தவழும் பருவம்  

     

     காலை ஒன்பது மணிக்கெல்லாம் நாகர்கோவிலின் கடைவீதி கலகலப்பிற்கு வந்திருந்தது. தமிழுமில்லாமல் மலையாளமும் இல்லாமல் தமிழ்யாளம் பேசிக்கொண்டு ஜனங்கள் நேசமணிக்கும், டவுன் பஸ்சிற்கும் காத்திருந்தனர். ரோடோரம் தென்னைகள் குளிர் காற்றையும் நிழவையும் வீசின. டீ கடையில் கேரள பாணியில் நேந்திர பழதார்களும், சிப்ஸ்களும் தொங்கின. வெள்ளை அப்பமும் குழாய் புட்டுகளும் ருசிக்கப்பட்டன.

     மீனாட்சிபுரத்தில் இருந்தது விஜயகுமாரின் வீடு. அவன் முப்பத்தேழு வயதில் சற்று தொந்தியும், சற்று வழுக்கையுமாக வீட்டிற்குள் உலா வந்து கொண்டிருந்தான்.  

     கிச்சனில் சாப்பாடு கிளறி டிபன் பாக்சில் திணித்தான். பாலை காய்ச்சி பாட்டிலில் ஊற்றினான். பிளாஸ்டிக் கூடையில் குழந்தையின் ஜட்டி, பிஸ்கட், மாற்றுடை, டவல், கிலு கிலுப்பை போன்றவற்றை எடுத்து வைத்தான். பிளாஸ்க்கையும் பால் பாட்டிலையும் இடைவெளியில் திணித்தான்.  

     அதற்குள் குழந்தை விஜி தத்தி தத்தி நடந்து விழுந்தது. அழுதது.

      “அச்சச்சோ... விழுந்திட்டியா? அழாதே...அழாதே!” என்று கொஞ்சினான்.

      “ஏங்க!”

     சாம்பவி படுக்கையில் கிடந்தபடி அழைக்க, “இதோ நான் வந்துட்டேன்” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளிடம் சென்று “என்ன?” என்றான்.  

     “பசிக்கிறதா. டிபன் ரெடி”

     “பசியில்லை, குழந்தையை இங்கே விடுங்களேன். நான் பார்த்துக்கறேன்” 

     “நீயா? வேண்டாம் வேண்டாம்.  நீ சும்மா படுத்திரு” என்று விட்டு கிச்சனிற்கு வந்தான். “அழாதம்மா... அழாதே கண்ணு. நான் போய் அம்மாவுக்கு புவ்வா கொடுத்திட்டு வரேன்”  

     தட்டில் சாம்பார் சாதம் கொண்டு வந்து ஸ்டூல் போட்டு அமர்ந்து கொண்டான். சுவற்றில் தலையணையை சரித்து கொண்டு சாம்பவியை நிமிர்த்தி அமர வைத்தான். கலைந்திருந்த அவளது ஈரக் கூந்தலை ஒழுங்குபடுத்தினான்.  

     ஸ்பூனால் சாப்பாடு எடுத்து ஊட்டினான். சாப்பிட்டு முடிந்ததும் அவளுடைய கண்கள் பனிந்தன. அவளுக்கு வாய் கழுவி படுக்க வைத்து விட்டு குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பும்போது சாம்பவி, ‘உங்ககிட்டே நான் பேசணும்’ என்றாள் குழறலுடன்.  

     அவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் “ஆயா வந்திருவா, வெறும் கதவை மூடிட்டு போகிறேன்” என்று குனிந்து அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு “வாம்மா விஜி! அம்மாவுக்கு டாட்டா சொல்லு”

     “நான் உங்களிடம் பேசணும்னு சொன்னேன்”     

     அவன் கேட்டிடம் வந்தபோது ஆயா அவனுக்கு வழி விட்டு நின்றாள்.  

     “சாம்பவியை பத்திரமா பார்த்துக்கோ ஆயா. நீ பாட்டுக்கு அரட்டைக்குன்னு அக்கம் பக்கத்து வீடுகளுக்கு போயிராதே”  

     “ஏய்!” என்று அவள் கேரள பாணியின் தோள்களை குலுக்கினாள். நான் அப்படி எல்லாம் போகமாட்டேன் என்று அர்த்தம்.

     விஜயகுமார் சைடில் கேரியர் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் குழந்தையை அமர வைத்து “எழக்கூடாது ஆமா...” என்று செல்லமாய் கடிந்து கொண்டு வண்டியை கிளப்பினான். 

     வடசேரியில் இருந்து குழந்தைகள் காப்பகத்தில் விஜியை ஒப்படைத்து விட்டு வயர் கூடையை கொடுத்து விட்டு தயங்கி நிற்க, மூதாட்டி ஒருத்தி “குழந்தை இனி எங்க பொறுப்பு. யோசிக்காம ஆபீஸ் கிளம்புங்க” என்று சிரித்தாள். 

     அவனுக்கு சங்கடமாய் இருந்தது. இது தினசரி அவஸ்தை. மனைவி இருக்கும்போதே குழந்தையை அவளிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு, பிறகு மாலையில் திரும்ப வாங்கிக் கொண்டு போய் சோறு கொடுத்து, தூங்கவைத்து... 

     குழந்தை மேல் தாய்க்கு அன்பில்லாமல் இல்லை. சீராட்டி பாராட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் பஞ்சம் இல்லை. 

     ஆனால் தாயையும் சேயையும் ஒன்று சேர விடாமல் நோய் தடுக்கிறதே என்ன செய்ய? அவள் மட்டும் நன்றாக இருந்தால் குழந்தையை இப்படி அனாதை போல விட்டு விடுவாளா?  

     அவன் மன பாரத்துடன் அங்கிருந்து கிளம்பினான். 

     அன்று ராத்திரி.  

     விஜி தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.  

     விஜயகுமார் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அதுவரை இந்தி பேசின டி.வி.யை ஆப் பண்ணினான். 

     கதவெல்லாம் தாழ் போடப்பட்டு இருக்கின்றனவா என்று செக் பண்ணினான்.  

     ஹாலில் சாம்பவி சும்மான்னாலும் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கும் தொட்டிலுக்கும் இடையே கட்டிலை நகர்த்தி  

     விஜயகுமார் படுக்கையை விரித்துப் போட்டான்.  

     “சாம்பி தூங்கிட்டாயா?”  

     “இல்லை” என்றாள் வறட்சியுடன்.  

     “ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது. தண்ணி வேணுமா?”

     “வேண்டாம்” என்று ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டாள். 

     அவள் என்னவோ சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. என்ன சொல்லப் போகிறாள் என்பதையும் யூகிக்க முடிந்தது.  

     “இப்படி காட்டு” என்று அவளது வலது கை, வலது காலை பிடித்து விட்டான். ஆயுர்வேத களிம்பை தடவினான், குனிந்து அவளது நெற்றியில் முத்தம் பதித்து விட்டு “தூங்கு” என்று லைட்டை நிறுத்தி விடிவிளக்கை ஆன் பண்ணினான்.  

     அறைக்குள் நீல ஒளி ராஜ்யம் நடத்திற்று. ஃபோன், ஓசை எழுப்பிற்று.  

     சாம்பவி அவன் பக்கம் கழுத்தை திருப்பி “தூக்கம் வருதா. நான் உங்ககிட்டே பேசணும்னு சொன்னேனே” என்றாள்.  

     “! உனக்கில்லாத உரிமையா பேசு...”  

     “இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பாடு?” என்றாள்.  

     அந்த வார்த்தைகள் அத்தனை கிளியராய் வரவில்லை. சற்று நசுங்கிப் போய் வெளிப்பட்டன. கொஞ்ச நாட்களாகவே அவளுடைய பேச்சு அப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் பேச முடிகிறது அவளுக்கு.  

     “நீங்க படற கஷ்டத்தை என்னால பார்த்துட்டிருக்க முடியவில்லை. தகிக்கிறது. வெளியே ஓடியாடி வியாபாரம் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் இங்கும் உங்களுக்கு நிம்மதியில்லை. ஓய்வெடுக்க முடியவில்லை. சதா வேலை... வேலை... இந்த பாரத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு சுமப்பதாய் உத்தேசம்?” 

     “சாம்பி நேரமாகிறது தூங்கேன்” 

     “இல்லை. இதற்கு ஒரு முடிவு தெரியாமல் என்னால் தூங்க முடியாது. இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். உங்களுடைய சிரமம் என்னை போட்டு வதைக்கிறது” 

     “எனக்கென்ன சிரமம்... நான்...?” 

     “வேண்டாம். வியாக்யானம் ஒண்ணும் தேவையில்லை. என் மேல் நீங்கள் நிஜமாலுமே அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால் என் பேச்சை கேட்டாகவேண்டும். உடனே நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொண்டாக வேண்டும்.”

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles