கண்கள் மயங்கிய போது...  

                            

 

    அவள் சிந்தித்துப் பார்ப்பதற்குள்ளேயே அப்படியே மயங்கி படுக்கையில் அலங்கோலமாய் சரிந்தாள். கால்களை உதறினாள். தலையை பிறாண்டி பிறகு செயலிழந்தாள் அவள் ஏன் மயங்கினாள். அவளுக்கு என்னாயிற்று. நடந்தது என்ன என்று அறிய விரும்புகிறவர்களுக்கு ஒரு வார்த்தை.

     ரதிலா சற்று முன் குடித்த பாலில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்தது. அந்த மருந்துதான் அவளை இப்போது செயலிழக்க வைத்திருக்கிறது.

     காலையில் ஏழு மணியாகியும் கூட கொடைக்கானலில் விடிவேனா என்று மேகங்கள் மாநாடு போட்டிருந்தன. சூரியனை அவைகள் கேரோ செய்திருந்தன. வெளியே பனிப்புகை கரைந்து கொண்டிருந்தது.

     மலையாள நாயர்கள் ரோடோரங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் தலையுடன் குளித்து பட்டை போட்டு டீ அடித்துக் கொண்டிருந்தனர். பேப்பர்கள் வேன்களில் வந்து இறங்கின.

     குதிரைகள் கனைத்தன. நாய்கள் காலை டிபனிற்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தன.

     கைலாஷ் ஹோட்டலில் சன்னமாய் மங்கள இசை பாடிற்று. டி.வி.யில் சங்கு! ஊருக்கு போகும் அவசரத்தில் சிலர் ரூமை காலி பண்ணி கணக்கு பார்த்தனர்.

     கவுண்டரில் மப்ளரும் பீடியுமாயிருந்த ஜெயன், “கொஞ்சம் பொறுமையா இருங்க சார்!” என்று கஸ்டமரை விரட்டினான். இந்த குளிர்ல பேனாக்கூட உறைஞ்சு போகுது. வெயில் வந்தப்புறம் காலி பண்ணக் கூடாதா சார்...?

     அவன்தான் அங்கு மானேஜர். அவன் பீடியை அடிவரை இழுத்து எறிந்துவிட்டு “டேய் பையா டீ! என்று கத்தினான்.

     அவன் கத்தி விட்டு உல்லனை அவிழ்த்து வைத்துவிட்டு, மப்ளரை சரி பண்ணிக் கொண்டு பேனாவை எடுத்தபோது. வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று சர்ரென்று வந்து நின்றது.

     அவன் நெகிழ்ச்சியுடன் பார்க்க, அதிலிருந்து எஸ்.ஐ. ஒருவர் வேலுமணி என்கிற திருநாமத்துடன் இறங்கி வந்தார். வந்த வேகத்திலேயே, “இங்கே யார் இன்சார்ஜ்... என்று விரட்டினார்.

     “நான்தான் சார்” என்றான் ஜெயன், சொல்லிவிட்டு மரியாதையுடன் எழுந்து நின்று கொண்டு, “என்ன சார் விஷயம்...?”

     “இங்கே எத்தனை ரூம்ஸ் இருக்கு?”

     “எதுக்கு சார்?”

     “கேட்ட கேள்விக்கு பதில்!”

     “வந்து...இருபத்தேழு சார்!”

     “ரூம் எல்லாம் நேத்து ஆக்குபைடா?”

     “பத்து ரூம் பாக்கி சார்!”

     “இங்கே நேத்து ராத்திரி அசம்பாவிதம் எதுவும் நடந்ததா...”

     “அசம்பாவிதமா...?” அவன் அதிர்ந்தான். “அப்படி எதுவும் நடக்கலியே சார்”

     “நடக்கலியா... விளையாடுகிறாயா... உண்மையைச் சொல்!” என்று அவர் அவன் காலரைப் பற்றினார். “இங்கே நேத்து ராத்திரி விபச்சாரம் நடக்கலே...?”

     “விபச்சாரமா...? என்ன சார் சொல்றீங்க?” அவன் கரங்கள் நடுங்கின. “எனக்கு எதுவுமே தெரியாது சார்!”

     “உனக்கு எதுவுமே தெரியாதில்ல... கமான் லெட்ஜரை எடு! யார் யார் எந்தெந்த ரூம்ஸ்ல தங்கியிருக்காங்க... பொண்ணுங்க எந்த ரூம்?”

     அவன் தந்தியடித்துக் கொண்டு சொன்னான். “ரெண்டு ரூமைத் தவிர மத்த எல்லா ரூமிலும் கப்புள்ஸ் தான் சார்!”

     “அந்த ரெண்டு ரூம்ல யார் இருக்கா?”

     “மூணு பொண்ணுங்க சார்!”

     வா பார்ப்போம்!” என்று அவர் வேகமாய் உள்ளே நடந்தார். ” “ரூம் நம்பர் என்ன...?”

     “பதினாலும், பதினாறும் சார்!”

     பதினாலில் தான் ரதிலா தங்கியிருந்தாள். அந்த ரூமை தொட்டதுமே அதன் கதவு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தவர்கள் ஒரு விநாடி அதிர்ந்து தங்கள் கண்களை பொத்திக் கொண்டனர். அதற்குக் காரணம் அங்கே படுக்கையில் ரதிலா ஆடை கிழிந்து அலங்கோலமாய் கிடந்ததுதான்.

     அந்த மருத்துவமனை கொடைக்கானலின் மத்தியிலிருந்தது. வெளியே பஸ் ஸ்டாண்டின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது; மாடி அறை ஒன்றில் ரதிலா இன்னமும் மயக்கத்தில் கிடக்க, வெளியே போலீஸ்காரர்கள் பேப்பரில் மூழ்கியிருந்தனர்.

     கல்யாணியும் அர்ச்சனாவும் கண்கள் நனைந்து, கன்னம்வீங்கி பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர். இடையிடையே அவர்கள் எழுந்து ரதிலா கண் விழித்து விட்டாளா என்று பார்த்தனர்.

     அவர்கள் மிகுந்த சோகத்தில், ஏற்கனவே இருவரும் பயந்த சுபாவிகள். இதில் இப்படி வேறு நடந்திருக்கிறது. நேற்று ராத்திரி என்ன நடந்தது, யார் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். ரதிலாவிற்கு என்ன சம்பவித்தது என்று அவர்களுக்கு எதுவுமே தெரியாது.

     அலுப்பில் தூங்கி விட்டனர். காலையில் இரைச்சல் கேட்டு எழுந்து பார்த்த போது போலீஸ்! புகைப்படக்காரர்கள் படமெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

     எஸ்.ஐ. அவர்கள் இருவரையும் விசாரணை என்கிற பெயரில் துளைத்து எடுத்து விட்டார். அவர்கள் வந்தது, சுற்றினது, தங்கினது எல்லாவற்றையும் அறிந்ததும், “காலம் கெட்டுக்கிடக்கு வீட்டில் பாதுகாப்பாய் இருக்கும் போதே அவனவன் அக்கிரமம் பண்ணுகிறான், இந்த லட்சணத்தில் நீங்கள் எப்படி தனியாய் வரப் போயிற்று?” என்று பிடித்து விளாசி விட்டார்.

     ரதிலாவின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு அவள் வீட்டிற்கு போனிலும், டெலகிராமிலும் மெஸேஜ் கொடுத்து விட்டிருந்தார். அவர்கள். எந்த நேரத்திலும் இங்கே வந்து விடக்கூடும்.

     அவர்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்கிற அச்சம் வேறு அவர்களை வாட்டிற்று. சீ! நீங்களும் ஒரு பெண்களா என்று காரி துப்புவார்களா...? நீங்கள் தான் எங்கள் பெண்னை மயக்கி இழுத்து வந்தீர்களா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

     நாங்கள் இல்லை. நாங்கள் வேண்டாம் என்றுதான் சொன்னோம், உங்கள் பெண்தான் என்று சொல்லவா...? சொல்வது சரிதானா? சொன்னாலும் நம்புவார்களா?

     நாம்தான் அவள் பணத்திற்காக அழைத்து வந்தோம் என்று நினைப்பார்கள். அவர்கள் ஏதாவது நினைத்து விட்டுப் போகட்டும், ரதிலாவிற்கு இப்படியாயிற்றே!

     பாவிப்பெண்ணே! தனி ரூம் வேண்டாம் என்று சொன்னோமே... கேட்டாயா? வீண் பிடிவாதத்தாலும் உன் அகம்பாவத்தாலும் வாழ்க்கையையே நாசமாக்கிக் கொண்டாயே! இதெல்லாம் தேவைதானா? நாம் இங்கு வந்ததே தப்பு. விபரீதம். விபரீதத்திற்கும் ஒரு அளவு வேண்டும். எந்த தைரியத்தில் நாம் கிளம்பி வந்தோம்.

     அவர்களுக்கு தங்கள் மேலேயே வெறுப்பு வந்தது. எல்லாம் நம் தலை எழுத்து. இந்த விஷயம் வீட்டிற்கும். கல்லூரிக்கும் தெரிந்து விட்டால்...?

     அவர்கள் கலங்கினார்கள். அவ்ளோதான். ஊருக்குப்போக வேண்டியதில்லை. இங்கேயே செத்துப் போகலாம், சட்டென்று ஒரு உந்துதல் வர, அவர்கள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு, “இந்த விஷயத்தை வெளியே விட்டு விட வேண்டாம் சார்! வெளியே தெரிந்தால் எங்கள் வாழ்க்கையே பாழாகி விடும்” என்ற வேலுமணியிடம் போய் கெஞ்சினார்கள்.

     அவர், “இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கணும்! இங்கே தனியாய் புறப்படுவதற்கு முன்பு இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்.”

     “ப்ளீஸ் சார்! நாங்கள் இருவரும் பாவங்கள். ஏதே ஒரு உந்துதலில் இப்படி வந்து விட்டோம். இந்த செய்தி மட்டும் வெளியே வந்து விட்டால் நாங்கள் ஊருக்கு முழுதாய் போக மாட்டோம். எங்கள் பிணத்தைத்தான் நீங்கள் பார்சல் பண்ணி அனுப்ப வேண்டியிருக்கும்!” அவர்கள் தீர்க்கமாய் சொல்லி விட்டிருந்தனர்.

     ரதிலாவின் அறைக்குள்ளிருந்த நர்ஸ் “அந்தப் பெண்ணு கண்திறந்திருச்சு!” என்று வெளியே ஓடி வந்தாள். “திறந்துட்டாளா?” என போலீஸ்காரர்களும் கல்யாணி, அர்ச்சனாவும் உள்ளே போகப் போக அவள் தடுத்தாள்.

     “எல்லோரும் வெளியவே நில்லுங்க. டாக்டர் வந்து பார்த்த பின்தான் அனுமதி.” என்று டாக்டருக்கு தகவல் கொடுத்தாள். டாக்டர் வந்து செக் பண்ணிவிட்டு, “இப்போ எப்படிம்மா இருக்கு?”

     ரதிலா பித்தா பித்தாவென்று விழித்தாள். தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

     “டாக்டர் வாட் ஹாப்பன் டு மி...” என்கிற வழக்கமான கேள்வியை கேட்டுவிட்டு பதிலுக்காக தவித்தாள்.

     “நோ பராப்ளம்! யு ஆர் ஹன்ரட் பர்செண்ட் ஓகே.” என்று விட்டு அவர் நர்ஸிடம். “இந்த பெண்ணிற்கு டிபன் வாங்கி வந்தாயா... முதலில் கொடு!”

     “இதோ!” என்று அவள் டிபன் பொட்டலத்தை ரதியிடம் நீட்டினாள். “இந்தாம்மா சாப்பிடு, பசிக்கும்.”

      “டாக்டர் எனக்கு என்ன சம்பவித்ததுன்னுதான் கேட்டேன்.”

     “நத்திங்! ராத்திரி பால்ல பல்லி விழுந்திடுத்து. அந்த விஷத்துல நீ மயங்கி விட்டாய் அவ்ளோதான்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles