தவழும் பருவம்  

      

    

      டாக்டரிடம் செக்கப் பண்ணிக் கொண்டதில் அவளுக்கு பி.பி. இருப்பதாகவும் கொலஸ்ட்ரால் இருப்பதாகவும் சொன்னார்கள் அதை கண்ட்ரோல்  பண்ணாவிட்டால் ஆபத்து என்றனர்.

     இந்த இளம் வயதில் இத்தனை கொலஸ்ட்ரால் கூடாது, உடனே கவனிக்கவில்லையென்றால் ரத்தத்குழாய் வெடித்து விடும் அபாயம்கூட உண்டு என்றனர். ஆரம்பத்தில் இது விஷயம் எதுவுமே விஜயகுமாருக்கு தெரியாது.

     எதற்கு அவனிடம் சொல்லி அவனுக்கும் கவலையளிக்க வேண்டும் என்று சாம்பவி அலட்சியமாகி விட, ஒருநாள் அவளுடைய வலதுகை, வலதுகால் செயலிழந்து போயிற்று. வாய் குழறிற்று. பேச்சு சிதறிற்று.

     மருத்துவமனைக்கு கொண்டு போய் செக்கப் பண்ணின போது அவளுக்கு வாதம் என்று குண்டை தூக்கிப்போட்டனர். ஸ்கேன் பண்ணினதில் அவளுடைய மூளையின் இடது பாகத்து ரத்தக் குழாயில் ரத்தக்கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் அது ‘செரிப்ரல் த்ராம்போ’ ஸில் (Cerebral Thrombosis) என்றும் அதன் காரணமாய் அவளுக்கு பாரலிசிஸ் அட்டாக் ஆகியிருப்பதாகவும் சொன்னார். அதைக் கேட்டதும் விஜயகுமார் அப்படியே அடங்கிப் போனான். அதை தேற்றிக் கொள்ள ரொம்ப சிரமப்பட்டான்.

     “இதை சரிபண்ண முடியாதா டாக்டர்?”

     “சரி பண்றதுக்கு சிகிச்சைன்னு எதுவும் இல்லை. மெல்ல மெல்ல பயிற்சினாலதான் குணப்படுத்தணும். அதுவும் பேஷண்டுக்கு பி.பி. இருக்கிறதால முழுசும் கியூர் பண்ணிர முடியும்னு சொல்ல முடியாது?”

     “இதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை டாக்டர். இந்தியாவுக்குள்ளே எங்கேன்னாலும் சரி. இல்லை அமெரிக்கா போனாதான் குணப்படுத்த முடியும்னா அதுக்கும் நான் தயாராக இருக்கேன் டாக்டர்”

     “உணர்ச்சிவசப்படாம நான் சொல்றதை அமைதியா கேளுங்க. நிஜத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நீங்க செலவு பண்றதை பத்தி இல்லை. உங்ககிட்ட பணம் இருக்கலாம். ஆனால் நோ யூஸ் விஜய். டாக்டர்ஸ் ஆர் ஹெல்ப்லஸ். நான் கொஞ்சம் மருந்துகள் எழுதித் தருகிறேன். பயிற்சிகள் சொல்லித் தருகிறேன். அவற்றை விடாமல் கடைபிடித்து வாருங்கள்”

     “அப்போ என்னோட மனைவி இனி எழவே மாட்டாளா டாக்டர்”

“அப்படின்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பிழைச்சுக்கலாம். லெட் அஸ் ஹோப் சோ”

     விஜயகுமார் அன்று உடைந்துப் போனவன்தான். இது வரை தெளியவேயில்லை. அவளிடம் வெளியே சகஜமாகப் பழகினாலும்கூட உள்ளுக்குள் அழுது கொண்டேயிருந்தான்.

     நாங்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்; எதற்காக இப்படி ஒரு தண்டனை என்று நினைத்து வருந்தாத நாளில்லை. அந்த வருத்தத்தையெல்லாம் அவன் தனக்குள்ளே அடக்கிக் கொண்டான்.

     தவறியும்கூட அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவன் காட்டிக் கொள்ளாவிட்டாலும்கூட சாம்பவியால் அவனுடைய நிலைமையையும் கஷ்ட நஷ்டங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது.

     ‘நான் பாவி! நம்மால் தான் அவருக்கு எத்தனை சிரமம். அவருக்கு நாம் பணிவிடை செய்வதை விட்டுவிட்டு அவர் நமக்கு செய்து கொண்டிருக்கிறாரே?’ என்று நினைத்து அழுவாள்.

     சாம்பவிக்கு விஜயகுமார் தினமும் பயிற்சிகள் செய்து வந்தான். கைகால்களை தூக்கி, மடக்கி, நீட்டி அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் பயிற்சி. அப்புறம் பென்சன்டின். லாசிக்ஸ், அடென்னா கோன்ற மருந்துகள்.

     ஊரில் சில பேர் ஆயுர்வேதமும், சித்த வைத்தியமும் பாருங்கள் என்க, அதையும் கூட முயற்சித்து விட்டார்கள். எந்த பலனுமே தெரியவில்லை. குணமாகி விடும் என்கிற நம்பிக்கையே சாம்பவிக்கு போயிற்று.

     அதன் பிறகு எதிர்காலம் அவளை பயமுறுத்திற்று. கணவனுக்கு தொழிலில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அவற்றிற்கெல்லாம் நாம் உதவாமல் போனாலும், அட்லீஸ்ட் அவன் வீட்டிற்கு வரும் போதாவது நிம்மதி தர வேண்டும். ஓய்வு தரவேண்டும். இதே கணக்கில் போனால் அவர் உடைந்து போவார். பாடுபட்டு சம்பாதித்ததற்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும். தவிர. பெண் குழந்தை வேற அவளுடைய தேவைகளையும், ஆசாபாசங்களையும் எந்த அளவிற்கு அவரால் பூர்த்தி செய்து விடமுடியும்!

     விடியற்காலையில் குழந்தை அழ, சாம்பவிக்கு தூக்கம் போயிற்று. ஏற்கனவே தூங்க முடியாமல் அரைகுறை மயக்கத்தில் படுத்திருந்தவள் கணவனை திரும்பி பார்த்தாள்

     அவன் அலுப்பில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். குழந்தை ஓயாமல் அழுதது. அதன் சப்தம் அவனை கொஞ்சங்கூட பாதித்ததாகவே தெரியவில்லை. பாவம், பகல் முழுவதும் ஓடி களைத்து அலுப்பு அவனுக்கு.

     அவனை எழுப்பலாம் என்று எம்பி பார்த்தாள். எழ முடியவில்லை வலதுகையும், காலும் மரக்கட்டை போல கிடந்தன. இடது கையையும் காலையும் மட்டும் வைத்துக் கொண்டு அவளால் உடலை திருப்பக் கூட முடியவில்லை. எரிச்சலாய் வந்தது.

     குழந்தை அழுகையை நிறுத்துவேனா என்க. “ஏங்க” என்று அழைத்தாள். அந்த வார்த்தைகள் அவனுடைய காதில் விழும் முன்பே மடிந்து போயின.

     அவள் தன் இடது காலை மெல்ல எக்கி அவனை நிரட, “ம்...என்னா சாம்பவி?” என்று எச்சிலை துடைத்துக் கொண்டு எழுந்தான்.

     “குழந்தை ரொம்ப நேரமா அழுவுது பசிக்கும்னு நினைக்கிறேன்.

     “சாரி எனக்கு சுத்தமாவே கேட்கலை. அடிச்சு போட்ட மாதிரி தூக்கம்” என்று எழுந்து லுங்கியை சரி பண்ணிக் கொண்டு போய் விஜியை தூக்கினான்.

     “அழாதே அழக்கூடாது பசிக்குதா? ங்கா வேணுமா? இப்போ தரேண்டா?”

     அடுப்படிக்கு போய் பால் காய்ச்சி பாட்டிலில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தான். வயிறு நிறைந்ததும் குழந்தை தூங்கிப் போனது.

     “பயிற்சி பண்ணி விடட்டா?” விஜயகுமார் கேட்க, “படுத்து தூங்குங்க காலைல பார்த்துப்போம். இதுக்குதான் சொன்னேன் கல்யாணம் பண்ணிக்குங்கன்னு”

     “எதுக்கு பயிற்சி செய்து விடவா” என்று சிரித்தான்.

     “கல்யாணம் பண்ணிகிட்டா வர்றவ குழந்தையை கவனிச்சுக்குவா இல்ல? உங்களுக்கு எதுக்காக இத்தனை பிடிவாதம். நமக்கு பெண் குழந்தை என்பதை மறந்துவிட வேண்டாம். அதுக்கு அன்பு செலுத்தவும், ஆதரவு காட்டி வளர்க்கவும் நிச்சயமா உங்களால் முடியாது”

     “நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை?”

     “நான் இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினைன்னா சொல்லுங்க செத்துப் போகிறேன்” அவள் சொல்லி முடிக்கும் முன்பு விஜயகுமார் சட்டென எழுந்து அவளுடைய வாயை பொத்தினான். “சாம்பி! ஏன் இப்படி யெல்லாம் அபத்தமாக பேசுகிறாய்”

     “விடுங்க எது அபத்தம்? நான் உயிரோடு இருப்பதா இல்லை பேசுவதா? நானும் எத்தனை நாளா சொல்லிக் கிட்டிருக்கேன். என் பேச்சை கொஞ்சம்னாலும் காதுல வாங்கறீங்களா? இவள் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது இவள்தான் முடங்கிக் கிடக்கிறாளே என்று அலட்சியப்படுத்துகிறீர்கள்”

     “அப்படியில்லை சாம்பி”

     “அப்புறம் எப்படியாம்? கடவுள் என்னை ஏன் இப்படி போட்டு சித்திரவதை பண்றானோ தெரியலை பேசாம கொண்டு போயிட்டா யாருக்கும் தொந்தரவு இருக்காதில்லை”

     “சாம்பவி என் இதயத்தை குத்தாதே என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. உன்னை வைத்த இடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க என்னால் முடியவே முடியாது”

     “அதுக்காக உங்களை நீங்களே அழிச்சிக்கணுமா? எனக்கு என்ன முடிவுன்னும் எப்போ முடிவுன்னும் தெரியாது. அதுவரை எனக்காக காத்திருந்து... அப்புறம் உங்களுக்கு வயசாகிவிடும்”

     “சாம்பி, கொஞ்சம் யோசிச்சு பார் இதே நிலைமை எனக்கு வந்திருந்தா நீ வேறு கல்யாணம் செய்து கொள்வாயா?”

     “இது இடக்கு கேள்வி வந்திருந்தான்னு யோசிக்கிறது அனாவசியம் இப்படியே வந்திருந்தாலும் ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரி வைத்து பேசக்கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலளவிலும் மனதளவிலும் வித்தியாசம் இருக்கு விரும்பியோ விரும்பாமலோ”

     “போகட்டும் விடு. உன் பேச்சுப்படியே நான் ஓக்கே சொல்றேன்னே வைச்சுக்கோ. என்னை எந்த பெண் கட்டிக்க முன் வருவா”

     ‘ஏன் உங்களுக்குகென்ன குறை?’

     “எனக்கு வயசு முப்பத்தி ஏழு”

     “இது ஒரு வயசே இல்லை. இப்போதும் என் புருஷன் மாப்பிள்ளை மாதிரிதான் இருக்கான்” சாம்பவி கண்களை தன் இடது கையால் துடைத்துக் கொண்டு சொன்னாள்.

     “எனக்கு யார் பெண் தருவார்கள்”

     “அந்த கவலை உங்களுக்கு ஏன்? தரகரை வரச் சொல்லுங்கள். நான் பேசறேன். டவுரி வேணாம். தோல் சிகப்பு வேணாம். அடக்கம் ஒடுக்கமா குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தாப் போதும்”

     “ஆனா அவ நம் குழந்தையை பாத்துக்கணுமே சாம்பி”

     “அதெல்லாம் பாத்துப்பா. தைரியமா உங்களோட முடிவை சொல்லுங்க” என்று அவள் நிர்ப்பந்திக்கவும், “எனக்கு இதில் விருப்பம் இல்லை அப்புறம் உன் இஷ்டம்” அவன் வேண்டா வெறுப்புடன் ஒப்புக் கொண்டான்.

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles