தவழும் பருவம்  

           

    

       கட்டின பொண்டாட்டியுடன் பேச முடியவில்லை. கொஞ்ச முடியவில்லையென்றால் அப்புறம் எதற்கு கல்யாணம்? இங்கே நான் யார்? வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் ஜந்துவா? அதற்கு பொண்டாட்டி எதற்கு. வேலைக்காரி போதாதா?

     அவளையுமறியாமல் உள்ளுக்குள் புகைச்சல் கிளம்பியிருந்தது. கஷ்டப்பட்டு அதுமாதிரி வந்த எண்ணங்களை அடக்கிக் கொண்டாள். சாம்பவியை பார்க்கும்போது அந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் அடங்கிப்போகும்.

     ஒரு சமயம் அவள், “அக்கா வீட்டு வேலைகளைத்தான் நான் கவனிச்சுக்கிறேனே அப்புறம் ஆயா எதுக்கு நிறுத்தி விடலாமே” என்றாள்.

     அதை கேட்கவும் சாம்பவிக்கு சந்தோஷமாக இருந்தது. “உனக்கு வேணாம்னு தோணுச்சுன்னா நிறுத்திடும்மா”

     “அப்புறம் ஏங்க்கா, விஜியை இன்னும் எதுக்கு    காப்பகத்தில் கொண்டு போய் விடணும், நான் பார்த்துக்க மாட்டேனா?”

     “எதுக்கும்மா உனக்கு சிரமம்?”

     “எனக்கென்ன சிரமம். சமையலை முடிச்சா அப்புறம் எனக்கென்ன வேலை இங்கே”

     “அதுக்காக சொல்லலை லதி. இப்போதான் கல்யாணம் ஆகி வந்திருக்கே. கொஞ்ச நாளைக்கு ப்ரீயா இரேன். அவரையும் அழைச்சிட்டு வெளியே எங்கேயாச்சும் போய்வாயேன்”

     “அவருக்கு நேரம் கிடைக்கணுமே”

     அவருக்கு நேரம் கிடைக்கும்போது போகலாம்னு இருந்தாய் என்றால் கிழவியாகி விடுவாய். அப்புறம் குச்சி ஊன்றிக் கொண்டுதான் போக வேண்டி வரும். ஆம்பளைங்க எதிலுமே அலட்சியமாகத்தான் இருப்பாங்க நாமதான் ப்ரோகிராம் பண்ணி நச்சரிக்கணும்”

     “எனக்கு பயமாயிருக்குக்கா”

     “நானிருக்கும்போது உனக்கேன் பயம். ஓண்ணு செய்கிறாயா, அவரையும் அழைச்சுகிட்டு இன்னிக்கு படத்துக்கு போய் வாயேன்”

     “என்ன படம், எந்த தியேட்டர்னு எனக்கு தெரியாதேக்கா”

“அதெல்லாம் அவருக்குத் தெரியும். வேலைக்காரனை அனுப்பி ரிசர்வ் பண்ணிட்டு வரச்சொல்லு”

     “எந்த தியேட்டருக்கு?”

     “பத்து பனிரெண்டு தியேட்டர் இருக்கு. வேணும்னா செட்டிக்குளத்துக்கு சக்ரவர்த்திக்கு அனுப்பேன்” என்றவள் வேலைக்காரனை அழைத்து, எந்த படம்ப்பா நல்லா இருக்கு?”

     அவன், “யுவராஜவுல நல்ல படமாம்” என்றான்.

     “சரி அதுலயே ரிசர்வ் பண்ணிறேன்”

     “அவர் வருவாராக்கா”

     “அதான் ரிசர்வ் பண்ணிட சொன்னேனே”

     லதிகா சமையல் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வேலைக்காரனை அனுப்பி கோவில் திடலுக்கு போய் யுவராஜாவில் மாலைகாட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளை புக் பண்ணிவிட்டு வரச் செய்தாள்.

     கணவனுடன் முதன் முதலில் வெளியே கிளம்புகிறோம், சினிமா பார்க்கப் போகிறோம் என்று நினைத்த போது அவளுக்கு மனம் குளிர்ந்தது. உல்லாசம் பாடியது. நான்கு மணியிலிருந்து அவனுக்காக காத்திருந்தாள்.

     சாம்பவி தன்னுடைய பட்டுப் புடவைகளையும் நகைகளையும் அவளை எடுத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தாள். லதிகா மறுத்துங்கூட அவள் விடவில்லை.

     “இனி எனக்குன்னு இந்த வீட்டுல எதுவுமே இல்லை. எல்லாமே உன்னோடதுதான். உனக்குத்தான்”

     அவளால் மறுக்க முடியவில்லை. அக்காவின் புடவையில் நம்மை பார்த்தால் அவர், அக்காவை பார்ப்பது போலவே உணருவார். சந்தோஷப்படுவார். அவருக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் ஏன் நாம் உடுத்திக் கொள்ளக் கூடாது?

     லதிகா சாம்பவியின் புடவையையும் நகைகளையும் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள். அவளுக்கு பொருமிதமாகவும், பூரிப்பாகவும் இருந்தது. இத்தனை நகைகளை அவள் இதுவரை போட்டுக் கொண்டதே இல்லை. அதற்கான வசதியும் இல்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை.

    இப்போது முதன்முறையாக போட்டுக் கொண்ட போது உடல் புல்லரித்தது. சாம்பவிக்கு மனம் நன்றி சொன்னது. அலங்காரத்துடன் அவளிடம் போய்,

     “நல்லாருக்காக்கா”

     சாம்பவி அவளைப் பார்த்து பிரமித்துப் போனாள். “லதி, உன் பெயர் லதி இல்லை. ரதி தேவதை மாதிரி இருக்கிறாய். உன்னை பார்த்தால் அவர் அசந்து போகப் போகிறார் பார்”

     “அவருக்கு என்ன ஹேர்ஸ்டைல் பிடிக்கும்?”

     “அப்படி பிரத்யேகமாய் எதுவுமில்லை. தலைநிறைய மல்லிகை பூ வச்சுகிட்டா ரசிப்பார். போய் வாங்கி வந்து வச்சுக்கோ...”

     “இதே...” என்று லதி பணம் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். தெருமுனையில் பூ வாங்கிக் கொண்டு வரும்போது விஜயகுமார் ஆபீசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான்.

     ஸ்கூட்டரை நிறுத்தும்போது அவளது அலங்காரத்தையும், சாம்பவியின் புடவை, நகைகளையும் கண்டதும் அவனுக்கு சட்டென்று கோபம் வந்தது.

     “என்ன இதெல்லாம்...?”

     “அக்கா கொடுத்தாங்க. இந்த புடவை எனக்கு நல்லாருக்காங்க...?” கேட்டு விட்டு அவள் வாசலில் நிற்க. அவன் பதில் சொல்லவில்லை. முறைத்தான்.

     “நாம சினிமாவுக்கு போகலாமாங்க, குழந்தையையும் தூக்கிட்டுதான்.”

     “குழந்தை அழுவா.”

     “நான் பார்த்துக்கிறேன்.”

     “சாம்பவியை விட்டுட்டா...?”

     “அக்கா தான் போய் வரச் சொன்னாங்க. டிக்கட்கூட ரிசர்வ் பண்ணியாச்சுங்க. இதே...” என்று அவள் நீட்ட, அதை பிடுங்கி சரக்கென கிழித்து அவளது முகத்தில் எறிந்தான், ஆசையுடனும், ஆர்வத்துடனும் நின்றிருந்தவளுக்கு அது பேரிடியாய் விழுந்தது. அவன் அப்படி நடந்து கொள்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்கக வில்லை. அவளுடைய முகம் வாடிப்போயிற்று. கன்னம் கசங்கிப் போனது. கண்கள் நனைந்தன.

     “அக்கா தாங்க ரிசர்வ் பண்ணிட்டு வரச் சொன்னாங்க.”

     “அவ சொன்னா உடனே செய்துரணுமா? உனக்கு அறிவு எங்கே போச்சு...? அவ படுக்கையில் கிடக்கும்போது நாம சினிமாவுக்கு போய் மகிழணுமா? ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ. இங்கே அவள்தான் முக்கியம். அவள்தான் எனக்கு முதல்ல. அதற்கு பிறகுதான் நீ! அவளுக்கு அனுபவிக்க முடியாத எந்த விஷயமும் நமக்கு வேண்டாம். உனக்கும் வேண்டாம். இன்னைக்கு சொல்றதுதான். மனசுல நல்லா வாங்கிக்கோ. சும்மா சும்மா சொல்லிகிட்டேயிருக்க முடியாது ஆமாம்!”

     அவன் விருட்டென உள்ளே போனான். அவளுக்கு மனது வலித்தது. அந்த வார்த்தைகள் வேதனை தந்தன. நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன். ஆசைபடக் கூடாதா எதற்கு ஆசைப்பட்டு விட்டேன்? இத்தனை கோபப்படுகிற அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்?

     விஜயகுமார் செருப்புக்களை உதறிவிட்டு நேராய் சாம்பவியிடம் போனான். கட்டிலில் அவளுக்கருகில் அமர்ந்து கொண்டு, “மாத்திரை சாப்பிட்டாயா சாம்பி...?”

     “சாப்பிட்டேங்க. விஜியை அழைச்சு வரலே...?”

     “இன்னும் நேரமிருக்கு.”

     “லதியும், நீங்களும் வெளியே போயிட்டு சினிமா பார்த்துட்டு வாங்க. வீட்டுக்குள்ளேயே அவளுக்கு போரடிக்கும்ல்லே...?”

     “எனக்கு தலைவலிக்கிறது சாம்பி”

      “வெளியே காத்தோட்டமாய் போய் வந்தால் எல்லாம் சரியாகி விடும்”

     “இன்று வேண்டாம். அலுப்பாய் இருக்கிறது.”

 

     “அப்போ அந்த டிக்கட்டுகள்...?”

     “குழந்தையை அழைக்கப் போகும்போது யாருக்காவது கொடுத்தாப்போச்சு!” என்று பொய் சொன்னான்.

     “பாவம்ங்க அந்த பொண்ணு. சினிமாவுக்கு போகலாம்னு எத்தனை ஆசைகளோடும், கனவுகளோடும் இருக்கு தெரியுமா...?”

     “சினிமா வேணும் என்றால் டி.வி.யில் பாருங்கள். டெக் வாங்கி தருகிறேன். கேசட் எடுத்து ரெண்டு பேரும் பாருங்கள்!”

     “எனக்கு தான் தலைவிதி. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கணும்னு. அவ என்ன பாவம் பண்ணினா...? தியேட்டர்ல அழைச்சு போய் காண்பியுங்களேன்”

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles