கண்கள் மயங்கிய போது...  

                            

 

     நீண்ட மணி ஒலித்ததும், அந்த பெண்கள் கல்லூரியில் இரைச்சல் எழுந்தது. எப்போது மணியடிக்கும் என்று அதுவரை வாட்ச்சையும், வாசலையும் பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்கள் சட்சட்டென்று புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு வகுப்புகளை விட்ட வெளியேறின.

     வெளியேறியவர்களின் முகங்களில் எண்ணெய் வழிந்திருந்தது. தலை வாடியிருந்தது. ஏழு கிளாஸ்கள் அறு பட்டதின் சோர்வு அவர்கள் கண்களில் தெரிந்தது.

     கசகசவென இவர்கள் பஸ்ஸைப் பிடிக்கவும், ரெயிலைப் பிடிக்கவும் நடந்தனர். அவசரப்பட்டனர்.

     அத்தனை சிட்டு-மொட்டுக்களில் மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்த ரதிலா, கல்யாணி, அர்ச்சனா மூவரையும் கொஞ்சம் கவனிப்போம்.

     அவர்கள் மூவருமே பி.எஸ்சி. மூன்றாம் வருடம் ரதிலா பெயருக்கேற்றபடி ரதி மாதிரி இருந்தாள். சிகப்பு என்பதற்கு புது உதாரணம் சொன்னாள். சுடிதார் உடுத்தி, முடியை சிக்கலில் பின்னியிருந்தாள்.

     அவள் பணக்கார வீட்டுப்பெண். அதுவும் ஒரே பெண் செல்லத்திற்கும் குறும்பிற்கும் அவளிடம் குறைவில்லை. கல்லூரிக்கு காரில் போ என்று பெற்றோர்கள் சொன்னால் கூட கேட்காமல் பஸ்ஸிலும், நடந்தும்தான் வருகிறாள்.

     அதற்குக் காரணம் கல்யாணியும் அர்ச்சனாவும்தான். அவர்கள் வீட்டில் அத்தனை வசதியில்லா விட்டால் கூட அவர்களுடன் இவளுக்கு நெருக்கம் அதிகம்.

     தோழிகளுக்காக ரதிலா எதுவும் செய்வாள். பணத்தை விட நட்பிற்கு அவள் அதிக முக்கித்துவம் கொடுத்து வந்தாள்.

     இன்னும் நான்கு நாட்களுக்கு ஜாலிதான்டி!கல்யாணி சொல்லிவிட்டு தன் சந்தோஷத்தை முகத்தில் பிரதிபலித்தாள்.

     என்ன ஜாலி...?

     டூர் போகப் போறோமே!

     ரதிலா, டூரா, நான் வரலே!என்றாள்.

     ஏண்டி...?

     காலேஜில அரேஞ்ச் பண்ணுகிற டூர் யாருக்கு வேணும். நம்ம மிஸ்களோட போறதும் குரங்குகளோட போறதும் ஒண்ணுதான்! நமக்கு சுதந்திரம் இருக்காது, நச்சு நச்சும்பாங்க. இல்லாதது பொல்லாததுக்கெல்லாம் கண்டிஷன் போடுவாங்க. அங்கே போகாதே, இங்கே போகாதேன்னும், அதை செய்யாதே, இதை செய்யாதேன்னும் சிடுசிடுப்பாங்க. நமக்கென்ன தலையெழுத்து!

     அப்புறம்...?

     டூர்ன்னு சொன்னா ஜாலியா போய் வரணும். அதிகாரம் பண்றதுக்கோ, கட்டளை இடறதுக்கோ யாரும் இருக்கக் கூடாது. நம்ம ப்ரோகிராமை நாமதான் தீர்மானிக்கணும். நமக்கு நினைச்ச நேரத்துல சாப்பிடணும். நினைச்சப்போ குளிக்கணும். நினைச்சப்போ சுத்தணும்.

     சுருக்கமாச் சொன்னா ஆம்பளை பசங்களாட்டம் திரியணும்ங்கறே...?அர்ச்சனா கேட்டுவிட்டு ரதிலாவின் கோபத்திற்கு ஆளானாள்.

     என்னடி பெரிய ஆம்பளை பசங்கள்...? பசங்கன்னா மட்டும் என்ன உசத்தி... நாம அவனுங்களை விட எந்த விதத்துல குறைச்சல்? அவனுங்க செய்யற எந்த காரியத்தை நம்மால செய்ய முடியாது...?அவனுங்க செய்றதுல ஒண்ணே ஒண்ணுதான் நம்மால முடியாது!

     அது என்னடியம்மா...?

     அவசியம் தெரிஞ்சுக்கணுமா... சரி சொல்றேன். நின்னுகிட்டே மூத்திரம்...

     சீ. உன் அல்ப புத்தி போகாதுடி!என்று கல்யாணி தன் காதுகளை பொத்திக் கொண்டாள். நேரமாகுதில்லே... நடங்க!

     அவர்கள் காண்டீனில் காபி குடித்து காம்பஸை விட்டு வெளியே வந்தனர். அங்கிருந்து பார்த்தால் மலைக் கோட்டையின் வியூ தெரிந்தது. நாலரை மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சி பிள்ளையார் (கதை நடப்பது திருச்சி என அறிக) மெயின் கார்டு வரை டவுன் பஸ்கள் இரைந்து கொண்டு பறந்தன. ரோடோரங்களில் பாய் கடைகள்! ஈ மொய்த்த தின்பண்டங்கள். வேகவைத்த முத்துச் சோளங்கள்.

ரதி! டூர் போகாம எப்படி...? நாமதான் முன்னயே பணம் கட்டிட்டோமே! வீட்லேயும் சொல்லிட்டமே!

     சொல்லிட்டா என்ன? இப்போ டூர் போகலேன்னு யார் சொன்னது? காலேஜ் டூர் வேணாம்னுதான் சொன்னேன், நாம தனியா போகக் கூடாதுன்னு சொல்லலியே!

     அர்ச்சனா, புரியலியே!என்று தன் ஸ்பெக்ஸை கழற்றி துடைத்துப் போட்டுக் கொண்டாள்.

     உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு... மரமண்டை! நாம தனியா கொடைக்கானல் போகப் போறோம்.

     கொடைக்கானலா...?

     சை! ஏண்டி வாயை பிளக்கறே? உன் ஸ்பெக்ஸ் இடம் மாறி போச்சு! பேசாம கழட்டி வாயில போட்டுக்கோ!

     கல்யாணி தன் ஆவலை அடக்க முடியாமல், உன் திட்டம் என்னன்னு விரிவாதான் சொல்லேன் ரதி?

     சொல்றேன் கேட்டுக்குங்க. காலேஜ்ல டூர் போறோம்கிற பெயர்ல நாம மூணு பேரும் ஜாலியாய் கொடைக்கானல் போகிறோம். நான்கு நாட்கள் உல்லாசமாய் சுற்றுகிறோம்.

     அப்படியே பழனி, மதுரை, குருவாயுர்னு போவமா...என்று கேட்டாள் கல்யாணி.

     எதுக்கு...?

     சாமி கும்பிடதான்!

     ஆமா சாமி கும்பிட! நாம இப்ப புனித யாத்திரை தானே போறோம்... வாயை மூடுடி!

     அர்ச்சனா, இதுக்கெல்லாம் பணம் நிறைய ஆகுமே!என்றாள்.     

     யாமிருக்க பயமேன்!ரதிலா முருகன் ஸ்டைலில் போஸ் கொடுத்தாள். பணத்திற்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.

     வீட்டுக்குத் தெரிஞ்சா வம்புடி!

     தெரிஞ்சாத்தானே... எப்படித் தெரியும்? நாமதான் காலேஜ் டூர்ன்னு சொல்லிட்டோமே! பணமும் கட்டியாச்சு. பணம் கட்டிட்டு டூர் வரலேன்னு சொல்லி யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறதில்லை. நம்மகிட்டே ஏன் வரலேன்னு கேட்டா உடம்பு சரியில்லே இல்லேன்னா மூலைல உக்காண்டிருந்தேன்னு சொல்லிக்கலாம். நாளைக்கு காலைல எல்லாரும் ரெடியா இருங்க! டூர் பஸ் கிளம்பிப் போனதும் நாம் வேற ரூட்ல பாய்ஞ்சிருவோம்.

     அர்ச்சனா, எனக்கென்னவோ பயமாருக்குடி!என்றாள்.

     என்ன பயம்..?

     நாம தனியா எப்படி...?

     மூணு பேர் இருக்கோம் தனிங்கிறே...?

     அதுக்கில்லை ஆண் துணையில்லாம...

     ஆண் துணையா... அவசியம் வேணுமா...?

     இருந்தா பயமில்லாம...

     கூட படுத்துக்கவா...? ரதிலா கேட்டு விட்டு சிரித்தாள். சரி விடுங்க, உங்களுக்கு பயமாருக்குன்னா என் சேகரையும் வரச் சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன். நீங்க யாரும் அவனை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது-ஏன்னா அவன் என் காதலன்! என்னை கட்டிக்கப் போறவன்!

     ரதிலா சொன்னதும் அர்ச்சனா, சீஎன்று வெட்கப்பட்டாள்.

     கட்டிக்கப் போறது நான் நீ ஏன் வெட்கப்படறே...?

     அதுக்கில்லை, கல்யாணம்கிறதை இத்தனை சுலபமா சொல்றே!

     ஏன் நீ பண்ணிக்கப் போறதில்லையா...? பண்ணி வச்சா நாலாம் மாசம் வயித்தை பந்து பண்ணிக்கிட்டு வருவாய்! இப்போ மட்டும் வெட்கத்தைப் பார்!

     அன்று இரவு.

     டி.வி.யில் கச்சேரி நடந்துக் கொண்டிருக்க, ரதிலா தன் உடைகளை எடுத்து சூட்கேஸில் அடுக்கினாள். சினிமா பாடலை ஹம் பண்ணிக் கொண்டு போனை அணுகினாள்.

     சேகரின் நம்பரை பட்டனில் தட்டி அவனிடம் விவரம் சொன்னாள். அவன் திடீர்ன்னு சொன்னால் எப்படி... எனக்கு வேலை இருக்கிறதுஎன்று பிகு பண்ணினான்.

     அருமையான சான்ஸ்! போனா வராது. பேசாம வந்து சேருங்க.

     சான்ஸ் பற்றி பேசுகிறாய் ரதி! என் தர்ம சங்கடத்தை கொஞ்சம் யோசித்துப் பார். எனக்கு லீவ் இல்லை. அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற புதிய பொறுப்பு பற்றி உனக்கும் தெரியும்!

     பெரிய பொறுப்பு! வரவர ஆம்பளைகளுக்கு தில் இல்லாம போச்சுப்பா! நீங்களாக கொடைக்கானலுக்கு அழைக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வச்சு அழைக்கும் போது சாக்கு சொல்கிறீர்கள்... ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே அனல்! அங்கே குளிர்! நாம் தனியாய்! வச்சுரட்டா...?

     அவனுக்கு மறுப்பதற்கு சந்தர்ப்பம் தராமல் போனை வைத்தாள். சேகர் வந்துவிடுவான். நாமா, அலுவலகமா என்று கேட்டால் அவனுடைய ஓட்டு நிச்சயமாய் நமக்காகத் தான் இருக்கும்.

     சூட்கேஸை அழுத்தி மூடினபோது வரலட்சுமி அறைக்குள் வந்து, உன் முடிவில் மாற்றமில்லையாம்மாஎன்றாள்.

     எந்த முடிவில்மா...?

     டூர் போறது பத்திதான்.

     இல்லேம்மா. அதுதான் ஒரு மாதத்துக்கு முந்தியே தீர்மானித்தாயிற்றே.

     நான் சொல்றதைக் கேளும்மா. அப்பா வெளியூர் போயிருக்கார். அவருமில்லாம நீயுமில்லாம நான் எப்படி தனியா இருக்கிறது.

     தனியா இருக்க பயமாயிருந்தா வேலைக்காரியையும் இங்கே தங்கச் சொல்லிரு!

     நான் அதுக்காக சொல்லலேம்மா.

     அப்புறம்...

     மதுரையிலிருந்து உன்னை பெண் பார்க்க வராங்க.

     மதுரை வீரனா? என்று கேட்டு ரதிலா சிரித்தாள். எதில் வருகிறார்கள்... புரவியிலா; இல்லை புஷ்பக விமானத்திலா...?

     உனக்கு எல்லாமே கிண்டல்தான்டி அவங்க இன்னும் ரெண்டு நாள்ல வராங்க. அதனாலதான் சொல்றேன் நீ போக வேண்டாம்னு...?

     ஐயோ அம்மா டூரை இனி கான்சல் பண்ண முடியாது எங்கெங்கெல்லாம் போறாங்க தெரியுமா? ஊட்டி, மைசூர், கோவா, பாம்பே எத்தனை இடங்கள்

     பாம்பேதானா அப்பா வந்ததும் நாம எல்லோரும் சேர்ந்து போகலாம்மா.

     நாம எல்லோருமா... நல்ல கதை அப்பாவோடயும் உன்னோடயுமா உங்களுக்கு அப்படி ஒரு ஆசையிருந்தா நீங்க வேணா ஹனிமூன் கிளம்புங்க. நான் தோழிகளோட தான் போவேன். தோழிகளோட போய் வருகிற ஜாலி உங்கள்ட்ட வருமா?

     உங்கிட்ட என்னால பேச முடியாதுடி

     அப்போ பேச வேண்டாம்

     ஆனாலும் ரதி, மாப்பிள்ளைக்கு நான் என்ன பதில் சொல்றது?

     நான் டூர், ஊரில் இல்லை. பிறகு வான்னு நேராவே சொல்லிர வேண்டியதுதானே இதுல என்ன தயக்கம்?

     மாப்பிள்ளை வெளியூர் கிளம்பி போயிட்டாராம். வெளியூர்ல இருந்து நேரா இங்கே வந்து விடுவதாய் சொல்லியிருக்காங்க.

     தெரியாமதாம்மா கேட்கிறேன். எனக்கு கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? என் சுதந்திரத்தைப் பறித்து இறக்கைகளை ஒடிப்பதில் உங்களுக்கு அப்படி என்ன திருப்தி?

     அப்படியில்லேம்மா. உனக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டா எங்க கடமை முடிஞ்சு போயிருமில்லே.

     அப்போ கடமைக்காகத்தான் என்னை கட்டிக்கொடுக்கப் போறீங்க.

     சீ, ஏண்டி இப்படியெல்லாம் பேசறே... உனக்கு விருப்பமில்லாம நாங்க எதுவும் செஞ்சிருக்கோமா... மாப்பிள்ளை வரட்டும், பார்க்கட்டும். நீயும் பார். அப்புறமா முடிவெடுப்போம்.

     அதான் சொன்னேனேம்மா. மதுரை வீரனை அப்பால வரச் சொல்!

     மாறுநாள்.

     ரதிலா, கல்யாணி, அர்ச்சனா மூவரும் பேசினபடி வீட்டை விட்டு கிளம்பினர். கல்லூரியில் டூர் பஸ் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. ரதிலா போன் பண்ணி தாங்கள் மூவரும் வராததை தெரிவித்தாள்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles