இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
ஒரு விஷயம், நீங்கள் எந்த டாக்டரைச் சந்திக்கப் போனாலும் அங்கு ஒரு மருந்துக் கம்பெனி ரெப்பரஸன் டேடிவ் இருப்பதைப் பார்க்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது. நாளுக்கு நாள் புதுப்புது மருந்துகள் வருகின்றன. ஆனால் நம் நோயை விரைவில் தீர்க்க விஞ்ஞானம் வளந்து கொண்டிருக்கும்போது, நமக்கு அரைகுறையாகத் தெரிந்தவற்றை செயல்படுத்தி நோயைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

நம்மில் சிலர் தன்னிடம் இல்லாத குறை தன் நண்பனுக்கு இருந்தால், அதை அடிக்கடி நகைச்சுவை என்ற பெயரில் ஊசி போல் பலர் முன்னால் குத்திக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் நண்பன் மீது அக்கறை இருந்தால், அவரைத் தனியாக அழைத்து அவரிடம் உள்ள குறையினால் ஏற்படும் தீமை, குறையிலிருந்து மீண்டால் ஏற்படும் மகிழ்ச்சி பற்றி விளக்கலாம்.

சிலர் பேச ஆரம்பித்தால் எப்போது முடிக்கப் போகிறார்கள் என்று நமக்கு தெரியாது- அவர்களுக்கும் தெரியாது. மேலும் அதில் சுவாரசியமும் இருக்காது. அதற்கு மேலாகத் தனக்க என்னவெல்லாம் தெரியும் என்பதை தோவித்தனத்துடன் பொரிந்து தள்ளுவார்கள்.

நாம் பேசும் போது இந்த வாக்கியத்தின் கமா எது? முற்றுப் புள்ளி எது? என்பது கேட்பவருக்குப் புரியும்படி பேச வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்கள் பேச்சை
உணர்ந்து பதில் சொல்வார்கள் அல்லது சந்தேகம் கேட்பார்கள்.

எந்த விவாதத்திலும் அடித்துப்பேசி கன்வின்ஸ் பண்ணக் கூடாது.சரியான, நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு விஷயம் ஒரு புத்தகத்தில் பார்த்தேன்- (How to Listen) மற்றவர் பேசுவதை எப்படிக் கவனிப்பது? என்பது பொருள். மற்றவர் பேசுவதைக் கவனிப்பதற்கே டிக்ஷ்னரி போன்ற கனமான புத்தகம் என்றால், பேசுவதற்கு எவ்வளவு கனமான புத்தகம் படிக்க வேண்டும். பழமொழி ஒன்று உண்டு. ‘பேசிய வார்த்தை உனக்கு எஜமான்-பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.

என் சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்று- சைதாப்பேட்டையிலிருந்து புறப்படும் பஸ்ஸின் டிரைவர் ஒருவரின் பக்தி. அவர் வண்டியில் ஏறியவுடன் ‘டீசல் போட்டாச்சா’ என்பதை விட ‘ஊதுபத்தி ஏத்தியாச்சா’ என்பதில் கவனமாக இருப்பார். வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டுப் பிரார்த்தனை என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்வார். கண்களைத் திறக்காமல் சுமார் நூறு மீட்டருக்கு வண்டியை ஒட்டுவார். பிறகுதான் கண்களைத் திறப்பார்.

அந்த வண்டியில் ஏறிவிட்டு அதிகாலை நேரத்திலேயே எனக்கு வேர்த்து விறுவிறுத்து - ஓட்டுநரின் ரிஸ்க்கான பக்தியைப் பார்த்துப் பயந்து இறங்கி விட்டேன். பக்தி இருக்க வேண்டியது தான். அதற்காகக் கண்களை மூடிக் கொண்டு வண்டி ஓட்டுவது போன்ற மேஜிக் பக்தி யெல்லாம் பயமுறுத்தும் பக்தி.

அதேபோல் படிக்கும்போது கோவிலைச் சுற்றி வருவேன். பரீட்சைக்குப் போகுமுன் அக்கோவிலுக்குச் சென்று கற்பூரம் கொளுத்திவிட்டுச் சுற்றுவேன். ஒரு ஞானப்பழ நண்பன் என்னிடம் கூறினான். “கற்பூரம் கொளுத்தி விட்டுப் பத்துச் சுற்று சுற்றும் வரை கற்பூரம் அணையவில்லை என்றால் நீ பாஸ், அணைந்து விட்டால் நீ பெயில்” என்றான். ஒரே முறை கற்பூரம் கொளுத்தி விட்ட நான் சுற்றினேன். கற்பூரம் அணையவில்லை. ஆனால் அதே படபடப்பில் நான் பரீட்சை எழுதியாதால் ; அன்று எழுதிய சப்ஜெக்டில் பெயில் ஆகி விட்டேன். அன்று முதலி இந்த மாதிரி ரேஸ் பந்தயமெல்லாம் கடவுள் விசயத்தில் வைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் வீடு கட்டி, கிரகப் பிரவேசத்திற்குப் பத்திரிகை அனுப்பியிருந்தார். பெரிய ஆளாயிற்றே, கூட்ட நெரியசல் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்துடன் சென்றேன். அங்கே ஆச்சர்யம்- விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே ஆட்கள் இருந்தார்கள். பிறகு விசாரித்ததில் நூறு அழைப்பிதழ்தான் பிரிண்ட் செய்து, அதில் இருபத்து ஐந்து மட்டுமே கொடுத்திருந்தார்கள்.

பிறகு அவர் சொன்ன பிராக்டிகல் தத்துவம்; “நம்முடைய வளர்ச்சியை எல்லோரும் ஏற்றுக் கொள்ள மாட்டாகள்; மாறாக ஏக்கப் பெருமூச்சு விட்டால் அது யாக வெப்பத்தை விட வெப்பம் அதிகமாகி ஏ.சி. வீடு கூட சூடாகிவிடும் ” என்பது தான்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24