தவழும் பருவம்  

           

          

          “இங்கே இருக்கிற பார்வதிபுரத்திற்கு எவ்ளோ நேரம் வேணும். நேரமில்லைன்னு சொல்லி ஊரை ஏமாத்தாதீங்க அது உங்களுக்கே அடுக்காது.”

      “ஆமாண்டி, நான் ஊரை ஏமாத்தறேன். ஊரை ஏமாத்தித்தான் இந்த சொத்துக்களை சம்பாதிச்சேன் உன்னை கட்டிக் கொண்டேன். என்னைவிட உனக்குத்தான் அவள் மேல் அக்கறையா. நான் அவளை எவ்ளோ நேசிச்கிறேன்னு தெரியுமா” என்று உணர்ச்சிகளை கொட்டுவான்.

     “சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே பெரிசா எடுத்துட்டு பேசறீங்களே. அக்கா மேல உங்களுக்கிருக்கிற பிரியம் எனக்கு தெரியாதா என்ன?”

     “தெரிஞ்சுதான் இப்படி பேசறியாக்கும். காலைலகூட அவகிட்டே போன்ல பேசினேன் தெரியுமா உனக்கு?”

     “ஏங்க போன்ல பேசினா போதுமா? அக்கா தப்பா எடுத்துக்க மாட்டாங்க? உங்களுக்கு நேரம் கிடைச்சா நேரில் போய்வாங்க இல்லாட்டி விட்டிருங்க. போனிலெல்லாம் பேச வேண்டாம்?”

     “ஏண்டி”

     “உங்களுக்கு வேணுமானா அவங்க தேவைப்படாம இருக்கலாம். உங்களுக்கு நான் இருக்கலாம். அவங்களுக்கு யார் இருக்கா? நீங்க மட்டும்தானே. அப்படியிருக்கும்போது உங்களை பார்ககணும், உங்ககிட்டே எண்ணங்களை பகிர்ந்துக்கணும்னு அவங்களுக்கும் தோணுமில்லை. ஏனிந்த ஓரவஞ்சனை”

     அவள் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்கும் புரிந்தது. மறு நாளே சாம்பவியை பார்க்கப் போனான்.

     அவனை கண்டதும் அவள் கண் சொரிந்து உணர்ச்சி வசப்பட்டாள். புசுபுசுவென்று பெருமூச்சு விட்டாள். “லதிகா எப்படிங்க இருக்கா. ஒழுங்கா சாப்பிடறாளா. செக்கப்புக்கு போய் வராளா?”

    “போய் வரா சாம்பி” 

    ‘ஏன் உங்க உடம்பு இளைச்சிருக்கு. சரியா சாப்பிடற தில்லையா?”

    “அலைச்சல். வேறொண்ணுமில்லை”

    “அதுசரி, அவளுக்கும் இப்போ ஏழுமாசமில்லை?”

    “அப்படின்னுதான் நினைக்கிறேன்”

    “நினைக்கிறீங்களா. இதுதான் நீங்க அவளை பார்த்துக் கொள்கிற லட்சணமா? இது ஏழாவது மாசம்தான். சீமந்தம் நடத்த வேணாம்?”

     “அவங்க அண்ணனும் அண்ணியும் நடத்தறோம்னாங்க. நான்தான் வேணாம்னுட்டேன்”

     “ஏன்?”

     “எனக்கு பிடிக்கலே” 

     “அதுதான் ஏன்னேன்?”

     “நீ இல்லாம சீமந்தம் எப்படி? நீ வீட்டுக்கு வருகிறாயா ஜாம்ஜாம்னு நடத்தச் சொல்றேன்”

      “சரிங்க நான் வந்தாதான் நடக்கும்னா வரேன். ஆனா ஒரு கண்டிஷன்”

     “என்ன?”

     “அது முடிஞ்சதும் திரும்ப வந்திருவேன். என்னை அங்கேயே இருக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது”

      இதற்கு அவன் பதில் சொல்லவில்லை.

     “பிரசவத்துக்கு அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பப் போறீங்களா?”

     அதுதானே முறை. அவங்கண்ணன் அழைச்சுட்டு போறேன்னு தான் சொன்னார்”

      “வேணாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம்? நம்ம வீட்டிலேயே நடக்கட்டும். அவங்க அண்ணனும் அண்ணியும் வேணுமானா இங்கே வந்து தங்கட்டும். லதிகா போய் விட்டால் விஜி ஏமாந்து போவா. உங்களுக்கும் கஷ்டமாயிடும். கையுடைஞ்ச மாதிரி இருக்கும்.”

     “சாம்பி! எப்போதும் எங்களை பத்தியே கவலைப் படுகிறாயே. உன்னை பத்தியே நினைக்க மாட்டாயா. உனக்கு கவலையே கிடையாதா?”

     “இனி கவலைப்பட்டு எதுக்காகுது. போங்க கண்ணா. போய் வளைகாப்பிற்கு விமர்சையாய் ஏற்பாடு பண்ணுங்க. அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகளோட கைகள் எல்லாம் அன்னிக்கு கலகலக்கணும். என்ன தெரிஞ்சுதா? இன்னும் ஏன் கவலை. அதான் வரேன்கிறேனில்லை. சந்தோஷமா கிளம்புங்க”

     லதிகாவின் சீமந்தம் சிறப்பாய் நடந்து முடிந்திருந்தது. சாம்பவியையும் அங்கு அழைத்துப் போயிருந்தார்கள். சுற்றமும் நட்பும் வீட்டை நிறைத்து கலகலவென்றிருக்க, அவளுக்கு பெருமிதமாக இருந்தது.

     சாம்பவி விசேஷம் முடிந்த கையோடு தன்னை விடுதியில் கொண்டு விடும்படி கணவனை கேட்டுக் கொண்டாள். அவனும் லதிகாவும் எத்தனையோ வற்புறுத்தியும் கூட அவள் கேட்கவில்லை. போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்து விட்டாள்.

     அத்தனை பேருக்கு மத்தியில் தான் மட்டும் மரக்கட்டையாய் கிடப்பது அவளுக்கு சங்கடம் தந்தது. ஆனந்தமாய் இருப்பவர்களுக்கு தான் ஒரு முட்டுக்கட்டை என்று நினைத்தாள் புழு போல நெளிந்தாள்.

     குழந்தைகள் வளையல் குலுக்கி நடக்க அவளுக்கு ஏக்கம் பிறந்தது. ஸ்கூல் பருவம் ஞாபகத்தில் பிசிறியது. அப்போதெல்லாம் அவள் சரியான வளையல் பைத்தியம் வீட்டில் விருந்தென்று யார் வந்தாலும் காசு வசூலித்து வளையல் வாங்கி விடுவாள்.

     ஊரில் யார் வீட்டில் சீமந்தம் நடந்தாலும் ஒடிப் போய் பிரசண்ட் சொல்லி விடுவாள். ஓசியில் சாப்பிட்டு, கைகளை நிரப்பிக் கொண்டு குலுங்க குலுங்க ஓடி வருவாள். அழகு பார்த்து பூரித்துப் போவாள்.

     “ஏண்டி இப்படி வளையல் வளையல்ன்னு அலையறே...” என்று அம்மா திட்டுவாள்.

     “அடுத்தவங்க வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது?” என்று கண்டிப்பாள்.

     “அப்போ நீயே வாங்கித் தா!”

     “நேத்துதானேடி பால் நோட்டுலே இருந்த ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு போனாய்...? அந்த வளையல் என்னாயிற்று?”

     “உடைஞ்சு போச்சும்மா” என்று கப்பல் கவிழ்ந்த மாதிரி விசனப்படுவாள். அப்பா தலையிட்டு, “சரி வாம்மா நான் வாங்கித் தரேன்” என்பார். அம்மா விடமாட்டாள். “வேண்டாங்க. வாங்கி தராதீங்க. இந்த முண்டம் அஞ்சு நிமிஷம்கூட வெச்சிருக்க மாட்டா?” என்று தடுப்பாள். அம்மாவுக்கு தெரியும் சாம்பவியின் லீலைகள்.

     பழையதை நினைத்தபோது தாய் தந்தை பாசம் போங்கிற்று. அவர்கள் எத்தனை செல்லமாய் வளர்த்தார்கள்! கேட்பதையெல்லாம் வாங்கித் தருவார்களே... அப்படிப் பட்டவர்களை பகைத்துக் கொண்டு வந்ததால் தான் நமக்கு இந்த தண்டனையா?

     வீட்டை விட்டு வந்தபோது பெற்ற வயிறு எப்படி எரிந்திருக்கும்...? அப்பா எத்தனை பாடுபட்டு இருப்பார்? அவர்களின் சாபம் தான் என்னை வாட்டுகிறதோ என்று கூட நினைத்தாள்.

     நான் இப்படி கிடக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியுமா...? சொல்லி அனுப்புவோமா? வேண்டாம். அன்று எத்தனை வீராப்புடன் வந்து விட்டு இப்போது சொல்லி அனுப்பினால் அது அசிங்கம். தவிர அவர்களுக்கு தெரிந்து விட்டால் மட்டும் நமக்கு சரியாகி விடப் போகிறதா என்ன?

     லதிகாவிற்கு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை சாம்பவி தானே பெற்றெடுத்தது போல பூரித்துப்போனாள். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜாகி போகிறபோது லதிகா குழந்தையுடன் சாம்பவியை பார்க்க வந்திருந்தாள்.

     குழந்தை லதிகாவின் சிகப்பையும், கணவனின் முகத்தையும் உரித்துக் கொண்டிருந்தது. சாம்பவிக்கு பெருமிதம் பிடிபடவில்லை. விஜி, “தொடாதம்மா இவன் என் தம்பி! என் தம்பி... !” என்று கிள்ளி கிள்ளி கொஞ்சினாள். முத்தம் கொடுத்தாள். கட்டிக்கொண்டு குழந்தையை திணறவைத்தாள்.

      “லதி! குழந்தையை நல்லா பார்த்துக்கோ, உடம்பை கவனிச்சுக்கோ. லேகியம் சாப்பிடு. வயிறு தளர்ந்து போகாம பெல்ட் போட்டுக்கோ. தவறாம உடற்பயிற்சி செய்” என்று தாயின் ஸ்தானத்திலிருந்து சாம்பவி ஆலோசனைகள் வழங்கினாள்.

     “அக்கா! திரும்பத் திரும்ப கேட்கிறேனேன்னு நினைக்க வேண்டாம். இனிமேலாவது நீங்க வீட்டுக்கு வரக் கூடாதா?”

     “நேரம் வரும்போது வருகிறேம்மா” என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பினாள். அந்தநேரம் வருமா. எப்போது வரும் என்று அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

     அந்த நேரம் விரைவிலேயே வருவதற்கான அறிகுறிகள் தெரிகிற மாதிரி இருந்தது. அன்று வான்மதி இல்லை. வெளியே யாரையோ பார்க்கப் போயிருந்தாள். தனிமை அவளை வாட்டிற்று. மனம் பலகீனப்பட்டு என்னென்னவோ கற்பனை பண்ணின.

     உள்ளம் புழுங்க ஆரம்பித்தது. இன்னும் நான் எதற்காக இருக்கிறேன்...? யாருக்காக...? வீணாய் மண்ணிற்குப்பாரம். மனக் கஷ்டம். ஆண்டவா...என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்ளக் கூடாதா?

     டாக்டர் மாதம் ஒரு முறை வந்து அவளை செக்கப் பண்ணிவிட்டு போவார். வழக்கம் போல அன்றும் வந்திருந்தார். அவளுடைய பி.பி.யை பார்த்தவருக்கு வியப்பு. நார்மலாக இருந்தது. கொலஸ்ட்ரால் சுகரெல்லாம் டெஸ்ட் பண்ணி பார்த்து விட்டு, “எல்லாமே குறைந்திருக்கிறதம்மா கீப் இட் அப்” என்று வாழ்த்தினார்.

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles