தங்கத்தாமரைப் பெண்ணே!

 

சித்தியின் கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்தன. ஊசியாய் குத்தின.

“யோசித்துப் பார்! உங்க அம்மாவிற்கு வீம்பு, வைராக்கியம்னா உனக்கு அதுக்கு மேல இருக்கு. வளரவேண்டிய பெண், நன்றாக வா வேண்டிய பெண்.... நீ ஏன் உன்னை அழித்துக் கொள்ளணும்? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? குழந்தை பிறந்தால் எங்கே உன் பேரில் பாசம் இல்லாமல் போய்விடுமோ, வேறுபாடு வந்து விடுமோன்னு உங்கப்பாவும் நானும் முடிவு பண்ணி நான் குழந்தையே பெத்துக்கலே தெரியுமா? இப்போ சொல் என் மேல் என்ன குத்தம்? நான் என்ன பாவம் பண்ணேன்? நான் செஞ்ச தப்பு என்ன? என்னவோ பாசக்கார அம்மான்னியே... அவங்க இப்போ எங்கே? பாசம் இருந்திருந்தா ஏன் உன்னைத் தேடி வரலே?”

“எப்படி வருவாங்க?” சுஷ்மா அவள் பக்கம் திரும்பி நெருப்பைக் கக்கினாள்.

“என்னைக்காவது மனசு மாறி திரும்பி வந்துட்டா என்ன பணற்துன்னு திட்டம் போட்டுத்தான் கொலை பண்ணிட்டீங்களே!”

சுஷ்மா வெடிக்க, மகேஸ்வரியின் முகம் இருண்டு போயிற்று. மகேஸ்வரி மவுனம் காக்க, சுஷ்மா விருட்டென்று அங்கிருந்து ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள்.

பசுமையும் இதமான சீதோஷ்ணமும் தங்குதடையில்லா தண்ணீரும் மின்சாரமும் செழுமையான மலேசியா, சீன மக்களும் நிரம்பிய கோலாலம்பூர்.

மாடி ரயில் இரண்டே இரண்டு பெட்டிகளுடன் மேலே ஊர்ந்து கொண்டிருக்க, கீழே சாலையில் டிராபிக்! பால்ம் மரங்களும் புல் வெளிகளும் குளுமை பரப்பிக் கொண்டிருந்தன.

வான் பார்த்த் கட்டிடங்கள், ஹோட்டல்கள்! இன்னமும் வளர்ந்து கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் முப்பதாவது தளத்தில் முகுந்தனின் அலுவலகம் இருந்தது.

அங்கிருந்து பார்க்க கோலாலம்பூரின் வளமை தெரிந்த்து. கண்ணாடி, ஜன்னல் வழி கைக்கெட்டும் தூரத்தில் பெட்ரோநாஸ் இரட்டை கோபுரங்கள் மலேசியாவின் சின்னம்! ஸ்டீல் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டு பளபளக்கும் உலகின் முதல்தர கோபுரங்கள். வாசலில் வரவேற்கும் நீர் அருவிகள்.

எப்போதும் சலசலக்கும் சுற்றுப்புறங்களில் மினுமினுப்புடன் அரை நிஜாருட்ன் தோள்பட்டை தெரிய உடுத்தி நடக்கும் சீனக் குயில்கள்.

மேஜையில் பைல்கள் குவிந்திருக்க, ஏ.ஸி.யையும் மீறி உடல் உஷ்ணத்திலிருந்த முகுந்தன், செல் ஒலிக்கவே எடுத்து. “மகேஷ், ஹவ் ஆர் யூ! போன விஷயம் என்னாச்சு?” என்றார்.

“ஸாரி, பிரயோஜனமில்லை!”

“சுஷ்மா இருக்காளா... என்ன சொல்றா?”

“இன்னமும் அவளிடம் அதே சூடு அதே கோபம்!”

போனை வைத்துவிட்டு மேஜைமேல் வைத்திருந்த செண்பகத்தின் படத்தை முகுந்தன் ஏறிட்டார்.

செண்பகம் அருகே பாவாடை ரவிக்கையில் சிரித்த முகத்துடன் சுஷ்மா குட்டி தேவதை!

‘சுஷ்டா, நீ எப்படியிருக்கிறாய்? இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட என்மேல் உள்ள கோபம் அடங்கலியா? எப்படி யிருந்தாலும் நீ என் ரத்தம். உன் வளர்ச்சியிலும் வாழ்விலும் எனக்கு அக்கறையில்லையா?’

அவர் கண் கலங்க...

எதிரே அமர்ந்திருந்த கலை டிரான்ஸ்போர்ட்டின் உரிமையாளர் கலையரசன், “போனில் ஏதும் வருத்தமான செய்தியா சார்?” என்றார்.

“நான் உங்களின் வியாபாரக் கூட்டாளிதான் இருந்தாலும் கூட உங்கள் கஷ்டங்களைப் பங்கு போட்டுக கொள்ளலாம். ஆனால் என் மகளை? அந்த ரணத்தை எப்படி...?”

“பேசினது யாரு... சுண்மாவா?”

“இல்லை... மகேஷ்.” என்று முகுந்தன் அவர் பக்கம் போட்டோ ஸ்டேண்டைத் திருப்பினார். “என் செல்லக்கிளி!”

“உங்க மக பல் மருத்துவம் படிக்கிறாள்னுதானே சொன்னீங்க. அப்போ வயசு இருபது இருக்காது? இருபதுன்னா பெரிய பெண்! இன்னும் குழந்தை போட்டோவையே வெச்சிருக்கீங்க..!”

6

முகுந்தன் கண்கலங்கினார்.

“என்ன பண்றது, எங்கிட்ட உள்ளது இதுதான். அவள் என்னைப் பார்க்க அனுமதிப்பதுமில்லை, அவளோட படத்தைக் கூட எனக்கு அனுப்புவதில்லை.”

சொல்லும்போதே வார்த்தைகள் வாய்க்குள் தடுமாற, சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டி கலை, “லஞ்ச்டயமாயிருச்சே. வாங்க பசியாறிட்டு வரலாம்” என்று எழுந்தார் நண்பர்.

“தாங்க்ஸ். நீங்க கிளம்புங்க. எனக்குப் பசியில்லை” என்று அந்தப் புகைப்படத்தை அப்படியே உற்று நோக்க ஆரம்பித்தார். அவருடைய எண்ணங்கள் பின்னோக்கி நகர ஆரம்பித்தன.

அப்போத அவர்கள் சுமாரான வீட்டில்தான் இருந்தனா. ஹால், அடுக்களை, பாத்ரூம், அறை என எல்லாமே நெருக்கடி, அடுக்குமாடிக் குடியிருப்பில் அதற்குமேல் வாடகை தரமுடியாத அளவிற்கு குறைவான சேமிப்பு.

முகுந்தனுக்குத் தினமும் 12 மணி நேர வேலை. அலுவலகத்திற்கு காலை எட்டு மணிக்குக் கிளம்பினால் வீடு திரும்ப இரவு எட்டாகிவிடும். அதன் பிறகு செண்பகமே கதி எனக்கிடப்பார்.

விடுமுறையிலும்கூட அவளைவிட்டு நகர்வதில்லை. எப்போதிலும் எதிலும் செண்பகம்.

அடுப்படியில் அவள் காய் வெட்டினாலும் போய் உரசிக்கொண்டு நிற்பார்.

“என்ன இது?”

“என் பெண்டாட்டியின் முந்தானை...”

“பெண்டாட்டிங்கிறதுக்காக எப்போதும் முந்தானை பின்னாடியே திரியணுமா?”

“வேற என்ன பண்ணலாம். ஆபீஸ்ல பென்டை எடுக்கிறாங்க. அங்குதான் அடக்குமுறைன்னா இங்குமா?”

“அடக்குமுறையில்லேன்னா அடங்குவீங்களா? ஏற்கெனவே சுஷ்மா படுத்தறா. அவளுக்கு டிரஸ், ஸ்கூல் பீஸ்னு பட்ஜெட் உதைக்குது. இதிலே இன்னும் வேறயா...”

“என்னால சும்மாயிருக்க முடியலே...”

“அப்போ இந்தக் காயை வெட்டிக் கொடுங்க. நான் அதுக்குள்ளே துணி துவைச்சுட்டு வந்துடறேன்.”

“துணிக்கு இப்போ என் அவசரம்?”

“தண்ணி நின்னு போகும். அதுக்கு முன்னாடி நான் குளிச்சு முடிக்கணும். இங்கே என்ன கிரைண்டர், வாஷிங்மிஷினா இருக்கு எல்லாம் நானேதானே செய்யணும்.”

“வாஷிங் மெஷின்தானே... வாங்கிரலாம்”

“எப்போ?”

“அடுத்த மாசம்.”

“எப்படி? போனஸ் எதுவும் வருதா?”

“இல்லை. லோன் தவணை...”

“அதுதானே பார்த்தேன். லோன் கிடைக்குதுன்னா பொண்டாட்டியைக்கூட அடகு வைப்பீங்களே!” 

உடன அவர் அறைக்குள் போய் முடங்கிக் கொள்வான். செண்பகம் அவனை மார்போடு அணைத்துக்கொண்டு, “என் ராசாவுக்குக் கோபமா?”

அவன் பேசமாட்டான். அவனுக்குத்  தெரியும். பேசாதவரை அவளது அரவணைப்பு இருக்கும். கதகதப்பு, அந்தச் சுகம் அவனுக்கு வேணும்.

அப்படியே பிகு பண்ணிப் பண்ணி புன்னகைப்பான். கண் சிமிட்டுவான். அவள் மயங்குவாள். உருகுவாள். விரதமும் வைராக்கியமும் அங்கு கலையும்.

மறுநாள் கிளம்புவான், ஒதுங்குவாள்.

ஒருசமயம் சுஷ்மா பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வர, செண்பகத்துக்குச் சங்கடமாயிற்று. “ஏண்டி. என்னாச்சு?”

“டீச்சர் அடிச்சுட்டாங்க.”

“ஏன்?”

“புது யூனிபார்ம், புது டை, போடலேன்னு. அம்மா இனி நான் ஸ்கூலுக்குப் போகலே” என்று சிணுங்கினாள்.

“சுஷ், இங்கே பார். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ. அப்பா சம்பளம் வந்ததும்...”

“போன மாசமும் அப்படித்தான் சொன்னே. அப்புறம் சம்பளம் மளிகை, கரண்ட், பால்னு போயிருச்சு. அம்மா எனக்கு அந்த ஸ்கூல் வேணாம். முடியலேன்னா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்துவிடு. மத்த பிள்ளைங்களெல்லாம் நல்லா டிரஸ் போட்டுட்டு வருது. நான் மட்டும்தான் இதுக்காக மிஸ் கிட்ட திட்டுவாங்கறேன்.”

“ஆனா படிப்புல நீ உசத்தியாச்சே புத்திசாலிப் பெண். சமத்துப் பெண்!”

“இல்லை. இந்தப் புகழ்ச்சியெல்லாம் வேணாம்.”

முகுந்தன் அவளைக் கட்டிக்கொண்டு, “சுஷ்மா, நாளைக்கு உனக்கு எல்லாம் புதுசா வாங்கித்தரேன்.” என்றான்.

செண்பகம் அவனிடம் தனிமையில், “எப்படிங்க?”

“நான் ராத்திரி ஏஜென்ஸி ஒன்றில் வேலைக்கு வரதாச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கேன்” என்றான்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles