தங்கத்தாமரைப் பெண்ணே!

 

“நான் வெட்டவா சொன்னேன். சொல்லித்தரும் போது கவனம் எங்கே போச்சு? மாணவிகளிடம் ஜொள். இப்போ என் கழுத்தை அறு. மெல்லிக்கீறி பகுதிப் பகுதியாய், செதில் செதிலாய் எடுத்துப் பாகங்களைக் குறிப்பெடுக்கச் சொன்னால் என்ன பண்ணித் தொலைத்தாய்?”

அவனுக்குத் திரும்பவும் மாணவிகளின் முன்னில் அசிங்கமாயிற்று, மனிதர் தனியாய் அழைத்துப்போய் நாலு மிதி மிதித்திருந்தாலும் கூட வலிக்காது. இங்கே இவர்களை வைத்துக்கொண்டு,கொடுமைடா!

“ஏய், முட்டாள் நான் அரும்பாடுபட்டு நிர்வாகத்திடம் ஏற்பாடு செஞ்ச உடலை இப்படிப் பண்ணிட்டியே! இனி மற்ற ஸ்டூடண்ட்ஸ் என்ன பண்றதாம்?”

அவர் கத்த அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. பிறகு அறைக்குப் போனதும் காய்ச்சல், நான்கு நாட்கள் எழவில்லை.

அப்படி எதுவும் இப்போது நடந்துவிடக் கூடாது என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டான். இன்று சுஷ்மா வேறு இருக்கிறாள். எங்குப் போனாலும் அவள் பிரதானமாய்த் தொடர்கிறாள்...ஏன்? அவளை நினைத்தாலே நெஞ்சுக்குள் பஞ்சு பறக்கிறது. தூக்கம் மறுக்கிறது. எப்போதும் ஒரு மிதப்பு.

மாணவர்கள் தயாராகியிருக்க, அனாடமி ஹாலுக்குள் பிரவேசிக்கும்போதே அட்டெண்டர் அவசரமாய் வந்து வழியை மறித்தார். “இன்னிக்கு அனாடமி கிளாஸ் இருக்குன்னு யாருமே சொல்ல்லையே சார்!“

“அதனால் என்ன! இப்போ சொல்றேன் கிளாஸ் இருக்கு.”

“இன்னொரு நாள் வச்சுக்கலாமே!”

“ஏன்?”

“பாடி ரெடியாயில்லையே!”

“அதான் ஏன்னேன்?”

“என்ன பண்றது சார்! கசாப்புக்கடையில வேலையில செஞ்சமாதிரி ஆளாளுக்கு வெட்டிக் கூறுபோட்டா எங்கே போறதாம்.” என்க. சுரேஷுக்க அவனைத் திட்டுகிற மாதிரி இருந்த்து.

“என்னப்பா கடைசி நேரத்துல இப்படிச் சொல்றே?” என்றவன் விஜய்யைப் பார்த்து, “என்னப்பா, அன்னைக்கு இதுக்காகத்தானே காம்பவுண்டை தாண்டினீங்க!”

“ஆமாம் சார், ஆனா எதுவும் கிடைக்கலியே!” என்று அவன் தலையைச் சொரிந்தான்.

“அட்டெண்டர், பாடி எப்போ கிடைக்கும்? அடுத்த வாரம் செமஸ்டர் வருது. பிறகு லீவு வேற...”

“லீவு முடியறதுக்குள்ள ஏற்பாடு பண்ணிறலாம் சார்!” என்றான். அந்த ஏற்பாடு எந்த ஏற்பாடு எந்த மாதிரி விபரீதத்தில் கொண்டுபோய் விடப் போகிறது என்பதை அறியாதவனாய்.

14

சுஷ்மா தற்போதெல்லாம் தெளிவாகியிருந்தாள். அதற்குக் காரணம் சுரேஷ், அவளது அண்மை, அவன் தரும் தெம்பு, அவர்கள் இருவரின் நெருக்கம் மாணவர்கள் அளவில் தெரிந்தாலும் அவன் அடக்கி வாசித்தான்.

மாணவர்கள் தங்கள் வழிசலை, காதலை, கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே புல்வெளி, மைதானம், காதல் மரம், கேண்டீன், லைப்ரரி, லேப் என்ற பரிமாறிக் கொள்ள முடியும். யாரும் வித்தியாசமாய் பார்க்கமாட்டார்கள்.

ஆனால் அவனுக்கு அப்படியில்லை. வகுப்பைத் தவிர வேறு எஙகும் பேசிவிட முடியாது. செல்போன்தான் அவர்களுக்கு உற்ற நண்பன்.

ஒரு சமயம், “சார், நான் இன்னைக்குச் சந்தோஷமாய் இருக்கேன்.” என்ற குழந்தைபோலக் குதூகலித்தாள் சுஷ்மா.

“மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் அப் த டே!”

“என்னதிது?”

“பிறந்த நாள் வாழ்த்து!”

“சீ... அதில்லை. இன்னைக்கு எங்கம்மாட்ட போனில் பேசினேன். நல்லா பேசினாங்க.”

“மகிழ்ச்சி. பார்த்தியா... நான் அன்னைக்கே சொல்ல்லே? சீக்கிரம் உன்னைத்தேடி வந்திருவாங்கன்னு!”

“தாங்க்ஸ் சார்!”

“வெறும் தாங்க்ஸ் தானா...டிரீட்டெல்லாம் கிடையாதா...?”

“கிடைக்கும். என்ன வேணும்னு சொல்லுங்க! இந்த டி..பி..எஸ்.. டி..பி..எஸ்.னு சொல்றாங்களே... அது என்ன? பசங்களெல்லாம் போறாங்க.”

சுரேஷ் படிக்கும் நாட்களில் நண்பர்களுடன் அந்த மாதிரி இடங்களுக்குச் சென்றிருக்கிறான். குடி, ஆட்டம், பாட்டம் என அது ஒரு வகை மயக்கம்.

“சுஷ்மா! நமக்கு அது சரிப்படாது. உங்க பங்களாவிற்கு அழைச்சுப்போய் விருந்து கொடுத்தால் வரேன்!”

“நிச்சயமாய்... எங்கப்பா வரும்போது!”

“உங்கப்பா வர்றாரா... மலேசியாவிலிருந்தா? எப்போ? ராசியாயிட்டியா நீ...? அப்பா மேல இருந்த கோபம் போயே போயிருச்சா...?

“போயிருச்சு, நான் பேசவும் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், அவர் வரும்போது அம்மாட்ட அழைச்சுப்போய் சர்ப்ரைஸ் கொடுக்கணும். சார்! உங்கள் சந்திப்புக்குப் பிறகு இழந்த ஒவ்வொண்ணா எனக்குத் திரும்பக் கிடைச்சிட்டிருக்கு!”

“கடவுளே! கடவுளே! இதுல என் பங்கு எதுவுமில்லேப்பா! எல்லாமே தானாகவே நடக்குது. உன் கவலைகள் எல்லாம் தீர்ந்து கலகலப்பா பார்க்கணும்னு நான் பிரார்த்தனை பண்ணினதென்னவோ உண்மைதான்!”

“அது! அதுதான் சார்! நல்லவர்கள், நலம் விரும்பிகள் நம்மோட இருக்கும்போது எல்லாம் நல்லதாகவே நடக்கும்!” சுஷ்மா எந்த அளவிற்குச் சந்தோஷமாய் இருந்தாளோ... அதைவிடப் பல மடங்கு கடுப்பு மகேஸ்வரிக்கு, அவளைவிட அதிகமாய் விவேக் கொதித்துப் போயிருந்தான்.

சுஷ்மா தனக்குப் பிடிகொடுப்பதில்லை என்கிற வருத்தம்.

சுஷ்மாவின் பங்களா அவனது பொறுப்பிலிருந்த்து. அவன் அங்கேயே தனது அலுவலகம், பிசினஸ் சமாச்சாரங்களை நடத்தி வந்தான். சுஷ்மா வெறுப்பாய் இருப்பதால் முகுந்தன் இந்தியாவிற்கும் வருவதில்லை.

இப்போது வருகிறார். வந்தால் நான் இங்கிருந்து ‘கெட் அவுட்‘ ஆக வேண்டி வருமோ? சுஷ்மாவும் என்னைவிட்டுப் போய் விடுவாளோ? ஏற்கனவே அவள் சுரேஷ் எனும் லெக்சர்ருடன் இணக்கமாய் இருப்பதை உளவு பார்த்து அறிந்திருந்தான்.

மகேஸ்வரி, “ஏய்... ! நீ ஏர்போர்ட்டுக்குப் போய் மாமாவை அழைச்சு வந்திரு” என்றாள்.

“அதைப் பார்த்தால் முடியுமா...கிளம்பு...”

சென்னை பன்னாட்டு விமான நிலையம்.

வியர்த்தும் வெதும்பியும் பயணிகள் டாக்ஸியிலும் ஆட்டோ, கார்களிலும் வந்து இறங்கினர். டிராலி தள்ளினர். சுற்றுப்புறப் புகை மூச்சு முட்டிற்று.

விவேக் காரை நிறுத்தி விட்டு இறங்கினபோது செல்போன் அலறிற்று, எதிர்ப்பக்க்க்  குரலில் பதற்றம், பயம் தெரிந்த்து.

“விவேக், நம்ம திட்டமெல்லாம் பாழ்! போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சிருச்சு. கஸ்டம்ஸ்ல சிக்கல்!”

“என்னடா சொல்றே! கஸ்டம்ஸ்ல தான் நம்ம ஆள் இருக்கானே அவனைப் போய் பார்!”

“பிரயோஜனமில்லை. அவனுக்கு மேல விஷயம் போயிருச்சு... இப்போ என்ன பண்ண்ணும்னு சொல்லு?”

“எல்லோருமே மாட்டிக்கிட்டாங்களா?”

“இல்லை. ரெண்டு பேர் மட்டும். மத்தவங்களை உள்ளேயே அனுப்பலே

“நல்லது. அந்த ரெண்டு சனியன்களும் நம் பெயரைச் சொல்லாம பார்த்துக்க! நான் ஆபிசர்களைப் பார்க்கிறேன். இனி ரூட்டை மாத்தணும்!”

விவேக் வந்த வேகத்திலேயே காரைத் திரும்பிக் கொண்டு பறந்தான். இன்னும் பத்து நிமிடத்தில், ஜெட் ஏர்வேஸ் வந்து நிலம் தொடும். அரைமணி நேரத்தில் மாமா வந்து விடுவார். அதற்குள்... அதற்குள்... சிக்கலை அவிழ்த்துவிட வேண்டும. செல்லில் பலரையும் முயன்றான்.

தாய் மண்ணில் கால் பதிப்பதென்றால் முகுந்தனுக்கு எப்போதுமே சந்தோஷம் துள்ளும். அதுவும் இந்தப் பயணத்தில் பல சந்தோஷங்கள்! சுஷ்மா மனம் மாறிப் பேசினது... வரச் சொன்னது... சில நாட்களுக்கு பிசினஸ் டென்ஷனிலிருந்து விடுதலை!

சுஷ்மாவிற்கென்று பார்த்துப் பார்த்து உடைகள், நகை, செருப்பு என வாங்கி வந்திருந்தார். எப்போதும் கைப்பெட்டியுடன் பயணிப்பவருக்கு இம்முறை பெட்டி கனத்த்து.

பதினோரு மணிக்கு விமானம் சென்னையைத் தொட்டதும் உற்சாகமாய் வெளியே வந்தார். இமிகிரேஷன் வேகமாய் நடந்து மாடி இறங்கி லக்கேஜ்களை எடுக்க கன்வேயரிடம் வண்டியோடு நின்றார்.

பெட்டிகள் ஆடி ஆடி வந்தன. யார் யாரோ எடுத்தார்கள். கிளம்பினார்கள். ஏன் என் பெட்டி தாமதமாகிறது? இது எப்போதும் உங்க நிகழ்வுதான். நாம் எவ்வளவுக்கெவ்வளவு அவசரப்படுகிறோமோ, அவ்வளவுக்குக் குறுக்கீடுகள் வரும். தடைகள் வரும.

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்! சுஷ்மா நீ எப்படியிருப்பாய்? இ மெயிலில் உன் படம் பார்த்தேன். க்யூட் கேர்ள்! நீ ஏர்போர்ட்டிற்கு வந்திருப்பாயா?

அவர், மணி பார்த்தபோது கஸ்டம்ஸ் அதிகாரிகள் இங்கு மங்கும் ஓடுவது தெரிந்த்து.

அவர்களிடம் ஆவேசம், பரபரப்பு. அவர்களுக்குப் பின்னால் இரண்டு மூன்று பெண்கள், வாயும் வயிறுமாயிருந்த அந்தப் பெண்களை அவர்கள் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு ஓடாத குறை. அவர்களும் நடக்க முடியாமல் கண்களைக் கசக்கினர். மூச்சு வாங்கினர்.

அதிகாரிகள் அப்பெண்களை அறைக்குள் தள்ளி காணாமல் போயினர். அங்கு என்ன நடக்கிறது... என்ன விஷயம் என்று அறிய எல்லோருக்கும் ஆவல். சுவாரஸ்யம்.

பாவிக்ள்! கர்ப்ப ஸ்திரீகளை இப்படியா அலைக்கழிப்பார்கள்! முகுந்தனுக்குக் கோபம் வந்த்து. மூக்குச் சிவந்த்து. சட்டப்படி நடக்க வேண்டியதுதான்! அதற்காக இப்படியா...? மனிதாபிமானம் வேண்டாம்?

கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களை விட்டுவிடுவார்கள். அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்கி ஓட்டு வாங்கி ஜெயித்து, கேஸ்களை ஒன்றுமில்லாமல் செய்து கொள்வார்கள். சட்டம் என்பது பாவப்பட்டவர்களுக்கு மட்டும்தானா?

அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிகாரியின் அறைக்கதவு திறக்கப்பட்டது. உள்ளே போன அந்தப் பெண்கள் வெளியே வந்தபோது அவர்களின் வயிறு மெலிந்து காணப்பட்டது. அதற்குள் நார்மல் டெலிவரி ஆகிவிட்டதோ? அப்போ அவர்கள் கர்ப்பம் இல்லை? அவர்களின் வயிற்றில் இருந்த்து கடத்த்ல் பொருட்களா? கடவுளே... இங்கே யாரையுமே நம்ம முடியவில்லையே!

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles