தவழும் பருவம்  

           

          

        எது குறைந்து என்ன பிரயோஜனம். பாழாய் போன நோய் குணமாக வேண்டுமே.

     “சாம்பவி! உங்க மனசுல எந்தவித கவலையுமில்லாம பார்த்துக்குங்க. மன உறுதியோட இருக்கணும். தளர்ந்து போக்கூடாது. தெம்பும் நம்பிக்கையும் இந்த சமயத்துல ரொம்ப ரொம்ப முக்கியம். விடா முயற்சியாலயும் மனோ தைரியத்தாலும் எந்த நோயையும் குணப்படுத்தலாம். ஃபார் எக்சாம்பிள் எம்.ஜி.ஆரையே எடுத்துக்கங்களேன். அவருக்கும் ஆரம்பத்துல பாராலிஸிஸ் அட்டாக் ஆகியிருந்தது. பின்னால அது கிட்னியை பாதிக்கிற அளவுக்குப் போன போது கூட அவர் மனம் தளரலே. அத்தனை சிவியரான நோய்க்கு இடையிலும் அவர் தாக்கு பிடிச்சார்னா அதுக்கு காரணம் அவருடைய துணிச்சலும், கரையேறிவிடலாம் என்கிற நம்பிக்கையும் தான்”

     டாக்டர் அவளுக்கு தெம்பு தந்தார். அட்வைஸ் பண்ணினார். அவருடைய பேச்சு கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. அட்வைஸ் என்பது எளிதான ஒன்று. அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லி விட்டு நாம் பாட்டிற்கு போய்க் கொண்டே இருக்கலாம். அனுபவித்து பார்த்தால் தான் அருமை புரியும்.

     சாம்பவி படுக்கையில் கிடக்க முடியாமல் நெளிந்தாள். டாக்டர் போனதும் அவளுக்கு போரடித்தது. தூக்கம் பிடிக்கவில்லை. எத்தனை நேரம்தான் தூங்கிக் கொண்டே இருப்பதாம், கட்டியில் பொதிகை தமிழரசனிம் ‘மீண்டும் வருவேன்’ கவிதை தொகுதி இருக்க எடுத்து பிரித்தாள்.

     ‘ஜோடி குருவியோடு கூடிக்களிக்கும் நேரம் வந்தாச்சு! சுபவேளை.

     நெருங்கியாச்சு; ஊரோடும் உறவோடும் வீதியுலாவரும் நேரமாச்சு;

     ராத்திரிக்கு மூச்சு காத்து ஒண்ணா சேர ரகசிய பேச்சு ஆரம்பாமாச்சு;

     பூத்திருந்த மனசுக்குள்ளே இன்பத்தேன் வடியுதுபாரு காத்திருந்த

     காமம் வந்து கண்ணுக்குள்ளே கோலம் போடுது;

     தீயக் கிரகங்கள் நிழல்படா நாள்பார்த்த, நேரம் பார்த்த

     தம் இனத்தோடு பொருத்தம் பார்க்கப் புறப்பட்டன சிட்டுக்கள்’

     வரவேற்பு முழங்க ஆண்குருவி வீட்டாரை அழைத்து. புதிய

     மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விரிப்பில் அமர வைத்தன;

     கவிதை படிக்க படிக்க கணவன் நினைப்பெடுத்தது. அவனை பார்க்க மாட்டோமா பேச மாட்டோமோ என்றிருந்தது. ஆசை பொங்கிற்று. இந்நேரம் விஜி என்ன பண்ணிக் கொண்டிருப்பாள்?

      ஸ்கூலில் இருப்பாளா? இன்று சனிக்கிழமை ஆயிற்றே. வீட்டில்தான் இருப்பாள். தம்பியோடு விளையாடிக் கொண்டிருப்பாள். அவள் யோசித்துக் கொண்டிருந்து போது ஆயா வந்து, “உங்களை பார்க்கிறதுக்கு இரண்டு பேர் வந்திருக்காங்க. வரச் சொல்லட்டுமா?” என்றாள்.

     “யாராம்?”

      “உங்களோட அப்பாவும் அம்மாவும்...”

     “அப்பா...அம்மாவா?” அவளுக்கு அழுகை முட்டிற்று. கண்கள் மடை திறந்தன. “உடனே வரச்சொல்!” என்று குதூகலித்தாள்.

     அவள் ஆவலுடன் வாசலையே பார்த்திருக்க உள்ளே நுழைந்த அம்மா, “சாம்பவி!” என்று ஒடிவந்து கட்டிக் கொண்டாள். “உனக்கு இந்த கதியா வரணும்? உன்னை இந்த நிலைமையிலா நாங்க பார்க்கணும்” என்று ஒப்பாரி வைக்காத குறை.

     அப்பாவும் அவளுடைய கையை பிடித்துக்கொண்டு மவுனமாய் அழுதார்.

     “எங்களுக்கு இன்னைக்குதாம்மா விஷயம் தெரியும். இங்கே ஒரு வேலையாய் வந்தோம். அப்போதான் பக்கத்து வீட்டு மாமி சொன்னா”

     அம்மாடி! ஆனாலும் உனக்கு இத்தனை வைராக்கியம் கூடாதுடி நல்லா இருந்தப்போ போடலேன்னாலும் சீக்கா இருக்கும் போது கூட கடிதம் போட உனக்கு தோணலியே... கடவுளே...எம்மக என்ன பாவம் பண்ணினா? அவளுக்கு ஏனிந்த தண்டனை? எங்களை பகைச்சுக்கிட்டு போனாலும் எங்கேயாவது சந்தோஷமா இருந்தா சரின்னு இருந்தோமே...”

     அம்மா தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்தாள்.

     “அது சரி நீ ஏன் இங்கே இருக்கணும். வீடு என்னாச்சு?”

     “நானாதாம்மா இங்கே வந்துட்டேன் அவருக்கும் குழந்தைகளுக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம்னு”

     “காதலிச்சு கட்டிக்கிட்டவனுக்கு சிரமம் கொடுத்தா என்னம்மா? நீ முடங்கிக் கிடக்கும்போது உன்னை கவனிச்சுக்கிறதை விட வேறு என்ன வேலை அவனுக்கு...”

     “ஏண்டி கத்தி ஊரை கூட்டறே? சாம்பவி! எங்களோட ஊருக்கு வந்திரும்மா எங்களுக்கு எந்த சிரமமும் இல்லே. நீ போனதிலிருந்து வீடுவிடா இல்லை சூன்யம் பிடிச்சு கிடக்கு”

    “வேண்டாம்ப்பா இங்கே சிகிச்சை நடந்துக்கிட்டிருக்கு ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறாங்க ஐ ஆம் ஹாப்பி!”

      “டாக்டர் என்னம்மா சொல்றாங்க?”

    “நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்குங்கிறார். சீக்கிரமே நான் எழுந்து நடமாடுவேன் என்கிறார்” “என்று கூசாமல் பேசினாள்.

      “சாம்பி! உன் குழந்தையை நான் பார்க்கலாமா?”

     “என்னம்மா இப்படி கேட்கிறாய்? உனக்கில்லாத உரிமையா வீட்டுக்கு போய் பாரும்மா அங்கே லதிகா கூடப் பிறக்காத தங்கச்சியா இருக்கா. உங்களை பார்த்தால் அவ ரொம்ப சந்தோஷப்படுவா”

     “சரியென்று வீட்டிற்கு போனவர்களை விஜயகுமாரும், லதிகாவும் வருந்தி வருந்தி உபசரித்தார்கள், அன்பை பொழிந்து நெகிழ வைத்தார்கள். இரண்டு நாட்களாவது இருந்து விட்டுதான் போகவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

     “மாப்பிளை! இத்தனை நாளா உங்களை புரிஞ்சிக்காம இருந்துட்டோம். எங்களை மன்னிச்சிருங்க. நான் ஒரு அவசர வேலையா வந்தேன். இனி நாங்க அடிக்கடி வரோம் அம்மா லதி! இனி நீயும் கூட எங்க மகதாம்மா” என்று அவர்கள் மனபாரத்துடன் கிளம்பி போயினர்.

     சாம்பவிக்கு தன் பெற்றோர்களை பார்த்ததும் துக்கம் அதிகாமயிற்று. அவர்களை பார்க்க மாட்டோமா என்கிற ஏக்கம் போய் ஏன் பார்த்தோம் என்றாயிற்று. அவர்களும் கவலைப் படும்படியாயிற்றே என்று நினைத்து வருந்தினாள்.

     எல்லோருக்கும் நான் ஒரு காட்சிப் பொருளாகவும் கவலைப் பொருளாகவும் ஆகிவிட்டேன். இதிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா? அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஓவென கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஓசை வரவில்லை.

     நாக்கு வறண்டு போனது. தொண்டை செருமிற்று தண்ணீ குடித்தால் தேவலாம் போலிருந்தது.

     “ஆயா” என்றாள். ஆனால் அந்த வார்த்தை வெளியே வராமலேயே அடங்கிப் போயிற்று.

     “ஆயா...ஆயா” என்று கத்திப் பார்த்தாள். கரகரப்புதான் வெளிப்பட்டது. யாரையும் அழைத்து புண்ணியமில்லை என்பது புரிந்தது. வெளியே பிள்ளைகள் கரேமுரேவென்று விளையாடிக் கொண்டிருந்தன. சங்கு வேறு ஊதிற்று.

     வலது கைக்கு எட்டுகிற தூரத்தில்தான் தண்ணீர் ஜக் இருந்தது. அனால் எப்படி? எட்டி எடுக்க வேண்டுமே நம்மால் முடியுமா? புரண்டு படுக்க முயன்றாள். முடியவில்லை. முட்டி எல்லாம் வலித்தது. பிடித்து இழுத்தது.

     தலையை திருப்பி வலது கையை நீட்ட வேண்டும் என்று முயன்றாள். வலி உயிர் போயிற்று. வலது கையே எடு. அந்த தண்ணீரை எடு, மூளை உத்தரவு கொடுத்து ரொம்ப நேரமாகியும் கூட அது அப்படியே கிடந்தது.

     அவளுக்கு அழுகையாய் வந்தது. நாக்கு வறண்டு போய் இருமல் வந்தது. குலுங்கி இரும்மிய போது வலது காலும் எம்பி தாழ்ந்தது. முதலில் அவள் அதை உணரவில்லை. அடுத்த முறை இருமிய போது வலது கையும் கூட அசைந்த மாதிரி தெரிந்தது.

     என்ன ஆச்சரியம்!

     அவளுக்கு உற்சாகம் பிறந்தது. விரல்களை அசைத்துப் பார்த்தாள். அசைந்து கொடுத்தன. அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. இத்தனை நாட்கள் முடங்கிக் கிடந்தனவே...இப்போது எப்படி...? இது நிஜமா? கனவா... இல்லை நனவா?

     இது நாம்தானா? நம் கைதானா? இவைகள் நன்முடைய விரல்கள் தானா?

     சாம்பவிக்கு அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை நரம்புகள் புடைத்தன. மகிழ்ச்சி தலைக்கேறியது. அவளுக்கு எங்கிருந்து அத்தனை சக்தி வந்ததென தெரியவில்லை. பலம் முழுவதையும் வலது கையில் செலுத்தி முயல கை மெல்ல மெல்ல எழும்பிற்று.

     “ஹையா! நமக்கு கை வருகிறது! எம்புகிறது! இதோ...இதோ இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்... போடா ராஜா போ” கை ஜக்கிடம் நெருங்கிற்று, அவள் தம் பிடித்து அதை கவ்வ முயல, ஜக் தட்டி விடப்பட்டு கீழே விழுந்து தண்ணீரை கொட்டியது.

     தண்ணீர் போனால் போகட்டும். நமக்கு கை வந்து விட்டது. அது போதும். இதோ காலையும் அசைக்க முடிகிறது. தாங்க் காட்.

     ஓ! வாட் எ ஒன்டர் மிர்ரக்கிள். அதிசயம் ஆனால் உண்மை. நாம் குணமடைந்து விட்டோம். நம் கட்டுக்கள் விலகிவிட்டன. அவளுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. மனமும் உடலும் ஆர்ப்பரித்தது. ஆரவாரம் செய்தது. ஹை!

     கையை தூக்கு மடக்கு. நீட்டு! உதறு. காலே நீயும் நீளு. மடங்கு குதி! நட ஓடு லெப்ட் ரைட்! லெப்ட் ரைட்! ஒன் டூ த்ரீ ஃபோர்

     ஆ!

     ஹா...ஊ...தும், கும்! அட்டென்ஷன்! ஸ்டாண்ட் அட் ஈஸ்! லெப்ட் டர்ன்! சாம்பவி! ஒபே த ஆர்டர்ஸ். ரைட் டர்ன்! எபவுட் டர்ன். ஆன் யுவர் மார், லெப்ட் ரைட், லெப்ட் ரைட்!

     சாம்பவி அறைக்குள் இங்குமங்கும் நடந்தாள். குழந்தை போல துள்ளினாள். குதித்தாள். என்ன இது இப்படி எல்லாம் சிறு பிள்ளைத்தனமாய் நடந்து கொள்கிறோம் என்று அவள் நினைக்கவில்லை.

     முகத்தில் தென்றலடித்த மாதிரி ஒரு மலர்ச்சி கண்களில் ஒரு புத்துணர்ச்சி ஓ... ஓ... எனக்கு கை வந்து விட்டது. கால் வந்து விட்டது. இழந்த துன்பத்தை எல்லாம் நான் திரும்ப பெற்று விட்டேன். இதை உடனே எல்லோருக்கும் அறிவித்தாக வேண்டுமே!

     வான்மதி! வான்மதி! இங்கே கையை நீட்டுகிறேன். இதோ மடக்குகிறேன். இதோ கட்டிலில் இருந்து குதிக்கிறேன். நான் பூரண குணம் அடைந்து விட்டேன். எனக்கு இனி யாருடைய உதவியும் தேவையில்லை. யாருக்கும் நான் பாரமில்லை.

     அம்மா! அப்பா உங்கள் மகள் தேறிவிட்டாள். குமார் உங்களுடைய மனைவி பிழைத்துக் கொண்டேன் பாருங்கள். ஆமாம் லதிகா! உன் பிரார்த்தனை பலித்துவிட்டது

     விஜி! உங்க அம்மா மறு பிறப்பு எடுத்துட்டேன்டி அவள் உல்லாசத்தில் மிதக்க அப்போது உள்ளே வந்த வான்மதி, அப்படியே ஸ்டன் ஆகி நின்றாள். அவளுடைய கண்கள் விரிந்தன. மகிழ்ச்சியை கொட்டின.

     “அக்கா வாட் எ சர்ப்ரைஸ். நீங்க குணமாயிட்டீங்க. உங்க ரத்தக் குழாயில் இருந்த கிளாட் கரைஞ்சு போயிருக்கணும். உங்களுடைய துன்பமெல்லாம் போயிருச்சு” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

     “உங்களை பார்த்ததும் எனக்கு கை கால் வரலேக்கா இந்த செய்தியை உடனே அறிவித்தாக வேண்டும். இருங்கள் உங்கள் கணவருக்கு போன் போட்டு வரவழைக்கிறேன்”

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles