட்டியில்லை. அங்கே பி.டி.எஸ்!  பிறகு வேறு கல்லூரியில் தட்டுத்தடுமாறி இடம் கிடைத்து எம்.டி.எஸ்!  சில காரணங்களால் கிளீனிக் வைக்க முடியவில்லை. அந்த முயற்சி தோல்வி.

வேறு வழியில்லாமல் இங்கே வேகன்ஸி இருப்பது அறிந்து அணுக. பிரின்ஸ்பால் அவனை விடவில்லை. ஹாஸ்டலிலும் வார்டன் பொறுப்பு ஏற்றுக் கொண்டால்தான் வேலை என்று கிடுக்கிப்பிடி பிடித்தார்.

அவன் படித்தபோதிருந்த அதே பிரின்ஸ்பால் மறுக்க முடியவில்லை. கல்லூரியில் லெக்ச்சரர் என்று மரியாதையான பதவி. பசங்கள் வகுப்புகளில் வாலாட்டினாலும் லேப். இன்டர்னல் அசெஸ்மெண்ட் என அவர்களின் கடிவாளம் இவர்கள் கையில் ரொம்ப எகிறமாட்டார்கள். 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles