தவழும் பருவம்  

     

         டிரான்ஸ்பருக்காக அம்மா விசனப்பட, அவள் சந்தோஷப்பட்டாள். நாகர்கோவிலுக்கு போனதும் அவனை கண்டுபிடிக்க அவளுக்கு சிரமம் இருக்கவில்லை. வாடிப் போயிருந்த அவனுக்கும், அவளுடைய சந்திப்பு தெம்பளித்தது.

     சோகத்திற்கு சுகம் தந்தது. சாம்பவியின் சிரிப்பும், பேச்சும் அவனுக்கு மருந்தளித்தது. உற்சாகத்தை கிளப்பி விட்டது. இனி எதற்காக சம்பாதிக்க வேண்டும். வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டுமே என்றிருந்த மந்த தனத்தை விரட்டிற்று.

     அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தனர். “லைப்ரரி போயிட்டு வரேம்மா” என்று சொல்லி விட்டு அவள் அவனுடன் பார்க்குக்குப் போவாள்.

     அங்கே அவனுடன் பூச்செடிகளுக்கிடையே அமர்ந்து கவிதை சொல்வாள். தன் கண்களால் அவனுடைய மனதை உழுவாள் அன்பை விதைப்பாள். ஆசையை அறுவடை செய்வாள்.

     அவனோ, “என் இதயவானில் உதயமான நட்சத்திரம் நீ! மாக்கோலமிட்ட உன் விரல்களில் இதென்ன நீர்க்கோலம்? விழிமேகம் துளிர்த்து விட்ட பனித் துளிகளா...?” என்று கவிதை சொல்வான். இது உங்கள் கவிதையா என்பாள். இல்லை நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினது என்று சிரிப்பான். கவிதைகூட கடன் வாங்கணுமா என்று அவள் நகைப்பாள்.

     “தென்றலை தாவணியாய்

     உடுத்திக் கொண்டவளே!

     மின்னலை கண்களில்

     மையாய் பூசிக் கொண்டவளே;

     தேன் சிந்தும்

     வார்த்தைகளை உதிர்ப்பவளே!”   

     விஜயகுமார் தன் கண்களை மூடிக் கொண்டு சொல்ல “கொஞ்சம் இருங்க இது யாரோடது...?” என்று நிறுத்துவாள்.

     “சக்தி சுப்பிரமணின்னு ஒரு கவிஞரோடது. ஏன் உனக்கு பிடிக்கலியா...?”

     “பிடிக்குது. அதுக்காக இரவல் கவிதையாகவே சொல்லணுமா... உங்களுக்கு முடிந்தால் நீங்களாவே கவிபாடுங்கள். இல்லாவிட்டால் கவிதையே வேணாம்?”

     இப்படியே அவர்களுடைய அன்பும் நட்பும் வலுப்பெற ஆரம்பித்தது. ஆரல்வாய்மொழி அணைக்கு போனபோது அவன் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டான். “சாம்பவி! வீட்டு வறுமையால எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு பிடிப்பு இல்லாம இருந்தது. அவனவன் இந்த வயசுக்கு எப்படியெல்லாம் அனுபவிக்கிறான். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமைன்னு நான் நினைச்சு நினைச்சு ஏங்குவேன். நமக்கு கார் இருக்கக் கூடாதா, பங்களா இருக்கக் கூடாதா? சொகுசா வாழ மாட்டோமன்னு எப்பொதும் பெருமூச்சு விட்டுக்கிட்டிருப்போன்!”

     அவன் சொல்லி வாய்மூடும் முன்பு சாம்பவி தன் காதை அவனுடைய முகத்திற்கு நேரே திருப்பி, “எங்கே பெருமூச்சை காணோமே?” என்று சிரித்தாள்.

     “பெருமூச்சு சிறுமூச்செல்லாம் இப்போ நின்னு போச்சு!”

     “ஐயையோ...ஏன்? கார், பங்களாவெல்லாம் கிடைச்சிருச்சா...?”

     “இல்லை, நீ! நீ கிடைத்திருக்கிறாயே!”

     “அம்மாடி... என்னை பார்த்தால் கார், பங்களா மாதிரியா தெரியுது?” என்று எழுந்தாள். “கார், பங்களா வெல்லாம் என் மூலம் கிடைக்கும்னு நினைச்சீங்களா?”

     “சீச்சீ... என்னை நீ தப்பாக புரிந்துக் கொண்டாயே! யாருக்கு வேணும் உங்க வீட்டு பணம்...? நீ வந்ததும் எனக்கு அந்த ஆசையெல்லாம் விட்டு போச்சுன்னு சொல்லவந்தேன் உன்னை பார்க்கும்போது மனசுல சந்தோஷம் ஊறுது கண்கள்ல இன்பம் பொங்குது. ஆகா... காலம் பூரா இப்படியே உன்னை பார்த்துக்கிட்டிருக்க மாட்டோமாங்கிற ஏக்கம் பிறக்கிறது.”

     ஆமா...இப்படியே பார்த்துக்கிட்டிருந்தா பொழப்பு என்னாகறது...?”

     “பொழப்பா... எனக்கு அப்படின்னு எதுவுமே இல்லை. எல்லாமே இனி நீ தான்!”

     “அம்மாடியோவ்! வர வர ரொம்பவே புலம்பறீங்க! இனியும் இப்படியே ஊர் சுற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. முதல்ல எழுந்திரிங்க!”

     “ஏன் சாம்பவி...? என்னுடன் சுற்றுவது உனக்கு பிடிக்கவில்லையா...?”

      “ரொம்ப பிடிக்கிறது; அதுக்காக எப்பவுமே சுத்திகிட்டிருந்தா ஆச்சா? நம்முடைய எதிர்காலத்தை பார்க்க வேண்டாமா?”

     “எதிர் காலத்தை நினைத்து நிகழ் காலத்தையும் கோட்டை விட வேண்டும் என்கிறாயா...?”

     யார் உங்களை கோட்டை விடச் சொன்னார்கள் கோட்டை கட்ட வேண்டும். அங்கே நாம் போய் குடியிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோன்”

     “சரி வா. இப்படி உட்கார்! கண்களை மூடு! உனக்கு எந்த மாதிரி கோட்டை வேண்டும் என்று சொல். உடனே கட்டிவிடுவோம்!”

     “விஜி கண்ணா! முதல்ல கையை எடுக்கறீங்களா...? நான் கேட்டது கற்பனை கோட்டை இல்லை. நிஜக் கோட்டை!”

     “அப்படியா... நிஜக்கோட்டை என்ன. நீ கேட்டால் நான் மலைக் கோட்டையையே வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன். ஆனால் வேலை கிடைக்கணுமே”

     “வேலை தானாவா கிடைக்கும்...நாம தான் தேடணும்”

     “இனி தேடாதே இடமில்லை”

     “அப்போ ஏதாச்சும் பிசினஸ் பார்ப்போம்”

     “பிசினஸ்! ஹா ஹஹா! இங்கே புவ்வாவுக்கே லாட்டரியாம்! இதில் பிசினஸிற்கு ஏது பணம்”

     “பிசினஸிற்கு பணம் மட்டும் இருந்தால் போதுமா? புத்தியும் வேணும்”

     “அது எங்கே கிடைக்கும்”

     “சும்மா தமாஷ் பண்ணிக்கிட்டிருக்காம விஷயத்துக்கு வாங்க. ஐ ஆம் ஸீரியஸ். முதல்ல லாபகரமா ஒரு தொழில் தேடுங்க. அதோட மூலதனம். ஆட்கள், மெஷின்கள், உற்பத்தி பொருள், மார்க்கெட்டிங் மத்ததைப் பத்தியெல்லாம் ஆராய்வோம். ஓரளவுக்கு லாபகரமானதுன்னு தெரிஞ்சாக்கூடப் போதும். வேலையில்லாப் பட்டதாரிங்கிற அடிப்படையில பாங்கிலே லோன் போடலாம். ரெண்டு பேருக்குமே கிடைக்கும்.”

     “ஆனா தொழில்...?”

     “இனி அதை தேடுவது தான் நம் தொழில்” என்று சாம்பவி தினம் ஆவலுடன் ஊர் ஊராய் சுற்றினாள். அங்கே புதிதாய் எந்த தொழிலுமே தெரியவில்லை. நாகர்கோவிலை பொருத்தவரை ஹோட்டலும், மளிகை, காய்கறி கடைகள் தான் தெரிந்தன. கைத் தொழிலோ, மிஷின் தொழிலோ எதுவுமே தெரியவில்லை.

     அவர்கள் ஒரு சமயம் திருவனந்தபுரம் போய், அங்கே கோவளம் கடற்கரையை சுற்றிவிட்டு திரும்பும்போது அவனுடைய நண்பன் அல் அமீன், “உனக்கு ஒரு பிசினஸ் தானே வேணும், நான் சொல்கிறேன்” என்று யோசனை சொன்னான்.

     கேரளா, தமிழ்நாடு பார்டர்கள்ல ரப்பர் மரங்கள் அதிகம். அதில் முதலில் ஒரு ஏக்கர் குத்தகையா பேசி பால் எடுக்கலாம். எடுத்து பதப்படுத்தி ரப்பர் ஷீட்டா மாற்றி பாம்பேக்கும், மெட்ராசுக்கும் அனுப்பினா நிறைய லாபம் கிடைக்கும்”

     “ரப்பர்ஷீட்டை வச்சு அவங்க என்ன பண்றாங்க”

     “ரப்பரை அடிப்படையா வச்சு பெரிய பெரிய தொழிற் சாலைகளே இருக்கு. ரப்பர்ஷீட், சின்தடிக் ரப்பர், ஆர்கானிக் ரப்பர்ன்னு கெமிக்கல் கலந்து என்னென்னவோ தயாரிக்கிறாங்க. ஸ்பேர்பார்ட்ஸ் ஆயிரகணக்குல இருக்கு.”

     “அதை நாமே தயாரிச்சா என்னவாம்”

     “முதல்ல ரப்பர் தோட்டத்தை பிடி. அப்புறமா தயாரிப்பு பத்தி பேசலாம்.”

     “இதுக்கே ஒரு லட்சம் பக்கமா மூலதனம் வேண்டியிருக்கும். டப்பு இருக்கா?”

     “ஒரு லட்சமா?” என்று விஜயகுமார் அதிர்ந்துப் போனான். சாம்பவியிடம் இதுபற்றி பேசினபோது, என் தோழி ஒருத்தியோட ஹஸ்பெண்ட் பேங்குல ஆபீசரா இருக்கார், அவர் மூலமா லோன் கேட்டுப் பார்ப்போம் நாம இரண்டு பேருக்கும் சேர்த்து ஐம்பதாயிரம் கிடைக்கும்,”

     “பாக்கிக்கு?”

     “என் நகை இருக்கிறது”

     “வேண்டாம் சாம்பவி நகையெல்லாம் விற்கக்கூடாது. நாம அதிகமா ஆசைப்படறோம். பிசினஸ் எப்படி வருமோ என்னவோ தெரியாது. ஆழம் தெரியாம காலை விடக் கூடாது. முதல்ல லோன்ல கிடைக்கிற பணத்தை வைத்து அரை ஏக்கர் ரப்பர் தோட்டத்தை குத்தகை பேசுவோம் பிறகு பார்த்துக் கொள்வோம்.”

     சாம்பவி உடன் காரியத்தில் இறங்கினாள். பாங்க் லோன் கிடைத்தது. ரப்பர் மரங்கள் குத்தகை பேசப்பட்டன. அவர்களுடைய நேரம் நன்றாக இருந்ததாலோ என்னவோ அவைகள் நிறைய பால் சுரந்தன. ரப்பர் பால் பதப்படுத்தப்பட்டு ஷீட்டுக்களாக மாற்றப்பட்டு லாரி லாரியாய் வெளியூருக்குப் போயின.

     ஒரு சீசனிலேயே போட்ட முதல் இரட்டிப்பாயிற்று. அவர்களுக்கு பிசினஸ் நம்பிக்கை பிறந்தது. ஆர்வமும் வந்தது, அரை ஏக்கர் ஒரு ஏக்கராயிற்று. விஜயகுமார், சாம்பவியின் ஊக்கத்தில் புத்துணர்ச்சி பெற்றான். பிசினஸ் வளரும் அறிகுறி தெரிந்தது.

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles