தவழும் பருவம்  

      

     ரப்பரை வைத்து ஏன் நாமே தொழில் தொடங்கக் கூடாது என்று அது சம்ப்ந்தமாய் ஆராய்ச்சி நடத்தினான். மெஷின்களுக்கு ஆர்டர் கொடுத்தான். மூலதன பற்றாக் குறைக்கு சாம்பவியின் நெக்லஸ் கூட இரையாயிற்று.

     வீட்டில் தாய், “நெக்லஸ் எங்கேடி” என்று கேட்ட போது, “டேம் பார்க்கப் போனபோது விழுந்து விட்டது” என்று பொய் சொல்லி, “உனக்கு கொஞ்சன்னாலும் பொறுப்பிருக்கா” என்று வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

     ஐந்து பவுனாயிற்றே! பவுனு இப்போ என்ன விலை விற்கிறது தெரியுமா உனக்கு?” என்று தாய் இடித்தது. சாம்பவி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளுடைய நினைவில் விஜயகுமாரின் வளர்ச்சி மட்டுமே இருந்தது.

     அவன் வளர வேண்டும். செழிக்க வேண்டும். தழைக்க வேண்டும் என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. தான் நினைத்தமாதிரி காரியங்கள் நடந்து வருவதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. இதற்கிடையில் வீட்டில் சாம்பவியின் திருமண பேச்சை எடுத்த போதெல்லாம் அவள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சமாளித்து வந்தாள்.

     “மேற்படிப்பா, எதுவும் படிக்கிற மாதிரி தெரியலையே?” என்று அம்மா கேட்க, உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா. நான் கரெஸ்பாண்டென்ஸ்ல சேர்ந்திருக்கேன். எம்.பி.ஏ, படிக்கப் போகிறேன்” என்று புழுகுவாள். பேப்பரில் மதுரை காமராஜ் பல்கலைக் கழக அறிவிப்பு வர சும்மான்னாலும் அப்ளை பண்ணி வைத்தாள்.

     அவள் எத்தனை மறைத்தும் கூட விஜயகுமாருடன் கூடிய அவளது தொடர்பை வீட்டிற்கு தெரியாமல் மறைக்க இயலவில்லை. விஷயம் தன் காதிற்கு எட்டியவுடன் அம்மா கொதித்தாள். விஜயகுமார் வேறு ஜாதி என்பதை வைத்து அவள் எதிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

     சாம்பவியின் கெஞ்சலும், வேண்டுகோளும் அவளிடம் பலிக்கவில்லை. அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். அப்பா, ஜாதியை பற்றி பெரிதாய் கவலைப்படா விட்டாலும்கூட அவனுடைய பின்னணி பற்றி கவலைப்பட்டார்.

     “அவனுக்கு சொத்து எவ்ளோ தேறும்?”

     “காதலுக்கு சொத்தாப்பா முக்கியம்?”

     “காதலுக்கு முக்கியமில்லாம இருக்கலாம். ஆனால் கல்யாணத்திற்கும் குடும்பம் நடத்துவதற்கும் பணம் முக்கியம்மா. ஒண்ணுமில்லாத ஓட்டாண்டிக்கு போய் எப்படியம்மா என் மகளை நான் கொடுக்க முடியும்?”

     “அவர் ஒண்ணும் ஓட்டாண்டி இல்லேப்பா. ரப்பர் பிசினஸ் பண்றார். ஓகோன்னு வருவார்.”

     “அதுல மூலதனம் எவ்ளோ?”

     “ஏன் ஒரு லட்சம் இருக்கும்.”

     “லோன்”

     “அது வந்து”

     “சும்மா சொல்லு. அதுவும் ஒரு லட்சம் வருமா? அப்போ இதுல

அவனோட முதலீடு எவ்ளோ?”

     “அப்படி பார்த்தா பிசினஸ் பண்றவங்க எல்லாம் சொந்த

பணத்தை போட்டா பண்றாங்க”

     “இல்லே ஒத்துக்கிறேன். ஆனா பிசினஸ்ல ஒரு அடின்னா அதை தாங்கக் கூடிய சக்தி மத்தவங்களுக்கு இருக்கும். ஒண்ணுல நஷ்டம்னா அடுத்ததுல சம்பாதிச்சு இதை தூக்கி நிறுத்துவாங்க. அந்த கெப்பாசிடி இவன் கிட்டே இருக்கா?”

     “விடாமுயற்சியும், கடும் உழைப்பும் இருக்குப்பா. போதும் போதாதிற்கு நல்ல மனசு வேற”

     “நல்ல மனசை தூக்கி ஒடப்புல போடு. பி பிராக்டிக்கல்! நாளைக்கே அவனுக்கு ஏதாச்சும் ஆகி உழைக்க முடியாம போகுதுன்னு வச்சுக்கோ, அப்போ லோன் கொடுத்தவன் சும்மா விட்டுருவானா? அத்தனையையும் அள்ளிகிட்டு போயிடமாட்டான்?”

     “ஏம்ப்பா உங்களுக்கு நல்லதே நினைக்க வராதா?”

     “இல்லேம்மா. ஒரு காரியத்துல இறங்கும் முன்பு நாலும் சிந்திக்கிறது நல்லதில்லையா? அவன் எப்போ லோனை அடைச்சு முடிக்கிறது, எப்போ பணம் சம்பாதிக்கிறது. அதுவரை என் மகளை நான் வைத்திருக்க முடியுமா?”

     “என் கல்யாணத்திற்கு என்னப்பா அவசரம்? அப்பா, இத்தனை நாட்கள் என் விருப்பத்திற்கெதிராய் நடக்காத நீங்கள் இப்போது மட்டும் ஏம்ப்பா?”

     “எல்லாம் உன் நன்மைக்காகத்தான் சாம்பி. இத்தனை நாட்கள் நீ ஆசைப்பட்டதெல்லாம் வெறும் ஆசைதான். அழகு பார்க்கத்தான். ஆனால் இது அப்படியில்லைம்மா. நீ ஆசைப்படுகிறாயே என்று அவசரப்பட்டு சம்மதித்து விட்டால் பின்னால் அதுவே உனக்கு பெரிய பாவமாகிவிடும்.”

     “நிச்சயமாய் அப்படியெல்லாம் ஆகாதுப்பா. அவர் நல்லவர். திறமை மிக்கவர். இன்னும் இரண்டாண்டுகளில் பாருங்களேன். அவர் எத்தனை உயரப் போகிறார் என்று”

     ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. இனியும் விட்டு வைத்தால் முதலுக்கே மோசம் என்று வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். அவளுக்கு அதற்கு மேலும் அங்கே இருக்க முடியவில்லை.

     அவளால் விஜயகுமாரை மறக்கவும் முடியவில்லை. அவனை தவிர வேறு எவரையும் தன் கணவனாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பெற்றோர் மீது கோபம் கோபமாக வந்தது. வெண்ணெய் திரண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் இவர்கள் அவசரப்படுகிறார்களே என்று வருத்தப்பட்டாள்.

     ஒரு அளவு வரை பொறுத்திருந்த சாம்பவி, ஒரு நல்ல தினத்தில் வீட்டை விட்டு வெளியேறினாள். விவரத்தை சொன்னதும் விஜயகுமார் ஆடிப் போனான்.

     “இது தேவைதானா சாம்பி. உன்னைப் பற்றி அவங்க எத்தனை கனவுகள் கண்டு கொண்டிருந்திருப்பார்கள்?”

     “நான் உங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறேன் குமார்.”

     “என்ன இருந்தாலும் அவங்க பெத்தவங்க இல்லையா?”

     “பெத்தவங்கதான். மகளுக்கு யாரை விருப்பமோ அவரை கட்டி வச்சுட்டா ஏன் நான் ஓடிவரப் போகிறேன்”

     “ஆனாலும் நீ அவசரப்பட்டு விட்டாய்”

     “இதுவே லேட்டு குமார். இனியும் தாமதித்தால் நாம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டிவரும். என்ன யோசிக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு பாரமா?”

     “ஏய் நானே எனக்கு பாரம். என் பிழைப்பே இன்னும் உறுதிப்படலே. என் காரியமே எனக்கு இன்னும் புரியல. நம் கல்யாணத்தை வேறு வச்சுக்கிட்டு என்ன செய்ய”

     “இதோ பாருங்க குமார், கல்யாணத்துக்கு நான் ஆசைப்படலே. அவசரமும் படலே. ஆனால் நிலைமையை யோசிக்கும் போது நாம் உடனே கட்டிக்கணும்னு தோணுது”

     “உடனே எப்படி முடியும்”

 “ஏன் முடியாது? உங்களோட நண்பர்களையெல்லாம் கூப்பிடுங்க. வானவில் இலக்கிய வட்டத்துல தான் உங்களுக்கு நண்பர்களாயிற்றே. நேரா ரிஜிஸ்தர் ஆபீசுக்குப் போவோம். அவங்களை சாட்சியா வச்சு ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிப்போம்”

     “மேரேஜ் செஞ்சுகிட்டு”

     “மேரேஜ்ங்கிறது சும்மா ஒரு பாதுகாப்பிற்குத்தான் அதுக்கு பிறகு நாம எப்படியும்போல பிரண்ட்சாவே இருப்போம். நமக்குள்ளே ஒட்டும் வேணாம். உறவும் வேணாம். பிசினசில் கவனம் செலுத்துவோம். ரெண்டு பேரும் சேர்ந்து பாடுபடுவோம். பணம் சம்பாதிப்போம். ஒரு உயரத்தை தொட்டு விட்டு அப்புறமாய்...”

     “எனக்கென்னவோ பயம் தோணுதுடா. நாம ஜெயிப்போமா?”

     “நிச்சயமா. இதில் என்ன சந்தேகம் தலைவா?”

     சாம்பவி கொடுத்த தெம்பில் அவன் புத்துணர்ச்சி பெற்றான். அவர்கள் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொண்டதை அறிந்ததுமே சாம்பவியின் பெற்றோர் உடைந்து போயிர். அவள் தங்களுடைய மகளே இல்லை என்று எளிதாய் கைகழுவி விட்டு, கழுதை எக்கேடாவது கெடட்டும். இனி நம் பார்வையிலேயே படக்கூடாது என்று அப்பா தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய் விட்டார்.

     விஜயகுமாருக்கும், சாம்பவிக்கும் அப்போது நேரமும் நன்றாக இருந்தது. அத்துடன் அவர்களுடைய உழைப்பும், முயற்சியும் சேர்ந்து கொள்ள, பிசினஸ் செழிக்க ஆரம்பித்தது.

     லோன் தீர்ந்ததும் அவர்கள் தெய்வசாட்சியாய் திருமணம் செய்து கொண்டனர். போனவருடம் விஜி பிறந்தாள். அதுவரை அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே கழிந்து வந்தது.

     சாம்பவி அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி வந்தாள். அவன் தளரும்போதெல்லாம் தட்டிக் கொடுத்தாள். அவளின் சத்துணவில் அவன் மீனாட்சிபுரத்தில் வீடு கட்டினான். அதில் குடியும் புகுந்து விட்டனர். அப்போதுகூட பிரச்சினையில்லை.

     இரண்டு மாதம் முன்பு அவளுக்கு திடீரென தலை சுற்றல் எடுத்தது. மயக்கமாய் வந்தது. கைகால்களில் மதமதப்பு எழுந்தது. ஆரம்பத்தில் அவள் அதை அத்தனை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒய்வெடுத்தால் சரியாகப் போகும் என்று நினைத்தாள். பிறகு வாந்தி மேல் வாந்தியாக வரவும் அவளுக்கே சந்தேகம் வந்தது. அருகில் நிரஞ்சம் கிளீனிக்கிற்கு போய்.

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles