இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
வீடு விற்றால் வரும் போலி வருத்த ஆறுதல்கள் தான் அதிகம். வீடு கட்டினால் வரும் வாழ்த்துக்கள் குறைவு என்பதை அந்த நண்பர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவ்வளவு அழகான கலைத்திறன் மிக்க வீட்டைக் கலைத்துறையில் இருந்து கொண்டே அவரால் கட்ட முடிந்திருக்கிறது.

அந்த வீட்டைப் பார்த்த பிறகு என் இளைய மகன் அதன் கலைத்திறனைப் பாராட்டிக் கொண்டே இருந்தான். உடனே என் மூத்த மகன் அவனிடம்,“நம்ம வீட்டை அப்பா எவ்வளவு நாட்களுக்கு முன்னால் இவ்வளவ அழகாகக் கட்டியிருக்கிறார்கள். இப்போது எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவ்வளவு பணம் இருந்தால், இப்போது அப்பா வீடு கட்டினால் அந்த வீட்டை விட அழகாகக் கட்டுவார்” என்று எனக்கே ஒரு புது உபதேசத்தை உணர்த்தினான்.

எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், எப்போதும் நல்லவனாக நடந்து கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது தர்மம் செய்ய வேண்டும். நல்ல சிந்தனை வேண்டும். நல்லவன் என்ற பெயர் எடுக்க வேண்டும். இப்படிப் பல நல்ல நல்ல என்ற தத்துவத்துக்கு சமீபத்தில் ஒரு வாசகம் கேட்டேன். பேங்கில் பணம் போட்டால்தானே நாமே நமக்குத் தேவைப்படும்போது பணம் எடுக்க முடியும். அதே போல் தான் நல்லது செய்தால் தான் நமக்கு நல்லது நடக்கும்.

டி.வி. இன்று நம் வீட்டின் ரேஷன் கார்டில் இடம் பெறாத குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டது. ரிமோட்கன்ட்ரோலுக்கு நடை பெறும் சண்டைதான் வீடுகளில் அதிகம். நான் ரூமுக்குள் நுழையும்போது எனத மகன்கள் ‘டப்’ என்று ரிமோட்கன்ட்ரோலில் சேனல் மாற்றுகிறார்கள்.- பார்த்தால் ‘டிஸ்கவரி’ சேனல் ஓடுகிறது. இதற்கு முன்னால் என்ன சேனல் பார்த்தான் என்று கேட்டால் ‘என்ன சொல்வானோ?’- என்ற பயம். இன்னொரு பக்கம் நான் டி.வி. பார்க்கும்போது பசங்க வந்தா இதே மாதிரி சேனல் மாற்றுவேன். அது என்ன என்று பசங்க கேட்டு விடுவார்களோ என்ற அச்சம். மொத்தத்தில் யாரையும் யாரும் கேட்காமல் இருப்பதே இன்றைய நாகரிகம்.

எனது கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கனெக்ஷன் இணைத்தவுடன் கம்ப்யூட்டர் மெக்கானிக் என்னிடம் அதன் பாஸ்வேர்டை ரகசியமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டார். பிறகு என் மகனைக் கூப்பிட்டு இன்டெர்நெட் இணைக்கச் சொன்னேன். அவன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு, “பாஸ்வேர்ட் அடிங்கப்பா” என்றான். நான்,“இது தான் பாஸ்வேர்ட், நீயே அடி” என்றேன். பிறகு கம்ப்யூட்டரை மூடும்போது, “இன்டர்நெட்டில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. நீ நல்லதைக் கற்றுக் கொள்ள வேண்டும். என்று நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறிவிட்டேன்.

இந்த காலத்துப் பசங்களுக்கு பாஸ்வேர்ட் கண்டு பிடிப்பது பால்பாயாசம் போல் என்பதை உணர வேண்டும். மேலும் என் மனைவியிடம் பசங்க கம்ப்யூட்டர் ரூமில் உட்காரும் போது கதவு திறந்தே இருக்க வேண்டும் என்று உஷார்படுத்தி விட்டேன். அதைவிட இன்டர்நெட் உள்ள கம்ப்யூட்டர் ஹாலில் வைத்து விட்டால் பிள்ளைகள் பற்றிய பிரச்சினையே கிடையாது.(நமக்குத் தான் பிரச்சனை)

பசியும், தூக்கமும் அதிஷ்டசாலிகள் சொத்து. சொத்து அதிகம் சேர்த்தால் இரண்டும் வராது. சிலர் சாப்பிடுவதையும் தூங்குவதையும் தெழிலாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சாலை ஓரங்களில் வண்டிகளின் ஹாரன் சத்தங்களுக்கிடையில் சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் படுத்திருப்பதைப் பார்க்கலாம். அதுதான் உண்மையான உழைப்பின் அசதியில் கிடைக்கும் சூழ்நிலை உறக்கம்.

கிராமங்களில் அதிகாலையிலிருந்து உச்சி வெயில் வரை ஏர் உழுதுவிட்டு மதியம் மரத்தடியில் கேப்பக் களியைக் கருவாட்டுக் குழம்புடன் எத்தனை உருண்டை என்று எண்ணாமல் சாப்பிடுவார்களே, அதுதான் வயிற்றுக்கு உழைப்பு தரும் பாராட்டு. இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வருகிற பழமொழி, ‘நித்திரை வந்தால் பாய் வேண்டாம்’ பசிக்கு ருசி தேவையில்லை’.

சிலர் தங்கள் மேல் எல்லோரது பார்வையும் விழ வேண்டும என்பதற்காகப் பல மணி நேரங்களையும், பணத்தையும் செலவிடுவார்கள். இது ஒரு வியாதி என்றே நினைக்கிறேன். ஏனென்றால் பல விஷயங்களில் வெற்றியாளராக இருக்கும் இவர்களுக்குப் பொருந்தாத புகழ் தேடும் விஷயத்தில் சிரத்தை எடுப்பது ஆச்சரியமான விஷயம். அது மட்டும் அல்ல. பின்னால் இவர்களைப் பற்றி மற்றவர்கள் தப்பாகப் பேசுவதைக் கேட்டு நான் வருத்தப்பட்டிருக்கிறேன்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24