தவழும் பருவம்  

           

    

       ‘ரோடில் போகிற-வருகிறவளெல்லாம் உங்களை பார்ப்பாள். நானும் விட்டுக் கொடுத்திடணுமாக்கும்...?’

     ‘விட்டுக் கொடுக்க மாட்டியாக்கும்! சண்டைக்கு போவியாக்கும்!’

     ‘ஆமா சண்டைக்குத்தான் போவேன். எம் புருஷனை நான் எதுக்கு விட்டுக் கொடுக்கணும். என் உயிர் போனாலும் சரி, யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்!’

     அன்று யாரோ ஒருத்தி அவனை பார்த்ததிற்கே கோபப்பட்டதும், விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டை பிடித்ததும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அன்று உயிர் போனாலும் சரி விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றோம்.

ஆனால் இன்று...?

     அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. என்னதான் அவளாகவே தீர்மானித்து, ஆசைப்பட்டு, பெண் பார்த்து முடித்து வைத்திருந்தாலும் கூட, யதார்த்தமான பெண் மனம் அவளை வாட்டவே செய்தது. நமக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை, நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்? என்று அவளால் நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

     வருத்தத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு இயல்பிற்கு வர முயன்றாள். லதிகா நல்லவள். நம் கணவனையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்வாள். நமக்கு அது போதும். இப்படி ஒரு பெண் அவருக்கு நாம் கொடுத்து வைக்க வேண்டும். அதற்காக பெருமைப்படு சந்தோஷப்படு.

     அறைக்குள்.

     விஜயகுமார் வந்ததுமே லதிகாவிற்கு படபடப்பு அதிகமாயிற்று. அவனை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். ஊதுபத்தி புகைந்து வாசத்தை பரப்பி விட்டு சாம்பலாகிக் கொண்டிருந்தது. அவன் அருகில் வந்ததும் லதிகா அவனுடைய காலை தொட்டு வணங்கினாள். பிறகு பால் எடுத்து பவ்யத்துடனும், மரியாதையுடனும் அவனிடம் நீட்டினாள். அந்த சமயத்தில் அவனுடைய கண்கள் கலங்கியிருப்பதை கண்டு பதறிப்போனாள்.  

     அவன் பாலை வாங்கி ஸ்டூலில் வைத்து விட்டு அமர்ந்தான். அவளை வெறித்துப் பார்க்க, லதிகாவிற்கு சங்கடமாயிருந்தது.

     “உங்க கண்கள் ஏங்க கலங்கியிருக்கு? அக்காவுக்கு இப்படி ஆயிபோச்சேன்னா...?”

     அவன் எதுவும் பேசவில்லை. “பேசுங்க. எம்மேல ஏதாச்சும் கோபமா... என்னை உங்களுக்கு பிடிக்கலியா...? நான் ஏதாச்சும் தப்பிதமா நடந்துக்கிட்டேனா...?”

 

     “இல்லை, இப்படி வந்து உட்கார். உங்கிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு”

     லதிகா கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “லதிகா! நான் எந்த சூழ்நிலையில் உன்னை கட்டி கிட்டிருக்கேன்கிறது உனக்கும் தெரியும். என் நிலைமையும் கூட புரியும். புரியணும். புரிஞ்சுக்கணும். நீ படித்தவள். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அனுசரித்து போவாய் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.”

     “முகவரி வேண்டாம். நேராய் விஷயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்.”

     “வருகிறேன். எனக்கு நீ ஒரு உறுதிமொழி தருவாயா...?”

     “என்ன வேணும். கேளுங்க!”

     “சாம்பவி எனக்கு மனைவி மட்டுமில்லை. தெய்வம் மாதிரி, என்னோட இந்த வளர்ச்சி அவளால்தான். அவதான் என்னோட மூலதனம். என்னோட சொத்தும். என்னை பாடுபட்டு தூக்கி நிறுத்திட்டு அவ படுத்துகிட்டா. என்னால இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. வாஸ்தவத்தில் சொல்லப் போனால் இன்னொரு கல்யாணத்துக்கே எனக்கு இஷ்டமில்லை. அவள்தான் வற்புறுத்தினா.

     நானும் ஆரம்பத்தில் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அப்புறம் யோசிச்சப்போ, நம்மால குழந்தையையும் அவளையும் பராமரிக்க முடியுமாங்கிற சந்தேகம் வந்தது. என்ன இருந்தாலும் நான் ஆண். பிசினசை பார்க்க போய் விட்டேன் என்றால் குழந்தையின் தேவைகளை யார் கவனிப்பது...? அம்மாவும், அப்பாவும் கண் முன்னிலேயே இருக்கும்போது எதற்காக காப்பகத்தில் போய்விட வேண்டும் என்று தோன்றிற்று. எனக்கு என்னைவிட சாம்பவி முக்கியம்.”

     “அவங்க என் அக்கா மாதிரிங்க.”

     “அதே அளவு குழந்தையும் முக்கியம். அவளுக்கு அம்மா பாசத்தில் எந்த குறையும் வரக் கூடாது!”

     “விஜி இனி என் குழந்தைங்க. அவளுக்கு எந்தவித குறையுமில்லாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.”

     “சந்தோஷம் லதி! உன்னோட இந்த பொறுப்புணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான் பெருமைப்படறேன். அப்புறம் விஜி மட்டும் நமக்கு போதாதா...?”

     “என்ன கேட்கறீங்கன்னு எனக்கு புரியலே?”

     “நமக்கு விஜி ஒரு குழந்தை. சாம்பவி இன்னொரு குழந்தை. அப்படி இருக்கும்போது இன்னொரு குழந்தை எதுக்கு...? வேண்டாமேன்னு சொல்றேன்.”

     லதிகா இதற்கு பதில் சொல்லவில்லை. பேசாமல் அமர்ந்திருந்தாள். “பால் ஆறிபோகுது குடிங்க!”

     “முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்.”

     “என்ன கேட்டீங்க...?”

     “குழந்தை வேணாம்னு கேட்டதுக்கு உன் சம்மதத்தை இன்னும் நீ சொல்லவில்லை.”

     “சம்மதம்னு சொல்லாம சொல்லதான் பாலைக் கொடுத்தேன். பால் விடும் தூது!” என்று அவள் சிரிக்க. “ரொம்ப நன்றி லதிகா. என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சு. நான் நிஜமாலுமே உன்னை அடைய பாக்கியம் செஞ்சிருக்கணும்!” என்று நெகிழ்ந்து போனான்.

     லதிகாவிற்கு இந்த வீடு ரொம்பவும் பிடித்திருந்தது. வந்து இரண்டு நாட்களிலேயே அவள் எல்லோருடனும் அன்யோன்யமாய் பழக ஆரம்பித்திருந்தாள். பம்பரமாய் சுழன்று வேலைகளையெல்லாம் செய்து வந்தாள்.

     அக்கா அக்காவென்று வாய்கொள்ளாமல் சாம்பவியை சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுடைய தேவைகளை கவனித்துக் கொண்டாள். மருந்து தடவுவது, பயிற்சி பண்ணி விடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டி விடுவது எல்லாமே அவளது பொறுப்பு.

     அவற்றை கொஞ்சங்கூட சலிப்பில்லாமல் செய்து வந்தாள். சாம்பவிற்கும் அவளை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. ஆனால் விஜயகுமார்தான் இயல்பாய் இருக்கவில்லை, எதையோ பறிகொடுத்தது போலிருந்தான். லதிகாவுடன் சரியாய் பேசுவதில்லை.

     “லதிகாவை உங்களுக்கு பிடிக்கலையா?” சாம்பவி அவனிடம் கேட்கவும் செய்தாள். அவன் இல்லையென தலையாட்ட, “அப்புறம் அவளுடன் பேசி நான் பார்க்கவேயில்லையே. உங்களுக்கு என்ன பிரச்சினை சொல்லுங்கள். அருமையாய் ஒரு பொண்டாட்டி வாய்த்திருக்கிறாள். அனுபவிப்பதை விட்டு விட்டு வியாபாரத்தில் எதுவும் முடையா?”

     “இல்லை”

     “அப்புறம் ஏன்? இன்னும் பழசையே நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா? இனிமே மதியம் ஹோட்டல்ல சாப்பிட வேண்டாம். இங்கே வந்து சாப்பிட்டுப் போங்க”

     ”அதற்கெல்லாம் நேரமிருக்காது”

     “அப்போ லதிகாவை கொண்டு வரச் சொல்கிறேன்”

     “வேண்டாம் வேண்டாம். அவள் இங்கேயே இருக்கட்டும். நானே வர முயற்சிக்கிறேன்”

     “அப்புறம் இன்னொரு விஷயம் நீங்கள் எப்போதும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியில்லை. அவளுக்கு மனசு நோகும். காம்ப்ளெக்ஸ் வரும். எந்த விஷயமானாலும் அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்”

     சாம்பவியின் அந்த வார்த்தை மட்டும் அவனுடைய காதில் ஏறவில்லை. வீட்டிற்கு வந்தான் என்றால் அவளுடன் தானிருப்பான். அவளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பான். லதிகாவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ராத்திரி தூங்கப் போகும் போதுதான் அவளையே ஏறிடுவான். அப்போதும்கூட சரியாய் பேசுவதில்லை. அலுப்பாய் இருக்கிறது என்று தூங்கி விடுவான்.

     அவன் பகலில் பேசாவிட்டாலும் ராத்திரியிலாவது ஆசையுடன் பேசுவான், கொஞ்சுவான் என்று எதிர்பார்ப்போடு அறைக்குள் வருபவளுக்கு ஏமாற்றமாயிருக்கும். ஆரம்பத்தில் சிலநாட்கள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பாவம், அக்காவின் சோகம் அவரை பாதித்திருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்தாள்.

     ஆனால் சரியாகிற மாதிரி தெரியவில்லை. அவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் தெரியாமல் போகவே அவளுக்குள் ஒரு ஆதங்கம் முளைக்க ஆரம்பித்தது. அது வளர்ந்தது. துளிர்த்து கொழுத்து.

     இவருக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன். எல்லோரையும் அனுசரித்துதானே போகிறேன். இருந்தும் என்னை ஏன் இவர் ஒதுக்குகிறார் என்று நினைத்து வருந்த ஆரம்பித்தாள், என்னை ஒதுக்குகிறாரா இல்லை வெறுக்கிறாரா?

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles