இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
சிங்கத்தின் வாயைத் திறந்து தன் தலையை உள்ளே வைத்து, கைத்தட்டு வாங்கும் சீமாட்டியை யோசித்துப் பாருங்கள். சிங்கம் வாய் மூடாமலிருந்தால் இந்த சீமாட்டியின் வயிறு நிறையும். சிங்கம் வாய் மூடினால் சிங்கத்தின் வயிறு நிறையும். நமக்கும் சர்க்கஸ் சாகசக்காரர்களுக்கும் இருப்பது ஒரு ஜாண் வயிறுதானே !

பல தொழில்களில் ஏற்படும் சிக்கல், ‘என்னால் தான் இந்தக் கம்பெனியே நடக்கிறது’ என்ற ஈகோதான். கம்பெனியில் உங்கள் பணி என்ன? மற்றவர்கள் பணி என்ன? என்பதை யோசியுங்கள். உங்களை விட பதவி குறைந்தவர் செய்யும் வேலையை உங்களால் ஒரு வாரம் செய்ய முடியுமா? என்று பாருங்கள்- நிச்சயம் உங்கள் ஈகோ பறந்து விடும். எலிலோரும் ஒரே எண்ணத்தில் உண்மையாக உழைத்தால் கம்பெனி சிறந்து விளங்கும்.

இன்றைய உங்களது கடின உழைப்பு தான் நாளைக்கு உங்களை முதலாளியாக்கும் அச்சாணி. கப்பலை ஓடச் செய்யும் எந்த ஒரு சிறு பாகத்தையும், கப்பலில் இருந்து கழற்றிப் போட்டால் கப்பல் கடலில் மூழ்கிவிடும். அதே நேரத்தில் எத்தனையோ பாகங்களையும், பொருட்களையும் உடைய கப்பல் மூழ்குவதில்லை. இதை மனதில் கொண்டு பாடுபட்டால் நமது தொழில் எந்தப் புயலையும் சந்தித்து நீதிக் கொண்டே இருக்கும்.

பத்து தண்டால் அடித்து விட்டு நான் பயில்வானாகி விடுவேன் என்று கனவு காண்பவர்களே ! கட்டு மரம் ஓட்டும் மீனவ நண்பர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அசந்து தூங்க வேண்டிய நடுநிசியில் கடலுக்குப் புறப்படுகிறார்கள். அலை இவர்களை விரட்டியுட், இவர்கள் அலையை விரட்டத் துடுப்புப் போட்டுப் போர் புரிந்து முன்னேறுகிறார்கள். இவர்களின் வலிமையை நினைத்தால் நம் இதயமே வலிக்கும் வலையை வீசி விட்டுக் காத்திருக்கும் நேரத்தில் இவர்களின் எதிர்பார்ப்பு, தேர்வு எழுதி விட்டு ரிசல்ட் டுக்குக் காத்திருக்கும் மாணவனை விட அதிகம். இந்த எதிர்பார்ப்பு கடலில் இருப்பவருக்கு மட்டு மல்ல - கரையில் காத்திருக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் தான்.

இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் கரை வந்து வலையை உதறினால் தான் தெரியும்; வென்றது இவர்களா? அல்லது மீன்களா? என்று ! எதிர்நீச்சல், ஏமாற்றம், உடற்பயிற்சி, விடாமுயற்சி உள்ள இந்த மீனவ நண்பர்களைப் பற்றி யோசித்த பிறகு, இப்போதெல்லாம் நான் கடலை ரசிப்பதை விட கட்டுமரங்களைப் பற்றியே சிந்திக்கிறேன்.

இந்தப் பொருளை வாங்கிக் கொடுத்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று கடையிலே அழுது புரண்டு அடம்பிடிக்கும் குழந்தைகளையும் கண்டு பயந்திருக்கிறேன். அதே சமயம், அப்பா, அம்மாவே, “உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள் ! ” என்று சொன்ன பிறகும், “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று சொல்லும் குழந்தைகளையும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.

கடைக்குப் போகுமுன் உங்கள் பட்ஜெட்டைக் குழந்தைகளிடம் கூறி விடுங்கள். அதே போல் கையில் பணம் இருந்தால், குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்கும் பொருளை உடனே வாங்கிக் கொடுத்து விடுங்கள். காரணம் குழந்தைகளின் இன்றைய ரசனைக்கு அந்தப் பொருள் தான் மகிழ்ச்சியைத் தரும்.

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் இது எவ்வளவு நான் உழைக்கும், கீழே போட்டால் உடையுமா? கீறல் விழுமா? என்று பல கேள்விகளைக் கேட்பதுண்டு. இப்போதெல்லாம் அந்தக் கேள்விகளெல்லாம் குறைந்து விட்டது. இன்று இது புது மாடலா - ஓ.கே ! ஏனென்றால் காலம் வேகமாகச் செல்லச் செல்லப் புதுப்புது பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சில பொருட்கள் ஒரே மாதத்தில் பாதி விலை குறைந்து விடுகிறது. நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பார்த்த உடனே விடித்த பொருள் தேவை என்றால், காசும் இருந்தால் உடனே வாங்கி விடுங்கள்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24