தவழும் பருவம்  

           

    

      “அதான் சொன்னேனே...இன்னைக்கு எனக்கு மூட் இல்லை!”

     விஜயகுமார் சொல்லிவிட்டு முகம் கழுவிக் கொண்டு தன் அறைக்கு போனான்.

     அவன் அப்போது என்றில்லை. எப்போதுமே அப்படித்தான் நடந்து கொண்டான். லதிகாவை வெளியே அழைத்துப் போவதை எந்த விதத்திலாவது தகர்த்துக் கொண்டே வந்தான். அது அவளுக்குள் ரணத்தை ஏற்படுத்திற்று. ஆனாலும் கூட பொறுத்துக் கொண்டாள்.

     நாட்கள் ஓடின. மாதங்களாய் நகர்ந்தன.

     லதிகாவிற்கு சாம்பவியை ரொம்பவும் பிடித்திருந்தது. அவளடைய குணம் அவளை சாந்தப்படுத்தி கட்டிப் போட்டிருந்தது. மாலை வேளைகளில் அவள் சாம்பவியை வீல்சேரில் அமர்த்தி, மடியில் குழந்தையை அமர வைத்து தோட்டத்தில் சுற்றி வருவாள். குந்தையுடன் பந்து விளையாடுவாள். அவளுக்காக பேப்பரும், வார இதழ்களும் படித்து காட்டுவாள்.

     அலுவலகத்திற்கு போன் பண்ணி, சாம்பவியை கணவனுடன் பேசச் சொல்லி ரசிப்பாள். மொத்தத்தில் லதிகா தன்னால் அந்த வீட்டில் எந்த பிரசினையும் வந்து விடக்கூடாது என்று பொறுமையாய் இருந்தாள். அங்கு அவளுக்கென்று எதுவுமே செய்வதில்லை. சமையலிலிருந்து காய்கறிகள் வரை எல்லாமே சாம்பவியின் முடிவுதான்.

     சாம்பவிகூட சமயத்தில், “என்னையே எதற்கு கேட்கிறாய். உன்விருப்பப்படி செய்யேன்!” என்பாள்.

     “இங்கே என் விருப்பம்னு எதுவுமே இல்லைக்கா. உங்க விருப்பம்தான் எங்கள் விருப்பம்!” என்று சொல்லி சிரிப்பாள்.

     அவள் அனுசரித்துப் போக, போக விஜயகுமார் அவளை ரொம்பவே நோகடித்துக் கொண்டிருந்தான். லதிகாவின் அண்ணனும், அண்ணியும் அவளை தீபாவளிக்கு ஊருக்கு அழைக்க வேண்டி வந்திருந்தனர்.

     அனால் அவனோ, “எனக்கு இந்த தீபாவளி, பொங்கல் எல்லாம் பெரிசில்லை. சாம்பவி இப்படி ஆன பின்பு நான் பண்டிகையே கொண்டாடுவதில்லை” என்று முகத்திலடித்த மாதிரி சொல்லி விட்டான்.

     “ஆனாலும் இது தலை தீபாவளியாயிற்றே. நீங்கள் அவசியம் வர வேண்டும். அதுதானே முறை...?”

     “முறையை பார்த்தால் முடியுமா. நான் அங்கே வந்து விட்டால் சாம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள்...? நாங்கள் வந்து அங்கே அனுபவிக்க வேண்டும். பட்டாசு விட வேண்டும். சாம்பி இங்கே அனாதையாய் கிடக்க வேண்டுமா? ஸாரி, நாங்கள் வருவதாயில்லை” என்று அவர்களை அனுப்பி விட்டான்

     “அக்காவை விட்டுட்டு நாம ஊருக்கு போறது சரியில்லைதாங்க. ஆனா இங்கேயே தீபாவளி கொண்டாடலாமில்லே...! இங்கேயே பட்டாசு கொளுத்துவோம்!”

     “லதிகா!” என்று அவன் கத்தினான். “உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அது சாம்பவியும் பங்கு கொள்கிற மாதிரி தான் இருக்க வேண்டும். அவள் பங்கு பெறாத எந்த பண்டிகையுமே வேண்டாம். இது பற்றி அவளிடம் மூச்சு விட்டாய் என்றால் தெரியும் சேதி” என்று அவளை மிரட்டி வைத்தான்.

     சாம்பவி பட்டாசு வாங்கி வரச் சொன்னபோது “தீபாவளி கொண்டாடலேன்னா என்ன சாம்பி...?” என்றான்.

     “ஊரல்லாம் கொண்டாடும்போது நாம் சும்மா இருக்க வேண்டுமா? போங்கள், போய் வாங்கி வாருங்கள்!” என்று அவள் விரட்ட, அவன் அப்படியே பிளேட்டை மாற்றி, “வேண்டாம் சாம்பி! லதிகாவிற்கு பட்டாசு என்றால் அலர்ஜியாம். பயப்படுவாளாம். அதனால்தான் சொல்கிறேன்!” என்று சமாளித்தான்.

     “லதி! அப்படியா... உனக்கு பட்டாசு என்றால் பயமா...?”

     “ஆமாங்க்கா!” என்று அவளும் பொய்யாய் தலையாட்டி விட்டு படுக்கையில் போய் விழுந்து விம்ம ஆரம்பித்தாள்.

     மாதங்கள் வேகமாய் நகர்ந்தன.

     அவர்களுடைய திருமணநாள் வந்தது. லதிகா திருமண நாள் என்று பெரிதாய் எதுவும் கனவு காணவில்லை. நாம் பாட்டிற்கு கனவு கண்டு. எதிர்பார்போடு எல்லா ஏற்பாடுகளும் செய்து, கடைசியில் அவர் கலைத்து விட்டார் என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று அவள் பேசாமலிருந்தாள்.

     ஆனால் சாம்பவி விடவில்லை.

     “லதிகா உன் வெட்டிங்டேக்கு என்ன பிரசண்டேஷன் வேணும் சொல்லு?”

     “பிரசண்டேசனா, வெட்டிங்டேயே கொண்டாடுவதா இல்லை”

     “ஏன் ஏன் அப்படிச் சொல்கிறாய்? ஒரு பெண்ணுக்கு கல்யாண நாள் தான் வாழ்க்கைல திருப்பம் தருது. அதை எளிதாய் மறந்திர முடியுமா? காலம் பூரா நினைச்சு நினைச்சு சந்தோஷப்படற நாளாச்சே அது. உனக்கு என்ன வேணுமானாலும் சொல்லு. வாங்கித் தாரேன்”

     லதிகா எதுவும் சொல்லவில்லை. “எனக்கு எதுவும் வேண்டாம்க்கா அவரை சந்தோஷமா பேசச் சொல்லுங்க. அதுவே போதும்” என்று சொல்ல நினைத்தாள்.

     “என்னம்மா பதிலேயே காணோம்? அவர் உங்கிட்ட பிசினஸ் பத்தி பேசுகிறாரா? கணக்கு வழக்கு பத்தியெல்லாம் பேசுவாரா?”

     “இல்லை”

     “ஏன்? எங்கிட்ட வந்து எல்லாம் ஒப்பிப்பாரே. இப்போதும் ஒப்பிக்கிறாரே!”

     சாம்பவி சொன்னதும் லதிகாவின் முகம் சோம்பிப் போயிற்று. “நீங்கள் அவருக்கு வேண்டும். நீங்கள்தான் அவருக்கு முக்கியம். நான்தான் வேண்டாதவளாயிற்றே. இந்த வீட்டில் எனக்கென்ன அந்தஸ்து? நான் வேலைக்காரிதானே?”

     “லதி! நீ வீட்டு பொறுப்புகளை மடடும் கவனிச்சாப் போதாது. அவரோட பிசினஸ் பத்தியும் தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டணும். சமயத்துல அவர் வெளியூர் போக வேண்டியிருக்கும். அந்த நேரத்துல நீதான் போய் பார்த்துக்க வேண்டியிருக்கும் என்ன?”

     “சரிக்கா” என்று நழுவினாள். பிசினஸ் பற்றி தெரிஞ்சுக்க நானா ஆர்வமில்லாமலிருக்கிறேன். அவர் வாயைத் திறந்தால்தானே!

     விஜயகுமார் வந்ததும் சாம்பவி, “நாளைக்கு உங்களோட வெட்டிங்டே! ஞாபகமிருக்கில்லே” என்றாள்.

     “அதற்கென்ன இப்போ” என்றான் அலட்சியமாய்.

     “அதற்கென்னவா? அதை சிறப்பா கொண்டாட வேணாமா?”

     “எதுக்கு? நம்மோட வெட்டிங்டேயும்தான் போன மாதம் வந்தது. அதை யாரும் இங்கே கொண்டாட வில்லையே. கொண்டாட தோன்றவில்லையே?”

     “அது வந்து... நம்மோட வெட்டிங்டே இனி எதற்கு. லதிகா வந்த பின்னால் அது தேவையில்லாத ஒண்ணு இனிமே இதைத்தான் கொண்டாடணும்.”

     “நோ. யார் வந்தும் யாரும் அடிபட்டுப் போகக்கூடாது. நீ என்றைக்கும் நீதான். எனக்கு என்றுமே நீதான்.”

     “ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க. அவ காதுல விழுந்தா எத்தனை வருத்தப்படுவா.”

     “வருத்தப்பட்டா படட்டும். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என் மனசை மாத்திக்க முடியலை. என்னால இயல்பா இருக்க முடியலை. மனசுல உன்னை வச்சுக்கிட்டு வெளியே வேஷம் போடுவது என்னால முடியாத காரியம்”

     அவர்கள் பேசிக் கொண்டிருந்தது லதிகாவின் காதிலும் விழவே செய்தது. இங்கே நான் வேண்டாம் என்றால் எதற்காக என்னை கட்டிக் கொள்ள வேண்டும்? கட்டிக் கொண்டு விரோதி போல நடத்த வேண்டும்.  என்னிடம் என்ன குறை? ஏழை என்பது ஒரு பலவீனம். பணம் இல்லை டவுரி கொண்டு வரவில்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?

     அவள் உடைந்து போனாள். நானும் பெண்தானே எனக்கு மட்டும் ஆசாபாசங்கள் இல்லையா இருக்கக் கூடாதா? அக்காவுடன் அவர் பேசக் கூடாது என்றா சொல்கிறேன். எனக்கும் கொஞ்சநேரம் ஒதுக்குங்கள் என்று தானே கேட்கிறேன். இது தவறா? என்று ஒரு பக்கம் அவள் நினைத்து வருந்தினாலும் இன்னொரு பக்கம் அவன் சாம்பவியின் மேல் வைத்திருக்கிற பாசத்தை நினைத்து மனம் பிரமித்து வியந்தது.

     எத்தனையோ பேர் பெண்டாட்டி நல்ல நிலையிலே இருக்கும்போதே அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்டாட்டி தளர்ந்த போதும் கூட அவளையே நினைத்து அவளுக்காகவே உருகுகிறாரென்றால் இவர் நிச்சயம் சாதாரண மனிதர் இல்லை. கோவிலில் வைத்து பூஜிக்க வேண்டியவர். அப்படிப்பட்டவர் நம்மையும் நிச்சயம் கைவிட மாட்டார். நமக்கும் ஒரு காலம் வரும். நம் மீதும் அன்பு செலுத்துவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று லதிகா தன் மனதை தேற்றிக் கொண்டாள்.

     மறுநாள் சாம்பவி, விஜயகுமாரை கட்டாயப்படுத்தி லதிகாவையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் வரும்படி அனுப்பினாள். வழியில் எக்ஸிபிஷன் ஒன்று நடக்க, அதற்கும் போய் வாருங்கள் என்றிருந்தாள்.

     அவன் கோவிலுக்கே வேண்டா வெறுப்பாகத்தான் போனான். எக்ஸிபிஷன் போகும் வழியிலெல்லாம் அவளை கடுப்படித்தான்.

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles