இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'
புகழுக்காகத்தான் உலகில் எல்லா மனிதனும் போராடுகிறான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. மேலும் நமக்குக் கிடைத்த புகழைப் பரப்ப முன் வருவார்கள், என்ற மூடநம்பிக்கையும் எனக்கு இல்லை. எனது ஒரே கருத்து, பொருந்தாத புகழுக்குப் போராட வேண்டாம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு படத்தில் சொல்லுவார்- ‘தானா கிடைத்தால் பட்டம், கேட்டு வாங்கினால் தம்பட்டம்.’

போட்டோ எடுப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பதிவு. சிலர் எதற்கு இவ்வளவு போட்டோ எடுத்து மாட்டி வைத்திருகிறீர்கள்? என்று கிண்டல் செய்வார்கள். அது தவறு. நமது திருமணப் போட்டோவைக் குழந்தைகளுடன் பார்க்கும் போது ஏற்படும் குதூகலத்தை எதனுடன் ஒப்பிட முடியும்? அந்தக் காலத்து நிகழ்வுகளை சிலை வடிவமாகப் பதிவு செய்தார்கள். இந்தக் காலத்தில் போட்டோ இன்றோ டிஜிட்டல் யுகம். கலர் போட்டோ என்றால் ‘வெளி நாட்டுக்கு அனுப்பி பிரிண்ட்கள் பேட்ட காலம் மாறி, இன்று செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள்.கம்ப்யூட்டர் பிரிண்ட் ரெடி.

போட்டோ மரபு என்று ஒன்று உள்ளது. நாம் யாரோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறோம்? யார் நம்மோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்? என்பதாகும். நண்பர்களாக இருந்தால் பாசத்தோடு தோளில் கை போட்டுக் கொள்ளலாம். நம்மை விட பிரபலமானவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் போது அவர் முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தால் அந்தப் படம் உங்கள் வீட்டில் ஒரு வரலாற்றுப் பதிவு.

அறிவைக் கூராக்காத சிலர், பிரபலமானவர்கள் தனியாக இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கூலிங்கிளாஸ் எடுத்து மாட்டிக் கொள்வதுடன், நாகரிகம் இல்லாமல் மாட்டிக் கொண்ட வி.ஐ.பி தோளில் கை போட்டு போஸ் கொடுப்பார்கள். அந்த போட்டோவை வீட்டில் மாட்டி வைத்தால் பலர் இது கேமரா டிரிக் என்பார்கள். சிலர் ஆல்பம் என்பார்கள். உங்கள் பணிவான நடத்தையைப் போட்டோவில் பதிவு செய்தால் வருங்காலத்தில் நீங்களும் ஒரு வி.ஐ.பி. என்பது நிச்சயம்.

பலர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே தம் ஊர் பெயதையும் சொல்லுவார்கள். அது அவர் தம் ஊர் மேல் உள்ள பற்று. பெருமைப்பட வேண்டிய விஷயம். பிறகு அவரது நடவடிக்கை நமக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால் அவர் சொன்ன ஊர் மீதும் நமக்கு உறுத்தல் உண்டாகும். மேலும் அவருக்குப் பிடிக்காதவர்களின் பட்டியலுடன் அவர்களது ஊர் பேரையும் சொல்லும் போது இவர் நமக்குப் பிடிக்காதவர் பட்டியலில் சேர்ந்து விடுகிறார்.

ஒரு விஷயம், நாம் எங்கு சென்றாலும் நம்முடைய சொல்லையும், நடத்தையையும் கண்ட மற்றவர்கள் நீங்கள் ந்த ஊர் என்று கேட்டால் உங்கள் சொந்த ஊர் உங்களுக்கே சொந்தமானது போல ஓர் உணர்வு ஏற்படும்.

வீட்டில் எந்தப் பொருள் ரிப்பேர் ஆனாலும் அதை உடனே சரி செய்ய வேண்டும். என்ற எண்ணம் நமக்கு வருதில்லை. நாளை நாளை என்று தள்ளிப் போட்டு, அது தூசு படிந்து எடைக்குக் கூட போட முடியாத நிலையை உருவாக்கி விடுகிறோம். மேலும் அதற்குப் புதுமாடல் வந்தால் அந்தப் பொருள் மீது கவனம் போய்விடுகிறது.

ஒரு ரூமில் மின் விசிறி, லைட் ரிப்பேர் ஆகிவிட்டால் அந்த ரூமைப் பயன்படுத்துவது குறைந்து, பராமரிப்பும் இல்லாமல் குடோன் ஆகிவிடுவதை நடைமுறையில் நான் பார்த்திருக்கிறேன். லைட், மின் விசிறி ரிப்பேர் செய்ய எவ்வளவு ஆகிவிடும்?

இதில் நமக்கு இருக்கும் அக்கறையில்லாத சோம்பேறித்தனமே காரணம். இதே லிஸ்டில் டேப்ரிக்கார்டர்,சைக்கிள், இஸ்திரிப்பெட்டி, பிரிட்ஜ்,ஏ.சி.என்று பார்த்தால் ரிப்பேர் என்ற பெயரில் கோமா ஸ்டேஜில் பொருட்கள் நம் வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கும். இதற்கு முதல் சிகிச்சை- தேதி போட்டு சர்வீஸ் செய்ய வேண்டும்.(சொந்த அனுபவம்)

நமக்குச் செலவுக்கு எண்ணூற்றி ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது என்றால், பேங்கிற்கு செக் போடும்போது அதை ரவுண்டாக ரூபாய் ஆயிரமாகப் போட்டு எடுப்பதே அநேகரது குணம். அதே போல் கடன் வாங்கும் போதும் எட்டாயிரம் தேவைப்படும் போது ரவுண்டாகப் பத்தாயிரம் வாங்கி விடுவோம். இந்த ரவுண்டு செய்து பழகிவிட்டால் பிறகு பிரச்சினைகள் நம்மை ரவுண்டு கட்டிவிடும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு தேவை என்பதைவிட இவ்வளவு தேவை இல்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கைப் பளு குறையும்.

அவசியம் என்றால் னடல்போல் செலவழியுங்கள்- அனாவசியமாகப் பத்து காசு கூட செலவழிக்காதீர்கள். இது பல வெற்றியாளர்கள் கடை பிடிக்கும் பழக்கம்.

     1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24