கண்கள் மயங்கிய போது...  

                            

 

    ரதிலா கற்பழித்து கிடந்த காட்சி இதுதான் என்று அவளது படத்தையும் பெரிதாய் வெளியிட்டிருந்தனர். கல்லூரி பெண்னை கற்பழித்த மர்ம மனிதன் யார்... என கேட்டு தொடர்ச்சி நாலாம் பக்கம் என்றிருந்தது.

     சோமசுந்தரத்திற்கு நாலாம் பக்கம் பார்க்க பொறுமையில்லை. பேப்பரை மடித்து ரதிலாவின் மேல் விட்டெறிந்தார். “உன் திருவிளையாடல் எல்லாம் சந்தி சிரிக்குது பார்!” என்று பற்களைக் கடித்தார்.

     “சனியன்! எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பார்! பெண்ணா நீ! என் மானத்தையும் மரியாதையையும் அழிக்க வந்த பிசாசு! சே! இனி நான் எப்படி வெளியே தலை காட்டுவேன்!”

     அவர் அப்படியே ஸ்டியரிங்கில் தலையை சாய்த்துக் கொண்டு விம்மினார். பேப்பரில் அப்படி என்ன போட்டிருக்கிறான் என்று ரதிலா அலட்சியமாகத்தான் படிக்க ஆரம்பித்தாள். ஆனால் அதை படிக்க படிக்க அவளது மனது படபடத்தது.

     கிராஸிங்கில் ரயில் தடதடவென ஓடிற்று. அவளது நெஞ்சம் தடதடனெ அடித்துக் கொண்டது. ஓ... காட்! நம் பாலில் மயக்க மருந்தா... நான் கற்பழிப்பா... யார் செய்த வேலை இது...? யார்...? யார் அந்த அயோக்கியன்...? அப்படியென்றால் பாலில் பல்லி என்றதெல்லாம் பொய்யா... அது தான் எல்லோரும் ஒரு மாதிரி பரிமாறுகிறார்களா?”

     அவள் முதன் முதலாய் அதிர்ந்தாள். அவளுடைய ரத்தம் சூடேறிற்று. உடலில் இங்குமங்கும் அலைந்தது. பற்களை நரநரவென கடித்தாள். கைகளை பிசைந்து சீட்டில் “ஷிட்!” என்று குத்தினாள்.

     நம்மை கொடுத்த பாவி யார்? நாம் இங்கே வந்தது, தனியாய் தங்கினதெல்லாம் அவனுக்கெப்படி தெரிந்தது? இந்த செய்தி போலீசுக்கும் பேப்பருக்கும் எப்படி போயிற்று. கடவுளே என்ன சோதனையிது...?

     கேட் திறக்கப்பட்டதும் கார்களும் பஸ்களும் பந்தயம் விட்டதுபோல பறக்க ஆரம்பித்தன. சோமசுந்தரம் தன் கோபத்தையெல்லாம் காரின் ஆக்ஸிலேட்டரில் காட்டினார். அவரது கைகள் நடுங்கின. கண்களும், முகமும் இறுக்கமாக இருந்தன.

    வளைவுகளில் கூட ஸ்பீடை குறைக்காமல் சீற விட்டார். எதிரே வரும் லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி எதுவுமே அவர் பார்வையில் படவில்லை. நம் மகள்! நாம் பென் போல போற்றி வளர்த்தவள். நம் முகத்தில் கரியை பூசி விட்டாளே இவளுக்கு நாம் எதில் குறை வைத்தோம். எதற்காக இப்படி நடந்து கொண்டாள் இவளால்தான் நமக்கு இத்தனை அவமானம்.

     ஊர் போய் சேருவதற்குள் விஷயம் பரவிவிடும் எல்லோரும் துக்கம் விசாரிக்க வருவார்கள். ஆபீசிலும் வெளியேவும் இனி நடமாட முடியாது. எள்ளி நகையாடுவார்கள். இவற்றையெல்லாம் நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!

     ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கார் குதித்து குதித்து பறந்தது. வரலட்சுமியும், அர்ச்சனா, கல்யாணியும் அவரது வேகத்தைக் கண்டு நிஜமாலுமே பயந்து போயினர்.

     ரதிலா “அப்பா!” என்று அலறினாள். அந்த அலறல் மற்றவர்களை உலுக்கியது. ஆனால் சோமசுந்தரம் சற்றும் கலங்கியதாய் தெரியவில்லை. அவர் பாட்டிற்கு ரோட்டிலேயே கண்களை பதித்திருந்தார்.

     “அப்பா! நான் உங்களுக்கெல்லாம் பாரம்னா, அவமான சின்னம்னா கீழே குதிச்சு ஒழிஞ்சு போறேன், அதுக்காக காரை இப்படி பேயாட்டம் ஆடவிட்டு எல்லோருடைய உயிரையும் பறிச்சுடாதீங்க.”

     வரலட்சுமி கலக்கத்துடன் பின்னால் திரும்பி “அடியே! அப்படி எல்லாம் எதுவும் செஞ்சுராதடி!” என்று அவள் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.

     அவர்களுடைய வீடு தில்லைநகரிலிருந்தது. கார் வீட்டை அடையும்போது எரிவதற்கு தெரு விளக்குகள் தயாராகிக் கொண்டிருந்தன. பணக்கார தெருக்களில் குழந்தைகள் போஷாக்குடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு பணக்கார வியர்வையை வழித்தெறிந்தனர்.

     அர்ச்சனாவையும் கல்யாணியையும் வழியிலேயே இறக்கி விட்டு விட்டு சோமசந்தரம் காரை பார்க் பண்ணினார் யாருடனும் ஒன்றும் பேசாமல் விருட்டென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழ்போட்டுக் கொண்டார்.

     அவர் அப்படி தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்றால் அலாதியான கோபத்திலிருக்கிறார் அல்லது பிசினெஸ் நெருக்கடியிலிருக்கிறார் என்று அர்த்தம். அந்த மாதிரி சமயங்களில் யாரும் அவரிடம் நெருங்கக்கூடமாட்டார்கள். நெருங்கவும் முடியாது எரித்து விடுவார்.

     அவராகவே வெளியே வருகிறவரை காத்திருக்க வேண்டும். அவர் பிரச்சனைக்கு சொல்யூஷன் கண்டுபிடிக்கிற வரை வெளியேயும் வர மாட்டார். காபி-சாப்பாடு எதையும் தொடக்கூட மாட்டார்.

     இப்போதும் அவருடைய கொதிப்பையும் கோபத்தையும் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் வரலட்சுமியோ, ரதியோ அவருக்கு தொந்தரதவு கொடுக்க முனையவில்லை.

     ரதிலா சாப்பாடு வேண்டாம், பசிக்கலை என்று பொய் சொல்லி விட்டு மாடிக்குப் போய் தன்னறையில் முடங்கிக் கொண்டாள். பசியில்லை என்பது வீண் ஜம்பம் என்பது அவளுக்கும் தெரியும். அம்மாவிற்கும் தெரியும்.

     ஆனால் இந்த சமயத்தில் வற்புறுத்துவது அத்தனை உசிதமில்லை. அவளுடைய ஜம்பமும் பிடிவாதமும் அதிகரிக்க அது வழிவகுத்து விடும் என்று அம்மா பேசாமலிருந்தாள்.

     ரதிலாவிற்கு உடலெல்லாம் வலித்தது. கைகால்கள் குடைந்தன. நேற்று ராத்திரி தான் அறியாமல் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நினைத்து பார்த்தபோது உடல் எரிந்தது. நெஞ்சு தகித்தது.

     பொட்டை பசங்கள்! கெடுக்கிற எண்ணமிருப்பவன் நிஜமாலுமே அவன் ஆண் என்றால் சுய நினைவுடன் இருக்கும்போது முயன்றிக்க வேண்டும். அப்போது பல் பெயர்ந்திருக்கும்.

     பேடிப்பயல்! அவன் மட்டும் கையில் கிடைத்தால் நார் நாராய் கிழித்து ரத்தத்தை உறிய வேண்டும் என்கிற ஆவேசம் அவளிடம் எழுந்தது. எல்லாம் முடிந்து விட்டது. இனி அதைப் பற்றி யோசித்து ஆகப் போகிறதென்ன?

     எல்லாவற்றையும் கெட்ட கனவாய் நினைத்து மறப்போம். நடந்தது ஒரு விபத்து. இதில் நம் அலட்சியமும் வீம்பும் பெரும்பங்கு வகிக்கிறது. பெண்கள் என்பது ஒருவித பலவீனம்-பலமும் குறைவு. அநீதி அக்கிரமங்களை தட்டிக் கேட்க முடியாத இயலாமை! இதனால் தான் பெண்களுக்கு கட்டுப்பாடு வைத்து அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என்கிறார்களே?

     தனிமை அவளின் கண்களை மெல்ல மெல்ல திறக்க ஆரம்பித்தது. நாம் செய்தது தவறோ என்ற உணர ஆரம்பித்தாள். அன்பான அப்பா, பாசமான அப்பா, நமக்கு வேண்டி எதையும் தியாகம் செய்கிற அப்பாவை புண்படுத்தி விட்டோமோ அவருக்கு இழுக்கு வரும்படி நடந்து கொண்டு விட்டோமோ என்கிற உறுத்துதல் அவளை அரித்தது.

     முதலில் அப்பாவை சந்தித்து மன்னித்து விடுங்கள் என்று அவர் காலில் விழ வேண்டும் போலிருந்தது. ‘என்னை மன்னித்து விடுங்கப்பா! ஏதோ ஒரு வேகத்தில் பைத்தியக்காரத்தனம் செய்து விட்டேன். அதற்கு தண்டனையும் கைமேல் கிடைத்து விட்டது!’

     அவள் மாடியை விட்டு இறங்கி வந்தாள். அப்பாவின் அறை இன்னமும் மூடிக்கிடந்தது. வெளி விளக்குகள் அணைந்து ஜீரோ வாட்ஸ் மட்டும் எரிந்தது. வெளியே நாய் பசியில் அழுதது. ரதிலா அப்பாவின் அறைக் கதவை தட்டலாமா என்று ஒரு நொடி யோசித்தாள். வேண்டாம் இன்று அவர் தனிமையில் இருப்பது நல்லது. அவரது கோபம் தணியட்டும். காலையில் எழுந்து அவரை சமாதானப் படுத்திவிட்டு கல்லூரிக்குப் போகலாம்.

     அன்று ராத்திரி அவளுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு ஆகாயத்தையும் மேகங்களையும் பார்த்து பொழுதை கழித்தாள்.

     அந்த ஒரு ராத்திரி அவளை முழுமையாக மாற்றியிருந்தது. அவளது துடுக்குத்தனம், அகங்காரம், விபரீத எண்ணம் எல்லாவற்றையும் யோசிக்க வைத்து அவளிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருந்தது.

     உலகம் என்பது நம் வீடு மட்டுமல்ல. இங்கே பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே போலில்லை. யார் எங்கே இடம் கொடுப்பார்கள், வீழ்த்தலாம், கவிழ்க்கலாம், குப்புறடிக்கலாம் என்று தருணம் பார்க்கிற ஜாதி இங்கே அதிகம்.

     இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் இன்னமும் சின்னப்பிள்ளையில்லை. நமக்கு வயதும் ஏறுகிறது. மெச்சூரிட்டி என்பது வயதில் மட்டுமில்லை. நம் உடலிலும் செயல்முறைகளிலும் கூட இருக்கிறது. வயதிற்கேற்ற பொறுப்பும் பொறுமையும் நமக்கு வேண்டும்.

     அந்த விபத்து அவள் மனதை சீர்படுத்தியிருந்தது. அவளது தான் தோன்றித்தனத்தை அழித்திருந்தது. எப்போது தூங்கினாளோ தெரியவில்லை. மலைக்கோட்டை மணி ஒலித்தபோது சட்டென்று கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தாள்.

     எழுந்தபோது அவள் ஒரு புதுப் பெண்ணாக மாறி விட்டிருந்தாள்.

     அப்பாவை சந்திக்க அவளுக்கு காலையில்கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அறை இன்னமும் மூடியே இருந்தது. உள்ளேயிருந்து இருமல் சப்தம் மட்டும் கேட்டது. அவர் ஏற்கனவே நோயாளி. ஹார்ட் பேஷண்ட்டும் கூட.

    அவர் இருமுகிற ஒவ்வொரு இருமலும் அவளது ரத்தத்தை சுண்ட வைத்தது. மனதை போட்டு கசக்கிற்று. கல்லூரிக்கு கிளம்பும் போதும் சரி, சாப்பிடும் போதும் சரி, அம்மா கூட எதுவும் பேசவில்லை.

    மவுனம் அவளை பலவீனப்படுத்தியது. பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள். டவுன் பஸ்சிற்கு காத்திருந்தபோது அருகே இரண்டு இளைஞர்கள் பேசிக் கொள்வது அவள் காதிலும் விழுந்தது.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles