தவழும் பருவம்  

           

    

     இதை எல்லாம் தவிர்க்கத்தான் என்னை வெளியே சேர்த்துவிடச் சொல்கிறேன். அங்கே என்றால் ஒரு மாறுதலாய் இருக்கலாம். நாலு பேர் வருவதும் போவதுமாய் இருப்பார்கள். மனதுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும். என்ன சொல்கிறீர்கள்?”

     “சாம்பி நீஇல்லாம நான் எப்படி?”

     “நான் இல்லாம எங்கே போயிடறேன்? இதோ டவுனில்தானே இருக்கப் போகிறேன். உங்களுக்கு பார்க்கணுன்னு தோணும்போது வந்து பார்க்கலாமே...

     “முதியோர் காப்பகத்தில் சேர்க்கிற அளவிற்கு உனக்கு என்ன வயசாயிற்று. இது தேவைதானா?”

     ‘முதியோர் காப்பகம்னா முதியோர்தான் இருக்கணும்னு என்ன விதி? இயலாதவங்க யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்குவாங்க. நீங்க என்ன சும்மாவா சேர்த்து விடப்போறீங்க. மாசா மாசம் மெடிசனுக்கும் சாப்பாட்டுக்கும் பணம் கட்டிடத்தானே போறீங்க?”

     “அப்போ அங்கே போறதா நீ முடிவே எடுத்து விட்டாய்”

     “ஆமாம் எப்போ என்னை கொண்டு போய் சேர்க்கப் போறீங்க?” அவள் கேட்டு விட்டு புன்னகைத்தாள்.

     “நீ உன்னளவில் பார்த்துக் கொள்கிறாய். என்னைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாய். உன்னைக் கொண்டு போய் சேர்த்து விட்டால் ஊரில் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்?”

     “யாராவது ஏதாவது பேசிட்டுப் போகட்டுமே என்னை உங்களுக்கு தெரியும். உங்களை எனக்கும் தெரியும். அப்புறம் என்ன?”

     விஷயமறிந்து லதிகா, ஆனாலும் இந்த முடிவு கொடூரம்க்கா” என்று சாடினாள்.

     “எனக்கு நல்லது செய்யுறதா நினைச்சுக்கிட்டு உங்களை நீங்களே அழிச்சுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகிட்டு போகட்டும். கவலையில்லை. நான் அனுபவிச்சுட்டு போறேன். அதுக்காக நீங்க வீட்டை விட்டு போக வேண்டாம். இங்கேயேதான் இருக்கணும்.”

     “லதி, என்னை மன்னிச்சுக்கோ. நான் முடிவெடுத்தாச்சு. இனி அதில் எந்த மாற்றமும் இல்லே. நடக்கிறதெல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சு சந்தோஷப்படு. எனக்கு ஒரே ஒரு ஆதங்கம் லதி...”

     “என்ன சொல்லுங்கக்கா?”

     “விஜியை பார்க்கணும்போல தோணினால் சொல்லி அனுப்புறேன். கொண்டு வந்து காட்டறியாம்மா. என்னை சாகடிக்காம பிடிச்சு வைத்திருப்பதே இந்த பிஞ்சுதான்.”

     சாம்பவி கண்ணீர் சிந்த, லதிகா ஆதரவாய் துடைத்து விட்டாள். “நீங்க கவலையேபட வேண்டாங்க்கா விஜியை தினம் நான் கொண்டு வரேன்”

     அந்த முதியோர் காப்பகம் பார்வதிபுரத்தில் இருந்தது. நகரத்தின் இரைச்சலை விட்டு ஒதுங்கி பத்து பதினைந்து ஏக்கராக்களை வளைத்துப் போட்டு பெரிய காம்பவுண்டிற்குள் பெரிய ராஜ்யமே அங்கு நடந்து கொண்டிருந்தது.

     உள்ளே இருந்த கட்டிடங்களை ஓங்கி உயர்ந்திருந்த தென்னை மரங்களும், மா, பலாக்களும் மறைந்திருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாகவே இருந்தது.

     கட்டிடங்களை எல்லாம் தாண்டி நெல் வயல்களும், வாழை தோப்புகளும் தெரிந்தன. காம்பவுண்டிற்குள் ஆங்காங்கே கை, கால் விளங்காதவர்கள், கண் பார்வை போனவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. எல்லோருமே வசதியானவர்கள் தான். ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் குறை உள்ளவர்கள்.

     அங்கே எல்லா வசதிகளும் இருந்தன. சிகிச்சைக்கான உபகரணங்களும் மருந்துகளும் இருந்தன. டாக்டர்கள் அவ்வப்போது வந்து அவர்களை கவனித்துச் செல்வார்கள்.

     அது தவிர சர்ச், மைதானம், லைப்ரரி, சின்ன சின்ன கைத்தொழில் கூடங்களும் இருந்தன. வசதி இருந்தால்கூட ஏதோ ஒரு விதத்தில் ஊனமுற்றவர்கள் மற்றவர்களுக்கு பாரமாக வேண்டாமே என்பதற்காகவும் ஒரு மாறுதலுக்காகவும் அங்கே சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு ஒத்தாசை செய்வதற்காக கன்னிகாஸ்திரீகள், நர்சுகள், ஆயாக்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

     சாம்பவி அங்கே தான் சேர்ந்திருந்தாள். அவளுக்கு தனி அறை ஒதுக்கி இருந்தனர். அந்த அறையிலேயே எல்லா வசதிகளும் இருந்தன. அவளை கவனித்துக் கொள்வதற்காக வான்மதி எனும் நர்சை நியமித்து இருந்தனர். அவள் அன்பாய் பேசினாள். அவள் பக்கத்து ஆஸ்பிட்டலில் வேலை செய்பவளாம், அங்கே டெபுடேசன் மாதிரி அனுப்பி இருந்தார்கள்.

     “அக்கா...இங்கே சாதாரணமாய் ஆதரவில்லாதவர்கள் தான் வருவார்கள். நீங்கள் தாங்க...? உங்களுக்கு கணவரும் குழந்தையும் இருப்பதாய் கேள்விப்ட்டேனே...”

     ‘எனக்கு எல்லோருமே இருக்காங்கம்மா. ஆனால்...” என்று அவள் தன் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் வான்மதிக்கு கண்கள் சுரந்தன.

     “சாதாரணமா பெண்களுக்கு ஆசை அதிகம்னும், சுயநலவாதிகளா இருப்பாங்கன்னும் சொல்லுவாங்க. என் வீடு, என் குடும்பம், என் கணவன், என் குழந்தைன்னு சின்ன வட்டம் போட்டுக்கிட்டு அதுக்குள்ளேயே சுத்தி சுத்தி வருவாங்க. ஆனா உங்களுக்கு பெரிய மனசுக்கா. கணவனுக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சு, அவங்களோட சந்தோஷத்தை கெடுக்கக் கூடாதுன்னு ஒதுங்கி வந்திருக்கீங்க பாருங்க... நீங்க நிஜமாலுமே  பெரிய தியாகி!”     

     “ஏய் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்லி என்னை குளிப்பாட்டாதே! ஏற்கனவே நான் பேஷண்ட். இன்னும் ஜன்னி கண்டுவிடப் போகுது”

     சாம்பவியின் தேவைகளையெல்லாம் வான்மதியே கவனித்துக் கொண்டாள். அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி மாலை வேளைகளில் வெளியே அழைத்துப் போவாள், சர்ச்சுக்கு கூட்டிப்போய் பிரார்த்திப்பாள். புத்தகங்கள் படித்துக் காட்டுவாள். அவள் ஒரு கவிதை பிரியை.

     சாம்பவிக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த இடத்தின் பசுமை அவளது மனதிலும் பசுமை வளர்த்தது. இங்கே எத்தனையோ பேர் கவனித்துக் கொள்ள ஆதரவில்லாமல் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். நமக்கு எல்லோருமே இருக்கிறார்கள். அன்பை பொழிகிறார்கள். பாழாய் போன பக்கவாதம் மட்டும் வந்திருக்காவிட்டால் அதை நினைக்கும்போது மட்டும் அவளுக்கு அழுகை முட்டும்...

     வேறு எந்த நோய் என்றாலும் பரவாயில்லை. எத்தனை செலவு பண்ணியாவது பார்த்து விடலாம். ஆனால் இதற்கு? உலகம் வளர்ந்து விட்டது என்கிறார்கள். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு என்கிறார்கள். ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு ராக்கெட் விடுகிறார்கள். ஸ்கட் ஏவுகிறார்கள். ஆனால் ஆக்கத்திற்கு ஒன்றையும் காணோம். இந்த நோய் இன்று நேற்றா வருகிறது? தொன்றுதொட்டு வருகிறதே. இதனால் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் பாதிக்கப்படுகிறார்கள். யாராவது இதை முறியடிக்கக் கூடாதா?

     அவளுக்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் கோபம் எழும் வீட்டிலிருந்தவரை அத்தனை கவலை தெரியவில்லை. தன் கவலை கணவனையும் பாதித்துவிடும் என்று அடக்கிக் கொண்டு இருந்தாள். அடக்கிக் கொள்ளவும் முடிந்தது. அங்கே குழந்தை இருந்தது. அதை பார்க்கிற சக்தியாவது இருக்கிறதே என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிந்தது.

     ஆனால் வந்த ஒரு வாரத்திலேயே அவளுக்கு வீட்டு நினைவு எடுத்தது. எத்தனை முயன்றும்கூட கணவனை அவளால் மறக்க முடியவில்லை. என்னவோ பெரிதாய் வசனம் பேசிவிட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த சுகம் மறக்க வில்லையே. கை, கால்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடல் பாதிக்கப்படவில்லை உணர்ச்சிகள் சாகவில்லை. பெண் என்கிற புனிதம் அவளை ஆட்டி படைத்தது. உணர்வுகள் முறுக்கேறி முள்ளாய் குத்தியது.

     அவளுக்கு வடிகால் தேவைப்பட்டது. மனதை திசை திருப்பும் ஆயுதம் தேவைப்பட்டது. அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் சாம்பவி வான்மதியை அழைத்துக் கொள்வாள்.

     வான்மதி, கவிமுகில், கலை, தளிர், பூஞ்சோலை, சரண்யா என்று இலக்கிய பத்திரிகைகளை வாரிக் கொண்டு வருவாள். அவற்றில் உள்ள கவிதைகளை படித்து காட்டுவாள். விவாதிப்பாள், இப்போதுகூட வான்மதி படிக்க, சாம்பவி, “நிறுத்து நிறுத்து உனக்கு காதல் அனுபவம் ஜாஸ்தி போலிருக்கு உன்னிடம் காதல் கவிதைகளா கேட்டேன்?”

     “ஐயோ அக்கா. இது என்னோட கவிதையில்லை. பி.டி.சி.சூரியநாராயணனோடது. காதல்ங்கிறது அத்தனை இளப்பமா என்ன? ஊரில் நிறைய கவிஞர்கள் காதலை வச்சுதான் கவிதை கோட்டையே கட்டுகிறார்கள். கஸ்தூரி ரங்கன்னு ஒருத்தர் ‘நிலவை கண்டால் அல்லிகள் மலருமாம் உன்னை கண்டதும் என் முகம் மலர்ந்ததன் காரணம் இப்போதல்லவா புரிகிறது’ங்கிறார். புதுவை சேகரன்னு ஒருத்தர், ‘ஒருவரைப் போல் உலகில் ஏழு பேர். ஆனால் உன்னைப்போல் ஒருத்தி மட்டுமே அது பவுர்ணமி நிலவு‘ங்கிறார்”

     “அம்மா வான்மதி, போதும் போதும். உன் பெயரிலேயே நிலவு. என்னுடைய நினைவுகளையும், காதலையும், கனவுகளையும் மறக்கத்தான் நான் உன்னை அழைத்தேன். நீ என்னடாவென்றால் காதல் கவிதைகளாக சொல்லி என்னை கிளறி விடுகிறாய்”

     சாம்பவியின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து அவளும் கலங்கிப் போனாள்.

     “சாரிக்கா. உலகத்துல வயசு வித்தியாசமில்லாம சாதி மத வித்தியாசமில்லாம எல்லோருக்கும் ஒன்று போல இன்பம் தருவது காதல் சமாச்சாரம்தான்னுதான் நான் படிச்சேன். கவிதைகள் சொல்லி உங்களை சந்தோஷபடுத்தலாம்னு நினைச்சேன் ஆனா அது உங்களை ரொம்பவே பாதிச்சிருச்சுன்னு தோணுது. சாரி. வெரி சாரிக்கா”

     அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது லதிகா விஜியை அழைத்துக் கொண்டு வந்தாள். குழந்தை ஜீன்சும், பனியனும் போட்டு அவளை நோக்கி ஒடி வந்தது. நான்கு பற்களில் சிரித்தது. “அம்மா” என்று அவள் மேல் தொற்றிக் கொண்டு மொச்மொச்சென்று முத்தம் பதிக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். சாம்பவி அவளை தன்னோடு சேர்த்து கட்டிக் கொள்ள, அது விலகி ஓடிற்று.

     அவளது அன்பையும், உணர்ச்சிகளையும் வான்மதியால் புரிந்து கொள்ள முடிந்தது. “நீங்க பேசிகிட்டிருங்க” என்று அவள் கிளம்பினாள்.

     லதிகா குழந்தையை கீழே இறக்கிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த விளையாட்டு சாமான்களை கீழே கொட்டி, “விளையாடு கண்ணு. நானும், அம்மாவும் பேசிக்கிட்டிருக்கோம்” என்க, குழந்தை “சரிம்மா” என்று தரையில் அமர்ந்தது. சாமான்களையும். பொம்மைகளையும் அடுக்க ஆரம்பித்தது.

     “இங்கே எல்லாம் சவுகரியமாய் இருக்காக்கா? நீங்க வந்ததும் வீடே வெறிச்சோன்னு ஆயிப் போச்சு”

     “அவர் எப்படி நடந்துக்கிறார்”

     “முதல்ல எம்மேல கோபமாயிருந்தார். நான்தான் உங்களை விரட்டிட்டேன்னு சொல்லி எங்கூட முகம் கொடுத்தே பேசலை இப்போ பரவாயில்லை. அவ்வளவா கோபப்படறதில்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் தெரியுது”

     “எப்படியோம்மா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருந்தா சரி. அவர் நல்லவர் லதி. ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டாலும் நீதான் பொறுத்துக்கணும். அவரை அனுசரிச்சுப் போகணும்”

      “சரிக்கா, உங்களோட வனவாசம் இன்னும் எத்தனை நாளைக்கு?”

     “தெரியல” என்று வெளியே சொன்னாலும், சாகும் வரை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அப்படி ஒரு நினைவு வந்தவுடனேயே நெஞ்சு துடித்தது. துக்கம் கரை புரண்டது,

     அதையெல்லாம் வெளியே கொட்டி விடாமல் “சரிம்மா நீ கிளம்பு நேரமாகிறது” என்றாள்.

     “இந்தாங்கக்கா சாப்பாடு” என்று லதிகா கூடையிலிருந்து கேரியரை வெளியே எடுத்தாள்.

      “உனக்கெதுக்கும்மா சிரமம். இங்கேதான் நல்ல சாப்பாடாய் போடுகிறார்களே?”

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles