கண்கள் மயங்கிய போது...  

                               

      

   இந்த மானேஜரின் பெயர் கிருஷ்ணவேலு. அவர் ஆரம்பம் முதலே அப்பாவுடன் இருந்தவர். அவரது நெளிவுசுளிவுகளை தெரிந்து, அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்.

     “அவர் இப்போதெல்லாம் ஆபீஸுக்கே சரியா வர்றதில்லை. காலைல வந்து தலையை காமிச்சுட்டு எங்கேயோ காரை எடுத்துக்கிட்டுப் போறார்’ பிறகு ராத்திரி வர்றார். ஆபீஸுல வச்சே குடிக்கிறார். அவர் போக்கே சரியில்லைங்க.”

     ரதிலாவிற்கு அதை கேட்க கேட்க துக்கமாயிருந்தது. இவருக்கு என்னாயிற்று. ஏன் இப்படி நடந்துகொள்கிறார்...? அழுகை பொங்கி வர அவள் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

     “அதுமட்டுமில்லையம்மா, அவருக்கு வேண்டாத பெண் சிநேகம்கூட இருக்கிறதா சந்தேகப்படறேன். எதையும் ஆரம்பத்துலேயே கண்டித்து வைப்பது நல்லது. நாயை தூக்கி நடு வீட்ல வச்ச கதையா...”

     “மானேஜர்! அளவுக்கு அதிகமா ஒண்ணும் பேச வேண்டாம். நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க!”

     ரதிலாவின் இயலாமை அவர் மேல் கோபமாய் வெடித்தது. அவர் போனதும் அறைக்குள் போய் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள்.

     கடவுளே... கடவுளே! ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்? வாழ்வு கொடுக்கிற மாதிரி கொடுத்ததெல்லாம் இப்படி அனுபவிக்கத்தானா...?

     வரலட்சுமியும் இடிந்து போயிருந்தாள், “ரதி! இப்போ என்னம்மா பண்றது?”

     “தெரியலம்மா. நான் உங்களுக்கு மகளாய்ப் பிறந்திருக்கவே கூடாது.”

     “அப்படியெல்லாம் சொல்லாதேம்மா எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் வரும். நல்லவர் நல்லவர்னு நினைச்சு பெருமைப்பட்டோமே... இவரை நம்பி உங்கப்பாவும் தன் சம்பாத்தியத்தை எல்லாம் இவர் பெயருக்கு எழுதி வச்சுட்டு போயிட்டாரே! இவர் உன்னை மோசம் பண்ணிவிடுவாராம்மா...?”

     “இல்லேம்மா நான் அப்படி நினைக்கலை. என் கார்த்திக் நல்லவர். அவருக்கு என் மேல் அலாதி பிரியமும் அக்கறையும் உண்டு. அவர் நிச்சயமா எனக்கு துரோகம் பண்ண மாட்டார்னு நம்பறேன்.”

     மானேஜர் கிருஷ்ணவேலுக்கு மன சமாதானமே இல்லை. கார்த்திக்கின் போக்கு அவரை கலவரப்பட வைத்திருந்தது. சோமசுந்தரம் இருக்கிறவரை நல்லவனாகவும் வல்லவனாகவும் நடந்து கொண்டவனின் திடீர் மாற்றம் அவரை சிந்திக்க வைத்தது.

     அவன் மேல் ஐயத்தை தோற்றுவித்தது. அவனுடைய நாணயத்தின் மேல் சந்தேகம் எழுந்தது. அவனுடைய நோக்கத்தை ஆராய தூண்டியது. அவன் நல்லவன், நமக்கு வாழ்வளித்தவன் என்று ரதிலா இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நாம் சொல்வதெல்லாம் கசப்பாயிருக்கிறது.

     ரதி, நான் என்ன மூன்றாவது மனிதனா? உன் குடும்பத்துடன் எத்தனை நெருங்கி பழகுகிறேன்! உன்னை சின்ன குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்தது நான்தானே! அங்கிள்... அங்கிள் என்று என்னை சுற்றி சுற்றி வருவாய்! இப்போது என்னடாவென்றால் ‘சார்’ என அழைத்து அந்நியப்படுத்துகிறாய்...

     முதலாளிக்கு வீட்டில் இருக்கவே நேரம் இருக்காது. அப்போதெல்லாம் நான்தானே உன்னை வெளியே அழைத்துப் போவேன்! உன்னை சினிமாவிற்கும், காவிரி கரைக்கும் அழைத்துப்போக என்னை தவிர யார் இருந்தார்கள்? நீயே இன்று என் பேச்சை அவமதித்து விட்டாய். என் வேலையை பார்த்துக்கொண்டு போக சொல்லி விட்டாய். இனி அந்த கார்த்திக்கை ஆராய்வதுதானம்மா என் வேலை. அவனை கையும் களவுமாய் பிடித்து உன் முன்னில் நிறுத்த வேண்டும். அவனுடைய முகத்திரையை கிழிக்க வேண்டும்.

     அவர் தீர்மானித்துக் கொண்டார்.

     ரதிலாவால் இரண்டு நாட்களுக்கு இயல்பாய் நடந்து கொள்ள முடியவில்லை. கிருஷ்ணவேலு சொன்னது நிஜமாயிருக்குமா? அவர் ஏன் பொய் சொல்லவேண்டும்? அவருக்கும் கார்த்திக்கிற்கும் அப்படி என்ன பகை என்று அவள் தன்னையே குழப்பிக்கொண்டிருந்தாள்.

     ஆனால் ரதிலாவே அடுத்த வாரத்தில் அவளுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. அவள் கோவிலுக்கு போய் திரும்பும் போது வழியில் கார்த்திக்கின் கார். ஏஸி ரெஸ்டாரண்டிடம் நிற்பதைப் பார்த்தாள்.

     அவர் இங்கே என்ன பண்ணுகிறார் என்று உள்ளே போனவளுக்கு அதிர்ச்சி! கார்த்திக் வேறு ஒரு பெண்ணின் தோளில் கைபோட்டபடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

     அதைக் கண்டதும் அவளுக்கு இடி விழுந்தது மாதிரி இருந்தது. அப்படியென்றால் மானேஜர் சொன்னதெல்லாம் நிஜமா...? இவள் யார்... இவனுக்கும் இவளுக்கும் என்ன உறவு...?

     நம் கணவன் இத்தனை மோசக்காரனா...?

     வீட்டுக்கு வந்ததும் அழுது அழுது தீர்ந்தாள். அப்பா படத்திடம் மண்டியிட்ட, “இதையெல்லாம் பார்க்க வேண்டாம்னுதான் நீங்க சீக்கிரமாப் போயிட்டீங்களாப்பா?”

     அன்று ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கார்த்திக் வீடு திரும்பி இருந்தான். அவன் மிகுந்த கோபத்திலிருந்தான். வந்த வேகத்திலேயே மாடிக்கு போய் முடங்கிக் கொண்டான்.

     ரதிலா சாப்பிட அழைத்த போது வேண்டாம் என்று சொல்லி விட்டான். அவன் முகம் சிவந்திருந்தது. கண்களும் கோவைப்பழம். அவன் இயல்பாய் இல்லை. என்னவோ கோபத்தில் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

     அவனுக்கு என்ன பிரச்சனை என அறிய ஆவல் ஏற்பட்டது. ஆனால்  அதை கேட்க அவளுக்கு தயக்கம். பேசாமல் கீழே வந்தாள். இவனை இப்படியே விட்டால் சரிப்பட மாட்டான். இனி இவனுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வேண்டும், இவன் எங்கே போகிறான். என்ன செய்கிறான், யார் யாரையெல்லாம் சந்திக்கிறான் என்பதை உளவு பார்க்க வேண்டும். இல்லை யென்றால் முதலுக்கே மோசம் வந்துவிடும்.

     சாப்பிட்டு முடிந்ததும் போன் ஓயாமல் அடித்தது. ஒரே நம்பரில் மாடியிலும் கீழேயும் போன் இருந்தது. அவள் வந்து எடுக்கும் முன்பே மாடியில் கார்த்திக் எடுத்து பேசிக் கொண்டிருந்தான் என்பதை விட திட்டிக் கொண்டிருந்தான் எனலாம்.

     அந்த போன் உரையாடல் கேட்க கேட்க ரதிலாவின் முகம் வெளிற ஆரம்பித்தது. கடவுளே! இது என்ன புதுக் கதை!

     அக்கரையில் கொடைக்கானலிலிருந்து ஜெயன் என்பவன் பேசினான். அவன் ஹோட்டல் கைலாசின் மானேஜராம்!

     “ஏய்... கார்த்திக்! மதியம் நான் கேட்ட விஷயம் என்னாயிற்று?”

     “என்ன விஷயம்?”

     “தெரியாத மாதிரி கேட்கிறாயே கண்ணு! பணம்! இரண்டு லட்சம்!

     “என்ன மிரட்டுகிறாயா... தர முடியாது!”

     “தர முடியாதா அப்போ சரி, நீ திட்டம் போட்டு கொடைக்கானல் வந்தது, உன் மனைவி ரதிலாவிற்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தது, என் மூலம் போலீசுக்கும் பேப்பருக்கும் நியூஸ் கொடுத்தது எல்வற்றையும் உன் மனைவியிடமும், போலீசிடமும் சொல்லி விடுகிறேன்!”

     “உன் மிரட்டலெல்லாம் இங்கே வேண்டாம். தாராளமாய் போய் சொல்லிக்கொள். நீ சொன்னால் உடனே நம்பி விடுவார்களா? உன்னால் அதை எப்படி நிரூபிக்க முடியும்?”

     நிரூபிக்கவா... ஹா ஹ ஹா! நீ இப்படி ஏதாவது பண்ணுவாய் என்று தான் அன்றே நான் படம் எடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன். நீ பாலில் கலந்தது. அவள் அறைக்குள் போனது, அவளை கெடுத்தது எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன!”

     அந்த ஜெயன் சட்டென்று போனை வைத்துவிட்டான்.

     ரதிலாவிற்கு தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. இது என்ன புதுக்கதை...? அன்று நம்மை கெடுத்தது இவன் தானா... இவன்தான் திட்டம் போட்டு நமக்கு மயக்க மருந்து கொடுத்தானா? பேப்பருக்கு நியூஸ் கொடுத்ததும் கூட இவன் ஏற்பாடுதானா? எல்லாம் எதற்காக?

     கடவுளே... இது என்ன சோதனை! அப்படியென்றால் இவன் நல்லவன் போல நடித்தது, நம்மை தற்கொலையிலிருந்து காப்பாற்றியதெல்லாம்கூட போலிதானா? இவன் நம்மை தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறானா?

     அவளுக்கு நினைக்க நினைக்க வயிற்றை கலக்கிற்று. இப்படியெல்லாம் கூட நடக்கும் என்று அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. ஒரு மனிதன் இத்தனை கொடூரமாய் கூட நடந்து கொள்வானா...?

     கார்த்திக் ஏஜன்ஸி, அந்த ஹிண்டுவில் வந்த விளம்பரம்! அதெல்லாம் முன்னமே திட்டம் போட்டு செய்த ஏற்பாடுகளா? “எங்கம்மாவை எவனோ ஏமாத்திட்டான். அவ சாகும் முன்பு சத்தியம்!” ஓ...காட்!

     நாம் நன்றாய் ஏமாந்துவிட்டோம். அவன் கண்கள் நம்மை ஏமாற்றி விட்டன. இவன் நல்லவனில்லை, நயவஞ்சகன்! நம்மை கெடுத்து, நாசமாக்கி, ஊர் சிரிக்க வைத்து, நம் காதலை பிரித்து, அப்பா-அம்மாவை வதைத்து, அவர் உயிரை போக்கி... எல்லாவற்றுக்குமே இவன்தான் காரணமா...?

     அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எல்லாவற்றையும் கஷ்டப்பட்டு ஜீரணித்துக் கொண்டாள். உள் மனது அவசரப்படாதே என்று எச்சரித்தது.

     ஒரு போன் காலை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விடாதே. தீர விசாரி! நன்றாய் யோசித்து செயல்படு, அவனை ஆராய்சி செய்! அதன் பிறகு ஒரு முடிவுக்கு வா!

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles