தங்கத்தாமரைப் பெண்ணே!

 

நீண்ட யோசனைக்குப் பின், வேண்டாவெறுப்பாக முகுந்தன் சம்மதித்தான். அதுவும் செண்பகத்தையும் சுஷ்மாவையும் கரைசேர்க்க என்கிற சமாதானத்துடன்.

‘ஊர் உலகத்தில் இரண்டு பொண்டாட்டிக்கார்கள் இல்லையா என்ன? வேறு வழி இல்லாமல்தானே...‘ என்று மனதைத் தேற்றித் கொண்டான்.

இதில் செண்பகத்தை ஒதுக்கப்போவதில்லை, அவளையும் சுண்மாவையும் சொகுசாய் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினபடி மலேசியாவுக்கும் அழைத்து வந்துவிடலாம்.

செண்பகம் எதிர்க்கமாட்டாள். என் நிலைமையைப் புரிந்து கொள்வாள். சமாதானம் சொல்ல்லாம் என்று பயணத் தடை நீக்கி ஊருக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.

அங்கு அவள் இல்லை.

“நீங்கள் இப்படி துரோகம் பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மலேசயிவிலிருந்து உங்கள் இரண்டாம் மனைவி போன் பண்ணினாள். எங்களை ஒதுக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களுக்காக, உங்களால் எவ்வளவோ கஷ்டங்கள், சங்கடங்கள், வேதனைகளைத் தாங்கிக் கொண்ட என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். நிஜமான பாசம் இருக்குமானால் மகளையாவது கரை சேருங்கள்.”

அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனாள் செண்பகம்.

அக்கம்பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. புரியவில்லை. சுஷ்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை. அப்பாவைப் பார்த்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. அப்படியே பிடித்து வைத்திருந்தது போல சிலையாய் அமர்ந்திருந்தாள்.

முகுந்தனுக்குத் தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. இவள் இப்படி எதுவும் செய்து வைத்துவிடக கூடாத என்றுதான் அவளிடம் எந்த விவரமும் சொல்லாமலிருந்த்தான். ஆனால் மகேஸ்வரி விஷயத்தைப் போன் வழியே செண்பகத்தின் காதில் போட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.

போலீஸ் பிரச்சினையால் ஊரில் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கமுடியவில்லை.

“சுஷ்மா, நீயும் எங்கூட வந்திரு.”

“எதுக்கு?”

“மலேசியாவுல நீ படிக்கலாம். மலேசியாவுக்கு வரணும்னு நீயும் ஆசைப்பட்டாயே!”

“இல்லேப்பா.... அம்மாவுக்கில்லாத சந்தோஷம் எனக்கு எதுவும் வேணாம். நான் வரணும்னா அம்மாவும் வேணும்”.

“எப்படிம்மா? அவளை எங்கேன்னு போய்த் தேடறது? அவள் இருக்காளா, இல்லை...”

“அப்போ, நானும் செத்துட்டேன்னு நினைச்சுக்குங்க...”

காலம் காயத்தை ஆற்றும், ரணம் குறையும். இப்போதே போட்டுக் கீற வேண்டாம் என்று கிளம்பினான்.

சுஷ்மா, பாட்டியின் கிராமத்திலிருநது படித்தாள். பிறகு பாட்டி அவள் மனதைத் தேற்றி மலேசியாவுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆனால் அங்கும் சுஷ்மாவுக்கு நிம்மதி இல்லை. மகேஸ்வரியைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பு, கோபம் பொங்கிற்று. அவளது அழகும் வனப்பும் கடுப்பேற்றிற்று.

இந்த அழகுதானே எங்கப்பாவை வசீகரித்தது? இத இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன? என்று ஒருநாள் குரூரமாகச் சிந்தித்தாள்.

ஒரு இரவில் முகுந்தன் வெளியூர் போயிருக்க, மகேஸ்வரி தனியாய் படுத்திருக்க, சுஷ்மா பள்ளிக்கூடத்திலிருந்து கந்தக அமிலம் எடுத்து வைத்திருந்தாள்.

எல்லோரும் உறங்கினதம், மெல்ல மெல்ல சித்தியின் அறைக்கு நடந்து... படுக்கையில் உடல் முழுக்க போர்வை போர்த்தி முகம் மட்டும் காட்டிப் படுத்திருந்த அவளின் அருகில் போய்... அமிலத்தை ஊற்ற...

திடுக்கென விழிப்பு வந்து ஓசை கேட்டு எழுந்த மகேஸ்வரியின் கழுத்தில் அமிலம் பட்டு வெந்து போயிற்று.

“ஏய், சுஷ்டா... சனியனே, பிசாசே!” என மகேஸ்வரி அலற, உடன் ஆஸ்பத்திரி. அவள் தோள் வெந்த்துடன் பெரிய பாதிப்பில்லாமல் அன்று தப்பித்தாள்.

அதுவரை சஷ்மாவின் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்தவள் அதன் பிறகு வெறுப்பைக் கொட்ட.. இனியும் இவர்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத என முகுந்தன் சுஷ்மாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி படிப்பைத் தொடர வைத்தான்.

என்றைக்காவது ஒரு நாள் சுஷ்மாவின் மனது மாறும், அப்பாவை ஏற்றுக் கொள்வாள் என்கிற அவரது எதிர்பார்ப்பு பொய்த்து விரக்தியின் எல்லையிலிருந்தார்.

9

மருத்துவக் கல்லூரி விடுதி.

தூரத்தில் ரயில் அதிர்வு குறைந்து, மரங்களும் அயர்ந்து, பனி பூசினி இரவு. முன்பெல்லாம் தேர்வு சமயத்தில் மட்டும் அறைகளில் விளக்குகள் கண் விழித்திருக்கும். இப்போது, சதாசர்வமும் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர்!

எப்போதும் மெஸ்ஸில் முதல் நபராகச் சாப்பிட்டு ஒன்பதுக்கெல்லாம் படுக்கையாகி விடுகிற சுஷ்மாவிற்கு அன்று தூக்கம் விலகிற்று. கொசுவலைக்கு வெளியே அமர்ந்திருந்த கொசுக்களை உற்றக் கவனித்தாள்.

ஒரு வகையில் நானும் அவையும் ஒன்றோ? அவை பசிக்காக அலைகின்றன. நான் அன்புக்காக! அவை வலைக்கு வெளியே சுதந்திரம் பெற்றிருக்கின்றன. நான் வலைக் குள்!

சட்டென தாய் நினைவு வந்து, ‘ஏம்மா? ஏம்மா என்னை விட்டுட்டுப் போனே?‘ என்று விசும்ப ஆரம்பித்தாள். ‘போனால் போகிறது... தூங்கத் தொலைக்கலாம். மறுநாள் வகுப்பு உள்ளதே‘ என்று அப்போதுதான் படுத்திருந்த தோழி பார்கவியை அந்த விசும்பல் உசுப்பிற்று.

சட்டென விளக்குப் போட்டு. “ஏய், சுஷ்! என்னாச்சு?”

“அம்மா...ம்...மா!”

அவள் எழுந்து வந்து, “ஏய், என்ன இது... சின்னக் குழந்தை யாட்டம்?” என்று அவளது கழுத்தைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.

“பார்கவி, நான் என் அம்மாவைப் பார்ப்பேனா? அவங்க திரும்பக் கிடைப்பாங்களா?”

“அதெல்லாம் கிடைப்பாங்க. பேசாம படு. உன் சித்தி வந்துட்டுப் போனாலே இதுதான் பிரச்சினை” என்று அவளது முகதைத் துடைத்துவிட்டாள்.

“தூங்கு.... இல்லே... பாத்ரூமுல போய் அழு! எனக்குத் தூக்கம் வருது.”

பார்கவி கடுப்படித்து நகர்ந்தாள். அவள் சொன்னபடியே சுஷ்மா பாத்ரூமிற்கு நகர்ந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் பார்க்க அவளுக்கே விகாரமாய்த் தெரிந்த்து. ஜன்னல் திரையை விலக்க, தென்றல் முகத்தில் பரவி புத்துணர்ச்சி வந்தது.

கீழே புல்வெளியில் நாய்கள் தவளையைத் துரத்தி சாகசம். நீரூற்றில் வெளிச்சம் பட்டு நிறப்பிரிகை! வாட்ச்மேன் தன் கூண்டுக்குள் அமர்ந்து ‘தான் தூங்கவில்லை‘ என்பதைத் தெரிவிக்க இடையிடையே காலாட்டல்! செருமல் புகை!

எழுந்து நடந்தான். நாய் அவனது காலை நக்கி, விசுவாசம் காட்டி குனிந்து, நெட்டி முறித்து, உடலை உதறி எதற்கோ ஓட்டம் என்னைத் தவிர வெளியே எல்லோருமே சந்தோஷமாயிருக்கிறார்கள். நான் மட்டும் ஏன்? எதற்காக வருத்திக்கணும்? வருந்தணும்?

இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்க்க மாணவர்கள் விடுதி தெரிந்த்து. அங்கே கட்டிடத்தின் பின்பகுதியில் இருளில் சில உருவங்கள். கசமுசாக்கள்! தலையில் முண்டாசும், வாரிச் சுருட்டின லுங்கியுமாய் அதுகள் காம்பவுண்ட் ஏறி வெளியே குதிப்பது தெரிந்தது.

அடப்பாவிகளா! இந்த நேரத்தில் எங்கே போகிறார்கள்? இங்கே பெண்கள் விடுதிக்கு வருவார்களோ? யாரைப் பார்க்க? அதுவும் கூட்டமாய்....

அவளது ஆர்வம் அதிமாயிற்று. ஜன்னலை நன்றாகத் திறந்து கவனித்தாள். அவர்கள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரிலி ஏறினர். அது ஓசை குறைத்து விளக்கின்றி நகர்ந்தது.

பாவி பசங்க! தூங்கவே மாட்டாணுங்களா? அந்த வண்டி கண்ணிலிருநது மறைந்ததும் ஜன்னலை மூடிவிட்டு படுக்கைக்குத் திரும்பினாள்.

செல்போன் காதை தூக்க, ‘யார்ரா இந்த நேரத்தில்‘ என்று முனகிக்கொண்டு சுரேஷ் எடுத்தான். ஹாஸ்டல் வாட்ச்மேன்!

“என்னப்பா?”

“சார், நாலு பசங்க.... காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சு காரில் போறாணுங்க! நீங்க வந்தீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம்.”

“போன பின்னாடி எப்படி பிடிக்கிறதாம்!”

“திரும்ப வருவானுங்க, அதே மாதிரி காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதிக்கும்போது அமுக்கிறலாம்.”

“சரி, இதோ வரேன்.” என்று சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ‘எல்லாம் தலையெழுத்து! இந்த வார்டன் வேலையிலிருநத் எப்போது விடுதலையோ தெரியலை!‘

வாட்ச்மேன் புகை நாற்றத்துடன், “சார், நீங்க இந்தக் கூண்டுல உட்காருங்க” என்று எங்கேயிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்திருந்த கார் சீட்டை காட்டினான். “நீங்க தூங்குங்க. அவனுங்க வரும்போது நான் எழுப்பறேன்!”

அவன் சொல்லிவிட்டு கைபேசி மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு உலாத்த ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில் வெளியே கார் தெரிய, “சார், வந்துட்டானுங்க. வாங்க!” என்று கிசுகிசுத்தான்.

சுரேஷ் திருடனைப் பிடிக்கப்போகும் மகா திரில்லுடன் வாட்ச்மேனைத் தொடர்ந்தான்.

காம்பவுண்டோரம் புல்வெளியில் பதுங்க, நாயும் அவனுடன் பதுங்கிற்று.

காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் லேசாய் ஓசை, கிசுகிசுப்பு கேட்டது. எப்படித்தான் இத்தனை பெரிய சுவரில் ஏறுகிறான்களோ குரங்க்கு வாக்கப்பட்டவர்கள்!

இதோ, நெருங்கிவிட்டார்கள். இதோ, ஏறுகிறார்கள். இதோ, அக்கம் பக்கம் பார்க்கிறார்கள்.

இதோ, குதிக்கப் போகிறார்கள். ஒரே அழுக்காய் அழுக்கு, விடாதே தயாராகு! தொடர்ந்து நான்கு உருவங்கள் பொத் பொத் தொனப் புல்வெளியில் குதிக்க, சுரேஷ் அவர்களின் மேல் பாய, ஒருவன் திமிறிக்கொண்டு எழுநது கையில் கிடைத்த தடியை சுரேஷின் மண்டையில் இறக்க, அவன் “அம்மா...” என்று அலறிக்கொண்டு புல்வெளியில் மலர்ந்தான்.

எழுந்து பார்த்துபோது ஆஸ்பத்திரியின் மணம். வரிசையாய் படுக்கைகளில் முனகல்கள், டெட்டால், குளுகோஸ் பைட், ஊசி, அதிகாரம் பண்ணும் நர்ஸ்கள், ஆரஞ்சுத் தோல் வாசம்.

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 |

  12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

More Profiles