தங்கத்தாமரைப் பெண்ணே!

 

“செண்பகத்தம்மா ரொம்ப பொறுப்பா ஆத்மாத்தமாதான் இருந்தாங்க. மகள் சுஷ்மாவைப் பார்த்த பின்பு அவங்களோட நிம்மதி போச்சு, கவனம் பிசகிச்சு. எப்போதும் புலம்பல், வெறுமை, பைத்தியம் பிடித்த மாதிரி என்ன செய்கிறோம். ஏன் செய்கிறோம்ங்கிறது புரியாம், தெரியாம பலவித குளறுபடிகள்.

அவங்களோட நிலைமை புரிஞ்சு பசங்களுக்குச் சாப்பாடு தயார் பண்றதிலிரந்து விடுவிச்சோம். கொஞ்ச நாளைக்கு ஓய்வா இருக்கட்டும்னு தொட்டில் குழந்தைங்க பகுதிக்கு மாத்தினோம். அங்கே அவ்ளோ வேலை கிடையாது. மொத்தம் பத்து குழந்தைங்க தான். ஒத்தாசைக்கு ஆட்கள் உண்டு.

குழந்தைகளுக்குப் பால், மருந்து மட்டும் கொடுத்தாப்போதும். ஆனா அங்கேயும் இவங்களால முடியலே. எப்படி நடந்தது. என்ன நடந்த்துன்னு தெரியலே ஒருநாள் குழந்தைகளெல்லாம் வாந்தி, மயக்கம். எங்க ஆசிரமத்து டாக்டர்கள் எத்தனையோ முயற்சி பண்ணியும் கூட மூணு குழந்தைகளைக் காப்பாத்த முடியாமப் போச்சு. புட் பாய்சன்ல இறந்து போச்சுங்க.

அந்தக் குழந்தைகளைப் பின்னால் உள்ள மயானத்துல முறைப் படி அடக்கம் பண்ணோம். அதுக்குப் பின்னாடி செண்பகத்தோட நிலைமை இன்னும் மோசமாப் போச்சு. தன்னாலதான் இப்படி ஆயிருச்சுன்னு ஒரே புலம்பல். அவங்களோட பரிதாப நிலைமையைப் பார்த்துட்டு நானே அவங்கக்கிட்ட நீங்க வேணும்ன உங்க மகள் கிட்ட போறீங்களா‘ன்னா கேட்டேன். வெறிச்சுப் பார்த்துட்டு பதில் சொல்லாம இருந்துட்டாங்க. இந்த நிலைமையில தான் திடீர்னு ஒருநாள் அந்தம்மாவைக் காணலை. அதுக்கப்புறம் மருத்துவக் கல்லூரியில அவங்க பாடி கிடக்கிற விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். பாவம் செண்பகம்! இங்கு நிறையவே தொண்டாற்றியிருக்காங்க”!

அவர் முடிக்க, இன்ஸ்பெக்டர் தன் மேலதிகாரிகளைப் பார்த்தார்.

 “சார், உங்களோட சேவையைக் கருத்தில் கொண்டு நீங்க சொல்ற விஷயங்களை நம்ப வேண்டியிருக்கு. இருந்தாலும் குழந்தைங்க இறந்ததையோ, செண்பகத்தம்மா காணாமல் போனதையோ ஏன் போலீஸில் தெரிவிக்கலே?”

“இதோ பாருங்க. எதையும் மறைக்கணும்னு செய்யலே. அந்தக் குழந்தைங்களோட இழப்பும், ஆயாவோட நிலைமையம எங்களை பலவீனப்படுத்திடுச்சு, பிறந்தவுடனே தூக்கி எறியப்படற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கணும்னுதான் இங்கே கொண்டு வரோம். கவனக்குறைவால் பாலில் பிரச்சினை. அதனால குழந்தைகள் இறப்புன்னு இதுவும் ஒரு வகையில் இயற்கை மரணமே. வீடுகள்ல புட்பாய்சன் ஏறப்டறதில்லையா? குழந்தைகள பத்தி புகார் சொன்னா மீடியாக்கள் வரும். ஆசிரமத்துப் பெயர் கெடும். மேற்கொண்டு சேவை செய்யறதுக்குத் தான் பிரச்சினை. அதனால்தான் அமைதி காத்தோம். ஆயாவும் எங்கேயாவது சுத்திட்டு வந்திருவாங்கன்னுதான் நினைச்சோம். ஆனா முறைப்படி புதைத்து குழந்தைங்களைத் தோண்டி எடுத்து இப்படி அநியாயமாய் கடத்தலுக்குப் பயன்படுத்து வாங்கன்னு யாருக்குத் தெரியும்? மனசாட்சியில்லாத கிரிமினல்கள்.”

“குழந்தைகளைப் புதைத்து இடங்களைப் பார்க்கலாமா?”

நிர்வாகி அவர்களை அங்கே அழைத்துச் செல்ல, அவர்களுக்கு முன்பு மோப்ப நாய்கள் ஓடி அந்தக் குழந்தைகள் அடக்கம் பண்ணப் பட்ட இடத்தைப் பிராண்டின, குரைத்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் பட்டுப்போய்க் கிடக்க, புதர்களும் நாணல்களும் மண்டிக்கிடக்க, மயானம் வெறிச் சோடிக் கிடந்த்து. அங்கே திட்டுத்திட்டாய் புதைக்கப்பட்ட பிணங்கள்.

குழந்தைகள் அடக்கம் பண்ணப்பட்ட மண்மேடுகளை நாய்கள், தங்கள் கால்களால் பிராண்டி, மோப்பம் பிடித்து சங்கிலியை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன.

“வாங்க நாமும் அவற்றை பாலோ பண்ணுவோம்.”

நாய்களைப் பிடித்துக்கொண்டு கான்ஸ்டபிள்கள் ஓட, அவர்கள் ஜீப்பில் ஏறிப் பின் தொடர்ந்தனர்.

ஓடி ஓடி மூச்சு வாங்கி அந்த நாய்கள் பங்களா ஒன்றின் பின்பக்கம் போய் குரைத்தன. காம்பவுண்ட் கேட்டை முட்டின.

சுஷ்மா அதற்குள் அரண்டு போயிருந்தாள். “சார், இது எங்க பங்களா!”

“வாட்!”

அதற்குள் பூட்டு உடைக்கப்பட்டு எல்லோரும் உள்ளே பிரவேசித்தனர். நாய் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வந்து ஒரு மூலையிலிருந்த கதவின் மேல் தாவ...

அதையும் உடைத்து உள்ளே பிரவேசித்தால் அதன் கீழ்த்தளத்தில் அங்கங்கே மரப்பெட்டிகள். பேக்கிங் சாமான்கள். வெள்ளை பாக்கெட்களில் மயக்க மருந்து பவுடர்கள்.

சுஷ்மாவிற்கு அவற்றைப்  பார்க்கப் பார்க்க அழுகையாய் வந்தது. பாவிகள் அப்பா கஷ்டப்பட்டு எனக்காக்க் கட்டிய பங்களாவில் கிரிமினல்கள் யார் அது? யார் அந்த அயோக்கியர்கள்?

மறு அறையில் சுரேஷ், “சார் இதுதான் அந்த மெஷின்கள். இதை வைத்துத்தான் பார்மால்டிஹைட் திரவத்தை இறந்த் உடலில் செலுத்துவார்கள். எங்கள் மருத்துவக் கல்லூரி உபகாரணம் இங்கே எப்படி?” என்று அவன் வியந்தபோது.

உள் அறையில் உறக்கத்திலிருந்த கல்லூரி அட்டெண்டரும், சுஷ்மாவின் மாமா விவேக்கும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அங்கு எந்த சால்ஜாப்பும் எடுபடாது என்பது புரியவே. உடம்பு புண்ணாகும் முன்பு விவேக் தன் குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டான்.

“செண்பகத்தம்மாவை மண்டையில் அடித்துக் கொன்று மருத்துவக் கல்லூரிக்கு இந்த அட்டெண்டர் மூலம் அனுப்பினது நான்தான். கொஞ்ச நாட்களாகவே, கஞ்சா, மயக்க மருந்துகளைப் பல வெளிநாடுகளுக்கும் கடத்தி வருகிறேன். கொஞ்ச நாள் முன்பு கர்ப்பிணிப் பெண்கள் போல ஜோடித்து அனுப்பப்பட்டவர்கள் பிடிபட்டு எனக்குப் பெருத்த நஷ்டம். அதைச் சரி பண்ண குழந்தைகள் மூலம் கடத்தலாம் என யோசனை வந்தது.

 

ஒருநாள் அநத் ஆசிரம மயானம் பக்கம் போனபோது குழந்தைகளைப் புதைப்பது தெரிந்தது. அதைப் பார்த்த பின்பு சட்டென யோசனை. அவற்றைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்தி, உயிருள்ள குழந்தைகளைத் தூக்கிப்போவது போல, பெண்களை ஏற்பாடு பண்ணினேன். அந்தக் குழந்தைகளைச் சுத்தம் பண்ணி கெமிக்கல் செலுத்த இந்த அட்டெண்டர் உதவினாள். குழந்தையின் வயிற்றைக் கிழித்து உள்ளே கஞ்சாப் பொட்டலங்களை வைத்து தைத்து அவர்களுக்கு போலி பாஸ்போர்ட், விசாக்கள் எல்லாம் ரெடி பண்ணியும்கூட என் கெட்ட நேரம் அவர்கள் பிடிபட்டு விட்டார்கள்.!”

“அயோக்கிய ராஸ்கல்! எங்கம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்கன்னு அவங்களைக் கொலை செய்தே?”

சுஷ்மா ஆவேசப்பட, “என்னை மன்னிச்சிரு சுஷ். சத்தியமா அது உங்க அம்மான்னு தெரியாது. அன்று இரவு குழந்தை பிணங்களைத் தோண்டி எடுக்கும்போது இந்தம்மா அந்தப் பக்கம் வந்துட்டாங்க. அவங்க கத்தி கூப்பாடு போட, கையில் கிடைத்த தடியை எடுத்து அவங்க மண்டைல அடி! உடனே தரையில விழுந்து அவங்க மரணம்! அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே. உடலை அப்புறப்படுத்தலாம்னு வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு வந்தப்பதான் இந்த அட்டெண்டர் அனாடமிக்குப் பிணம் வேணும்ன எப்போதோ சொன்னது ஞாபகத்திற்க வந்தது. சரின்னு இவன்கிட்ட ஒப்படைச்சேன்.”

விவேக் சொல்லிவிட்டு போலீஸ்களைப் பார்த்து மிரள....

“அ....ம்...மா., கடைசியில உனக்கு இப்படி ஒரு மரணமா... அம்மா..” என சுஷ்மா விசும்ப... சுரேஷ் அவளை ஆறுதல்படுத்தித் தன் தோளில் அரவணைத்துக் கொண்டான்.

முற்றும்.

குறிப்பு: மயக்க மருந்து கடத்தி, குவைத் நாட்டில் குற்றவாளிகள் பிடிபட்ட உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்டதே இந்தப் புதினம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் குறிப்புகள் தந்த டாக்டர் மனோகர் மற்றும் டாக்டர் பிஜீ. டாக்டர் தேவிபிரியாவுக்கு நன்றி!

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles