கண்கள் மயங்கிய போது...  

                                 

    

     ரதிலா ‘சீ!’ என்று வெட்கப்பட்டாள்.

     “ஏன்... ஏன்...? கூடாதா!”

     “ஓ... கூடலாமே!”

     அன்று அவர்கள் அறைக்குள்ளேயே ஓய்வு. “நீ இங்கேயே இரு. நான் நண்பனை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கார்த்திக் போய் வந்தான். மறுநாள் அவர்கள் பிரியன்ட் பார்க் போயினர். கோக்கர்ஸ் வாக்கில் நடந்தனர். டெலஸ்கோப்பில் மதுரை தெரிகிறதா என்று தேடினர். Bear Shola Fallsக்கு நடந்தனர். பில்லர் ராக்கிலிருந்து எட்டிப் பார்த்தனர். அப்புறம் கோல்ஃப்லிங்க்ஸ், குறிஞ்சி டெம்பிள், கிரீன் வாலி, ஷென்பகனூர் மியூசியம் என்று பொழுதை கழித்தனர். புல்வெளியில் புரண்டனர் ஏரியில் படகுவிட்டனர்.

     திரும்பும்போது அவன் பெட்டிக்கடையில் போய் சிகரெட் வாங்கினான். அந்தக் கடையை பார்த்ததும் ரதிலா தலை குனிந்து கொண்டாள். அதோ பெட்டிக்கடை! அன்று வீம்பில் போய் சிகரெட் வாங்கினது! அந்த நபர் அவளை அடையாளம் கண்டு கொண்டதுபோல புன்சிரித்தான்.

     சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு வந்த கார்த்திக், என்ன கண்ணு நின்னுட்டே! குளிருதா... சிகரெட் பிடிக்கறியா...?”

     “வேணாங்க!”

     “சும்ம ஒரு தம் அடிச்சு பாரேன்! தப்பில்லை என் விருப்பத்திற்காக பிளீஸ்...” அவளுக்கு கண்கள் சட்டென்று கலங்கி போயின. “என்னாச்சு ரதிலா... ஏன் எதற்கொடுத்தாலும் இப்படி மூட் அவுட் ஆகிவிடுகிறாய்? கொடைக்கானல் உனக்கு ஒத்துக்கொள்ள வில்லையா... சரி, நாளையே நாம் கிளம்புவோம். என்னவோ ஹனி என்றாய், மூன் என்றாய்... !”

     அவர்களுடைய வாழ்க்கை இயல்பாய் ஓடிக் கொண்டிருந்தது. கார்த்திக் இந்த தொழிற்சாலையின் முழு பொறுப்பையும் ஏற்றிருந்தான். தன் ஏஜென்ஸியை டிஸ்போஸ் பண்ணியிருந்தான். அவன் காலையில் போனான் என்றால் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வேலையை முடித்துக் கொண்டு திரும்புவான். அவனுடைய செயல்முறை நிர்வாகம் எல்லாமே சோமசுந்தரத்திற்கு பிடித்துப் போயிருந்தது அவர் அதிகாரிகளிடம் அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டேயிருந்தார். எல்லோருமே அவனைப் பற்றி நல்ல அபிப்ராயமே சொல்லினர். அது அவருக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

     ஒரு சமயம், “மாப்பிள்ளை! இப்படி ஆபீஸே கதி என்றிருந்தால் எப்படி... மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரக்கூடாதா...?”

“வரக்கூடாதுன்னு இல்லே மாமா, அங்கே ஏகப்பட்ட வேலை!”

     “வேலைக்கு என்ன பஞ்சம்! வீட்டிலேயே இருந்தால் ரதிக்கு போரடிக்குமில்லையா...”

     அதன்பிறகு அவன் மதியம் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். வந்து சாப்பிட்டு தூங்கியது ரதிலாவிற்கு சந்தோஷமாயிருந்தது. நாம் இவனை கணவனாய் பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

     இவன் நல்லவன். நமக்காக எதையும் விட்டுக் கொடுப்பவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். புகைதான் பிடிக்கிறான். அதையும் கூட விட்டு விடுகிறேன் என்று சொல்லி குறைத்துக் கொண்டு வருகிறான்.

     நாம் எல்லா விதத்திலுமே அதிர்ஷ்டசாலி, அதிர்ஷ்டசாலி நாம் மட்டுமில்லை. நம் பெற்றோர்களும்தான். இத்தனை பொறுப்பான கண்ணியமான மருமகன் கிடைத்தது அவர்கள் செய்த பாக்கியம்தானே.

     அன்று-

     சோமசுந்தரமும் வரலட்சுமியும் வெளியூர் பயணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெட்டி படுக்கையுடன் காரில் ஏறின சமயத்தில் வேலைக்காரன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். “முதலாளி... ரதிலாம்மா... !”

     “ரதிலாவுக்கு என்னாச்சு...?”

     “அவங்க மாடிப்படியிலிருந்து கீழே விழுந்துட்டாங்க முதலாளி!”

     அவர்கள் பதறிக் கொண்டு உள்ளே ஓடினர். அங்கே ரதி மயங்கிக் கிடந்தாள். அவளுடைய உதட்டில் பல் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

     “ரதி... ! ரதி! அம்மாடி... !”

     அவள் அப்படியே கிடந்தாள், “ஐயோ! இவளுக்கு என்னாச்சுன்னு தெரியலியே! ஏங்க! உடனே மாப்பிள்ளைக்கு போன் பண்ணுங்களேன்!”

     அவர் கை கால் வராமல் கார்த்திகை போனில் பிடித்து விவரம் சொன்னார்.

     அரை மணி நேரத்தில் கார்த்திக் டாக்டருடன் காரில் வந்திறங்கினான். அவன் வருவதற்குள்ளேயே அவள் மயக்கம் தெளிந்திருந்தாள். அவள் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, “என்னாச்சு ரதி!”

     “ஒண்ணுமில்லைங்க, மாடிப்படி இறங்கும் போது தலை சுத்தின மாதிரி இருந்தது. கால் தடுமாறி சேலையில் தடுக்கி விழுந்திட்டேன்.”

     டாக்டர் அதற்குள் ஸ்டெதஸ் கோப்பை எடுத்துக் கொண்டு செக்பண்ண தயாரானார். அவளுடைய நாடியை பிடித்து பார்த்து, “ரொம்ப பலவீனமாயிருக்கீங்க! வாந்தி கீந்தி எடுத்தீங்களா...?”

     “ஆமாம் டாக்டர் காலைல ரெண்டு தரம் குமட்டி குமட்டிக்கிட்டு வந்தது. எதுவுமே சாப்பிட பிடிக்கலை!”

     அதைக் கேட்டதும் டாக்டரின் முகம் மலர்ந்தது. “கங்கிராட்ஸ் மிஸ்டர் கார்த்திக்! நீங்க அப்பாவாகப் போறீங்க.”

     “என்ன சொல்கிறீர்கள்...?” அவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.

     “எஸ்.யு ஆர் பிகமிங் ஃபாதர்!”

     டாக்டர் போன கொஞ்ச நேரத்திற்கு யாருமே பேசவில்லை, அந்த வீட்டில் சூன்யம் புகுந்த மாதிரி அமைதியாயிருந்தது. கல்யாணமாகி இரண்டே வாரத்தில் கர்ப்பமா? அவர்களுக்கு எல்லாம் புரிந்து போயிற்று.

     அந்த சம்பவம்! அந்த கொடைக்கானல் நிகழ்ச்சி! சனியன்! ஓட ஓட துரத்துகிறது. அவர்களுக்கு கார்த்திக்கின் முகத்தை ஏறிடவே தயக்கமாயிருந்தது. அவனைக் கண்டு பயந்தார்கள்.

     அவன், எத்தனையோ சகித்துக் கொண்டு கல்யாணம் செய்து, அவளை சந்தோஷமாய் வைத்திருக்கிறான். இந்த சமயத்தில் கடவுளே... இது என்ன  சோதனை? அவனுக்கு நாங்கள் என்ன சமாதானம் சொல்வோம்?

     கார் டிரைவர் உள்ளே வந்து “ஐயா! போகலாங்களா...?” என்றான்.

     “வேண்டாம் எங்களோட பயணம் கான்சல்! நீ போய் வேலையை பார்! பெட்டிப் படுக்கையை எல்லாம் எடுத்து உள்ளே வை!”

     கார்த்திக் ஒன்றும் பேசாமல் தன் அறைக்குப் போனான்.

     “என்னங்க இப்போ என்னங்க செய்யறது...?”

     “என்னைக் கேட்டா... பீடை! நம்மை ஒரு வழி பண்ணிட்டுத்தான் விடும் போலிருக்கு!” அவர் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார். அப்புறம் அவர் படுக்கையில் கிடத்தப்பட்டார். டாக்டர்கள்! மருந்து!

     இரண்டு நாட்கள் வீடு அமைதியின்றிருந்தது. இதற்கு நிவாரணம் என்ன? குழந்தையை என்ன செய்வது என்கிற தவிப்பில் தாயும் மகளும் கலங்கிப் போயிருந்தனர்.

     “ரதிலா! இப்போ என்னாச்சுன்னு இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே?”

     “இனியும் என்னங்க ஆகணும்... நான் செஞ்ச தப்புக்கு எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தா போதாதா... எதுக்காக தெய்வம் உங்களையும் தண்டிக்கணும்?”

     “என்ன சொல்கிறாய் நீ...?”

     அவள் கார்த்திக்கின் கால்களைப் பிடித்துக் கொண்டு, “நான் பாவிங்க! உங்களுக்கும் குடும்பத்துக்கும் ஒரு பாரம்!” என்று கத்தினாள்.

     “சீ... சீ...அசடே! எழுந்திரு. இப்போ என்ன ஆகிப்போச்சு...? என்று அவளை தூக்கி தன் மார்புடன் அணைத்துக் கொண்டான். அவள் கண்களை துடைத்து விட்டான்.

     “எம் மேல உங்களுக்கு கோபமே வரலீங்களா...?”

     “இல்லை. எதுக்கா?”

     “இல்லை. உங்களுக்கு கோபம் வரணும், என்னைப் பிடித்து நாலு அறை கொடுங்க. அப்போதான் என் மனசு ஆறும்! நீங்க ஏத்துக்க ஏத்துக்க என் குற்ற உணர்ச்சி அதிகமாகுது. என் மேலேயே எனக்கு வெறுப்பு வருது. அந்த குழந்தை என் வயித்துல இருக்கக் கூடாதுங்க. அழீச்சிருவோம்!”

     “ரதி! என்ன சொல்கிறாய் நீ...?

     “ஆமாங்க... இது இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. இதை நினைச்சு நினைச்சு நான் செத்துப் போவேன். உங்களுக்கு நான் மனைவியா வந்திருக்கவே கூடாதுங்க!”

     “மறுபடி உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா... ரதிலா இங்கே பார்! எதெது எப்படி நடக்கணுமோ அதது அப்படி தான் நடக்கும். அதற்காக நாம் கலங்கிப் போயிடறதால எந்த புண்ணியமும் இல்லை. எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சு மனசை தேத்திக்க!”

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles