தவழும் பருவம்  

      

     மறுநாளே தரகர் வரவழைக்கப்பட்டார். தங்களுடைய கல்யாணம் நாள் நட்சத்திரம் பார்க்காமல், ஜாதக பொருத்தம் பார்க்காமல் நடந்ததால் தான் தனக்கு இப்படி நேர்ந்ததோ என்கிற கவலை சாம்பவியை வாட்டிக் கொண்டிருந்தது.

     இனி நடக்கிற கல்யாணமாவது எல்லா பொருத்தங்களும் பார்க்கப்பட்டு நடக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். வருகிறவளாவது எந்தவித நோய் நொடிக்கும் ஆளாகாது கடைசிவரை கணவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.

     அதற்கு வேண்டி தரகரிடம் தன் கணவரின் ஜாதகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னாள்.

     “தரகரே! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. இன்னும் ஒரு மாசம்தான் டயம். அதுக்குள்ளே எம் புருஷனுக்கு நல்ல பெண்ணா பார்த்து தந்திரணும். ஆமா சொல்லிபுட்டேன்”

     “அம்மா உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியலை. கட்டின புருஷனுக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கிற முதல் பெண்டாட்டி நீங்களாகதாம்மா இருப்பீங்க”

     “புகழ்ந்ததெல்லாம் போதும். போய் ஆகவேண்டியதை பாருங்க, போங்க”

     விஜயகுமார் அவளடைய விருப்பம் எதிலும் தலையிடவில்லை. கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவனை மாற்றியவள் அவள். அவளுடைய விருப்பத்திற்காகத்தான் இந்த கல்யாணம். அவளை கவனித்துக் கொள்ள பொறுப்பான ஒருத்தி கிடைப்பாளே என்கிற நப்பாசையிலும் நம்பிக்கையிலும்தான் அவன் கல்யாணத்திற்கே சம்மதித்திருந்தான்.

     அப்படியிருக்கும்போது பெண்ணை அவளே தேர்ந்தெடுப்பதுதான் முறை. அதுதான் நல்லது என்று அவன் ஒதுங்கிக் கொண்டான்.

     அடுத்த வாரத்திலேயே தரகர் ஒரு கட்டு ஜாதகத்துடனும், போட்டோக்களுடனும் வந்தார். சாம்பவி சில படங்களை தேர்வு செய்து கொடுத்து இவர்களின் ஜாதக பொருத்தங்கள் பார்த்து வாருங்கள் என்றாள்.

     அவற்றில் மூன்று ஜாதகங்கள் விஜயகுமாரின் ஜாதகத்தோடு பொருந்தின.

     “ஏங்க இப்போ என்ன பண்ணலாம்?”

     “மூணெல்லாம் எனக்கு தாங்காதுப்பா”

     “சீ. நான் ஒருத்தி உங்களை படுத்தறது போதாதா? ஒண்ணுபோதும். இதுல ஏதாவது ஒரு பெண்ணை செலக்ட் பண்ணுங்களேன்”

     “சாம்பி இப்போதுதான் நீ என்னை படுத்துகிறாய். நீயாச்சு பெண்ணாச்சு. ஆளைவிடு” என்று அவன் வெளியேறினான்.

     சாம்பவி அந்த மூவரில் ஒரு படத்தை காட்டி, இந்த பொண்ணோட பேரு என்ன தரகரே? என்றாள்.

     “வந்து லதிகா” 

     “இதோட பேக்கிரவுண்டு என்ன?”

     “பொண்ணு நல்ல சிகப்பு. உங்களை மாதிரியே அழகாக லட்சணமாக இருக்கும்”

     “நான் அதை கேட்கவில்லை”

     “இருங்கம்மா, அவசரப்படறேளே. ஒவ்வொண்ணா தானே சொல்லிட்டு வரமுடியும்? டிகிரி படிச்சிருக்கா. தங்கமான குணம். வீட்டில் வறுமை. அப்பா, அம்மா இல்லை. ஏறக்குறைய அனாதை மாதிரிதான். அண்ணன்காரன் இருக்கான். மேற்கொண்டு படிக்கணும்ங்கிறது லதிகாவோட ஆசை. தூத்துக்குடி டவுன்லயே டைப்ரைடிங் இன்ஸ்டிடியூட்ல வேலை செய்யுது”

     “எங்க குடும்பத்தை பத்தின விவரத்தையெல்லாம் சொன்னீரா?”

     “”

     “என்னை பற்றியும் என் நிலை பற்றியும்?”

     “ஓ எல்லாம் சொல்லியாச்சு”

     “அப்போ அதுக்கு ரெண்டாதாரமாய் வாக்கப்பட முழு சம்மதம்னா இங்கே அழைச்சு வாங்க. நான் கொஞ்சம் பேசணும்”

     “ஓ போஷா அழைச்சு வரேனே”

     “வரும்போது உம்ம ஓவை விட்டுவிட்டு வாரும்”

     தரகர் ‘’ என்று சிரித்துக் கொண்டு வெளியேறினார். மறுநாளே தரகர் அவர்களை டாக்சியில் அழைத்துக் கொண்டு வந்தார். லதிகா என்ற அந்தப் பெண் சாம்பவி எதிர்பாத்ததை விட சற்று அழகாகவே இருந்தாள். சாம்பவியை விட அவள் நிறமும் அதிகம். பருமனும் அதிகம்.

    அவள் முடியை அகலப்பின்னி கிளிப் போட்டு பூ வைத்திருந்தாள். மணப்பெண் மாதிரி பட்டுப்புடவையுடன் நாணத்தையும் சுற்றியிருந்தாள். அவளுடன் அவளுடைய அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள்.

     அவர்களை பார்த்தாலும் நல்லவர்களாத்தான் தெரிந்தார்கள். லதிகா, சாம்பவியிடம் வந்து நமஸ்கரித்துவிட்டு தரையில் அமர்ந்து கொண்டாள்.

     “எழுந்திரிம்மா. எழுந்து நாற்காலியில உட்கார்”

     “பரவாயில்லைக்கா”

     ‘அக்கா’ அந்த வார்த்தையை கேட்டதுமே அவளுக்கு குளிர்ந்தது. அவளுடைய பணிவும். அடக்கமும் சாம்பவிக்கு மகிழ்ச்சியை தந்தது. இவள்-இவள்தான் நாம் தேடின பெண். இவள்தான் நம் கணவருக்கு ஏற்றவள்.

     அவளுக்கு சில நொடிகள் கண்கள் நிறைந்து போயின. “எங்க குடும்பத்தோட நிலைமை உங்களுக்கு தெரியும் தானே? கட்டின பொண்டாட்டியே தன் கணவனுக்கு வேறு பெண் பார்ப்பது உங்களுக்கு விசித்திரமா இருக்கலாம். ஆனால் இதில் விகற்பமில்லை. வாழ்க்கைல நாம என்னன்னவோ எதிர்பார்க்கிறோம். என்னன்னவோ மனக்கோட்டைகளை கட்டறோம். எத்தனையோ கனவுகள் காண்கிறோம். எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமாயிடறதில்லை. என் நிலைமையும் கூட அப்படித்தான். நானும் அவரும் ஒருவரை ஒருவர் நேசிச்சோம். உயிரா பழகினோம். வீட்டுல ஒத்துக்கலை. தனியா வந்து எங்களை யாருமே பிரிக்க முடியாதுன்னு இறுமாப்போட வாழ்ந்துக்கிட்டிருக்கிறப்போ நோய் நானிருக்கேன்னு வந்திருச்சு. எனக்கு எது வந்தாலும் பரவாயில்லை. அவர் நல்லா இருக்கணும். வாழ்க்கைல அவர் ரொம்பவும் அடிபட்டு வந்திருக்கார். முன்னேறணுங்கிற உறுதியில படிப்பையெல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு இளநீர் விற்றவர். எந்த தொழிலையும் மட்டமா நினைக்காம உழைச்சு உழைச்சு முன்னுக்கு வந்திருக்கார்.

     அவரோட ஆர்வத்துக்கும் கடும் முயற்சிக்கும் நான் இத்தனை நாள் எண்ணெய் போல இருந்து குடும்ப விளக்கை பிரகாசமா எரிய வச்சிட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமா இப்போ எண்ணெய் வத்திப் போச்சு. ஆனாலும் இந்த விளக்கு மங்கிடக் கூடாது, அணைஞ்சு குடும்பத்துல் இருள்சூழ்ந்திடக் கூடாது. திரும்ப ஒளி ஏத்தறதுக்கு ஒரு பெண் தேவை. எந்த விதத்திலேயும் என்னால அவர் பாதிக்கப்படக் கூடாது. என் கதை முடிஞ்சு போன ஒண்ணு. ஆனா அவருக்கு இன்னும் வயசு இருக்கு அவர் எபோதும் சந்தோஷமா இருக்கணும். அதை பார்த்துகிட்டு நான் கண்களை மூடணும். அதுதான் என் ஆசை”

     அதை சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு நாக்கு குழறியது. தொண்டை கமன்றது. அவள் விக்கி விக்கி அழ, அதன் பாதிப்பு வந்தவர்களுக்கும் கூட தொற்றிக் கொண்டது. லதிகா எழுந்து சாம்பவியின் தலையை வருடி விட்டு, “உங்களுக்கு கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாப் போகும்க்கா! என்று ஆறுதலாய் பேசினாள்.

     “இனி சரியாய் போனால்தான் என்ன, போகாட்டி தான் என்ன? அதான் நீ வரப் போகிறாயே... உன்னை பார்த்ததும் என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சு, சார்! நல்லா யோசிச்சுதானே உங்க தங்கையை தருவதற்கு சம்மதிச்சீங்க...?”

     “அம்மா! ரெண்டாந்தாரம்ன்னதும் நான்கூட யோசிச்சேன். இவதான் பரவாயில்லைன்னு முன்வந்தா. இப்போ உங்களை பார்க்கும்போது ஏன் யோசிச்சோம்னு நானே வெக்கப்படறேன்.”

     லதிகாவின் அண்ணன் சொல்லி விட்டு உணர்ச்சி வசப்பட்டான். “கவலையே படாதீங்கம்மா. என் தங்கை உங்களை பொன் போல பார்த்துக்குவா. ஆனா நாங்க ஏழைபட்டவங்க, எங்களால பெரிசா எதுவும் செய்துட முடியாது!”

     “வேணாம் சார். நாங்க எதுவுமே எதிர்பார்க்கலே. தரகரே, நீங்க சொல்லலியா இவங்ககிட்டே?”

     “ஓ...நான் சொன்னேனே!”

     “அவர் சொன்னார்...சொன்னார். இருந்தாலும் கூட நாங்க எங்க நிலைமையை வெளிப்படுத்தணுமில்லையா...?”

     சற்று நேர மவுனத்திற்கு பின் சாம்பவி, “லதிகாவோட நான் கொஞ்சம் தனியா பேசணும். அதுக்கு அனுமதிப்பீங்களா...?” என்றதும் அவர்கள் எழுந்து வெளியே போய் அமர்ந்து கொண்டார்கள்.

     சாம்பவி அவளை பரிவுடன் பார்த்து, “இப்படி வந்து பக்கத்துல உட்காரும்மா” என்று அழைத்து அமர்த்திக் கொண்டாள். அவளை பரிவுடன் பார்த்து, “லதிகா! உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா...?

     “ம்” என்று அவள் வெட்கப்பட்டாள்.

     “அவரை பார்த்தாயா...?”

     “இல்லை. அண்ணனும் அண்ணியும் பார்த்துட்டு வந்தாங்க. அவங்களுக்கு பிடிச்சிருக்கு. எனக்கு அது போதும்”

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles