கண்கள் மயங்கிய போது...  

                                       

    

     கல்யாண கலகலப்பில் அவர் உடல்கூட சற்று தேறின மாதிரி உணர்ந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் எவண்டா கேலி பேசினது என்று மாரை நிமிர்த்திக் கொண்டு நடந்தார்.

     அன்றே தன் அலுவலகத்திற்கு போய், “இனி நான் இங்கே வர மாட்டேன். இனி எல்லாவற்றையும் என் மாப்பிளைதான் பார்த்துக் கொள்வார்!” என்றார்.

     முதலிரவு.

     எக்கச்சக்க செலவில் அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பூ வேலைப்பாடுகள். பூ மாலைகள்! வீடெல்லாம் சீரியல் விளக்குகளால் மின்னிற்று.

     சாதாரணமாய் கல்யாணம் என்றாலே ஜனத்திரளால் வீடு கலகலக்கும். குழந்தைகள் உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆனால் அவர்கள் வீடு அமைதியாயிருந்தது.

     முதலிரவு என்பதற்கான ஃபார்மாலிடிகள் எதுவுமில்லாமல் கார்த்திக்கும் ரதிலாவும் தாங்களாகவே தனிமை படுத்திக்கொண்டனர். கார்த்திக்கை பார்த்தபோதெல்லாம் ரதிலா கண் கலங்கினாள். கல்யாண புடவையுடன், தலை நிறைய மல்லிகை பந்தலுடன் வந்தவளின் முகம் மட்டும் வீங்கி இருந்தது.

     “என்னாச்சு ரதி?” கார்த்திக் அவளைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தான். “இன்னுமா கண்ணீர் உன்னிடம் பாக்கியிருக்கு...?”

     “நான் பாவிங்க!”

     “என்ன சொல்கிறாய்?”

     “ஆமாம். இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டிருக்கவே கூடாது!”

     “சீ! என்ன பேச்சு இது? உங்கப்பா அம்மாவெல்லாம் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க பார். அவர்களைப் பார்த்தாவது நீ மனதை தேற்றிக் கொள்ளக்கூடாதா?”

     “எப்படிங்க... எப்படி...? அவங்க சந்தோஷத்தை மட்டும் பார்த்தால் போதுமா... நான் எப்படி உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்!” அவள் முகத்தை பொத்திக் கொண்டு விம்மினாள். “இது சரியான சித்ரவதை நான் எப்படி உங்களுடன்... படுக்கையை...”

     “சரி பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீ அப்படி திரும்பி படுத்துக்கோ. நான் இதோ இங்கே கீழே படுத்துக்கறேன்.”

     “உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்குங்க. என்னால உறுத்தலை தாங்க முடியலே.”

     “நான் தான் சொல்கிறேனே. உன் உறுத்தல் எப்போது நிற்கிறதோ அப்போது என்னை நெருங்கினால் போதும். அதுவரை வீணாய் அதையும் இதையும் நினைத்து புலம்பாமல் இருந்தால் போதும்.”

     “உங்களுக்கு ஊரில் வேறு பெண்களே இல்லைங்களா... எதுக்காக என்னை கடிக்கிட்டீங்க. என்னால் இந்த சித்ரவதையை தாங்க முடியலேங்க! நான் கெட்டுப் போனவங்க!”

     “அதுபத்தி கவலைப் படவேண்டியது நான். எனக்கே கவலையில்லாத போது நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல் தூங்கு! உங்கப்பா, காலைல என்னை தொழிற்சாலைக்கு அழைத்துப் போய் காட்டுகிறேன் என்றிருக்கிறார். தூங்க வேண்டும்.”

     “நீங்க ஏத்துக்கிட்டீங்கன்னா அது உங்க பெருந்தன்மை, ஆனால் நான்...

     “ரதி! எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கச் சொன்னேனே... !”

     சோமசுந்தரம் மறுநாளே அவனை தன் தொழிற்சாலைக்கும், அலுவலகங்களுக்கும் அழைத்துச் சென்றார். அங்கே எல்லோரிடமும் பெருமையுடன் அவனை அறிமுகப்படுத்தினார்.

     “இனி என் மாப்பிள்ளைதான் இங்கே மானேஜிங் டைரக்டர், இனி இவர்தான் எல்லாம் பார்த்துப்பார்.”

     “அப்போ நீங்க மாமா?”

     “நான் நேத்தே ரிடையராயிட்டேன். இனி எனக்கு ஓய்வு தேவை. மாப்பிள்ளை... நானும் உங்க மாமியாரும் புனித யாத்திரை போகப் போறோம். எங்கள் பிரார்த்தனை பலிச்சுருச்சு. நாங்க ஆசைப்பட்டது போலவே நல்ல மாப்பிள்ளையா வாய்ச்சிருக்கார்! இனி நாங்க ஏன் கவலைப்பட வேண்டும்?”

     சோமசுந்தரம், மாப்பிள்ளை... மாப்பிள்ளை என்று அவனை வைத்த இடத்தில் வைக்கவில்லை. தன் அலுவல்கள், தொழிலாளர்கள், ஸ்டாப்களுடன் பழகும் விதம், அவர்களுடைய பிரச்சனைகளை அணுகும் விதம் எல்லாவற்றையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

     “இனி கார்த்திக் ஏஜென்சீஸ் எல்லாம் எதுக்கு. அதுல பெரிசா என்ன வந்திரப் போகுது! விட்டிருங்க” என்றார்.

     “இல்லை” மாமா, என்னதான் இருந்தாலும் இவை எல்லாம் நீங்கள் சம்பாதித்ததுதானே... இவற்றை நான் வந்து திடீரென ஏற்றுக்கொள்வது எனக்கு என்னவோ போலிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நான் தகுதியானவன் தானா என்கிற பரிகசிப்பு எனக்குள்ளேயே எழுகிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா... நானே கஷ்டப்பட்டு உருவாக்கி சம்பாதித்தால் தான் எனக்கும் ஒரு திருப்தி இருக்கும்... அதுதானே எனக்கும் பெருமை!”

    “என்ன அப்படி சொல்கிறீர்கள்... இவையெல்லாம் நான் சம்பாதித்தவைதான். இல்லையெனவில்லை எனக்கு பிறகு இவற்றை அனுபவிக்கப்போவது நீங்களும் என் மகளும் தானே... அப்புறம் என்ன?”

     “அதைப் பற்றி இப்போது என்ன பேச்சு மாமா!”

     “அப்போது இவைகளை கவனித்துக் கொள்வது யார்?”

     “நான் வேண்டுமானால் கவனித்துக் கொள்கிறேன் முதலாளியாக இல்லை. ஒரு தொழிலாளியாக, சம்பளக்காரனாக!”

     “என்ன மாப்பிள்ளை இது... நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. என் தொழிற்சாலையில் நீங்களே சப்பளக்காரனா... வெளியே தெரிந்தால் அவனவன் என்ன பேசுவான்?”

     “யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் மாமா. எனக்கு இந்த திடீர் முதலாளித்துவத்தில் உடன்பாடில்லை. ஒரு முதலாளி என்றால் அடிப்படை முதல் வரவேண்டும். கம்பெனியின் நெளிவுசுளிவுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல், முதலாளி என்கிற ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் என்னையுமறியாமலே கர்வம் எழும்.

     நம்மை யார் அசைக்க முடியும் என்கிற இறுமாப்பு வரும். வளரும். என்னை யாரும் அசைக்க முடியாது என்கிற ஆணவம் பெருகும். அது அத்தனை நல்லதல்ல. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் பொறுப் பேற்றுக் கொள்ள நிறைய பாடுபட வேண்டும். அதே சமயத்தில் என் திருப்திக்காக, என் தொழிலையும் கவனிக்க அனுமதி தாருங்கள்!”

     “அப்புறம் உங்க இஷ்டப்படி மாப்பிள்ளை!”

     “சோமசுந்தரம் அவனுக்கு ஒரு காரை பிரசண்ட் பண்ணியிருந்தார். அதைக்கூட அவன் உபயோகிப்பதில்லை. தன் ஸ்கூட்டரிலேயே போய் வந்தான். ஒரு சமயம் அவர் “நீங்கள் காரை எடுக்காதது என்னை அவமதிக்கிற மாதிரி இருக்கிறது’ என்று கடிந்து கொண்டார்.

     ரதிலாவும், “அப்பா ஒரு மாதிரி, அவர் தப்பாய் எடுத்துக்கப் போகிறார். அவர் ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்டுங்க!” என்று கெஞ்சவே அவன் வேறு வழியில்லாமல் காரை எடுக்க ஆரம்பித்தான்.

     அந்த வீடு என்னதான் கலகலப்பிற்கு திரும்பிக் கொண்டிருந்தாலும் கூட ரதிலா மட்டும் பழையபடியே தான் இருந்தாள். அவள் வெறுமையாய் சிரித்தாள். அவள் கடமைக்கு அலங்கரித்து கடமைக்கு சாப்பிட்டாள்.

     ஒருநாள் கார்த்திக், “நீ இங்கேயே இருந்தால் இப்படி தான் மனதை போட்டு அலட்டிக் கொள்வாய். உனக்கு இப்போது தேவை ஒரு சேஞ்ச். அமைதியான இடமும், புது மனிதர்களும் உனக்கு புத்துணர்வு தருவார்கள். மனம் இயற்கையில் லயித்தால் பழசெல்லாம் மறந்து போகும். என்ன விலை கொடுத்தாவது கலகலப்பான ரதிலாவை நான் திரும்பப் பெற்றாக வேண்டும். என்ன சொல்லுகிறாய் நீ?”

     “இதில் நான் சொல்வதற்கு என்ன இரக்கிறது...?”

     “அப்பாடா? எதையாவது சொல்லி விடுவாயோ என்று பயந்து போனேன் ரதிலா!”

     அவள் “ம்...” என்று அவன் கண்களை ஊடுருவினாள்.

     “அப்படியெல்லாம் பார்க்காதே! எனக்கு ஆபிசுக்கு நேரமாகிறது முதலாளி கோவிச்சுக்குவார்!”

     “எந்த முதலாளி...?”

     “என் முதலாளியம்மாவோட அப்பா! சரி, அதை விடு! கல்யாணமாகி ஒரு வாரம் ஆகிறதே... நாம ரெண்டு போரும் சேர்ந்து எங்கேயும் போகலியே!”

     “எங்கே போகணும்?”

     “எங்காவது சந்திரமண்டலத்துக்கு அல்லது யாரும் இல்லாத புகை மண்டலத்துக்கு. இந்த ஹனிமூன்கிறாங்களே... அதுல என்னதான் இருக்குன்னு நாம பார்க்க வேணாமா...?”

     “அதுல வேற என்ன இருக்கப் போகுது... ஹனிதான்!” ரதிலா சொல்லிவிட்டு சிரித்தாள்.

     “அப்பாடா! சிரித்து விட்டாய். உன் இந்த சிரிப்பிற்காக நான் என் சாம்ராஜ்யத்தையே விலை பேசத் தயார் ரதிலா!”

 

     “சாம்ராஜ்யத்தை வேண்டாம். உங்கள் கார்த்திக் ஏஜன்சியை மட்டும் விலை பேசி விட்டு பேசாமல் அப்பா சொன்ன மாதிரி எம்.டி.யாகி விடுங்கள் போதும்! அப்பாவுக்கு ஹார்ட் வீக்குங்கிறது ஞாபகத்துல இருக்கட்டும்!”

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles