இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
ஆங்கிலப்புத்தகம் ஒன்று பார்த்தேன். சுமார் 1,600 பக்கம் இருக்கும்.அதன் பெயர் ‘ஹவ் டு லிசன்’ (How to listen). மற்றவர்களது பேச்சைக் கவனிக்கவே இவ்வளவு பெரிய புத்தகமென்றால், நாம் பேசக்கற்று கொள்ள எவ்வளவு பெரிய புத்தகம் படிக்க வேண்டும்.இப்போது என் ஞாபகத்துக்கு வருவது அறிவாளியாய் இரு ; முட்டாள்ய் நடி.

சிலரிடம் பொருளுதவியோ அல்லது வேறு உதவியோ கேட்டுப் போனால், அவரது பெருமையைக் காட்டும் வகையில் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று உடனே வாக்குறுதியை அள்ளி வீசி விடுவார்கள். அவர்கள் யோசிக்க வேண்டியது இந்த வாக்குறுதியை நம்பி வந்தவர் எவ்வளவு நம்பிக்கையுடனும், கவலை தீர்ந்தது என்ற கற்பனையுடனும் போகிறார் என்பது தான்.

ஒரு விஷயம், நம்மால் எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இதுதான் உண்மை. அதனால் நம்மை நம்பி வருபவரிடம் ‘முடியும்’, ‘முடியாது’,‘நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது’, இவ்வளவ தான் முடியும், உங்களது அவசரத்துக்கு உடனே உதவ முடியாது’ போன்ற விஷயங்களைக் கூச்சப்படாமல் கூறி அதே நேரத்தில் உங்களது நிலையை விளக்குங்கள்.

அள்ளி கொடுங்கள் - அதே நேரத்தில் உங்களால் முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள் - அது ஒரு வகையில் பாவம்.

ஒருவர் வெளிநாட்டுக்கோ அல்லது வெளியூருக்கோ சென்று வந்தால், அவர் நமக்கு என்ன வாங்கி வந்தார் என்று குழந்தைகள் ஆவலுடன் பெட்டியைப் பார்ப்பது இயற்கை, ஆனால் சில பெரியவர்களே கூச்சப்படாமல் எனக்கு ஒண்ணும் வாங்கி வரவில்லையா? என் நினைப்பே உனக்கு வரவில்லையா? என்று சில குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்கும்போது குண்டூசியால் குத்துவது போன்று தோன்றும்.

ஒருவிஷயத்தை நாம் யோசிக்க வேண்டும். அவரது பயணம் நமக்குப் பொருள் வாங்கத்தானா? அவரது பயணத்தின் நோக்கம் அங்கு வெற்றியா? அல்லது வேதனையா? கொண்டு போன பணத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு அவர் வேதனையுடன் வந்திருக்கலாம், புறப்படும் போது அவசரம் ஏற்பட்டிருக்கலாம், உங்களுக்கு ஏதாவது வாங்கி வரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவருக்கு உங்கள் மீது பாசமில்லை என்று எடை போட்டு விடாதீர்கள்.

பாசம் பரிசுப் பொருளில் இல்லை. மனிதல் இருக்கிறது. பயணம் முடிந்து வந்தவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் - போன காரியம் வெற்றிகரமாக முடிந்ததா? அங்கே உள்ள எனது நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருந்தார்களா? இப்படிப் கேட்டால் அடுத்து அவர் எங்கே பயணப்பட்டாலும் உங்களையும் உடன் அழைத்துச் செல்ல ஆசைப்படுவார்.

சிலர் அடிக்கடி, ‘என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்?’ என்று வெகுளித்தனமாகக் கேட்கும் போது, அவர்களது அறிவு, ‘கூர் தீட்டப்படவில்லை’ என்றே தோன்றும். அன்பையும், நட்பையும் எடை போட்டுக் கொண்டே இருந்தால் ஒரு நாளில் முக்கால் பாகத்தை அதுவே முழுங்கி விடும். அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்போது வெளிபடுத்த வேண்டும்.

மேலும், நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. பலர் அன்பை வெளிப்படுத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்து தெரியப்படுத்துவர். கணவன்- மனைவி அன்பில் நம் கலாச்சாரம் ஒளிந்திருப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24