தவழும் பருவம்  

     

        “உடனேயேவா... காலைல போதாதா?” என்று அவன் சிரிக்க, “தமாசெல்லாம் போதும். நான் சீரியசாகத்தான் சொல்கிறேன். இத்தனை பிரச்சனைகளை சுமந்து கொண்டு உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது? உங்களோட வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கிறது.” 

     “இன்னொரு கல்யாணம் பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு அப்படி ஒரு சிந்தனையே வரலை சாம்பவி.” 

     “வரணும். கல்யாணம் பண்ணிட்டு நீங்க சந்தோஷமா இருக்கணும்.”  

     “எப்படி சாம்பி. எப்படி முடியும்? நீ இந்த நிலைமையில இருக்கும் போது...  

     “நான் இருந்தால் அது என்னோட தலைவிதி. அனுபவிச்சுட்டுப் போறேன். அதுக்காக நீங்க ஏன்...? நீங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்? நீங்க ஏன் வறுத்திக்கணும்?”

     ‘உனக்கு ஒண்ணுன்னா அது எனக்கும் இல்லையா? இன்பம்னாலும் சரி. துன்பம்னாலும் சரி. ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிறதுதானே முறை?’

     “இன்பத்துல சரி. துன்பத்துல எப்படி பங்கு போட்டுக் கொள்ள முடியும்? என் வேதனை எனக்கு. நீங்க சந்தோஷத்தை அனுபவிக்காம இருந்தால் என் வலி போயிருமா, இல்லை எனக்குதான் குணமாயிருமா?”    

    “இருந்தாலும்...நான் இப்போ இத்தனை சவுகர்யமாயிருக்கேன்னா அதுக்கு காரணம் நீ. உன் அன்பு, உன்னுடைய தூண்டுதல். உன்னுடைய ஒத்தாசை. மொத்தத்துல இந்த வளர்ச்சியே உன்னாலதானே!” 

     அவள் சற்று நேர மவுனத்திற்கு பின், “உங்களோட தளர்ச்சிக்கும் நான் காரணமாயிரக் கூடாதுன்னுதான் சொல்கிறேன். ப்ளீஸ்... இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு நீங்க முக்கியம். நம் குழந்தையும்,”  

     அப்போது தொட்டிலிலிருந்து ஜலம் ஒழுகிற்று. குழந்தை விசும்பலுடன் புரள, விஜயகுமார் எழுந்து அதை தூக்கி, அடியிலிருந்த துணியை மாற்றி படுக்க வைத்தான். தரையில் சிதறியிருந்த ஈரத்தை துணியால் துடைத்து பாத்ருமிற்கு போய் கை கழுவி வந்தான்.  

     “இந்த வேலையையெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்குதான் நீங்களே செய்து கொண்டிருக்க முடியும்?” 

     “அதுக்காக...? கல்யாணம் ஒண்ணுதான் வழியா. வேலைக்காரி வைத்தால் போறாதா?”  

     “போறாது. நான் சொல்வதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வீட்டு வேலை மட்டும் இங்கு பிரச்சினையில்லை. வெறும் வேலை என்றால் வேலைக்காரி போதும். இங்கே உங்களுக்கு தேவை வேலைக்காரி இல்லை. நல்லதொரு துணை. உங்களுடைய செயல்களுக்கும் பிசினஸிற்கும் ஒத்தாசை செய்கிற, உதவுகிற, ஆலோசனை சொல்கிற ஒரு பார்ட்னர்!”

     “அதற்கு தான் நீ இருக்கிறாயே; அப்புறம் எனக்கென்ன கவலை...” 

     “நான் இருந்து என்ன பிரயோசனம்? இன்னும் இருப்பதுதான் என் கவலையே. கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லி முடித்து விடுகிறேன்” என்று குறுக்கே பேச வந்தவனை தடுத்தாள். ‘பிசினஸில் உங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதையெல்லாம் தலைமுழுகிவிட்டு வீட்டுக்கு வரும்போது நானும் என்னுடைய நோயும் உங்களுக்கு பாதிப்பு தரக்கூடாது. வீட்டுக்கு வந்தால் உங்களுக்கு நிம்மதி வேண்டும். ஓய்வு வேண்டும்; சந்தோஷம் தர வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறேன். என்ன சொல்கிறீர்கள்...?”  

     அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, பேசாமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

     அவள் இன்று நேற்று ஒன்றும் இதை ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதமாகவே அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் இதுவரை பிடியே கொடுக்கவில்லை. அவளும் அவனை விடுவதாயில்லை.  

     சாம்பவிக்கு தூக்கம் வர மறுத்தது. வெளியே நாய் ஒன்று குரைத்தது. சைக்கிள் வண்டியில் மணியாட்டிக் கொண்டு பலகாரம் நகர்த்திப் போனார்கள். ஃபேன் காற்றையும் மீறிக் கொண்டு கொசுக்கள் காதிடம் வந்து நர்த்தனம் புரிந்தன. 

     அவளுடைய சிந்தையெல்லாம் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. 

     நான்கு வருடங்களுக்கு முன்பு. 

     அவன் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது தென் மாவட்டங்களுக்கு டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது அவள் ஈரோடில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா அங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டூரில் அவளுடன் தோழிகள் பட்டாளமே வந்திருந்தது. அவர்கள் அரட்டையும் சந்தோஷமுமாய் திருச்செந்தூருக்கு போய் விட்டு கன்னியாகுமரி வந்தனர்.  

     அங்கே கியூவில் நின்று படகு ஏறி, ஓடி, அடி வயிறு கலங்கி, விவேகானந்தர் பாறை பார்த்து விட்டு திரும்புவதற்குள் நேரமாகி விட்டிருந்தது. பஸ் கிளம்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினர். 

     அவர்களுக்கோ தாகமாயிருந்தது. ரோடோரத்தில் விஜயகுமார் வண்டியில் இளநீர்களை குவித்து வைத்துக் கொண்டு நிற்க அங்கே ஒடினார்கள். அவன் பேண்ட்டும் பனியனும் போட்டுக் கொண்டு அத்தொழிலுக்கு லாயக்கில்லாதவன் போலிருந்தான். அவர்களை மலையாளி என நினைத்து, “கரிக்கு வேணுவோ...?” என்றான்.  

     அதை கீதா திரித்து, “ஏய் சாம்பவி... உன்னை கருப்பு என்கிறான்டி!” என்று இடித்தாள். “மிஸ்டர். நான் கருப்பாகவா இருக்கேன்...” என்று சாம்பவி வேண்டுமென்றே அவன்மேல் ஏவுகணைகளை ஏவ, அவன் ஒரு நொடி ஆடிப் போனான். 

     “இல்லை...இல்லை! நான் இளநீ வேணுமான்னு தான் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க! உங்களோட அழகையும், வனப்பையும்  பார்த்ததும் நீங்கல்லாம் மலையாளின்னு நினைச்சுட்டேன்?” என்று அவன் வழிய. 

     “ஐஸ்! ஐஸ்!” என்று ஒருத்தி கத்தினாள். 

     “ஐஸ் வைக்கலீங்க. நிஜமாதான் சொல்றேன்!” அதற்குள் அந்த பக்கம் ஐஸ் வித்துக் கொண்டிருந்தவன், “கூப்பிட்டீங்களாம்மா” என்று வர, அவர்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. 

     விஜயகுமார் எங்கே தன் வியாபாரம் போய் விடுமோ என்று “இல்லேப்பா போ!” என்று அவனை விரட்டி விட்டு கொடுவாளை அவசரமாய் எடுக்க, அது தவறி விழுந்தது. அதை எடுத்து “வெட்டட்டா...” என்று கேட்டு சரக்சரக் கென வெட்டி துளை போட்டு, ஸ்ட்ரா போட்டு கொடுத்தான். ஐந்து நிமிடத்திற்குள் இருபத்தைந்து பேர்களுக்கு அசராமல் சப்ளை பண்ணினான். அவனுடைய சுறுசுறுப்பும் அப்பாவி பேச்சும் சாம்பவியை கவர்ந்தன.  

     அவர்கள் குடித்து முடிப்பதற்குள் பஸ்சிலிருந்து மேடம் அவசரப்படுத்தினார். டிரைவர் ஹாரனடிக்க, அவர்கள் மட்டையை தூக்கி போட்டுவிட்டு ஒட ஆரம்பித்தனர்.  

     “ரூவா...ரூபா!”  

     “ஏன்ய்யா பறக்கிறே...பஸ்கிட்டே வா. அங்கே பேகில் பர்ஸ் இருக்கு எடுத்து தரேன்” என்று சாம்பவி அவனை அழைத்துக் கொண்டு ஓடினாள். அவள் ஏறவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது.

 

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles