கண்கள் மயங்கிய போது...  

               

     

     “கொடைக்கானல்.”

     “கொடைக்கானலுக்கா... பணமில்லாம வெறுமனே போய் என்ன பண்றது?”

     “இப்போ பணமல்ல முக்கியம். அந்த அயோக்கியன் ஜெயமைத்தான் தேடி போயிருக்க வேண்டும். அவன் போவதற்கு முன்பு நாம் போய் அந்த படங்களை வளைக்க வேண்டும்.”

     ரதிலா வைராக்கியத்துடன் காரை சீறி பாய விட்டாள் கிருஷ்ணவேலு யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவள் போன வேகம் அவரை பயமுறுத்திற்று.

     “ரதிலா! கொஞ்சம் நிதானமாய் போ! பதட்டம் வேண்டாம். அந்தப் படங்களை நிச்சயமாய் நாம் கைப்பற்றிவிட முடியும்.

     ஆனால் அவள், அவருடைய வார்த்தைகளை காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்திக் கொண்டே போனாள். எதிரே வந்த லாரிகள் அவளை சபித்தன. ரோட்டில் நடந்தவர்கள் ஓடி ஓதுங்கினர். மணப்பாறையில் கார், சேவல் ஒன்றை காவு கொடுத்தது. சேவல்காரி குய்யோ முறையோ என்க, அதை பொருட்படுத்தாமல் அவள் பறக்க விட்டாள்.

     இதோ வையம்பட்டி, இதோ நடுப்பட்டி, அய்யலூர்! அடுத்தது வடமதுரை என்று அவள் உஷ்ணத்துடன் காரை செலுத்தினாள். திண்டுக்கல்லில் அவர்களை ரெயில்வே கேட் மறித்தது.

     அவள் பொறுமையின்றி சே! என்ற ஸ்டிரியங்கில் குத்தினாள். அவருக்கு அபோதுதான் நடுக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது கேட்டிற்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் வாகனங்கள் நீண்டு நின்றிருந்தன.

     பொடிபசங்கள் ஓடி வந்து முறுக்கு விற்றனர். பழங்களை கையில் ஏந்தி ரூபாய்க்கு பத்து என்று நீட்டினர். காருக்குள் அனலடித்தது. காலில் வியர்த்தது.

     “ரதிலா, சாப்பிட்டுவிட்டு போகலாமா?”

     “வேண்டாம், எனக்கு பசிக்கவில்லை.”

     “ஆனால் எனக்கு பசிக்கிறது”

     “அப்போ இறங்கி சாப்பிட்டுவிட்டு சாவகாசமாய் வாருங்கள். நான் போகிறேன்!”

     “ரதிலா! என்ன சொல்கிறாய் நீ! நீ மட்டும் தனியாகவா...’

     “ஆமாம். அப்புறம் என்ன, போட்டோக்களை கவர வேண்டுமே என்று நான் அவஸ்தையிலிருக்கும் போது உங்களுக்கு சாப்பாடுதான் முக்கியமாய் போயிற்று.”

     ரெயில் தடதடவென ஓடி மறைந்தது. கேட் சிறக்கப் பட்டதும் ரதிலா காரை மீண்டும் ரேஸ் விட்டாள்.

     “ரதி! நீ என்னை தப்பாய் புரிந்து கொண்டாய். ஈவு இரக்கமில்லாமல் காரை ஓட்டி வருகிறாயே... தளர்ந்து போவாயே என்றுதான் சொன்னேன்.”

     கார் வத்தலகுண்டை தாண்டி கோடை ரோடில் திரும்பிற்று. சற்று நேரத்தில் மலையும் மரங்களும் வரவேற்றன. வெயிலுக்கு இதமாய் காற்றடித்தது. ரோடு வளைந்து வளைந்த ஏற ஆரம்பித்தது.

     “இங்கேயாவது பார்த்துப் போம்மா. எதிரே கார் வந்தாக்கூட தெரியாது.”

     “எல்லாம் உங்களால்தான்.”

     “என்னாலா...என்ன சொல்கிறாய் நீ...?”

     “ஆமாம் அன்றே அந்த படங்களை வாங்கி வந்திருந்தால் இத்தனை பாடுபட வேண்டியதில்லையே?”

     “அவற்றை மட்டும் நீ பார்த்திருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டாய் சுத்தமாய் தளர்ந்து போயிருப்பாய். இத்தனை உணர்ச்சி வசப்படக்கூட மாட்டாய். விடு. அதை பற்றி இப்போது ஏன்? எப்போ கார்த்திக் அயோக்கியன் உன்னை ஏமாத்தினான்னு தெரிஞ்சதோ அப்போ அவளை வெட்டி கூறு போட்டிருக்க வேண்டும்! இத்தனை தூரத்திற்கு விட்டிருக்கவே கூடாது. நீதான் கணவன்னும், திருந்துவான்னும் சொல்லி என்னை தடுத்துவிட்டாய். இல்லாவிட்டால் நான் அவனை என்றோ தீர்த்த கட்டி இருப்போன்.”

     “தீர்த்து கட்டியிருக்கலாம். ஆனால் அதனால் யாருக்கு லாபம்? அப்பா என்னைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டார். சீராட்டி வளர்த்தார். அவரோட கனவெல்லாம் பொய் என்கிற மாதிரி நான் நடந்து கொண்டேன். அப்புறமாவது அவருக்கு நிம்மதி தரலாமேன்னு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். அவருடைய திருப்பதிக்காக, அவருடைய சந்தோஷத்துக்காக கார்த்திகை கட்டிக்கொண்டேன்.

     அப்பா அந்த சந்தோஷத்திலேயே போய் சேர்ந்திட்டார். என்னோட கணவன் அயோக்கியனா இருக்கலாம். அவன் என்னை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் அப்பா நடத்தின இந்த கல்யாணம் தோற்றுப் போகக் கூடாது, ஜெயித்தாக வேண்டும்னு நான் ஆசைப்பட்டேன்.”

     கார், சில்வர்ஃபால்ஸ், ஊத்து, பண்ணை பிரிவையெல்லாம் எளிதாய் கடந்தது.

    “அங்கிள்! நான் கெட்டுப் போனவன்னு ஊர் என்ன வெல்லாம் பேசினது தெரியுமா? அந்த காயம் இன்னும் என் மனசுல இருக்கு. ஆறலே. என்னை ஏளனமாய் பேசினவங்களுக்கு முன்னே நான் இன்னொரு முறை தோத்துப் போக விரும்பலே. அதனாலதான் இவனோட அக்கிரமங்களையெல்லாம் பொறுத்துக்கிட்டிருந்தேன். இப்போ அவனோட கொடுமைகள் ஜாஸ்தியாப் போச்சு. இனியும் எதுக்காக நான் அவனை நம்பி வாழணும்?”

     பேசப் பேச ரதிலாவின் குரல் கம்மிக் கொண்டே வந்தது. அவள் கண்கள் கலங்கி, ரோடை மறித்தன அவள் சேலை தலைப்பால் தன் கண்களையும் மூக்கையும் ஒற்றிக் கொண்டாள்.

     “பழசெல்லாம் இப்போ எதுக்கும்மா... விடு. இனி ஆக வேண்டியதை பத்தி யோசி. அந்த பாவியை சும்மா விடக் கூடாது. அந்தப் படங்கள் கிடைக்காட்டிக் கூட, அவனை கட்டி வச்சு...”

     “அந்த படங்கள் நமக்கு கிடைக்காதா அங்கிள்...?“

     “நிச்சயமாய் கிடைக்கும்மா. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.”

     அவர்கள் அந்த படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் கார்த்திக், ஜெயனின் வீட்டிலிருந்தான்.

     ஜெயன் அவனைக் கண்டதும் ஏளன புன்னகை பூத்து, “வாரேவா என்று சிரித்தான். “நீ வருவாய் என்று தெரியும். ரெண்டு லட்சம் எங்கே, எடு பார்ப்போம்!”

     “நீ முதலில் அந்த நெகடிவையும், பிரிண்டையும் எடு. பிறகு பணம்!”

     “சீ, நம்பமாட்டேன்கிறாயே... இந்தா பார்த்துக் கொள்!” என்று ஜெயன் ஒரு கவரை எடுத்த டேபிள் மேல் போட்டான், கார்த்திக் அதை எடுக்க வேண்டி கையை நீட்ட, “இரு...இரு முதலில் பணம் கொடு! எண்ணி பார்த்துக் கொள்கிறேன். உன்னை நம்ப முடியாது!”

     கார்த்திக் தன் பெட்டியை அவனிடம் நீட்டினான். ஜெயன் அதை வாங்கி திறந்து, பணக்கட்டை கண்டு முகம் மலர்ந்த நேரத்தில் கார்த்திக் சட்டென்று அவன் மேல் பாய்ந்து அவன் கழுத்தில் தன் கைகளை இறுக்கி, வயிற்றிலும், மூக்கிலும் இடி இடியாய் அடிகளை இறக்கினான்.

     அவற்றை சற்றும் எதிர்பார்காத ஜெயம், மூக்கிலும், வாயிலும் ரத்தம் சிந்தி அப்படியே மயங்கிச் சரிந்தான்.

     கார்த்திக் அந்த நெகடிவையும் படங்களையும் முத்தம் கொடுத்து தன் சட்டை பையில் திணித்துக் கொண்டு, சூட்கேஸை மாட்டிகொண்டு காருக்கு வந்தான். ஹாப்பி! இன்று முதல் ஹாப்பி” என்று விசிலடித்தபடி காரை கிளப்பினான்.

     பார் ஒன்றிடம் நிறுத்தி, “ஜெயன்! உனக்காக ஒரு பாட்டில்!” என்று உள்ளே மடக்கினான். “ரதி! அடியே ரதி உனக்காக ஒன்று!”

     அவன் தன் நிலை மறந்து குடிததான். பில்லிற்கு கத்தையாய் பணத்தை தூக்கி போட்டுவிட்டு தள்ளாடி தள்ளாடி போய் காரை ஸ்டார்ட் பண்ணினான். அந்த கோண்டஸாயும் தண்ணியடித்த மாதிரி தள்ளாடி ஓட ஆரம்பித்தது.

     ரதிலாவும், கிருஷ்ணவேலுயும் ஜெயனின் வீட்டை அடைந்தபோது மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. நான்கு மணிக்கே வெயில் வாடிப்போய் குளிர் கிளம்பியிருந்தது. ரோடு கடைகள் கலைந்திருந்தன.

     அங்கங்கே மலைகளில் பனி மூட்டம், சொட்டரும் மப்ளரும் கூடிய மனிதர்கள்.

     “நீ இங்கேயே இரும்மா. நான் போய் அவன் இருக்கானான்னு பார்த்துட்டு வரேன்.”

     “நானும் வரேன்!” என்று அவளும் இறங்கினாள். ஜெயனின் வீடு திறந்தே கிடந்தது. கிருஷ்ணவேலு பஸ்ஸரை அழுத்தி விட்டு காத்திருந்தார். பதிலில்லாமல் போகவே, “வாம்மா உள்ளே போய் பார்ப்போம்” உள்ளே தயங்கித் தயங்கி போனவர்கள். அங்கே ஹாலில் ஜெயன் அடிபட்டு கிடப்பதைக் கண்டதும் அதிர்ந்து போனார்கள்.

     “ஜெயா! உனக்கு என்னாச்சு...?” என்று அவர் குனிய, அவன்,

     “கார்த்திக்... கார்த்திக் என்னை அடிச்சுட்டான்” என்று முணுமுணுத்தான்.

     “கார்த்திக்கா... என்ன சொல்கிறாய்...?”

     “ஆமாம், அவன் என்னை அடித்து போட்டுவிட்டு அந்த படங்களையும் நெகடிவையும்...”

     ரதிலா, “ஓ...காட்”  என்று அலறினாள். “அங்கிள் நாம மோசம் போயிட்டோம், நமக்கிருந்த ஒரே நம்பிக்கை அந்த படங்கள் தான். இப்போது அதுவும் போயிற்று. இனி நாம என்ன செய்வது...?”

     “ரதி மனசுடைந்து போகாதே. இப்போதும் ஒன்றும் குடி முழுகிவிடவில்லை. அவன் படத்தை எடுத்துக்கொண்டு எங்கே போய்விடுவான்? ஊருக்குத்தானே...நீ வண்டியை விடு.”

     அவள் காரில் ஏறி அமர்ந்து விருட்டென கிளப்பினாள் “அங்கிள்! அந்த பாவி நெகடிவையும் படங்களையும் இந்நேரம் அழிக்காமல் விட்டிருப்பானா...?”

     “அவன் அழித்திருக்க மாட்டான் என்று நம்புகிறேன். அப்படி அவன் அவற்றை அழித்திருக்கும் பட்சத்தில்...” அவர் பற்களைக் கடித்தார்.” அவனையும் அழித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன், நீ எதற்கும் கவலைப்படாதே”

     ஐந்து மணிக்கு சூரியன் விடை பெற்றிருந்தான் மேய்ச்சலுக்குப் போன ஆடுகள் சிலிர்த்துக் கொண்டு ரோடை மறித்தன. கார் மெல்ல மெல்ல கொடைக்கானலை விட்டு இறங்கிக் கொண்டிருந்த்து.

     ரதிலா எதுவுமே பேசவில்லை. அவள் கண்கள் ரோடின் மேலேயே இருந்தன. ஆனால் மனது கார்த்திக்கைச் சுற்றியே அவனை எப்படி வீழ்த்துவது என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

     அவர்கள் சில்வர் ஃபால்ஸின் வளைவில் திரும்பின போது கிருஷ்ணவேலு.

     “ரதி! கொஞ்சம் ஸ்லோ பண்ணு.”

     “ஏன்...?”

     “அதா பார். கார் ஒண்ணு பாறையிலே மோதி கவிழ்ந்து கிடக்கு.”

     “கிடக்கட்டும் நமக்கென்ன... நாம் போய் அந்த கயவனை பிடித்தாக வேண்டும்.”

     அவள் சொல்லிவிட்டு வளைக்க, “ரதி ஐயோ அது நம் கண்டஸா போலிருக்கும்மா. நிறுத்து...நிறுத்து.”

     ரதிலா சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினாள் “ஆமாம் அங்கிள், அது நம்ம கார்தான்.”

     “அப்படியென்றால் அதை ஓட்டிகிட்டு வந்த கார்த்திக்...?” அவர்கள் இறங்கி காரிடம் வந்தனர். கார்த்திக் எங்காவது தென்படுகிறானா என்று குனிந்து பார்த்த தருணத்தில்,

     “ரதி! என்னை காப்பாத்து!” என்று ஒரு குரல் கேட்டது. அவர்கள் குரல் வந்த பக்கம் திரும்ப, அங்கே கார்த்திக் ரோட்டின் முனையில் படுபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கை செடி ஒன்றை பற்றிக் கொண்டிருந்தது, அது ஒன்றுதான் அவனுக்கு பலம். கீழே கிடுகிடு பள்ளம்! அங்கிருந்து எட்டிப் பார்த்தாலே தலை சுற்றிற்று.

     “ரதி... ரதி! என்னை காப்பாத்தும்மா!”

     அவன் அலறிக் கொண்டிருந்தான். ரதிலாவிற்கு அவனுடைய நிலைமை வலித்தது. கிருஷ்ணவேலு, “அவன் எக்கேடோ கெடட்டும் வாம்மா நாம போவோம்!”  என்று அவள் கையை பிடித்து இழுத்தார். ஆனால் அவள் அசைய வில்லை. அவளுடைய மனசு இளகிற்று. அவனுடைய கெஞ்சலும், குரலும் அவளை உருக்கிற்று. ஒரு மனிதன் எத்தனையோ தவறுகள் செய்திருக்கலாம், ஏமாற்றியிருக்கலாம். ஆனால் அவன் மரண அவஸ்தையில் இருக்கும் போது எந்த பெண்ணால்தான் அவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்?

     அவனுடைய அவஸ்தை அவளுடைய வைராக்கியத்தை தகர்த்தது. தளர்த்தியது. அதுவரை அவன் மேலிருந்த ஆவேசத்தை தணித்து, அவள் அவனை நோக்கி நடந்தாள்.

     சூழ்நிலை இருட்டாயிருந்தது. பனிகாற்று ஓசையுடன் வீசிற்று. அத்தனை பனியிலும்கூட அவளுக்கு உஷ்ணமாயிருந்தது. பக்கத்து நீர் வீழ்ச்சி இரைச்சலை எழுப்பிற்று. அதன் இரைச்சல் அந்த இடத்தின் அமைதியை குலைத்தது. கிருஷ்ணவேலு காரிடமே பிடிவாதமாய் நின்றிருந்தார் அவருக்கு ரதிலாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. பெண் புத்தி பின் புத்தி என்பது எத்தனை சரியாய் போயிற்று! அவன் செய்த துரோகங்களை எல்லாம் நொடியில் மறந்து, காப்பாற்றப் போகிறாளே... இவளுக்கு என்ன பைத்தியமா? கார்த்திக் தன் பலத்தையெல்லாம் திரட்டி தொங்கிக் கொண்டிருந்தான். அவன் மேலே ஏறுவதற்கு முயல, செடி வேரை அறுத்துக் கொண்டு வந்தது. அவன் மிரண்டான். மிடறு விழுங்கினான்.

     “ரதி! உனக்கென்ன பைத்தியமா... வா போகலாம்... !”

     அவரின் பேச்சை மதிக்காமல் குனிந்து கார்த்திக்கின் கையை பற்றப் போனவளை அங்கே புதரின் மேல் சிதறிக் கிடந்த படங்கள் ஈத்தன.

     அந்தப் படங்கள்! அவற்றை பார்க்க பார்க்க அவளுடைய கண்கள் கூசின கன்னம் சிவந்தது. கண்கள் பழுத்தன அவற்றில் ரதிலா ஆடையில்லாமல் கிடக்க கார்த்திக் அவளை...

     அவற்றை பார்த்த மாத்திரத்தில் அவளுடைய தளர்ந்து போன வைராக்கியம் சட்டென்று துளிர் விட்டது. அவளுக்கு பழையதெல்லாம் பிளாஷ் அடிக்க ஆரம்பித்தது. கொடைக்கானல் டூர். லாட்ஜ். மயக்க மருந்து. ரேப். போலீஸ். ஆஸ்பத்திரி. அப்பா. பேப்பர். அவமானம். கார்த்திக்கின் நடிப்பு. கல்யாணம். அப்பாவின் மரணம். அவனது கொடுமைகள்.

     “ரதி... ரதி... ப்ளீஸ் கார்த்திக் உருக-

     அவள், “நோ” என்று கத்தினாள்.

     இவனுடைய நடிப்பு. நயவஞ்சகம். துரோகம். சதி இவற்றிற்கெல்லாம் கட்டாய் இவன் தண்டனை பெற்றாக வேண்டும். தப்பு செய்தவனை இறைவனே தண்டித்திருக்கிற போது-இவனை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்?

     அவள் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு விறுவிறு வென காரை நோக்கி நடந்தாள். அதே சமயத்தில் கார்த்திக் “அம்...மா...!” என்று அலறுவது கேட்டது.

     அவன் அலறி முடிப்பதற்குள் பாறையில் மோதி. மரத்தில் சிதறி, உருண்டு, தூக்கி எறியப்பட்டு, பறந்து உருக்குலைந்து, பொம்மை மாதிரி பாதாளத்தில் தெரிந்தான்.

முற்றும்

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles