தவழும் பருவம்  

           

    

     நான் சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் நினைத்து நிம்மதியடைகிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும்? இப்போது குழந்தை வேண்டாம் என்று அவர் சொன்னார் என்று அக்காவிடம் சொன்னால், அவரிடம் போய் கேட்பார்கள். அவர் உடனே வெடிப்பார் ‘போடி வீட்டை விட்டு’ என துரத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

     “லதிகா, நான் கேட்கிறேனில்லே அவர் குழந்தை வேண்டாம்னு சொல்லியிருக்கலாம். நீ பெத்துக் கொண்டால் விஜியை கவனிக்காம விட்டுருவயோன்னு பயந்திருக்கலாம். ஆனால் நீ அப்படிப்பட்டவள் இல்லை என்பதும் எந்த அளவிற்கு ஈடுபாட்டோட அவளை பாதுகாக்கிறாய் என்பதையும் தான் நாங்கள் பார்க்கிறோமே. நீ நல்லவள். உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரிடம் எடுத்துச் சொல்லி பெற்றுக் கொள்”

     லதிகா அப்போதும் கூட பேசவில்லை.

     “லதி, உங்களுக்கு குழந்தை வேண்டாம்னு மட்டும் தான் சொன்னாரா, இல்லை உறவே வேண்டாம் என்றாரா?”

     லதிகாவிற்கு அதற்கு மேலும் அங்கே இருக்க முடியவில்லை. அழுது கொண்டு தன் அறைக்கு ஓடிப்போனாள்.

     அவளுடைய நிலைமை சாம்பவியை பாதித்தது. சே! கொடுமை இது! எப்படி எப்படியோ வாழ வேண்டிய பொண்ணு! நம்மால் இங்கே வந்து அசைப்பட்டு துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இது தேவைதானா? இதற்கு தானா நாம் ஆசைப்பட்டோம்?

     எத்தனை பெரிய லட்சியத்துடன் அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம். எல்லாவற்றையும் சிதைத்து விட்டாரே. அவள் எத்தனை ஆசைகளையும், கனவுகளையும் மனதில் சுமந்திருப்பாள்! புது கணவன் நம்மை அங்குலம் அங்குலமாக பாராட்டுவான், சீராட்டுவான் என்று...

     எல்லாமே போயிற்று. இத்தனை நாட்களாக நாமும் அசட்டையாக இருந்து விட்டோம். முன்பே தலையிட்டு அவரை கண்டித்து இருக்க வேண்டும். ஒரு புஷ்பம் கண் முன்னாலேயே வாடிக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம்.

     வெளியே சிரித்து சிரித்து பேசுகிறாளே, முகம் கோணாமல் நடக்கிறாளே... அவர் சந்தோஷமாக தான் வைத்திப்பார் என்று தப்பு கணக்கு போட்டு விட்டோம். வெளியே அழைத்து போகாத போதுகூட வேலைப் பளுதான் காரணம் என்றல்லவா நினைத்தோம்.

     எல்லாவற்றிற்குமே காரணம் நான் தானா? என் மேலுள்ள அன்பினால்தான் அவளை வெறுக்கிறாரா? இந்த மாதிரி நடந்து கொள்வார் என்று தெரிந்து இருந்தால் கல்யாண பேச்சையே எடுத்திக்க மாட்டேனே!

     பாவம் அவள்! ரெண்டாம் தாரம் என்பதையும், அதிக வயது என்பதையும் பொருட்படுத்தாது வந்தவளுக்கு எத்தனை பாதிப்புகள். ஒரு பெண்ணால் இந்த கொடுமையை எத்தனை நாட்களுக்கு தான் தாங்கிக் கொள்ள முடியும்?

     குழந்தை வேண்டாம் என்பதே கொடுமை. அதிலும் கொடுமை உறவே வைத்துக் கொள்ளாமலிருப்பது. இவளால் எப்படி இத்தனை நாட்கள் தாங்கிக் கொள்ள முடிந்தது... லதி! நீ ஒரு தெய்வம். இதே நிலைமையை வேறு எவரோ ஏன் நானே கூட சந்தித்து இருந்தால் இந்நேரம் கலகம் மூண்டிருக்கும். அவரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பேன்.

     நடந்ததொல்லாம் நடந்து விட்டது. இனி நடப்பதையாவது உடனே சீர் செய்தாக வேண்டும். லதியை அவர் வெறுக்க காரணம் என்ன? அவளிடம் என்ன குறை?

     நீண்ட யோசிப்பில், குறை எதுவுமில்லை. அவர்களுக்கு குறுக்கே நிற்பது நாம்தான் என்பது சாம்பவிக்கு புரிந்தது. நாம் இருப்பதால் தான் அவரால் அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நெருங்க மறுக்கிறார்.

     நம்மை பார்க்கும் போதெல்லாம் அனுதாமும், குறுகுறுப்பும் அவரை வாட்டி படைக்கிறது போலும். அதனால் தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார்.

     அதுதான் அவர்களுடைய விரிசலுக்கு காரணம் என்றால் உடனே ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இந்த பூவை இனியும் வாடவிடக் கூடாது. இந்த தளிர் தளர்ந்து போக அனுமதிக்கக் கூடாது.

     நாம்தான் இப்படியாகி விட்டோம். நமக்கென்று இனி எதுவும் இல்லை. நாம் ஒரு முற்றுப்புள்ளி. அவன் எப்போது அழைக்கிறானோ அப்போது கண்களை மூட வேண்டியது தான்.

     ஆனால் அவள் அப்படியா! வாழ வேண்டியவள். அனுபவிக்க வேண்டியவள். நாம் தான் அவளை இங்கே கொண்டு வைத்தோம். நாமே அவளுக்கு இடைஞ்சலாக இருந்தால் எப்படி? இங்கிருக்கக் கூடாது.

     பாழாய்ப் போன கடவுள் நம்மை அழைத்துக் கொள்ள மாட்டேன்கிறானே. இதை எல்லாம் பார்த்து வெம்ப வேண்டும் என்று தலையெழுத்து.

     தலையெழுத்தில்லை. இது நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டது. இதை நாமாகத்தான் தீர்த்து வைக்க வேண்டும். அவரை விட்டுப் பிரிந்து போக வேண்டும். பிரிந்திருந்தால் அவருக்கு நம்மேலுள்ள குறுகுறுப்பும் அன்பும் குறையலாம். நம்மை அருகில் வைத்துக் கொண்டு அவளுடன் பழகுவதற்கு சங்கோஜம் இருக்கலாம்.

     நாம் தள்ளிப் போய்விட்டால் ஒவ்வொரு காரியத்திற்கும் அவர் அவளைத்தான் நாடியாக வேண்டும். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் வளரும். அன்பு பெருகும். அவளுடைய சேவையையும், தேவையையும் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதன் பின்பு அவள் மேல் வெறுப்பை கொட்ட மாட்டார். கொட்டவும் இயலாது

     லதிகாவைப் பொருத்தவரை அவள் நல்லவள். நம் குழந்தையை நம் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்பதில் சந்தேகமில்ல. ஆகையால் உடனே நாம் இங்கிருந்து அகன்றாக வேண்டும்.

     சாம்பவி ஒரு முடிவுக்கு வந்தாள்.

     இங்கிருந்து போவது எப்படி? எங்கே போவது? கணவன் அதற்கு அனுமதிப்பானா? என்கிற கேள்வி எழுந்தது. அவள் அந்த ஆயாவை விட்டு தரகரை அழைத்து வர சொன்னாள் அவரிடம் தனிமையில் சில காரியங்களை விசாரித்தாள். அவரை விசாரித்து வரச் சொன்னாள்.

     அவரும் அவள் கேட்ட தகவல்களை சேகரித்து வந்து கொடுத்தார். அதன் பிறகு அவளுக்கும் ஒரு தெம்பு வந்தது. இப்போதாவது இதை உணர்ந்தோமே என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.

     ஆனால், விஜியைப் பார்க்கும்போதுதான் அவளுடைய மனது தளர்ந்து போனது. குழந்தையை பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம்? இதென்ன கேள்வி. இருந்துதான் ஆக வேண்டும். அவள் தன் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.

     மறுநாளே சாம்பவி கணவனை அழைத்து, “நான் உங்களுடன் பேச வேண்டும்” என்றாள்.

     “தினம் தினம் பேசுகிறோமே. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” அவன் இயல்பாய் கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தான்.

     “எனக்கு இங்கிருப்பது நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது. என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள்?”

     “சாம்பவி என்ன சொல்கிறாய் நீ?” என்று அவன் அதிர்ந்து போனான்.

     “ஆமாம்! நான் சொல்வது நிஜம்தான். நன்றாக யோசித்து தான் சொல்கிறேன். என்னால் உங்களுக்கு எதுக்கு சிரமம்? டாக்டரே கை கழுவின பின்பு நான் உங்களுக்கெல்லாம் பாரம்!”

     “அப்படின்னு யார் சொன்னா. லதி சொன்னாளா?”

     “ஏன் அவள் மேல் பாய்கிறீர்கள்? இதை யார் சொல்ல வேண்டும்? நான் என்ன குழந்தையா? எனக்கு எதுவுமே தெரியாதா? நானாகவே உணர்கிறேன். எனக்குள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது. தரைப்போர், ஆகாச போரெல்லாம் வெடிக்கிறது. நான் ஒருத்தி இங்கிருப்பதால் வீடு வீடாக இல்லை. நல்லது பொல்லாதது நடப்பதில்லை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. எல்லாம் ஏன்? என்னால்தானே...?

     என்னென்னவோ கற்பனை பண்ணிக் கொண்டு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன். என் நோக்கம் தவறி விட்டது. நானே அதற்கு காரணமாகி விட்டேன். என்னால் இந்த கேள்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை...”

     “சாம்பவி நிறுத்து, நிறுத்து. உனக்கு என்னாச்சு. யார் என்ன குறை வைத்தார்கள்? நாங்கள் வருந்தி வருந்தி கவனித்துக் கொள்கிறோமே”

     “அதுதான் என் வருத்தமே. எனக்கு வேண்டி நீங்கள் ஆடுவதும் ஓடுவதும் என் உணர்ச்சிகளை அதிகமாக்குகின்றன. நாம் இப்படி எல்லாருக்கும் பாரமாய் ஆகிவிட்டோமே என்கிற துக்கம் என்னை அழுத்துகிறது. வர வர போரடிக்கிறது. படுக்கை குத்துகிறது. வெளிய போய் வர மாட்டோமா என்று மனசு ஏங்குகிறது. அதனால்தான் சொல்கிறேன். ப்ளீஸ் என்னை ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள்.”

     “உன்னை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை சாம்பவி. ஏன் இந்த திடீர் முடிவு?”

     “முடிவு வேண்டுமானால் திடீரென எடுக்கலாம். ஆனால் இந்த எண்ணம் எனக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. குழந்தையை பார்க்கும் பொழுதெல்லாம் பாசம் பொங்குகிறது. அதனுடன் ஓடிவிளையாட வேண்டும் போல வெறி எழுகிறது. நம்மால் முடியாது என்கிற பட்சத்தில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கே என் மேல் வெறுப்பு வருகிறது. எனக்கு ஏன் இந்த நிலைமை என்று யோசித்து பேசாமல் செத்துப் போகலாம் என்று கூடத் தோன்றுகிறது.

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles