கண்கள் மயங்கிய போது...  

                            

 

    “மயங்கி விட்டேனே...? அவள் நினைத்துப் பார்த்தாள், நேற்று ராத்திரி வந்த தலைவலி ஞாபகமிருக்கிறது. பால் வாங்கி குடித்ததும் கூட ஞாபகம் இருக்கிறது. அதற்கு பிறகு என்ன நடந்தது நாம் எப்படி இங்கே வந்தோம் என்பது அவளுக்கு சுத்தமாகவே ஞாபகமில்லை.

     அதற்குள் கல்யாணியும், அர்ச்சனாவும் உள்ளே வந்தவர்கள் ரதிலாவைக் கண்டதும் வாயைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தனர்.

      “ஏய் என்னாச்சு... ஏன் சுவிட்சு போட்ட மாதிரி ரெண்டு பேரும் ஒரே சமயத்துல அழறீங்க... எனக்கு எதுவுமில்லை.

     “ரதிலா எங்களை மன்னிச்சிருடி. உனக்கு ஒரு ஆபத்து வந்தப்போ எங்களால காப்பாத்த முடியாம போச்சு.”

     “எனக்கு ஆபத்தா... என்ன உளர்றீங்க? ஐ ஆம் ஆல்ரைட்!” அவர்கள் சற்று மவுனித்த பிறகு மூக்கை உறிஞ்சிக் கொண்டு “நாம தப்பு பண்ணிட்டோம் ரதி!” என்றார்கள் லேசான சுரத்துடன்.

     “ஏய்...ஸில்லி! பால்ல பல்லி விழுந்தா அதுக்கு நாம என்ன பண்ணுவோம். நாம எங்கே தப்பு பண்ணினோம்?”

     “இல்லை ரதி! பால்ல...” என்ற போது வேலுமணி வந்தார். “இங்கே என்ன கலாட்டா... எல்லோரும் வெளியே போங்க!” என்று விரட்டினார். “ரதி! ஹவ் ஆர் யு...?”

     அவள் அவரை வினோதமாய் பார்த்தபடி, “சுமாராய் நலம்” என்றாள் சிரிப்புடன்.

     “சரி, சாப்பிடு, சாப்பிட்டு கிளம்புங்க!”

     “எங்க சார்...?”

     “உங்க ஊருக்குத்தான். வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கோம். உங்க அப்பாவும் அம்மாவும் வந்திருவாங்க.”

     “வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கீங்களா... அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்தது இன்ஸ்பெக்டர்?”

     அவர் பதில் சொல்வதற்குள் கம்பவுண்டர் ஓடி வந்து “சார் உங்களுக்கு போன்!” என்றான். அவர் வெளியே ஓடினார். ஓடின வேகத்திலேயே திரும்பி வந்தார்.

      “உங்க பேரன்ஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்காங்களாம். இன்னும் அரை மணி நேரத்துல இங்கே வந்திருவாங்க!”

     ரதிலா படுக்கையிலிருந்து விசுக்கென எழுந்து, “எதுக்காக சார் அவங்களுக்கு தகவல் கொடுத்தீங்க...?” என்றாள் அவருடைய முகத்திற்கு நேரில் கையை நீட்டி.

     அவர் அதை பொருட்படுத்தாமல், “எல்லோரும் ரெடியாகுங்க. கமான்!” என்று வெளியேறினார். ரதிலாவின் முகம் பேயறைந்தது போல் ஆயிற்று. சே! என்று படுக்கையில் குத்தினாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அப்பாவும், அம்மாவும் வருகிறார்களா. எல்லா ப்ரோகிராமும் பாழ்.

     “எத்தனை எதிர்பார்ப்புடன் வந்தோம். நான்கு நாட்கள் உல்லாசமாய் சுற்றலாம் என்று பார்த்தால் முதல் நாளே எல்லோரும் எமனாய் வந்து நிற்கிறார்கள்.

     அடுத்த அரை மணி நேரத்தில் வரவட்சுமியும், சோமசுந்தரமும் வந்து ஆஜராயினர். அம்மா. அவளைக் கண்டதுமே... “மகளே ரதி!” என்று ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

     ஆனால் அப்பாவிடம் எந்த சலனமுமில்லை. அவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தார். தூக்கமின்னையும், வண்டி ஓட்டி வந்த அலுப்பும் அவருடைய கோபத்தை அதிகப்படுத்தி இருந்தன.

     “அம்மாடி இப்படி பண்ணிட்டியேடி!”

     “என்னம்மா... என்னாச்சின்னு இப்போ ஒப்பாரி வைக்கிறே?”

     சோமசுந்தரத்திற்கு அங்கே நிற்க பொறுமையில்லை. வெளியே வந்தவர் அலுவலக அறைக்குள்ளிருந்து வந்த வேலுமணியை கண்டதும் முகம் விரிந்தார். “நீங்க இந்த ஊருக்கு எப்போ மாத்தலானீங்க...” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டார்.

     அவர்களுக்குள் ஏற்கனவே அறிமுகம் இருந்தது. வேலுமணி திருச்சியில் இருந்தபோது அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். “சார்! இது உங்க பெண்ணா?” என்று வேலுமணி ஆச்சரியப்பட்டார்.

     “அவ எப்படி இங்கே...?”

     சோமசுந்தரம் இதற்கு என்ன பதில் சொல்வது, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்.

     “கையோடு அழைச்சுட்டு போங்க! கேஸ் கீஸ் இல்லாம நான் பார்த்துக்கிறேன், ஒரு விஷயம் சொன்னால் தப்பாய் எடுத்துக்க மாட்டீங்களே!”

     “நடந்ததையெல்லாம் ஸ்டேஷன்லயே சொன்னாங்க சார்.”

     “நான் சொல்ல வந்தது அதில்லை. என்னதான் நமக்கு வசதியிருந்தாலும், செல்லமாயிருந்தாலும் பெண்ணுங்கிறவ நம் உடமையில்லை. என்னைக்கிருந்தாலும் அடுத்தவங்க வீட்டுக்குப் போய் வாழ வேண்டியவங்கதானே! இப்பவே அடக்க ஒடுக்கத்தோடயும் கட்டுப்பாட்டோடயும் வளர்க்கிறது நல்லதில்லையா... உங்க பொண்ணோட இந்த செயல் அநாகரிகம்! அபாயமும் கூட! கண்டிச்சு வைங்க!”

     அவர் சொல்லச் சொல்ல சோமசுந்தரத்தின் ரத்தம் சூடேறிற்று. மகள் மேல் அவருக்கு ஆத்திரம் வந்தது. அதையெல்லாம் அடக்க முடியாமல் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்திக் கொண்டார்.

     “ரொம்ப தாங்க்ஸ் ஸார், நாங்க கிளம்பறோம்!” வேலு மணியிடம் சொல்லிவிட்டு ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் பண்ணி விட்டு அறைக்குள் வந்து,

     “ம், இன்னும் ஏன் ஒப்பாரி...கிளம்புங்க!” என்று கத்தினார்.

     “அப்பா” என்று ரதிலா அவரிடம் ஓடிவர, “என்னைத் தொடாதே” என்று கையை தட்டி விட்டார்.

     “அப்பா...உங்களுக்கு என்னாச்சு...?”

     “மூச் இங்கே ஒண்ணும் பேச வேண்டாம். முதல்ல எல்லோரும் போய் வண்டியில ஏறுங்க!”

     வெளியே வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் பதில் பேசாமல் ஏறினதும் சோமசுந்தரம் காரை எடுத்தார். வண்டி சீறிக் கொண்டு பாய்ந்தது. அவரது கோபம் கார் போன வேகத்தில் புரிந்தது. வரலட்சுமி முன் சீட்டில் அமர்ந்து ரோடையே வெறித்துக் கொண்டு வந்தாள்.

     கல்யாணி, அர்ச்சனா, ரதிலா மூவரும் பின் சீட்டில். அவர்களிருவரும் கலங்கிப் போயிருக்க, ரதிலா ஒன்றுமே நடக்காதது மாதிரி வேடிக்கை பார்த்து வந்தாள்.

     “அப்பா நான் என்ன தப்பு பண்ணினேன், எதுக்காக என் மேல் இத்தனை கோபம்...?”

    “தப்பு பண்ணது நீ இல்லை. நான். உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது என் தப்புதான். கேட்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, கண் கலங்காம வளர்த்து வந்ததற்கு நீ செஞ்சிருக்கிற காரியம் போதும்!”

     “அப்பா நாங்க டூர் வந்தது தப்பா!”

     “இல்லை ரொம்ப சரி! எனக்கு எவ்ளோ பெரிய அவமானம்! அந்த எஸ்.ஐ.தெரிஞ்சவர்ங்கிறதால விட்டார் இனி உனக்கு சுதந்திரம் கிடையாது.”

    ரதிலா அவர் பேச்சை இடைமறிக்க, ‘ஷட் அப்! இனி ஒரு வார்த்தை பேசினாய் என்றால் தெரியும் சேதி!”

     அர்ச்சனா உடன் அவள் கையைப் பிடித்து பேசாதே என்று சைகை காட்டினாள். அவளுக்குள் குறுகுறுப்பு இருந்தது. காரில் அமர்ந்திருப்பது அவளுக்கு முள் மேல் அமர்ந்திருப்பதாய் பட்டது.

     ரதிலா கண்களை மூடிக் கொண்டு பின் சீட்டில் சரிந்து கொண்டாள் அவளுக்கு எரிச்சலாய் வந்தது. தன் தவறை அவள் உணரவில்லை. தான் செய்தது தவறு என்பதை அவள் ஏற்றுக் கொள்ளவும் தயாராயில்லை. பெண்கள் என்பதற்காக தனியாய் டூர் வருவது கூட தவறா? பாலில் பல்லி விழுந்ததற்கு எதற்காக எல்லோரும் இத்தனை கச்சைகட்ட வேண்டும்.”

     கார் திண்டுக்கல்லை தாண்டின போது மணி மூன்றாகி விட்டிருந்தது. சூரியன் தன் கதிர்களை சற்று சரித்து செலுத்தினான். காருக்குள் மயான அமைதி நிலவிற்று.

     வழியில் ரெயில்வே கேட் போடப்பட்டிருக்க, பஸ்கள் எல்லாம் கியூ பிடித்திருந்தன. வாழைப்பழத்தையும், முறுக்கையும் தூக்கிக் கொண்டு பொடி பசங்கள் ஏலம் போட்டனர்.

     ஒருவன் மாலை பேப்பரை கட்டாய் தூக்கிக் கொண்டு ஓடி வந்து. “சூடான நியூஸ்! திடுக்கிடும் சம்பவம்! கொடைக்கானலில் கல்லூரி மாணவி கற்பழிப்பு!” என்று கூவினான்.

     “பேப்பர் வேணுமா சார்...” என்று சோமசுந்தரத்திடம் நீட்டினான். “வேண்டாம் போப்பா” என்று சொல்லப் போனவர். முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த ரதிலாவின் படத்தைப் பார்த்ததும் அப்படியே கலங்கிப் போனார்.

     “ஏய் கொடுப்பா!” என்று வாங்கி அவசரம் அவசரமாய் பிரித்துப் படிக்கலானார். அதை படிக்க படிக்க அவருடைய முகம் வெளிற ஆரம்பித்தது.

     கல்லூரி மாணவி கற்பழிப்பு! என்று ஆரம்பித்து பத்தி பத்தியாய் அவர்களுடைய கதையைத்தான் வெளியிட்டிருந்தார்கள். ரதிலாவின் பெயர், அவள் படித்த கல்லூரி எல்லாமே அதில் நாறின.

     “ரதிலா என்கிற பெண்ணும் வேறு இரண்டு தோழிகளும் வீட்டில் டூர் எனச் சொல்லி திருட்டுத்தனமாய் கொடைக்கானல் வந்து, சுற்றி தங்கி-ராத்திரி யாரோ பாலில் மயக்க மருந்து கொடுத்து ரதிலா கற்பழிப்பு!” என்று ஒன்று விடாமல் எழுதியிருந்தார்கள்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles