தங்கத்தாமரைப் பெண்ணே!

 

சுஷ்மா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கூசிற்று.

அந்தப் பார்வையில் ஒரு வீச்சு இருந்த்து. இவன் என்னவன், எனக்குரியவன். இவனிடம் என்னையே தரலாம். ‘தரலாமா...’ என்று கேட்கிற பாவம்.

பார்வை, பார்வை, கொல்கிறாள். இவர்களுக்கு இநத் வசீகரம் எங்கிருந்து வருகிறது? யார் சொல்லித் தருகிறார்கள்? எங்கே பயிற்சி பெறுகிறார்கள்?

சுரேஷ் பேச்சை மாற்ற வேண்டி, “சுஷ், உடங்கம்மாவின் மரணம் இயற்கையானதில்லை. கொலை எனும் பட்சத்தில் அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிப்பதில் உனக்கும் ஆர்வம்தானே!”

“ஷ்யூர்... இதென்ன கேள்வி?”

“அதுக்கு உன் உதவியும் தேவைப்படுது.”

“என்ன செய்யணும் சொல்லுங்க?” என்று அவனை உரசிக்கொண்டு எழுந்தாள்.

“அன்னிக்கு ஒருநாள் பசங்க காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து... அவர்களை நான் பிடித்து... அவர்கள் என்னைத் தாக்கி ஆஸ்பத்திரி.... ஞாபகமிருக்கா? நீ கூட அவர்களை அழைத்து வந்து ஸாரி சொல்ல வைத்தாயே!” என்று தன் நெற்றியைத் தடவிக்கொண்டு புன்னகைத் தான்.

“யெஸ்ஸ்.... ஸ்....” என்று நாணினாள். “அன்னிக்கு என்னையு மறியாமல் ஒரு உந்துதல். பசங்க அப்புறமாய் நிறைய கிண்டல் பண்ணாங்க. அதுக்கென்ன இப்போ?”

“காம்பவுண்ட் தாண்டினதுக்கு அன்று அவர்கள் சொன்ன காரணம். அனாடமிக்காகப் பிணம் தேடப் போனோம் என்பது.”

“யெஸ்.... யெஸ்... ஐ ரிமம்பர்! அதுனால?”

“போன மாதம் விடுமுறைக்கு முன்வரை அனாடமிக்கு பாடி இல்லை. அதுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் கிடைச்சிருக்கு. உங்கம்மா காணாமல் போயும் இரண்டு வாரங்கள். எனக் கென்னவோ. அந்தப் பசங்களை விசாரிச்சா....”

“சேச்சே, பசங்கள கொலை வரை போவாங்கன்னு நான் நினைக்கலே. எங்கம்மாவைக் கொலை செய்ய அவங்களுக்கு என்ன மோட்டிவ்?”

“பல சமயங்களில் மோட்டிவ் இல்லாமலேயே குற்றங்கள் நடக்கின்றன. எதிர்பாரா நிகழ்வு. அவர்களைக் கொஞ்சம் வரச் சொல்றியா? பேசுவோம்!”

“நீங்கள் கூப்பிடலாமே!”

“இல்லை, வேணாம். பசங்க பதுங்க அல்லது தயங்கக்கூடும். நீயே சும்மா காபி ஷாப்புக்குக் கூப்பிடு.”

அன்று மாலை.

ஜானி, கணேஷ் தன் நண்பர்களுடன் காபி ஷாப்பில் ஆஜர். சுஷ்மா அங்கே வரவேற்க, “என்ன விசேஷம்? உனக்குப் பிறந்த நாளா?”

“இல்லை, எனக்கு!” என்று சுரேஷ் மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் கணேஷ் பதறின மாதிரி, பயந்த மாதிரி தெரிந்த்து. அதை மறைத்துக் கொண்டு, “மெனி, மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே சார்!” என்றான்.

“ரொம்ப நன்றி. வாழ்த்தோட நிறுத்திக்காம அப்படியே இவங்கம்மாவோட பாடி எங்கே கிடைச்சதுன்னும் சொல்லிட்டா இன்னும் அதிக நன்றி உடையவனா இருப்பேன்.”

“சார், பாடியா?” என்று மிரண்டார்கள். “சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது.”

அவர்கள் ‘காபியும் வேணாம், ஒண்ணும் வேணாம்’ என்று கிளம்ப முயல, “ஏய், வெயிட்... வெயிட். அனாவசியமா காம்பஸுக்குள்ளே போலீஸைக் கொண்டுவர வேணாம்னு பார்த்தேன்!”

போலீஸ் என்றதும் அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாய் வியர்த்தது. “சார்! நீங்க எங்க மேல சந்தேகப்படறீங்கன்னு புரியுது. அன்னைக்கு ‘பாடி’ தேடப் போனோம்னு நாங்க சொன்னது பொய். வெளியே கிளப்புக்குப் போயிட்டு வந்தப்போதான் உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம்! ஏற்கனவே உங்களைத் தாக்கியாச்சு. அதோட ரெண்டாவது குற்றமா கிளப்பும் சேர்க்கப்படும்னு தான் மறைச்சோம்! சுஷ்மா! இதுதான் உண்மை! சாருக்கு எடுத்துச் சொல்லு. நீ சொன்னா கேட்பார்!”

ஜானி கண்சிமிட்ட, சுஷ்மா வெட்கப்பட, சுரேஷ் புன்னகைக்க, “ரொம்ப நன்றி சுஷ்மா!” என்று அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் ஸ்டேஷன்.

சுரேஷ் போனபோது விஜய் போனில் மும்முரம். “ஓ.கே. சார்! நான் இப்போ சொல்லிர்றேன்!” என்று குதூகலித்தான்.

போனை வைத்துவிட்டு, “சுரேஷ்! எங்கூட இப்படிக் கொஞ்சம் வாங்க!” என்று உள் அறைக்கு அழைத்துப் போனான்.

டேபிள் மேலிருந்து தணியை விலக்க அங்கே விரைத்துப்போய் இரண்டு குழந்தைகள்! எத்தனையோ மார்ச்சுவரி, அனாடமிகளைப் பார்த்திருந்த அவனுக்கே அக்குழந்தைகளைப் பார்க்க், தூக்கி வாரிப் போட்டது.

“என்ன சார் இது... பொம்மைகளா....?”

“இல்லை... இறந்த பிணங்கள்!”

“மை காட்! இது எப்படி, எங்கிருந்து கிடைச்சது?”

“ஏர்போர்ட்ல! கஸ்டம்ஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு மயக்க மருந்து கடத்தல்!”

“புரியலே... !”

“விளக்கமாகச் சொல்றேன். இரண்டு பெண்கள் அதோ அந்த அறைக்குள் காவலில் இருக்காங்களே அவங்க இவற்றைத் தங்கள் சொந்தக் குழந்தை மாதிரி சேலை தலைப்புல அரவணைச்சு மலேசியா போக முயற்சி பண்ணாங்க, யதேச்சையா குழந்தையை பரிசோதிச்சப்போ இதன் வயித்துல மயக்க மருந்து பொட்டலங்கள்!

ரெண்டு போடு போட்டப்ப அந்தப் பொம்பளைங்க உண்மையை ஒப்புக்கிட்டாங்க. அவங்க பணத்துக்கு ஆசைப்பட்டு குருவியா கிளம்பினவங்க. இவங்களை செலுத்தினவங்க, குழந்தைக்கு போலியா பாஸ்போர்ட் விசா எடுத்துக்  கொடுத்திருக்காங்க. மலேசியாவுல இந்தக் குழந்தைகளைக் கொடுத்துட்டு அங்கே கடைகள்ல இவங்களுக்கு வேலைன்னு சொல்லி இந்த ஏற்பாடு நடந்திருக்கு.”

“யாராம்...?”

“தெரியல. இவங்களுக்கு எதுவுமே தெரியாது. அப்பாவிங்க. கடத்தல்கார்கள் கில்லாடிகள். முன்பு ஒருமுறை கர்ப்பிணிப் பெண்களா அனுப்பினாங்க. அடுத்து இப்போ டெலிவரி ஆகிருச்சு! வெவ்வேறு வேஷங்கள்!

இந்தக் குழந்தைங்க எங்கிருந்து....?”

“கண்டுபிடிக்கணும். மோப்ப நாய் ஆராய்ச்சிக்குக் கிளம்பியிருக்கு!”

“இதுல சுஷ்மாவோட அம்மா எங்கே வாராங்க?”

“சொல்றேன். இறந்த உடலை சுத்தப்படுத்த பார்மால்டிஹைட் கெமிக்கல் உள்ளே செலுத்துறது, வெளியே பூசறதுன்னு டாக்டர் மனோகர் சொன்னாரே, அதைப் பரிசோதிக்கத்தான் உங்களை வரச்சொன்னேன்!”

“யெஸ் சார்... ஸ்மெல்லை வச்சுப் பார்க்கும்போது இதுவும் பார்மால்டி ஹைடுன்னுதான் தெரியுது.”

“அதை இன்ஜெக்ட் பண்ண பிரத்யேக உபகரணங்கள் வேணும். வெளியே அவை எளிதாய்க் கிடைக்காது என்னும்போது இந்தக் குழந்தைகளுக்கு பார்மால்டிஹைட் இன்ஜெக்ட் பண்ணினது யார்? எங்கே வைத்து?”

அப்போது செல்போன் அழைத்தது.

அடுத்து பேசின விஜய்யின் முகத்தில் பிரகாசம்.

“அப்படியா! அங்கேயே இருங்க வந்துடறேன்!” என்று உற்சாகமானான்.

“சுரேஷ், குழந்தைங்க எங்கேயிருந்து கிடைச்சுதுன்னு கேட்டீங்களே, கண்டுபிடிச்சாச்சு. நாய் மோப்பம் பிடிச்சு, அந்த நபரை ரவுண்ட் அப் பண்ணினதுல உண்மையை ஒப்புக்கிட்டாராம்.”

“யார்.... யார் சார் அது?”

“அனாதைப் பிள்ளைகள் ஆசிரம நிர்வாகி!”

21

ஆசிரமத்தில் போலீஸ்

எதிரே இன்ஸ்பெக்டர் விஜய், டி.எஸ்.பி., சர்க்கிள், கான்ஸ்டபிள்கள் என அணிவகுப்பு. விஜய்யுடன் வந்திருந்த சுரேஷ் நிர்வாகியையே வெறித்துக் கொண்டிடிருந்தான். அவனுடன் சுஷ்மாவும்.

“சார், நீங்க செஞ்சது எத்தனை பெரிய குத்தம்னு தெரியுமா?”ஆசிரம நிர்வாகியை விஜய் கேட்க, “ஸாரி இன்ஸ்பெக்டர். எந்தக் குற்றத்துக்கும் நாங்க துணை போகலே, சந்தர்ப்பச் சூழ்நிலை, இந்த அளவுக்குக் கொண்டுபோய் விடும்னு நாங்க எதிர்பார்க்கலே. ஒரு வருடம், ரெண்டு வருடமில்லை... முப்பது வருடங்கள் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறோம். பணத்திற்காக இல்லை. ஆத்மதிருப்திக்காக. இது மாதிரி எந்த அசம்பாவிதமும் இங்கு நிகழ்ந்ததில்லை.”

“அப்புறம் இப்போது மட்டும் எப்படி?”

“யாரையும் குற்றப்படுத்துனுங்கிறது என் நோக்கமில்லை. அது ஒரு நிர்வாகிக்கு அழகுமல்ல. இருந்தாலும் விஷயம் இந்த அளவுக்கு விபரீதமான பிறகு எதையும் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை. தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பிரச்சினைகளுக்கு ஆயா செண்பகத்தம்மாதான் காரணம்.”

“வாட்!” என்று சுஷ்மா பொங்கினாள். “உயிருடன் இல்லைங்கிறதால அவங்க மேல பழி போடறீங்களா?”

“இல்லை, சத்தியமா இல்லை. இவ்ளோ நாளா நாங்க இது பத்தி பேசினோமா? இப்போ பேசவேண்டியதா இருக்கு.”

“எங்கம்மாவை உங்க அஜாக்கிரதையால நான் பறிகொடுத்திட்டு நிக்கறேன். அப்ப நான் கெஞ்சிக்கேட்டப்ப நீங்க அம்மாவை என்கூட அனுப்பியிருந்தீங்கன்னா அவங்களை நான் பிணமா பார்த்திருக்கிற துர்ப்பாக்கிய நிலைமை வந்திருக்காது.”

சுஷ்மா மேலும் பொங்கினாள். சுரேஷ் அவளை அமைதிப்படுத்தினான்.

“சுஷ்மா, அவர் சொல்லி முடிக்கட்டும். யாரும் இடையில் குறுக்கிடக் கூடாது. நீங்க சொல்லுங்க சார்!”

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles