இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஒருவரை இன்னொரு நண்பர் மாற்றுக் கருத்து கொண்டு தாறுமாறாகத் திட்டினால் நமது மனது கொதிக்கும். உடனே கோபப்பட்டு பதிலடி கொடுப்பது சராசரி மனசு. நமது மரியாதைக்குரியவருக்கும் இவருக்கும் என்ன மனக்கசப்போ அல்லது அவரை நம்மைப்போல் புரிந்து கொண்ட பக்குவம் இவருக்கு இன்னும் வரவில்லையா? என்று மனசை ஆறப்போட வேண்டும்.

எல்லோருக்கும் எப்பொழுதும் பிடித்தவராக வாழ இந்த உலகம் வழிவிடாது என்பதே உண்மை. கடவுள், கட்சி,ஜாதி என்று வக்காலத்து வாங்குவது பெரும்பாலும் சண்டைகளிலேயே முடிகிறது. நாம் மதிக்கிறவர்களின் உயர்வை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் சொல்லுவது நன்றிக்கு நன்று.

டெலிபோன் அலறியவுடன் பதட்டப் படாத நாம் மறுமுனையில் உள்ளவர் சொல்லும முக்கிய குறிப்பைக் குறித்துக் கொள்ள பேனா, பென்சில் தேட பதட்டப் படுவதே அதிகம்.

டெலிபோன் அருகில் ஒரு பேப்பர், பேனா வைக்க வேண்டும். என்று எல்லோருக்கும் தோன்றுமே தவிர, செயல்பட்டவர்கள் பட்டியலில் நாம் இருக்க மாட்டோம். பல வீடுகளில் ஐயிரோ பென்சிலில் தான் பல முக்கிய குறிப்புகள் எழுதப்படுகின்றன. பேனா கிடைக்காமல் தேடும் நேரத்தில் தான் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி., எவ்வளவு என்று டென்ஷன் அதிகமாகி மற்றவர்களையும் டென்ஷன் செய்வோம். டெலிபோன் பக்கத்தில் நீங்கள் இல்லாமல் இருந்தாலும், உங்களுக்கு வரும் தகவலைக் குறித்து வைக்கப் பேப்பர், பேனா வைத்துப் பாருங்கள். உங்கள் அலுவல்கள் அலுங்காமல் நடக்கும்.

நம் நண்பர்கள், உறவினர்களுக்கு ஏற்படும் துக்கம், பிரச்சினைகளை அறிந்தால் உடனே காலதாமதப் படுத்தாமல் ஆறுதல் கூற நேரம் ஒதுக்குங்கள். வேலைப்பளுவால் அது தடைப்பட்டால், பிரச்சினைகளில் பாதிக்கப் பட்டவரை திடீரென்று நீங்கள் நேரில் சந்திக்கும்போது, தர்மசங்கடங்கள் உண்டாகிப் பல பொய்களைச் சொல்ல நேரிடும்.

‘இந்தத் துக்கம், பிரச்சினை உங்கள் வாழ்வில் ஒரு பாகம் என்று நினைத்து அடுத்த முயற்சியைத் தொடங்குங்கள். இதற்கு மேல் உங்களுக்குக் கஷ்டம் வராது’ என்று ஆறுதல் வார்த்தை கூறிப் பாருங்கள். நமக்கு இருக்கும் கஷ்டம் கூட சற்றுக் குறைந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

சிலர், நமக்கு வேண்டியவரின் துக்க சம்பவங்களுக்குப் போகாமல், என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பதுங்குவார்கள். அது உண்மையாக இருந்தாலும், நடைமுறையில் எதையும் நேர்கொள்வதால் நீங்கள் இன்னும் ‘தைரியவான் ’ ஆகிறீர்கள். அதைவிட முக்கியம் துக்க சம்பவங்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்தால் நட்பில் இடைவெளி வரலாம்.

துக்கத்தில் உள்ளவர்களுக்கு முதல் சிகிச்சையே ஆறுதல் தான்.மிக மிக சோகத்தில் உள்ள நண்பரை உடனே சந்தித்து பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து அவரது துக்கத்துக்கான ஆறுதலை வெளிப்படுத்திப்பாருங்கள், அதுவே உங்கள் மீது உள்ள அபிமானத்தை அதிகரிக்கும்.

நாம் தொலைபேசியில் நம்பரை சுற்றும் முன் நாம் சொல்ல வேண்டிய விஷயம் ஞாபகத்தில் இருக்கும். பிறகு பேசும்போது வேறு விஷயத்தைப் பேசி விட்டுத் தொலைபேசியை வைக்கு முன், நாம் சொல்ல வந்த முக்கிய விஷயம் ஞாபகத்திற்கு வராமல் ‘என்னவோ நினைத்தேன்,மறந்துட்டேன், ஞாபகத்திற்கு வரலை, கொஞ்ச நேரம் கழித்துப்பேசுகிறேன்’ என்று மண்டையைக் குழப்பிக் கொண்டே போனை வைத்து விடுவோம். சிறிது நேரத்திலேயே சொல்ல வந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தவுடன், மறுபடியும் போன் செய்வத, பலரது வழக்கம்.

சொல்லப் போகிற விஷயத்தை ஒரு குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டு தொலைபேசியைத் தொட்டால் இந்த இரண்டாவது போன் பில் குறையும். மேலும் குறிப்பெடுக்கும் பழக்கம் ஒரு சாதனையாளரின் துவக்கம்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24