தவழும் பருவம்  

           

          

     எதுக்காக குற்றம் சொல்ல வேண்டும்? போன வருடம் அவர் திருமண நாள் கொண்டாட முனைந்தபோதே வேண்டாம் என்று விட்டோமே. பொதுவாய் பெண்களுக்கு தான் இந்த மாதிரி சென்டிமெண்ட்ஸ்களில் கவனம் அதிகம். கல்யாண நாள், பிறந்தநாள், வேலைக்கு சேர்ந்த நாள், கர்ப்பமான நாள் என்று ஒவ்வொன்றையும் இழுத்து போட்டுக் கொண்டு அசைபோடுவோம். நாமே ஒதுக்கி விட்ட நிலையில் இனி அதை நினைத்து எதற்காக கவலைப் படவேண்டும்?

     “அவர் வரலேன்னு உங்களுக்கு வருத்தமாக்கா. நான் வேணுமானால் அவரை போன் போட்டு வரச் சொல்லட்டா”

     “வேணாம் லதிகா குழந்தை எப்படியிருக்கா?”

     “சமத்தா ஸ்கூல் போயிட்டு வர்றா. ஏபிசிடியெல்லாம் சொல்றா. ஆக் ஷனோட ரைம்ஸ் ஒப்பிக்கிறா”

     அப்புறம் ஒரு சந்திப்பில் லதிகா, “அக்கா கண்ணை மூடுங்களேன்” என்றாள்.

     ஏம்மா நான் கண்ணை மூடறதுல உனக்கு என்ன அவ்ளோ சந்தோஷம் என்று மனதில் நினைத்துக் கொண்டு “என்ன விஷயம்” என்றாள்.

     “மூடுங்க சொல்றேன். அப்படியே வாயை திறங்க. திறந்துட்டீங்களா?” என்று லதிகா சாம்பவியின் வாயில் சாக்லெட்டை திணித்தாள்.

     “என்னடியம்மா விசேஷம்?”

     “விஜிக்கு விளையாட துணை இல்லையாம் நச்சரிச்சுக்கிட்டேயிருந்தா அதனால...”

     “அதனால...”

     “ஏன் குறை வைக்கணும்னு அவர்கிட்டே கேட்டேன் சரி பெத்து கொடுத்திருன்னுட்டார். நான் இப்போ மூணு மாசம்” என்று குதித்தாள்.

     “அடி கள்ளி. இத்தனை நாளா எங்கிட்டே சொல்லவே இல்லையே நீ”

‘உங்களுக்கு சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னுதான் சொல்லலை”

     “சந்தோஷம் லதி. இனிமே நீ ஜாக்கிரதையா நடந்துக்கணும். கொஞ்ச முன்னாடி குதிச்சது போல குதிக்கக் கூடாது. கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. வேலைக்காரி வச்சுக்கோ. நல்லா சாப்பிடு. நிறைய ரெஸ்ட் எடு. என்ன தெரிஞ்சுதா?”

     “சரிக்கா” என்று அவள் கண்கலங்கினாள்.

     “ஏய் என்னாச்சு உனக்கு? ‘உண்டாகி‘யிருந்தா சந்தோஷப்படறதை விட்டுட்டு கலங்கிப் போகிறாயே’

     “அக்கா எங்களுக்கெல்லாம் சந்தோஷம் தந்தீங்க எங்களோட நன்மைக்காக ஒதுங்கி வந்தீங்க. இன்னும் எத்தனை நாளைக்குக்கா உங்களுக்கு இந்த அவஸ்தை? இதை குணப்படுத்தவே முடியாதா? நீங்க குணமாகி வீட்டுக்கு வரணும்னு என் மனசு பிரார்த்திச்சுக்கிட்டே இருக்குக்கா. அவர் எங்கிட்ட ரொம்ப அன்பா இருக்கார்க்கா. நான் கேட்காமலேயே எல்லாத்தையும் வாங்கிதரார். அவர் பழைய மாதிரி கோபிக்கறதே இல்லை. பிசினஸ் பத்தி எங்கிட்டே கலந்துக்குவார். யோசனை கேட்பார். நானும் எனக்கு தெரிஞ்சதை சொல்லுவேன். கேட்டுக்குவார். நல்ல யோசனையா பட்டுதுன்னா ஏத்துக்குவார்.

     மொத்தத்துல அங்கே பெரிய மாறுதலே நடந்திருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நீங்கதாங்க்கா, உங்களோட பெருந்தன்மை. எங்கே என் வாழ்க்கை ஸ்தம்பிச்சு போகுமோன்னு பயந்துக்கிட்டேயிருந்தேன். உங்களோட சமயோசித முடிவால் எல்லாமே சரியாகிடுச்சு.

     அவர் எம்மேல கவனம் செலுத்த மாட்டேங்கறார் கோபப் படறார்ன்னுதானே நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தீங்க. இப்போதான் அவர் மாறிட்டாரே. என்னை நன்றாய கவனிச்சுக்கிறாரே. உங்களோட நோக்கம் நிறைவேறிடுச்சில்லே. அப்புறமும் ஏனிந்த வனவாசம். இனிமேலாவது நீங்க வீட்டுக்கு திரும்பக் கூடாதாக்கா? ஏன்க்கா பேச மாட்டேன்கிறீங்க. வீட்டுக்கு வந்தால் என்னவாம். இங்கே அந்நியன்ங்க கவனிச்சுக்கிற அளவுக்கு நாங்க உங்களை கவனிச்சுக்க மாட்டோமா?”

     “லதி, கவனிச்சுக்க மாட்டீங்கன்னு இல்லேம்மா”

     “அப்புறம்”

     “இப்போ அவர் உங்கிட்டே அன்பா நடந்துக்கலாம். சரி, நான் வந்திட்டா அப்புறம் பழையபடி மாறிட்டார்ன்னா”

     “அதெல்லாம் மாறமாட்டார்க்கா. நீங்க தைரியமா வரலாம். அப்படியே அவர் மாறினாலும் மாறிட்டுப் போகட்டும். அதனால என்ன நஷ்டம்? எனக்குத்தானே பாதிப்பு. என் சந்தோஷம்தானே போகும். பரவாயில்லைக்கா. எங்களுக்க வேண்டி நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கும்போது உங்களுக்காக நான் இதை பொறுத்துக்கக் கூடாதா? ப்ளீஸ்க்கா நாங்களெல்லாம் இருக்கும் போது அனாதை மாதிரி இங்கே வந்து இருக்கறது எங்களை வாட்டுது நான் இத்தனை சொல்றேனே. உங்களுக்கு மனமே இளகலையா?”

     “இளகாம இல்லை லதி. எனக்கே இப்ப என்மேல நம்பிக்கையில்லை. வெறுப்பாய் இருக்கு. நீ சந்தோஷமாய் இருக்கறதை பார்த்தால் எங்கே பொறாமைப்பட்டு விடுவேன்னு பயப்படறேன். அதுவுமில்லாம எனக்கும் அவருடன் குடும்பம் நடத்தணும்னு ஆசை வந்திருமோன்னும் இருக்கு”

     “அதுல என்ன தப்பு”

     “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஆசைக்கும் ஒரு தகுதி வேண்டாமா?”

     “பரவாயில்லை வாங்கக்கா. நீங்க வீட்டுக்கு வந்தால் போதும். மத்தபடி எனக்கு என்ன இழப்பு வந்தாலும் கவலையில்லை.”

     “இல்லைம்மா என்னை வற்புறுத்தாதே. நேரமாகிறது கிளம்பு. அடுத்த முறை வரும்போது விஜியையும் அழைத்துவா”

     “சரிக்கா. அப்புறம் ஒரு விஷயம். நாளைக்கு குமார கோவிலில் ஒரு பூஜைக்கு சொல்லியிருக்கிறோம். அதுக்கு போய்வரப் போகிறோம். பூஜை எதுக்கு தெரியுமா? உங்களுக்கு சீக்கிரமே குணமாகணும்னுதான்.

     ”லதிகா போனதும் சாம்பவிக்கு தன் மேலேயே வெறுப்பாய் வந்தது. அவளை பார்த்தால் பொறாமையாயிருக்கும் என்று சொன்னோமே அது நிஜமா? அப்படி நாம் சொல்லலாமா என்று தன்னையே கடிந்து கொண்டாள்

     அந்த மாதிரி நினைவு நமக்கு எப்படி வரலாம்? நாமே எல்லாவற்றையும் செய்து வைத்து விட்டு இப்போது பொறாமைப்படுவதென்றால் அது எத்தனை பெரிய அசிங்கம்!

     இல்லை, பொறாமையில்லை. பொறாமைப்படக் கூடாது. நான் பட மாட்டேன்.

     என்னுடைய பேச்சும் மூச்சும் இருக்கும்வரை அவர்களுடைய நன்மையையே நினைப்பேன். அவர்களுடைய சந்தோஷம்தான் என் சந்தோஷம்.

     கணவன் தவிக்கக் கூடாது. அவனது வாழ்க்கை வீணாகக் கூடாது என்றுதானே அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம். அவனா கல்யாணத்திற்கு அலைந்தான். வேண்டாம் வேண்டாம் என்றவனை கட்டாயப் படுத்தி செய்து வைத்து, அவன் அவளை வெறுக்கிறான்-நம்மை அதிகமாய் துதிக்கிறான் என்று வெளியே வந்துவிட்டு இப்போது பொறாமைப்படுவதென்றால் அதற்கு என்ன அர்த்தம்?

     நம்முடிடைய நோக்கமே இங்கே அடிபடுகிறதே? வான்மதி என்னவோ நம்மை தியாகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். இதுவா தியாகம்? அந்த வார்த்தைக்கே களங்க மல்லவா பொறாமை?

     மாதங்கள் ஆக ஆக, லதிகாவிற்கு வயிறு பெருத்தது. மூச்சு வாங்கிற்று. அவள் ஓடியாடி வேலை செய்வதும் குறைந்தது. முன்பு மாதிரி அடிக்கடி சாம்பவியை பார்க்க போக முடியாமல் தவித்தாள்.

     விஜயகுமாரும், சதா பிசினஸ் பிசினஸ் என்று அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் நேரம் ஒழியவில்லை. தவிர அவளை போய் பார்க்கும் தெம்பையும் அவன் இழந்து வந்தான். மனதின் குறுகுறுப்பு அவனை தடுத்துக் கொண்டேயிருந்தது.

     அவள் ஆடிப்போயிருக்கும்போது கொஞ்சங்கூட கூச்சமேயில்லாமல், விவஸ்தையே இல்லாமல் லதிகாவுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறோம். இது எந்தவிதத்தில் நியாயம் என்று நினைத்தான்.

     ஒருவேளை அவளுக்கு பதில் நமக்கு வாதம் வந்து படுக்கையில் கிடந்தால், சாம்பவியின் வாழ்வு பாழாகிறதே அவளது இளமை வீணாகிறதே என்று அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்து குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதித்திருப்போமா?

     எல்லாவற்றிற்கும் பெருந்தன்மை வேண்டும். பெரிய மனசு வேண்டும். நாம் நம்முடைய ஆசாபாசத்திற்கு அடிமையாகி விட்டோம். அவள் எப்படி போனால் என்ன என்று ஒதுக்கி விட்டோம். இந்த நிலையில் அவளுடைய முகத்தை எப்படி ஏறிடமுடியும்? அவனுக்கு குறுகுறுத்தது.

     அதனாலேயே அவளை பார்க்கப் போவதை தவிர்த்து வந்தான். அவ்வப்போது போன் பண்ணி அவளுடன் பேசுவான். எப்படியிருக்கிறாய் சாம்பவி எனக் கேட்டு விஜியின் லீலைகளை சொல்லி, பிசினசின் விரிவாக்கத்தைச் சொல்லி வைத்து விடுவான்.

     போன் ஒரு தற்காப்பு ஆயுதம். காரியத்திற்கு காரியமும் நடக்கும், அடுத்தவர்களுடன் பேசும்போது அவர்களின் அவஸ்தை நம்மை தாக்காது. அவர்கள் கண்கள் நம்மை கவராது. பிடித்து இருக்காது. சாட்டையால் அடிக்காது. ரொம்ப பாதுகாப்பான நழுவலுக்கு போன் ஒரு உபயோகமான சாதனம்.

     லதிகாகூட அவனை, “அக்காவை போய் பாருங்க” என்று விரட்டுவாள். “என்னாலதான் போக முடியலையே நீங்க போகக் கூடாதா”

“போகக் கூடாதுன்னு இல்லைடி, நேரம் கிடைக்க வேணாமா?”

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles