தவழும் பருவம்  

           

          

     “எனக்கென்ன சிரமம்ங்க்கா? என்னையும், அவரையும் ஆளாக்கிவிட்டுட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிற உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரதை சிரமமா நினைச்சா அது பாவம். ஆ காட்டுங்க,”

     “இருக்கட்டும் லதி, அப்புறமா சாப்பிடுகிறேன். வான்மதி இருக்காளே”

“என் கையால உங்களுக்கு ஊட்டி விடணும்னு ஆசைக்கா, ஆ காட்டுங்க!”

     ஒருத்தி ஆசையுடன் ஊட்டிவிட இன்னொருத்தி ஆனந்தத்தடன் சாப்பிடுகிற காட்சியை தூரத்திலிருந்து கவனித்த வான்மதிக்கு நெஞ்சம் கலங்கிற்று. பெண்கள் என்றால் போட்டி இருக்கும். இவை எதுவுமே இல்லாமல் இவர்களால் எப்படி இத்தனை பாசமாய் பழகிக் கொள்ள முடிகிறது என்று நினைத்து அவள் வியந்தாள்.

     ஒருவேளை அக்காள்தான் படுத்துவிட்டாளே. இனி எங்கே தனக்கு போட்டியாக வரப் போகிறாள் என்கிற தெம்பா? இல்லை அனுதாபமா? அக்காளுக்கு ஒரு வேளை குணம் ஆகிவிட்டதென்றால் இதே லதிகா இத்தனை பாசத்தை கொட்டுவாளா? அதெல்லாம் நமக்கு ஏன்? என்று அவள் அவர்களிடம் வந்தாள்.

     “அடடா எனக்கு வேலை இல்லாமல் பண்ணி வீட்டீர்கள் போலிருக்கிறதே லதிகா. எனக்கும் உங்க வீட்டு சாப்பாடு கிடைக்குமா?” என்று அவள் சிரித்தாள்.

     “ஓ. உங்களுக்கும் சேர்த்துத்தான் கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுங்க,”

     “நான் சும்மாதான் கேட்டேன். விட்டால் ஊட்டியே விடுவீர்கள் போலிருக்கிறதே.”

     லதிகா, “அப்போ நான் வரேங்க்கா” என்று கிளம்பினாள். “அடுத்த முறை வரும்போது உங்களுக்கு என்ன செய்து கொண்டு வர வேண்டும். உங்களுக்கு பிடித்ததைச் சொல்லுங்கள்.”

     “எனக்கு பிடித்ததெல்லாம் இருக்கட்டும். முதலில் அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள். அவருக்கு பிடித்ததை செய்து போட்டு உன் கைக்குள் வைத்துக் கொள்.”

     நாட்கள் ஓடின மாதங்களாயின. மாதங்களும் ஓட ஆரம்பித்தன.

     விஜயகுமார் அவளை பார்க்க வந்திருந்தபோது, “சாம்பவி! இதுல ஒரு கையெழுத்து போடு” என்று ஒரு பாரத்தை நீட்டினான்.

      “என்னங்க இது?”

     “நம்மோட ரப்பர் இண்டஸ்ட்ரிக்கு ஏகப்பட்ட டிமாண்ட். பழசை மட்டும் வச்சுகிட்டு சப்ளை பண்ண முடியலே. செங்கோட்டைல ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இடம் வாங்கி போட்டிருக்கேன், லோன் அப்ளை பண்ணதான்,”

     “அதுக்கு என் கையெழுத்து எதுக்கு?”

     “கம்பெனி உன் பெயரிலதானே. நீதானே அதன் முதலாளி,”

      “எதுக்குங்க என் பெயர்? பேசாம உங்க பெயரிலேயே ஆரம்பிச்சிருக்கலாமே?”

      “ஆரம்பிச்சிருக்கலாம். அப்படி செய்யாததுக்கு ரெண்டு காரணங்கள். எங்களோட மூலதனமே நீதான்கிறது ஒண்ணு. அடுத்தது இன்கம்டாக்ஸ் பிரச்சினை”

     “டாக்ஸ் பிரச்சினை வரும்னா லதிகா பெயர்ல ஆரம்பிச்சிருக்கலாமே”

     “நான் கேட்டேன். அவளும் சேர்ந்துதான் உன் பெயரை சஜஸ்ட் பண்ணினா”

     அவளும் சேர்ந்துதான் என்று அவன் சொன்னது அவளுக்கு சந்தோஷம் தந்தது. அப்போ இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். நம்மோட லட்சியம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

     “லதிகாவும் குழந்தையும் எப்படியிருக்காங்க,”

     “அவங்களுக்கென்ன குறைச்சல்? லதிகாவுக்கு அக்கா அக்கான்னு எப்போதும் உன் பேச்சுதான். விஜியை அவள் வைத்த இடத்தில் வைப்பதில்லை. தானே பெத்திருந்தாக் கூட அவ்ளோ அன்பு செலுத்துவாளோ என்னவோ தெரியாது. அப்படியே அன்பால குளிப்பாட்றா.”

         அதை கேட்க கேட்க சாம்பவிக்கு சந்தோஷமாயிருந்தது.

      “அப்புறம் உனக்கு தெரியுமா? விஜியை கிண்டர்கார்டன்ல சேர்த்து விடப் போகிறேன்.”

     “இவ்ளோ சீக்கிரமாவா”

     “அய்யோ அவளை வைச்சுகிட்டு சமாளிக்க முடியலை. விட்டால் ஊரையே விலைக்கு வாங்கற மாதிரி பேசறா. அப்போ நான் வரட்டுமா. லதிகா சாப்பாட்டை எடுத்து வச்சுகிட்டு வெயிட் பண்ணிக்கிட்டிருப்பா. நான் சாப்பிடலேன்னா அவளும் சாப்பிடமாட்டா. எல்லாம் உன்னை போலவேதான். உன்னை மாதிரியே அவளுக்கும் எல்லாத்துலயும் பிடிவாதம். நீ சாப்பிடலே.”

     “நீங்க கிளம்புங்க. வான்மதி வந்ததும் நான் சாப்பிட்டுக்கிறேன்.”

     அவன் போனதும் அவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். நாம் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடக்கின்றன. சந்தோஷம். இவரும் மூச்சுக்கு மூச்சு லதிகா லதிகா என்கிறார். இவர் சாப்பிடவில்லையென்றால் அவளும் சாப்பிட மாட்டாளாம். என்ன கனிவு!

     போகிற போக்கை பார்த்தால் இவர் நம்மையே மறந்து விடுவார் போலிருக்கறதே. குமார் என்னை நீங்கள் மறந்து விடுவீர்களா?

     மறந்தால் தான் என்னவாம்? மடிந்து போகிற கட்டைதானே நான்? நம்மோட வாழ்க்கைதான் முற்றுப் பெற்று விட்டதே! இந்த நரக வேதனை இன்னும் எத்தனை நாட்களுக்கோ. மனிதனுக்கு நோய் வரவேகூடாது. அப்படியே வந்தாலும் ஒன்று சரியாகிவட வேண்டும். அல்லது அப்போதே அன்றைக்கே செத்துப் போகவேண்டும். இது மாதிரி இழுத்துக் கொண்டேயிருக்கக் கூடாது.

     அடுத்த வாரத்தில் லதிகா பால்பாயாசம் செய்து கொண்டு வந்தாள். வந்தவுடனேயே “என்ன விசேஷம்னு சொல்லுங்கக்கா பார்க்கலாம்” என்று புதிர் போட்டாள்.

     “என்ன விசேஷம் நீ முழுகாமல் இருக்கியா”

     “சீ. நம்ம விஜிக்கு கிண்டர் கார்டன்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு”

     “அதுக்காகவா இத்தனை ஆர்ப்பரிப்பு”

     “அட நீங்க வேற. உங்களுக்கு உலக நிலவரமே தெரியலையே. இந்த காலத்துல கிண்டர் கார்டன்ல எல்.கே.ஜியும் யூ.கே.ஜியும் கிடைக்கிறதுன்னா எத்தனை கஷ்டம் தெரியுமா? மந்திரிசபை இருந்தா மந்திரியோட சிபாரிசு இல்லேன்னா கவர்னரோட சிபாரிசும் பண்ணனுமாக்கும். பால் பாயசத்துக்கு இன்னொரு காரணம்கூட இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்”

     சாம்பவி யோசித்து விட்டு “எனக்கு தெரியலேயேம்மா சஸ்பென்ஸ் வைக்காம நீயே சொல்லிரேன்”

     “இன்னிக்கு என்ன நாள்”

     “ஏன்? வெள்ளிக்கிழமை”

     “சே...நான் அதை கேட்கலை. நல்லா யோசிச்சுப் பாருங்க. நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி விடுங்கசுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் மேதகு விஜயகுமார் அவர்களுக்கும் மேதகு சாம்பவி அக்காவிற்கும் இன்றுதானே டும்டும் நடந்தது. மறந்துட்டீங்களா. இன்று உங்களுடைய வெட்டிங் டே”

     இன்று நமக்கு திருமணநாளா? சாம்பவிக்கே அப்போது தான் ஞாபகம் வந்தது. யார் அதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஞாபகம் வைத்திருந்து தான் என்ன பண்ணப் போகிறோம். கொண்டாட போகிறோமா. கோவிலுக்குப் போகப் போகிறோமா இல்லை அவருடன் கொஞ்சி குலாவத்தான் போகிறோமா?      சாதாரணமாய் வெட்டிங் டே என்றாலோ, பிறந்தநாள் என்றாலோ பழையதை நினைத்து அசை போடுவோம். நினைவுகளை மலர வைப்பதில் ஒரு சுகம் இருக்கும். ஆனந்தம் பிறக்கும். ஆனால் அவளுக்கோ அம்பாக குத்தியது. பழைய சம்பவங்கள் அவளுடைய துன்பத்தை அதிகப்படத்தவே செய்தன.

     வேண்டாம், பழசெல்லாம் வேண்டாம் என்று இருக்கும் போது இவள் வந்து ஞாபகப்படுத்துகிறாள்.

     “என்னக்கா அப்படியே அசந்து போய் உட்கார்ந்துட்டீங்க. கல்யாணமும் முதலிரவும் ஞாபகம் வந்திருச்சா” என்று கேட்டு லதிகா தன் நாக்கை கடித்துக் கொண்டாள். “சாப்பிடுங்கக்கா ப்ளீஸ்”

     “அவர் என்ன பண்றார்”

     “புது கம்பெனி விஷயமா யாரையோ பார்க்கப் போயிருக்கார்க்கா. முடிஞ்சா வந்து உங்களை பார்க்கறேன்னார்”

     முடிந்தால் வருகிறாரா. கல்யாணமான அன்று என்ன பேசிக் கொண்டோம். நம்முடைய உயிர் பிரிகிறவரை இந்த நாளில் நாம் பிரியக்கூடாது, என்ன வந்தாலும் சரி. எங்கே இருந்தாலும் சரி ஒன்று சேர்ந்துவிட வேண்டும்; ஒன்று சேர்ந்து குளிக்க வேண்டும், ஒன்றாய் கோவிலுக்குப் போக வேண்டும். ஒன்றாய் சாப்பிட்டு ஒன்றாய் தூங்கி...

     அந்த வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போயிற்றா? சேச்சே அவர் அப்படிப்பட்டவர் இல்லை நம்மை எந்த நிலையிலும் மறக்க மாட்டார். அவருக்கு அவருடைய பிரச்சினை. பிசினஸ் நெருக்கடி. இதற்கிடையில் இதை யெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா? சொல்லப் போனால் நாமேகூட மறந்து விட்டோம். அப்புறம் அவரை குற்றம் சொல்லி என்ன பயன்?

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles