இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
நண்பனாவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். எனக்குத் தெரிந்து எந்த நண்பரையும் நான் இழந்ததில்லை. அப்படிப் பிரிந்து போனால் அவரை தூரத்து நண்பன் என்றே அழைப்பேன். என்மீது எத்தனை கிராம் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் மேல் இருந்த பல கிலோ கணக்கு அன்பு, சில கிராமமாகக் குறைந்து விடும் என்பதைப் பலர் யோசிப்பதில்லை- நீங்கள் யோசியுங்கள்.

நம் வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரர்களுடன் நம் குழந்தைகள் எப்படிப் பழகுகிறார்கள்,எப்படி அழைக்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஓட்டுநரை‘அண்ணன்’ என்றும், வீட்டைச் சுத்தம் செய்பவரை ‘அக்கா’ என்றும் அவர்களாகவே கூப்பிட்டால் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அப்படியில்லாது, பேர் சொல்லியோ, ‘டா’ போட்டோ கூப்பிடுகிறார்கள் என்றால், நம் குழந்தைகள் குட்டி ரவுடிகளாக மாறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள் - நாம் முகம் சுளிக்கும் வேலையையும் அவர்கள் மூக்கைப் பிடித்து கொண்டு செய்கிறார்கள். நம்மால் தூக்க முடியாத பாரங்களை அவர்கள் தம் பிடித்துத் தூக்குகிறார்கள். அதற்குத்தான் சம்பளம் தருகிறோமே என்று சொல்லலாம். பணத்தை விட முக்கியமானது பாசம்.

வேலைக்காரர்களை நண்பர்போல் நடத்துங்கள். சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்களை விட வேலையாட்கள் மீது குழந்தைகள் பாசமாக விளையடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பாசம் தான் உண்மையான பாதுகாப்பு.

நம் வீட்டுப் பிள்ளைகளைப் படிப்பு விஷயத்தில் அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் முழு சுதந்திரம் கொடுங்கள். இல்லையேல் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

அதே போல் அவர்களின் விருப்ப விளையாட்டில் ஒரு மணி நேரம் சந்தோஷமாக விளையாட அனுமதியுங்கள். எப்போது பார்த்தாலும் படி, படி என்றால் அவர்களுக்கு விளையாட்டின் மீது மேலும் ஒரு படி கவனம் போய்விடும்.

குழந்தைகள் செய்யும் குறும்பையும், நகைச்சுவையையும் ரசியுங்கள். உங்களுக்கே உற்சாகம் ஊற்றெடுக்கும்.அதட்டல் இருக்கலாம். ஆனால் அடித்தல் கூடாது.

இன்றைய சூழ்நிலையில் நம் பிள்ளைகளை நண்பர்கள் போல் நடத்துவதுதான் மிக நல்லது. இல்லையென்றால் குழந்தைகள் பெற்றோர்களைப் போலீஸ்காரர் போல்தான் பார்ப்பார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளைகளின் நண்பர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். பழக்கம் தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம்.

சிலர் விலை உயர்ந்த சட்டையைத்தான் அணிவேன், இது என் வழக்கம் என்பார்கள். இது தவறில்லை. வசதி படைத்தவர்கள் வசதியாக வாழலாம்.

வேறு கோணத்தில் சிலரைப் பார்த்திருக்கிறேன். பல கோடிக்கு அதிபராக இருந்தும் சாதாரண சட்டை அணிந்திருப்பார்கள். அவரால் அந்த சட்டை பெருமை அடைகிறது. பெரிய எழுத்தாளர்களைச் சந்திதிருக்கிறேன். சாதாரண பேனாவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் எழுதும் எழுத்து பலரது தலை எழுத்தையே மாற்றிவிடும்.

எனக்குத் தோன்றுவதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருளால் நமக்குப் பெருமை என்பதைவிட நம்மால் அந்தப் பொருளுக்குப் பெருமை ஏற்பட வேண்டும். பல தலைவர்களின் நினைவில்லங்களுக்குச் சென்றால் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் தெரியும்.

உயர உயர எளிமைதான் பெருமை சேர்க்கும் என்பதைப் புரிந்து கொண்டால் நீங்களும் தலை வராகலாம்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24