தங்கத்தாமரைப் பெண்ணே!

 

ஹாஸ்டல் அப்படியில்லை. வகுப்பறையில் கட்டுண்டுக் கிடப்பவர்கள் இங்கு எகத்தாளம்!  நான்கு பிளாக்குகள். ஒவ்வொன்றிலும் ஆறு ப்ளோர்கள்!  ப்ளோருக்கு இருபது அறைகள்!

அறைகளில் இரண்டு பேர் அல்லது சீனியர் என்றால் ஒருவர் மட்டும்!

எல்லோரையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. தவறுகள். தப்புகள் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வரை பிரச்சினை யில்லை. மீறினால் கவனிக்கணும்.

ஆனால் கண்டிக்க முடியாது. கல்லூரி, அதனால் மருத்துவ மாணவர்களை ஓரளவுக்குமேல் கட்டுப்பாடு விதித்தால் வைராக்கியம் எழும். சட்ட திட்டங்களை வேண்டுமென்றே உடைக்கப் பார்ப்பார்கள், மீறுவார்கள். அதனால் எச்சரிக்கையுடன் மாணவர்களை அணுக வேண்டும்.

என்னதான் பொறுமை காத்தாலும்கூட ‘மயிலே மயிலே’ என்றால் இறகு போடுவதில்லை. சமயத்தில் தண்டிக்கவும் வேண்டியுள்ளது. அதனால் வார்டன்களுக்கு என்றுமே ஹாஸ்டல் மாணவர்களிடம் நல்ல பெயர் இருந்ததில்லை. இது ஒரு சாபம்!

வார்டனும் மனிதர்தான் – அவரும் மாணவப் பருவம் கடந்து வந்தவர். ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வார்டனாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று யாரும் உணருவதில்லை.

எகத்தாளம்! கேலி! கிண்டல்! மெஸ். பாத்ரூம் எல்லா இடங்களிலும் வார்டனைப் பற்றின கார்ட்டூன்! சுரேஷுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு. அவன் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.

சுரேஷ் உடையை மாற்றுவதற்குள் மறுபடியும் மிஸ்ட்கால். பிரின்ஸ்பால் விடமாட்டார்.

சட்டென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அவன் வார்டன் மட்டுமின்றி கல்லூரியில் அவ்வப்போது வகுப்பு எடுப்பவன் என்பதால் அங்கேயே அவனுக்குத் தங்கவதற்க அறை ஒதுக்கியிருந்தனர்.

பிரின்ஸ்பாலின் அறை, பிரின்ஸ்பாலிடம் எந்த மாற்றமுமில்லை. சரியான முசுடு. அதே கண்டிப்பு, அதே படபடப்பு, வேகம். வேகம் செயலில் மட்டுமில்லை, அடுத்தவர்களின் மேல் பாய்ச்சலிலும்.

மனிதர் ஒரு நிமிடம சும்மா இருக்கமாட்டார். பிரின்ஸ்பால் தனி அறையில் அமர்ந்து போன். மொபைல் மூலம் ஆட்டிப் படைக்கலாம. ஈமெயிலில் உத்தரவு கொடுக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை.

கல்லூரி, விடுதி என உலாத்திக்கொண்டே இருப்பார். இரவிலும் கூட மனிதர் அயர்வதில்லை. அறைக்குள் விளக்கு எரியும், மின் விசிறி சுழலும். பசங்கள் அவர் உள்ளே இருக்கிறார் என்று தெரிந்தால் இரவில் அறையை வெளிப்பக்கம் தாழிட்டுவிட்டு காம்பவுண்ட் தாண்டுவார்கள்.

பூந்தோட்டத்தில் அமர்ந்து கஞ்சா அடிப்பார்கள். அவர்கள் மதி மயங்கி இருக்கும்போது வந்து பின்னால் நிற்பார். அவர்களுக்கு வெலவெலத்துப் போகும்.

பிசாசு இங்கே எப்படி வந்தது?

ஓட்டம் பிடிப்பார்கள். மறுநாள் ஓலை வரும் – பிசாசு கூப்பிட்டுக் கண்டிக்கும் – தண்டிக்கும் என்று பசங்கள் காய்ச்சல் கண்டிருப்பார்கள். பயபக்தியோடு சாமி கும்பிடுவார்கள். சர்ச்சில் மண்யிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அத கரையும் வரை உருக்கமாகப் பிரார்த்தனை.

பிரின்ஸ் – இன்னும் ஏன் வளர்த்துகிறது? உடனே கூப்பிட்டு கடித்து, குதறி எத்தனை அபராதம் எனத் தெரிவித்தால் – சக தோழிகளின் கை, கால் பிடித்துக் கடன் வாங்கிக் கட்டலாம். ஆனால் படுத்தல்.

ஏன் அழைக்கவில்லை? ஒருவேளை வீட்டிற்க்க கடுதாசி...?

தொலைந்தோம்... என்று பசங்கள் தகிப்பார்கள். அந்த மாதிரிச் சம்பவம் எதுவுமே நடக்காது. எதுவுமே நடக்காத மாதிரி அவர் அவர்களிடம் பேசுவார்.

பிசாசு -  அப்போ நம்மைக் கவனிக்கலையோ? இருட்டுல அதுக்குக் கண்ணு தெரிஞ்சிருக்காது. நாம்தான் வீணாய்.... பயந்து ஒரு வாரமாய் பக்திப் பழமாயிட்டோம்.

அவர் அப்படித்தான் மலையைவிட்டு விடுவார். மயிலிறகுக்குக் கத்தி ஆர்ப்பாட்டம். சின்னச் சின்ன காரியங்களிலும் நேர்த்தி பார்ப்பார் எதிர்பார்ப்பார்.

நம்மால் முடிந்ததைத்தான் ஒப்புக் கொள்ளணும். ஒப்புக் கொண்டால் சரியாய் முடித்தாக வேண்டும்.

இப்போது என்னை எதற்காக வரச் சொல்லியிருக்கிறாரோ... என்னத்தைத் தலையில் தூக்கிப் போடப் போகிறாரோ... பயத்துடன் நின்றிருந்தான்.

பிரின்ஸ், அவன் படிக்கும் அந்த நாட்களிலேயே ஸ்பை வைத்திருப்பார். எப்படி, யார் மூலம் என்று தெரியாது. கல்லூரி மெஸ், மைதானம், நூலகம், பாத்ரூம் என எல்லா விஷயங்களும் அவருக்கு எட்டிவிடும்.

சிலவற்றைக் கண்டும் காணாத மாதிரி விட்டுவிடுவார். சில விஷயங்கள் தன் காதுக்கு வந்துவிட்டது என்பதைப் பசங்களுக்கு  உணர்த்தி உணர்த்தியே மிரள வைப்பார்.

சுரேஷிற்கு அவர் மீது இப்போதும் கூட பயம். படிக்கிற நாட்களில் வீட்டில் கொடுத்த ஹாஸ்டல் பீஸ், சினிமா, தண்ணிக்குப் பாய்ந்துவிடும். இங்கே கட்டவில்லையென்றால் மெஸ் கட். அப்புறம் பரீட்சை எழுத விடமாட்டார்கள்.

இந்த மனுஷனுக்குக் கருணையே கிடையாதா என்று தோன்றும். அப்போது அவர் பெயரில் வெறுப்பு. துவேஷம். ஆவேசம் எழும்.

ஆனால் அந்தக் கண்டிப்பு இல்லாவிட்டால். கெட்டுப்போவது எனக் கிளம்பிவிட்ட பசங்களைத் திருத்த முடியாமல் போய்விடும் என்பது இப்போது அவனுக்கு விளங்குகிறது.

காலம் கடந்த ஞான்னோதயம். இன்றைய பசங்களும் பின்னாளில் உணருவர். இது வழிவழியாய் வரும் சுற்று.

“ஏன்யா.... மசமசன்னு நிக்கறே... உட்கார். என்ன யோசனை...?” அறைக்குள் நுழைந்தவனைக் கேட்டார் பிரின்ஸ்பால்.

“ஒண்ணுமில்லை சார்!” என்று சட்டென நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான்.

“சுரேஷ், ஏன் இந்த நரகத்திற்கு வந்தோம்னு தோணுதா?”

“அப்படியெல்லாமில்லே சார் பசங்கதானே... !”

“எம்.டி.எஸ். பண்ணிட்டு எதுக்கு நீ வாதியாரா வரணும்? ஒரு கிளினிக் வெச்சு....!”

“கிளினிக் வச்சதாலதான் சார் பிரச்னையே நண்பர்களை நம்பி பெரிதாய் கடன் வாங்கி கிளினிக் ஆரம்பிச்சு சரியாய் வரலே. இழுத்து மூடிட்டேன். நம்பிக்கை துரோகம்!”

“பேசாம கவர்ன்மென்ட் கிளினிக்குக்குப் போயிருக்கலாமே!”

“போகலாம் சார்... எட்டாயிரம் ரூபாய்க்கு கிராமத்துல போய் லோல் படணும்.  அது போகட்டும் சார், என்னை எதுக்கு வரச் சொன்னீங்கன்னு...”

“சொல்றேன்...” என்றவர் வாசலில் சலனம் தெரிய மணியடித்து, ”’ “பியூன், அந்தப் பொண்ணை வரச் சொல்!” என்றார். இவருக்கு ஆயிரம் கண்கள்.

உடன் நளினமாய் தாவணி ஒன்று தென்றலடித்து, “குட்மார்னிங் சார்!” என்று சுரேஷ் அமேர்ந்திருந்த பக்கம் திரும்ப, அவனுக்கு மின்னல் வெட்டிற்று. தங்கத்தாமரை!

“சுரேஷ், இவளை உனக்குத் தெரியாது.... ! சுஷ்மா...”

 அவன் யோசிக்க, அவள், “சார், எங்களுக்கும் கிளாஸ் எடுத்திருக்கார்.” என்றாள் பணிவோடு.

“சுரேஷ், இவள் படிப்புல மட்டுமில்லை. ஸ்போர்ட்ஸ். ஆர்ட்ஸ். பாட்டு. நடனம். ஓவியம்னு எல்லாத்துலயும் டேலண்ட். போன மாதம் கஷ்மா கொடுத்த பிரசன்டேஷனுக்கு ஏகப்பட்ட பாராட்டு! நம் கல்லூரி மேகஸினுக்கு எடிட்டர்கூட  இவதான்! நல்லா எழுதவும் செய்வா!”

அவர்பாட்டுக்குப் பாராட்டிக்கொண்டே போக கஷ்மாவிற்குக் கூசிற்று. சுரேஷிற்கு உள்ளுக்குள் இனம் புரியா தகிப்பு.

“சுஷ்மா, இந்தா!” என்று பிரின்சிபால் கவர் ஒன்றை நீட்டினார்.

“என்ன சார்?”

“பிரிச்சுப் பார்! உன் பிரன்டேஷனுக்காக மெடிக்கல் கம்பெனி கொடுத்த சன்மானம்.”

கவரை வாங்கிக் கொண்டவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. ஆரவாரமுமில்லை. அமைதி, அடக்கம். உற்று நோக்க... அனைத்து திறமைகளையும் கடந்து அவளது கண்களில் இழையோடும் விரக்தியை அவனால் ஸ்பரிசிக்க முடிந்த்து. ‘இவளுக்குள ஏதோ ஒன்று உரைக்கிறது. உரைத்து உரைத்து ஊனப்படுத்துகிறது. என்ன அது...?’

அவன் யோசித்து முடிப்பதற்குள், ”’“தாங்க்ஸ் சார்! நான்வரேன்.” என்று கிளம்பினாள். அதற்குள் ஏன் போனாள் என்றிருந்த்து அவனுக்கு.

“சுரேஷ், பசங்க எப்படி? வெறுப்பேத்தறாங்காள?”

“இல்லே சார். பழகிருச்சு. நானும்கூட அப்படியிருந்தவன் தானே!”

“நான் இப்போ எதுக்கு வரச் சொன்னேன்னா... அடுத்த வாரத்துல மருத்துவ கேம்ப் வருது. அருகில் ஒரு அனாதைகளுக்கான ஆசிரமத்துல ஏற்பாடு. அதுக்கு நீதான் பொறுப்பு. பசங்களை அழைச்சுப்போய் சிறப்பா முடிச்சுட்டுவரணும். பி-ஸீரியஸ்! மீடியா கவரேஜ் கூட இருக்கு. இதைச் சிறப்பா முடி. அப்புறம் முழு நேர லெக்சர்ராக்கிடறேன்.”

“தாங்க்ஸ் சார்!” என்றானே தவிர அவனது நெஞ்சு முழுக்க அவள்... தங்கத்தாமரை! யாரவள்? எந்த பிளாக்கில். எந்த அறையில் இருக்கிறாள் என்று சிந்தனை ஓட ஆரம்பித்தது.

2

அனாதைப் பிள்ளைகள் ஆசிரமம்.

பூக்கள். கீரைத் தோட்டம், பழ மரங்கள் என தென்றல் குடிகொண்ட பிரதேசம்.

மரங்களும் செடி, கொடிகளும் பசுமை பரப்பியிருந்தன. மைதானத்தில் பிள்ளைகள் உடைகளையும் உடலையும் அழுக்காக்கிக் கொண்டிருந்தனர்.

வானம் வறண்டு செம்மைப் படர்ந்து இருள் பரவினபோது கோயில் மணி டிங் டாங்!

உடன் பசங்கள் பின்பக்கம் தட்டி விட்டுக் கொண்டு, மண்டபத்தை நோக்கி ஓடினர். வரிசையாய் நின்று தண்ணீர் பைப்புகளில் அவசர கழுகல்.

அடுத்த மணி அடிக்கும் முன்பு எல்லோரும் கோயிலில் ஆஜர்.

அங்கு அமர்ந்து பிரார்த்தனை. அது முடிந்ததும் தலைமை ஆசிரியர் மைக் பிடித்தார்.

“மை சன்ஸ், நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அடுத்த மாதத்தில் பரீட்சை வருகிறது. எல்லோரும் நன்றாகப் படிக்கணும். எப்போதும் விளையாட்டுச் சிந்தனை கூடாது. நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும். படித்து பெரியாள்களாக வரணும். வளரணும். இங்கு உங்களுக்கு நல்ல மனம் படைத்த யார் யாரோ உதவுவது போல நீங்களும் பிறருக்கு உதவணும் செய்வீர்களா?”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles