தவழும் பருவம்  

           

    

     மனுஷனுக்கு நிற்க நேரமில்லாமல் அலையறானாம். இதில் எக்ஸிபிஷன் பார்க்காததுதான் குறை. எல்லாம் என் தலையெழுத்து” என்று திட்ட, அதுவரை அவனை எதிர்த்து பேசாத லதிகா வெடிக்கலானாள்.

     “நானா உங்களை எக்ஸிபிஷன் அழைச்சு வரச் சொன்னேன்? விருப்பமிருந்தா வாங்க, இல்லாட்டி போங்களேன்”

     “ஏய், உனக்கு அவ்ளோ திமிரா போச்சா? இத்தனை வருட பழக்கத்தில் சாம்பவி என்னை ஒரு வார்த்தை எதிர்த்து பேசியிருப்பாளா? நேற்று வந்த உனக்கு இத்தனை வாய் கொழுப்பு”

     “இதோ பாருங்கள் வாய்கொழுப்பு, அதுஇதுன்னு பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்.” அங்கே விவாதம் வளர்ந்தது. சூடு பிடித்தது. வேண்டாத விதத்தில் திரும்பியது,

     “நான் அப்படித்தான் பேசுவேன். என்னடி பண்ணுவே நீ?”

     “என்ன பண்ணி விடுவேன் என்கிற மதர்ப்பில்தானே இத்தனை அலட்சியப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு அவங்கதான் வேணும். அவங்கதான் முக்கியம்னா எதுக்காக என்னை கட்டிக்கொள்ள வேண்டும்? என் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும்?”

     “ஆமாம், நான் உன் வாழ்க்கையை சீரழிக்க வேண்டிதான் கட்டிக் கொண்டேன். உன் மீது எனக்கு ஜென்ம பகை இருந்தது. அதனால் தான் கட்டிக் கொண்டேன். போதுமா? இன்னொண்ணும் சொல்கிறேன் கேட்டுக் கொள். சாம்பவியிடம் கோள் சொல்லி அது வேண்டும், இது வேண்டும் என்று எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று மட்டும் நினைக்காதே. உன் விஷயத்தில் என்னால் இவ்வளவு தான் முடியும். எனக்கு சாம்பவிதான் முக்கியம். அவளுக்கு பிறகு தான் நீ. எல்லாவற்றையும் அனுசரித்து காலந்தள்ள முடியும் என்றால் நீ இங்கே இரு. இல்லா விட்டால் ஓடிப்போ!”

     விஜயகுமார் கிறுக்கு பிடித்த மாதிரி போசினான். அவள் என்ன தப்பு செய்து விட்டாள். எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறோம் என்று அவன் யோசிக்கவே இல்லை. சாம்பவியின் மேல் அவனுக்கிருந்த அன்பும் ஆதங்கமும் அவனுடைய கண்களை மறைத்தன. எத்தனை முயன்றும் கூட அவனால் அவளை மறக்க முடியவில்லை. லதிகா வந்து தங்களிடையே நிற்கிறாள். தங்களை பிரிக்கப் பார்க்கிறாள் என்றே நினைத்தான். அதனால் அவனை பொருத்தவரை அவள் எதிரியாகவே பட்டாள்.

     “இதோ பாருங்க, உங்களுக்கு என்னை பிடிக்கலேன்னா நேரிடையா சொல்லிடுங்க. அதுக்காக உங்க பேச்சை யெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கணும்னு எனக்கொண்ணும் தலையெழுத்தில்லை. நான் எங்கண்ணன் வீட்டுக்குப் போறேன்”

     “போறதுண்ணா போயேன். நீஇல்லாட்டி இங்கே ஒண்ணும் நடக்காதா?” அன்று ராத்திரி லதிகா தூங்கவேயில்லை. தனியாகபடுத்து விம்மிக் கொண்டிருந்தாள். எதிர்காலம் அவளுக்கு சூன்யமாய் தெரிந்தது. திருமண நாள் என்று எல்லோரும் எத்தனை சந்தோஷப்படுவார்கள். எத்தனை ஆர்ப்பரிப்பார்கள்.

     மனைவியை வைத்த இடத்தில் வைக்காமல் கொஞ்சுவார்கள். ஆனால் இங்கேயோ... இனியும் இவற்றை தாங்கிக் கொண்டிருக்க முடியாது. பேசாமல் அண்ணன் வீட்டிற்கு போக வேண்டியதுதான்.

     அங்கே போகலாம். ஆனால் அவர் வருத்தபடுவாரே? எத்தனை நாட்களுக்கு அங்கு தாக்கு பிடிக்க முடியும். கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைத்து ஆளாக்கினார். கல்யாணமும் பண்ணி வைத்தார். இப்போது புருஷனோடு சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்றால் அவருடைய மனது எவ்வளவு பாடுபடும். இது தேவை தானா? இது முறைதானா?

     ஒரு பெண்ணிற்கு கல்யாணம் நடக்காமலிருப்பதைவிட கொடுமை வேறெதுவுமில்லை. அதைவிட கொடுமை வாழாவெட்டி என்கிற பட்டம். கடவுளே...எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? என் பாகத்தில் என்ன தப்பு?

     இத்தனை நாட்கள் எல்லோருடனும் அனுசரித்து போகவில்லையா? இவர் சொல்வதையெல்லாம் கேட்க வில்லையா? அக்காவை பார்த்துக் கொள்ளவில்லையா? விஜியை என் குழந்தையாக கவனித்துக் கொள்ளவில்லையா? அப்புறம் ஏன் இவர் என்னை விரட்டி விரட்டியடிக்கிறார்? இதற்கு ஒரு முடிவே இல்லையா?

     காலம் முழுவதும் நான் கண்ணீர்விட வேண்டியது தானா? அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பொறுமை, பொறுமை என்று மனது அவளை அமைதிப்படுத்திற்று. அவசரப்படாதே. காலம் கனியும். அதுவரை காத்திரு. காற்று எப்போதும் ஒரே பக்கத்தில் அடிப்பதில்லை. அதன் காட்டமும் குறையும். திசையும் மாறும்.

     சாம்பவி கடந்த ஒரு வாரமாகவே லதிகாவை கவனித்து வந்தாள். அவளுடைய முகத்தில் ஒளி இல்லை. அவள் சரியாய் பேசுவதில்லை. அவளுக்கும் கணவனுக்குமிடையே என்னவோ நடந்திருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

     இத்தனை நாள் சந்தோஷத்துடன் உலா வந்தவளுக்கு இப்போது என்னாயிற்று? கணவன் கண்டித்திருப்பாரோ...?

     அவனிடம் விவரம் கேட்க, “ஏன் ஒண்ணுமில்லையே... நாங்க எப்போதும் போலதானே இருக்கோம்” என்று நழுவினான். அந்த நழுவலிலேயே என்னவோ இருக்கிறது என்பது புரிந்து போயிற்று.

     லதிகா எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. சும்மா இருந்தவளை பிடித்து வந்து நாம் தான் கட்டி வைத்தோம். அவளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதற்கு நாம்தான் பொறுப்பு. நாம் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும். எப்படி தீர்த்து வைப்பது? என்ன பிரச்சினை என்று எப்படி தெரிந்து கொள்வது?

     விஜியகுமார் கிளம்பிப் போனதும் சாம்பவி அவளை அழைத்தாள். அழைத்து தன்னருகில் வைத்துக் கொண்டு “லதி! நான் ஒரு விஷயம் கேட்டால் மறைக்காமல் சொல்வாயா?”

      “என்ன விஷயம்க்கா...”

      “எனக்கு நோய் என்றதும் பயந்து போனேன். குழந்தையையும், கணவனையும் இனி யார் பராமரிப்பார்கள் என்று உடைந்து போயிருந்த மனத்திற்கு நீ உரம் போட்டாய். நானிருக்கிறேன் என்று சேவகத்திற்கு வந்தாய். ஆனால்...”

     “என்னக்கா”

     “நீ சந்தோஷமாய் இருக்கிறாயா?”

     “எனக்கென்ன குறைச்சல்! ஐ ஆம் ஆல்ரைட்”

     “நீ சொல்லும் தோரணையே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது. உன் கண்கள் பொய் சொல்லவில்லை. நீ மகிழ்ச்சியாய் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவர் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார்”

     “நல்லாதான் நடந்துக்கிறார்”

     “அப்படி ஒண்ணும் தெரியவில்லையே. கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிறது. அதற்கான அறிகுறியே தெரியவில்லையே. உனக்கு குழந்தை மேல் ஆசையில்லையா?”

     “குழந்தை மேல் ஆசைப்படாத பெண்ணும் உண்டா?”

     “அப்புறம் ஏன் இன்னும் நீ உண்டாகாமல் இருக்கிறாய்?”

     “அது வந்து வந்துக்கா...” என்று அவள் தயங்கினாள். இதுதான் சந்தர்ப்பம். எல்லாவற்றையும் போட்டு உடைத்து விடலாமா? நமக்கு விடிவுகாலம் என்று ஒன்று உண்டென்றால் அது இவர்கள் மூலமாகத்தான் வரவேண்டும் என்று நினைத்தாள்.

     “சொல்லும்மா”

     “வந்து விஜி இருக்கும்போது இனி எதுக்காக உண்டாகணும்? நமக்கு விஜி போதாதாக்கா”

     “அப்படின்னு அவர் சொன்னாரா!”

     “இல்லை. எனக்கு அடுப்படியில் வேலையிருக்கு. அப்புறமா பேசலாம்” என்று அவள் எழ,

     “லதி, ஏன் நழுவுகிறாய்? உட்கார். இங்கே அடுப்படி முக்கியமில்லை. அடுப்பு காய்ந்தாலும் பிரச்சினையில்லை நீ காயக் கூடாது. உனக்குன்னு ஒரு குழந்தை வேணும். பத்து மாதம் சுமந்து பெத்துக்கொள்கிற சுகத்தையும், வேதனையையும் நீயும் அனுபவிக்கணும். அதில்லைன்னா அப்புறம் பெண்ணுக்கு என்ன பெருமை?”

     “அவர் சம்மதிக்க மாட்டார்க்கா”

     “நான் சொல்றேன்”

     “வேண்டாம்” என்று அவள் அவசரமாய் மறுத்தாள். “நீங்கள் எளிதாய் சொல்லி விடுவீர்கள். அப்புறம் அவர் என்னை அடிப்...”

     “அடிப்பாரா? அந்த அளவிற்கு அவர் உன்னிடம் கொடூரமாய் நடந்து கொள்கிறாரா?”

     ‘இல்லைக்கா இல்லை... அவர் நல்லவர். அப்படியெல்லாம் செய்ய மாட்டார்”

     “லதி, உட்கார் இப்படி! இத்தனை தூரம் நீ பட்டிருக்கிறாய். அடி வாங்கியிருக்கிறாய். ஏன் என்னிடம் இது பற்றி சொல்லவே இல்லை?”

     லதிகா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்கிக் கொள்ள முயன்றாள். அவளையும் மீறிக் கொண்டு கண்கள் வெடித்தன.

     நாம் வாயை திறந்திருக்கவே கூடாது. நமக்கு குழந்தை இல்லா விட்டாலும் பரவாயில்லை. நம்முடன் அவர் அன்பாய் நடந்து கொள்ளாவிட்டாலும்கூட போகட்டும். எக்காரணம் கொண்டும் நம்மை வீட்டை விட்டு அனுப்பி விடக் கூடாது. நம் துன்பம் நம்முடனேயே இருக்கட்டும். அண்ணனுக்கும், அண்ணிக்கும் தெரிய வேண்டாம்.

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles