தவழும் பருவம்  

           

     “போதாது நீயும் பார்க்கணும். உனக்கும் அவரை பிடிக்கணும். கல்யாணம்ங்கிறது வெறும் விளையாட்டில்லை. இங்கே அவர் மட்டுமில்லை. தவழுகிற பருவத்தில் என் குழந்தையும், தவழ முடியாமல் நானும் இருக்கிறேன். எங்களுடைய தேவைகள் எல்லாம் உன் பொறுப்பு. உன்னுடைய சுமை. எல்லாவற்றையும் நீ சுமந்தாக வேண்டும். அவர் நல்லவர். தங்கமான குணம் படைத்தவர். தகுதியும் திறமையும் இருக்கு. ஆனால் இப்போ உற்சாகம் கொடுக்க ஆள் இல்லை. அதுக்குதான் நீ! நான் மனந்திறந்து கேட்கிறேன். நீயும் அதே வகையில் பதில் சொல்ல வேண்டும். உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம்தானே? வெறும் அனுதாபத்தாலோ இல்லது நிர்பந்தத்தாலோ இதற்கு சம்மதிக்கவில்லையே...?”

     “இல்லைக்கா”

     “சரி, கல்யாணத்திற்கு பிறகு உனக்கு வேலைக்குப் போக விருப்பமா?”

     “அப்படியெல்லாம் இல்லை. வீட்டு கஷ்டத்தால் தான் வேலை பார்க்கிறேன்.”

     “நல்லது இனி விட்டிரு. இங்கே பணத்திற்கு கஷ்டமில்லை. அவர் நிறைய சம்பாதிக்கிறார். குடும்ப பொறுப்பை ஏத்துக்கத்தான் ஆள் வேணும். என்ன தெரிஞ்சுதாம்மா?...”

     “சரிக்கா.”

     சாம்பவி ஆயாவை அழைத்து அவர்களை உபசரிக்கச் சொல்லிவிட்டு கணவனுக்கு சொல்லி அனுப்பினாள். விஜயகுமார் அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.

     விருந்துகளை பார்த்ததும் வெட்கப்பட்டு, “என்ன விஷயம் சாம்பவி... சீக்கிரம் சொல்லிவை. நான் போகணும்!”

     “என்ன அவசரம்... உட்காருங்க. அது தான் பொண்ணு. பேரு லதிகா” என்று அறிமுகப்படுத்தவும், விஜயகுமார் ஒரு நிமிடம் அவளை நேரிட்டு, சட்டென தலையை தாழ்த்திக் கொண்டான்.

     “பிடிச்சிருக்கா...?” என்று அவள் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். “உன்னையுந்தாம்மா கேட்கிறேன். அய்! சிரிக்கிறாயா இல்லை வெட்கப்படுகிறாயா ஏங்க உங்களுக்கு...?”

     “நீ பார்த்து ஓ.கே. சொன்னா சரிதான். எனக்கு வேலையிருக்கு. உடனே போகணும். அப்போ நான் வரேன் சார்! வரேம்மா!”

     எல்லோருக்கும் கும்பிடு போட்டு விட்டு விஜயகுமார் ஓடிப் போனான். லதிகாவிற்கு அவனை பார்த்ததிலிருந்து படபடப்பாகவே இருந்தது.

     அடுத்த மாதத்திலேயே நல்ல நாள் பார்க்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை விமர்சையுடன் நடத்த வேண்டும் என்று சாம்பவி பிரியப்பட்டாள்.

     “எதுக்கு சாம்பி...? எதுக்காக விளம்பரப்படுத்தணும்? பேசாம கோவில்ல வச்சு தாலி கட்டி, மாலை மாத்திகிட்டாப் பத்தாதா...”?

     “பத்தாது”

     “ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி. திருமணத்துக்கு நான் ஒத்துக்கொண்டிருக்கவே கூடாது. இது ரெண்டாம் கல்யாணம்தானே? இதில் விமர்சை எதற்கு?”

     “உங்களுக்கு வேண்டுமானால் அது ரெண்டாங் கல்யாணமாய் இருக்கலாம். ஆனால், அவளுக்கு...? அவளுடைய நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அவளும் பெண்தானே! கல்யாணத்தை தடபுடலா நடத்தணும், ஊரறிய தாலி கட்டிக் கொள்ளணும்னு அவளுக்கு மட்டும் ஆசையிருக்காதா...?”

     “ஆசையிருக்குங்கிறதுக்காக எல்லாத்தையும் செய்திட முடியுடமா... உன்னோட இந்த நிலைமையில...”

     “என்னோட நிலைமையை அடிக்கடி ஞாபகப்படுத்தாதீங்க. கேட்டுகேட்டு சலிச்சுப் போச்சு. என்ன செலவானாலும் சரி. கல்யாணத்தை சிறப்பாகத்தான் நடத்தியாக வேண்டும்.”

     “சாம்பி... நான் செலவுக்கா பார்க்கறேன்? எனக்கு குறு குறுப்பா இருக்கு. வெளியே சொல்லிக்கவே கூச்சமாயிருக்கு.”

     “நீங்க எதுக்காக கூச்சப்படணும்...? என்ன தப்பு செஞ்சீங்கன்னு குறுகுறுக்கணும்...?”

     “நீ நோயை அனுபவிக்கும்போது கல்யாணம் பண்ணிக்கிறது என்னோட சுயநலம்தானே. இன்பத்தை ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிட்டோம். துன்பத்திலும் அந்த பங்கு வேண்டாமா?”

     “உங்க புராணத்தை மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா. போங்க! மசமசன்னு நிக்காம புது மாப்பிள்ளையா லட்சணமா ஆக வேண்டியதை பாருங்க. பத்திரிகை அடிக்கணும், பந்தல்காரன், மேளக்காரன்னு எத்தனை வேலையிருக்கு...? வீடியோவுக்கும், போட்டோவுக்கும் சொல்லி வையுங்க”

     விஜயகுமார்-லதிகா திருமணம் சாம்பவி விரும்பியபடி விமர்சையாக நடந்து முடிந்தது.

     தாலி கட்டின கையோடு விஜயகுமார், லதிகாவை சாம்பவியிடம் அழைத்து வந்து “ஆசீர்வாதம் வாங்கிக்கோ. இவதான் இந்த வீட்டுக்கு மூத்தவ மூத்தவ மட்டுமில்லை. என்னோட எல்லாமுமே இவதான்!” என்றான்.

     அதை கேட்டதும் அவளுடைய அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்னவோ போலிருந்தது. அவர்களுடைய முகம் வாடிப் போயிற்று. லதிகா புன்னகை மாறாமல் தரையில் விழுந்து, “என்னை ஆசீர்வதிங்கக்கா...!” என்றாள்.

     “சீ...சீ... எழுந்திரிம்மா அவர் சொல்றார்ன்னு நீயும் விழுகிறாயே. நான் அப்படி என்ன தள்ளாமையாகி கிடக்கேன்...?” என்று கேட்டு கண் கலங்கினாள். அவர் சொன்னார்ங்கிறதுக்காக நீ வருத்தப்படாதே நான் மூத்தவளா இருந்தாலும் இங்கே உனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இனி இந்த வீட்டு ராணி நீதான்!”

     அன்று ராத்திரி.

     அறையில் பூக்கள் வாசமடித்து கட்டில் அவங்கரிக்கப் பட்டிருக்க, லதிகா வெட்கத்துடனும் பதட்டத்துடனும் அமர்ந்திருந்தாள். பழங்களும், பட்சணங்களும் தாம்பாளத்தில் அழகு காட்டின.

     விஜயகுமார் ஹாலில் சாம்பவியிடம் அமர்ந்திருந்தான். அவனுடையமுகம் இறுகிப் போயிருந்தது. உம்மென்று அமர்ந்திருந்தான். மனத்திரையில் அவளை சந்தித்தது, இளநீர் வெட்டிக் கொடுத்தது, இண்டர்வியூ. ஊர் ஊராய் சுற்றின தெல்லாம் மின்னலாய் அடித்தன. பிசினஸ் ஆரம்பித்தது. சாம்பவி உதவினது, உற்சாகம் தந்தது எல்லாமே நினைவிற்கு வந்து அவனை அலைக்கழித்தன.

     தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதனருகில் கயிறு கட்டி அதை தன் கையில் பிடித்தபடி ஆயா தூங்கிக் கொண்டிருந்தாள். இல்லை அவள் தூங்கவில்லை. தூங்குவதாக பாவனை பண்ணிக் கொண்டிருந்தாள். அவளுடைய காதுகள் ஹாலின் மேல் கூர்மையாய் கவனம் செலுத்தின.

     “மாப்பிள்ளை சார்! கொஞ்சம் சிரிக்கிறது. சிரித்தால் என்ன குறைந்து போவீர்களாம்...?” சாம்பவி கேட்டு விட்டு அவனை அர்த்தத்துடன் பார்த்தாள்.

     “லதிகாவை உங்களுக்கு பிடிச்சிருக்கா...?”

     அவன் பதில் சொல்லவில்லை. அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

     “அவ நல்லவங்க. குணம்னா அவ்ளோ குணம்! என்னவோ கூட பிறந்தவ மாதிரி அக்கா அக்கான்னு எம் மேல உயிரையே விடறா. சரி, சரி...இன்னும் ஏன் இங்கே... கிளம்புங்க நேரமாச்சு”

     “சாம்பி... இதெல்லாம் தேவைதானா...?”

     “நிச்சயமா.. கல்யாணம்னு நடக்கும்போது முதலிரவும் தேவை தானே. போங்க, பாவம் அவ காத்துக்கிட்டிருப்பா!’

     “சாம்பி! என்னை ஏன் இப்படி போட்டு படுத்துகிறாய்? எனக்கு அழுகையாய் வருகிறது. உன்மேல் ஆத்திரமாய் வருகிறது. என்னை உசத்தி விட்ட நீ ஜடமாட்டம் படுத்திருக்கும்போது நான் போய் இன்னொரு பெண்ணை அனுபவிக்கணும். இது எந்த விதத்தில் நியாயம்?”

     “மெல்ல பேசுங்க. அவங்க அண்ணன் அண்ணியெல்லாம் பக்கத்து ரூம்லதான் படுத்திருக்காங்க. அவங்களுக்கு கேட்டால் சங்கடப்படுவாங்க”

     “சங்கடப்படட்டும், எனக்கென்ன? நானா இதையெல்லாம் கேட்டேன்? சும்மா இருந்தவனை பிடித்து...”

     “அச்சோ... ! போதும், போதும்! பாக்கியிருந்தா காலைல பேசிக்கலாம். முதல்ல எழுந்திருங்க கெட்அவுட், உங்களை யாரு ரூமை விட்டு வெளியே வரச் சொன்னது...? இப்போ போறீங்களா இல்லை ஆயாவை கூப்பிட்டு உள்ளே தள்ளச் சொல்லட்டா...?”

     அவன் வெறுப்புடன் அறைக்குள் போக சாம்பவி தன் கண்களை மூடிக்கொண்டு விம்மினாள். அவனும் அவளும் ஒரு முறை குற்றாலத்திற்கு போனபோது நடந்த சம்பவம் மனதில் மறுபடியும் வந்தது.

     குற்றாலத்தில் விஜயகுமார் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வரும்போது யாரோ ஒருத்தி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சாம்பவிக்கு அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.

     ‘முழியை பாரேன் முந்திரி பழமாட்டம்!’ என்று கறுவினாள்.

     ‘ஏன் இப்படி திட்டுகிறாய்... பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும். விடேன்?”

     “அதெப்படி விட முடியும்? எம் புருஷனை பார்க்கிறதுக்கு அவளுக்கென்ன உரிமை...?”

     ”பார்க்கிறதுக்கெல்லாமா உரிமை வாங்க முடியும்? விடுங்கிறேனில்லே...?

  

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20

தொடரும்

More Profiles