கண்கள் மயங்கிய போது...  

                                  

    

     “இல்லை, அனுபவித்து எடுத்ததுதான். நான் இந்த முடிவை எடுப்பதற்கு வலுவான காரணம் உண்டு. ஒன்று உன்னை பிடித்திருக்கிறது. உன் இன்னசென்ஸ் அதைவிட பிடிக்கிறது. உன் பேச்சு, உண்மையை ஒளிக்காமல் வெளிப்படுத்தும் ஃபிராங்க்னஸும் பிடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் உன் வீம்பு, பிடிவாதம், குறும்புத்தனம் எல்லா வற்றையும் யோசித்த பின் ஐ லைக் யு ரதிலா! நீ என்ன சொல்கிறாய்?”

     “வேண்டாம். எனக்கு நிம்மதி இருக்காது. உறுத்தல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இப்போது ஏதோ ஒரு வேகத்துல நீங்க ஒத்துக்கிட்டாலும் பின்னால் என் கவர்ச்சி குறையும் போது குத்தல் பேச்சு எழும்.”

     “இல்லை, எழாது. என்னை நீ நூறு சதவீதம் நம்பலாம். நான் ஏன் இத்தனை நாட்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பது தெரிந்தால், என்னை நீ புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.”

“நேரமாகிறது நான் கிளம்புகிறேன்.”

     “ப்ளீஸ் ரதிலா... ஒரு நிமிஷம்! நீ இதை அவசியம் தெரிந்துக் கொண்டாக வேண்டும். பேரர்! காபி! எங்கம்மாவை ஒருத்தன் ஏமாத்திட்டுப் போயிட்டான். அதன் பிறகு அம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஊராரின் கேலிப் போச்சு! வயிற்றில் குழந்தை! கல்யாணம் பண்ணிக்காமலே குழந்தை என்றால் ஊரில் என்ன சொல்வார்கள்?

     எல்லாவற்றையும் மீறி அவள் என்னை வளர்த்தாள். படிக்க வைத்து ஆளாக்கினாள். ஒரு பெண்ணிற்கு இளமையில் இதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. அம்மா சாகும் போது இது மாதிரி அபலையாய், வாழ்வில்லாமல் இருக்கிற பெண்னை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றும், அவளை வாழ்நாள் முழுவதும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டு செத்துப் போனார்கள். அதிலிருந்து நானும்....”

     “ஏமாந்த பெண் எவளாவது கிடைப்பாளான்னு அலையறீங்க!”

     “ரதிலா! இன்னும் உங்களுக்கு என் மேல் நம்பிக்கை வரலைன்னு புரியுது. ரைட், நீங்க அவசரப்பட்டு நம்பிடவும் வேண்டாம். இந்தாங்க என் வீட்டு அட்ரஸ்! நாளைக்கு வீட்டுக்கு வாங்க! அங்கே வந்தால் என் நேர்மை உங்களுக்குப் புரியும். அப்புறம் ஒரு விஷயம். இடையிடையே நான் உங்களை வா... போன்னு பேசறதுக்கு மன்னிக்கவேண்டும். என்னையும் அறியாமலே, நான் உங்கிட்ட நெருங்கிட்ட மாதிரி ஒரு உணர்வு!”

     அவள் காபியை ஸ்விப் பண்ணினாள். அவள் கண்களில் ஆராய்ச்சி இருந்தது.

     “ரதிலா! வாழ்க்கைங்கிறது இதோட முடிஞ்சிரல இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படியிருக்கும்போது எதுக்காக சாகணும்? எங்கம்மா படிக்காதவங்க தான் ஆனால் அவங்களே சாவுக்கு முயற்சிக்கலே. எல்லா எதிர்ப்புகளையும் மீறி என்னை ஆளாக்கியிருக்காங்க, அப்போ காலமும் மாறியிருக்கு. உனக்கு அப்பா அம்மாவும் இருக்காங்க. நீ அனாதையில்லை. உன் சந்தோஷத்திற்காக இல்லேன்னாகூட அவங்களோட சந்தோஷத்திற்காகவாவது...”

     அவள் காபி டம்ளரை வைத்துவிட்டு எழுந்தாள்.

     “மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாமா? அவசரமில்லை, வீட்டுக்குப் போய் நன்றாய் யோசி. நான் பரவாயில்லை என்று தோன்றினால் நாளை மாலை வீட்டுக்கு வரலாம். இல்லையென்றால் இங்கேயே இந்த நிமிஷமே நமக்குள் குட்பை! நான் என் வழியில் போகிறேன். நீ உன் வழியில் ரயில் தண்டவாளத்தையோ, தூக்கு கயிற்றையோ நோக்கிப் போகலாம்!”

   மறுநாள்.

     ரதிலா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். யோசித்து யோசித்துப் பார்த்ததில் கார்த்திக் நல்லவன் என்றே அவளுக்கு பட்டது. சொல்லப் போனால் முதல் சந்திப்பிலேயே அவன் அவளை கவர்ந்து விட்டிருந்தான்.

     அவனுடைய உருவம், அழகு, அந்த கலகல பேச்சு அந்த கண்களில் இருந்த குறும்பும் நேர்மையும் அவளை சம்மதித்து விடு என்றன.

     உலகம் பொல்லாதது. இப்படி நடந்து விட்டதே என்று அனுதாபம் சொல்லி நம்மை தேற்ற வேண்டிய பெற்றோர்களே ஆத்திரப்படுகிறார்கள். நம்மை விரோதி போல பார்க்கிறார்கள். தூய்மையாய் காதலிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சேகரே நிமிடத்தில் நம்மை ஒதுக்கிவிட்டான்.

     அப்படியிருக்கும் போது யாரோ ஒரு அந்நியன் வந்து சம்மதிக்கிறான் என்றால் நிச்சயம் அவன் நல்லவனாய்த்தான் இருக்க வேண்டும். அவனுக்கிருக்கிற அழகிற்கும் வசதிக்கும் எத்தனை நல்ல பெண்கள் அதுவும் ஃபிரெஷ்ஷாய் கிடைப்பார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு அவன் நம்மை ஏற்க முனைகிறான் என்றால், அந்த பெருந்தன்மையை நாம் அங்கீகரித்தேயாக வேண்டும்.

     கார்த்திக்கின் வீடு பீமநகரில் விவேகானந்தபுரத்திலிருந்தது. ரதிலா போனபோது அவன் லுங்கியும் வெறும் மார்பு மாயிருந்தான். அவனுடைய தலையில் ஒட்டடை துளிகள். அவன் வியர்த்துப் போயிருந்தான்.

     “நீங்களா...?” என்று கேட்டு விட்டு “இருங்கள் ஒரு நிமிஷம்!” என்று டாய்லட்டிற்குள் ஓடி நுழைந்து கொண்டான்.

     ரதிலா சோபாவில் அமர்ந்து அறையை நோட்டம் விட்டாள், அது பாச்சிலர் தங்கியிருக்கிற வீடு என்று சொல்ல முடியாத அளவிற்கு சுத்தமாய் இருந்தது. சுவற்றில் நடிகைகளின் படங்கள் இல்லை. அழுக்கோ, பசையோ இல்லை. எங்கு பார்த்தாலும் சாமி படம். மர செல்ஃப் ஒன்றில் ஒரு தாயும் அருகில் நான்கு வயது மகனும் நிற்கிற படம். அந்த படத்திடம் ஊதுபத்தி புகைந்தது. கலர் பல்பு மெல்லிசாய் ஒளி தந்து கொண்டிருந்தது.

     அதுதான் கார்த்திக்கின் தாயாய் இருக்க வேண்டும். அதனருகில் மீசையில்லாத கார்த்திக் தன் அம்மாவுடன் நின்றிருந்தபடம் பிரேம் பண்ணி ஆணியில் தொங்கிற்று.

    கார்த்திக் சட்டை போட்டுக் கொண்டு, வேட்டியுடன் அவள் முன் வந்தான். ‘ஒரு செகண்ட்’ என்று விட்டு தன் அம்மாவிற்கு நமஸ்கரித்து விட்டு விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தமர்ந்தான்.

     “வீடெல்லாம் ஒரே ஒட்டடை அதுதான்! உங்களை வரச் சொன்னதையே நான் மறந்திட்டேன். அப்புறம்... என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள். இருங்கள் காபி போட்டு தருகிறேன்.” என்று உள்ளே ஓடினான்.

     பாலை ஸ்டவ்வில் வைத்து விட்டு பழைய ஹிண்டு பேப்பர்களை கொண்டு வந்து காட்டினான். “இதோ பாருங்கள்... அபலை பெண்கள் வேண்டும் என்று நான் கொடுத்த விளம்பரம்!” என்று நீட்டினான்.

     அவரவர்கள் படித்த பெண் வேண்டும், அழகு வேண்டும், வசதி வேண்டும், சொந்த ஜாதி வேண்டும் என்றுதான் தேடுவார்கள். என்னைப் பார்த்தாயா... ஏமாற்றப்பட்ட பெண் வேண்டும் என்று விளம்பரம்! விசித்திரமாயில்லை...?”

    ரதிலா அந்த விளம்பரத்தை படித்துப் பார்த்தாள். ஏமாற்றப்பட்டு வாழ்விழந்த பெண்கள் கல்யாணத்திற்கு தொடர்பு கொள்ளவும் என்பதை பெட்டி நம்பருடன் போட்டிருந்தார்கள்.

     கார்த்திக் ஹிண்டு பேப்பரிலிருந்து தனக்கு இது சம்பந்தமாய் வந்த கடிதத்தை எடுத்து வந்து காண்பித்தான்.

     “இப்போதாவது நம்பிக்கை பிறக்கிறதா?”

     “இப்போது நம்பிக்கையில்லை பிரச்சனை.”

     “அப்புறம்...?”

     “எனது உறுத்தல். நான் செய்வது தவறோ என்கிற உணர்ச்சி. நான் துரோகம் பண்ணுகிறேனோ என்கிற கவலை.”

     “இதில் துரோகம் எங்கே இருக்கிறது...? நீங்கள் வேண்டுமென்றே தவறு செய்யவில்லையே! அப்படி பார்த்தால் இந்த உலகத்தில் யாருமே தவறு செய்யயாதவர்கள் இல்லை. யாருமே உத்தமர்கள் இல்லை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.”

     “இருந்தாலும்...”

     “அப்போ இதே மாதிரியே காலம் தள்ளப் போகிறாயா... இல்லை ரயில் தண்டவாளமா...?”

     “அதையுந்தான் கெடுத்து விட்டீர்களே!” என்று ரதிலா தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

     “ரதி எல்லாம் நல்லதிற்கென்று நினைத்துக்கொள்! நாம் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்றிருத்தால் அதை யாரால் தடுக்க இயலும்...?”

     அடுத்த வாரத்தில் கார்த்திக், சோமசுந்தரத்தை போய் சந்தித்தான். தன் பயோடேட்டாவை அவரிடம் சமர்ப்பித்தான். அவனை விசாரித்து விட்டு அவர் கல்யாணத்திற்கு சம்மதித்தார்.

     கார்த்திக்-ரதிலா திருமணம் அவளுடைய வீட்டிலேயே சிக்கனமாகவும் சிறப்பாகவும் நடந்தது. அந்த திருமணத்திற்கு சோமசுந்தரம் யாரையும் அழைக்கவில்லை.

     எதற்காக மற்றவர்களை அழைக்க வேண்டும். கூசாமல் கேலி பேசினவர்கள், புறம் சொன்னவர்கள், ஒதுங்கிப் போனவர்களை நான் அழைக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாயிருந்தார்.

     கார்த்திக்கை அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று. “கார்த்திக்! நீ சாதாரண மனிதன் இல்லையப்பா! லட்சிய மனிதன்! உனக்கு நான் என் ஆயுசு முழுக்க கடமைப்பட்டுள்ளேன்.” என்று மெய்யுருகினார். அவன் கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles