தவழும் பருவம்  

           

          

        “வேண்டாம் வான்மதி! நானே அங்கே போய்க் கொள்கிறேன். திடீரென நேரில் போய் குதித்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன்.” 

     “உங்களால தனியா போக முடியுமா? நானும் வரட்டுமா?”

     “வேணாம் நான் ஆட்டோவில் போய்க் கொள்கிறேன்” என்று அவளிடம் பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். வான்மதி இன்னமும் பிரமையில் இருந்து விடுபட முடியாமல் நின்றிருந்தாள்.

     ஆட்டோவில் போகும்போது அவளுக்கு குஷி பிறந்தது. வெளிக்காற்று இதம் தந்தது. வாகனங்களைப் பார்த்து கையாட்ட வேண்டும் போல வெறி எழுந்தது.

     பொதிகை தமிழரசனின் ‘இனி என்றும் வசந்தம்’ கவிதைகள் அவளுடைய மனதில் ரீங்கரித்தன. ‘

     ‘செண்பகப் பூவனத்தினில் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரத்திலும்,

     துள்ளிமேலெழுந்து விழுந்து உடைந்து சிதறாமல் மெல்லியதாய்

     நாதமெழுப்பும் என் வேதனைக்குரல் இரண்டறக் கலந்து விட்டது;

     இனி செவிகளில் விழும் ஒவ்வொரு ஓசையும்

     உன் உயிரின் அடிவேரை உரசிப்பார்க்கும்

     ஆமாம் பெண்ணே! கிளைகளின் மது பூத்துக்குலுங்கும்

     வசந்தத்தின் முகவரியை உன் விரல்கள் தான் மீட்டு கின்றன;

     என் இரண்டு கைகளின் உழைப்பின் பிம்பமாய் ஒளி விடும்

     பத்து சூரிய விரல்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்போது

     என் வாழ்வில் இனி என்றும் வசந்தம்தான்...”

     குமார், வீட்டுக்கு வா வா என்றீர்களே... இதோ வந்து கொண்டிருக்கிறேன். லதிகா, நேரம் வரட்டும் வருகிறேன் என்றேனே, எனக்கு அந்த நேரம் வந்து விட்டதம்மா. விஜி, விஜி கண்ணு உங்கம்மா உன்னை தேடி வரேண்டா.

     அவளுக்கு புத்துணர்ச்சி வந்திருந்தது. ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் அழைத்து சொல்ல வேண்டும் போல அவேசம் எழுந்தது’ “ஆட்டே... சீக்கிரம் போப்பா...”

     ஆட்டோ சிக்னலில் நிற்க அந்த நொடிகள் அவளுக்குயுகமாய் தெரிந்தன. எட்டி எட்டிப் பார்த்தாள். அம்மாடி இந்த இரண்டு வருடங்களில் எத்தனை பாடுபட்டிருப்போம். எத்தனை ராத்திரிகளை வீணடித்திருப்போம். இப்போ விடுதலை. இனி கனவில் மிதக்கலாம் குடும்பம் நடத்தலாம்.

     ஆட்டோவை தள்ளி நிறுத்தி இறங்கிக் கொண்டாள் நாம் பதுங்கி பதுங்கிப் போய் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்போம் என்று நடந்தவளுக்கு கண்கள் நனைந்தன. இந்த வாசல் படியை மிதித்து எத்தனை நாட்களாகிறது. கேட்டின் விளிம்பில் கண்களை வைத்து பார்த்தவள் அங்கே தோட்டத்தில் கணவனும் லதிகாவும் விஜியை தூக்கிக் கொண்டு கட்டிப்பிடித்தபடி கொஞ்சிக் கொண்டிருப்பதை கவனித்ததும் அப்படியே பின்வாங்கினாள். அவளுடைய தலையில் பளீரென சாட்டையடித்தது.

      சாம்பவி! நில். அவர்கள் இப்போது சந்தோஷமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷத்தை நீ கெடுக்கத்தான் வேண்டுமா?

     நீ செயலிழந்து விட்டாய் என்று சும்மா இருந்த லதிகாவை அழைத்து வந்து மணமுடித்து வைத்தாய். உன்னையே நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது தான் மனம் மாறியிருக்கிறான். இப்போதுதான் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறான். இந்த சமயத்தில் நீ போனாய் என்றால் மறுபடியும் அவன் அவளை ஒதுக்க ஆரம்பித்து விடுவான். இது தேவைதானா? முறைதானா? இதுதான் உன் நோக்கமா? இதுதான் நீ அவளுக்கு செய்யும் கைமாறா?

     கேள்விகள் விசுக் விசுக்கென அடித்தன. அதன் நிஜமும், வேதனையும் பொறுக்க முடியாமல் சாம்பவி சட்டென வெளியே வந்து ஆட்டோ பிடித்தாள்.

     நம் வாழ்க்கை என்றோ அஸ்தமித்து விட்டது. நாம் என்றோ செத்து விட்டோம். நம்முடைய மறுவாழ்வு அவளுடைய வாழ்வை அழித்து விடக் கூடாது. ஒரு முடிவுடன் அவள் காப்பகத்திற்கு திரும்ப,

     வான்மதி, “ஏன்க்கா திரும்பிட்டீங்க? வீட்டுக்குப் போகலியா?” என்று வழிமறித்தாள்.

     “இல்லை”

     “அதான் ஏங்க்கான்னேன்?”

     “வான்மதி! ஏதோ ஒரு வேகத்துல உணர்ச்சி வசப்பட்டுட்டேன். என்னையே நான் மறந்திட்டேன். ஆசைப்படக்கூடாததற்கு ஆசைப்பட்டுட்டேன்” என்று கண் கலங்கினாள்.

     “என்னக்கா சொல்றீங்க நீங்க...?”

     “ஆமாம்மா. நான் போனால் அவர் லதியை ஒதுக்க ஆரம்பிச்சுடுவார். அவளோட சந்தோஷம் பாழ்படும். அதை என்னால தாங்கிக்க முடியாது. அவர்களை பொருத்தவரை நான் இன்னும் நோயாளிதான். இனியும்கூட முடம்தான். வாழ்நாள் பூரா அப்படியே இருந்துட்டுப் போறேன், வான்மதி இந்த உண்மை என்னோடும் உன்னோடும் மட்டுமே புதைஞ்சு போகட்டும். தயவு செஞ்சு யாருக்கும் சொல்லிராதம்மா. ப்ளீஸ் வான்மதி” என்று சாம்பவி அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

     வான்மதி, சாம்பவியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாளா? இல்லை வீட்டிற்கு தெரிவித்துவிட்டாளா என்பது வாசகர்களின் யூகத்திற்கு.

 

*********

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles