கண்கள் மயங்கிய போது...  

                            

 

   “ஏ மச்சி...கொடைக்கானலுக்கு வர்றியா...?”

     “எதுக்கும்மா...? அங்கே போனா ரூம் எடுப்பே! யாரையாச்சும் வரச் சொல்லி கற்பழிக்கச் சொல்வே! நான் மாட்டேம்மா!”

     ரதிலா அவர்களை பார்த்து முறைத்தாள்.

     “ஏய்...ஏண்டா முறைக்கிறே...நீ முறைச்சா நடந்ததெல்லாம் இல்லேன்னு ஆயிருமா...?” என்று ஒருவன் சிரித்தான். “ஆனாலும் இதுக்காக கொடைக்கானல் வரை போயிருக்க வேண்டியதில்லை. இங்கே எத்தனை ஆம்பளை பசங்கள் இருக்கோம். எத்தனை ஹோட்டல்கள் இருக்கின்றன. வரியாடா...?”

     அவளுக்கு அதற்கு மேலும் அங்கே நிற்க முடியவில்லை. விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். கோஹினூர் தியேட்டர், மேம்பாலம், மாரீஸ் என்று வேகத்தை கூட்டினாள்.

     நம் விஷயம் இத்தனை சீக்கிரம் பரவிவிட்டதா...? அந்த மாலை பேப்பருக்கு இத்தனை சக்தியிருக்கிறதா...? நல்லதை படிக்காவிட்டால் கூட கெட்டவைகளை விரும்திப் படிக்கும் அல்ப புத்தி நம்முடையது.

கண்கள் மயங்கிய போது...

     வழியில் நடந்தவர்களை நிமிர்ந்து பார்க்கக்கூட அவளுக்குக் கூசியது. மனம் குறுகுகறுத்தது. இவர்களும் அந்த செய்தியை படித்திருப்பார்களோ!

     கல்லூரிக்குள் நுழைந்ததும் அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. நுழைவாயிலிலேயே ‘நீ ரதிலாவா... இல்லை ரதிலீலாவா...?” என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

     புல்வெளியில் நடக்கும் போதும் எல்லோரும் தன்னையே சுட்டிக் காட்டி பேசுவது போல உணர்ந்தாள். டூர் போனவர்கள் தவிர மற்றவர்களுக்காக ஒப்புக்கு கிளாஸ் வைத்திருந்தார்கள்.

     வகுப்பறையிலும் அவளால் அமர்ந்திருக்க முடியவில்லை. சக மாணவிகள் எல்லோரும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டு அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

     சே! இவர்களும் கூட பெண்கள்தானே! ஒரு பெண்ணிற்கு நேரிடும் கொடுமையை இவர்களாலும் கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால் எப்படி...?

     நமக்கென்ன, அவளுக்குத்தானே நேர்ந்தது...அவளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்கிற மெண்டாலிட்டி! இதே சம்பவம் தனக்கும் நேராது என்ற திமிர்.

     யாரைச் சொல்லி என்ன செய்ய, நாம் சகதியில் விழுந்து விட்டோம். அதுவும் நாமாகவே. சகதியில் விழுவது நம் நோக்கமாயிருக்கவில்லை. ஆனால் விழுந்த பின்தான் தெரிகிறது அது சகதி என்று. அது சகதி என்று உணர்வதற்குள் ஊருக்கே தெரிந்து எல்லோரும் எள்ளி நகையாடுகிறார்கள்.

     அவளுக்கு அதற்கு மேலும் வகுப்பில் அமர்ந்திருக்க முடியவில்லை. மேடத்திடம் சொல்லாமல்கூட விசுக்கென வெளியேறினாள். அவள் வெளியேறினாள். அவள் வெளியேறிய தருணத்தில் கொல்லென சிரிப்பொலி எழுந்தது. அந்த சிரிப்பு அவளது ரத்தத்தை சுண்ட வைத்தது,

     இவர்கள் எல்லோருமே எதிரிகள். பெண்களுக்கு முதல் எதிரி பெண்கள்தான். உலகத்தில் வேறு யாருமே தப்பு செய்வதில்லையா...? எதற்காக எல்லோரும் இப்படி சேர்ந்து கொண்டு சுடுகிறார்கள்?

     சோமசுந்தரம் இரண்டு நாட்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை, அம்மா பிடிவாதமாய் ஜன்னல் வழியே சாப்பாடும், காபியும் கொடுத்தாள். ஆனால் அவர் அவைகளை தொடவே இல்லை. எல்லாம் ஈ மொய்த்து ஆடை படிந்திருந்ததுதான் மிச்சம்.

     அவர் சாப்பிடவில்லையென்று அம்மாவும்கூட உண்ணாவிரதம் இருந்தாள். வீடே சூன்ய மயமாய் காட்சியளித்தது. இந்த சூன்யம் ரதிலாவின் மனதிலும் ஓட்டிக்கொண்டது. அவளை சோகத்தின் எல்லைக்கே கொண்டு போயிற்று.

     மூன்றாம் நாள் அப்பா வெளியே வந்தபோது பஞ்சத்தில் அடிபட்டது போல முள் முள்ளாய் தாடி முளைத்திருந்தது. கண்களில் குழி, உடலெல்லாம் தளர்ந்து போயிருந்தார். பெயருக்கு சாப்பிட்டு காரில் போனவர் போன ஒரு மணி நேரத்திலேயே திரும்பி வந்தார் வரலட்சுமி பதறிப் போனாள். ‘ஏங்க! உடம்பு சரியில்லையா...ஏன் உடனே திரும்பிட்டீங்க...?’

     “திரும்பாம என்ன பண்றதுடி... ஆபீசுல என்னென்னவோ பேசிக்கிறா. நான் காதுல விழுந்தும் விழாதமாதிரி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். ஒரு அளவு தாண்டினதும் என்னால தாங்க முடியலே. வந்துட்டேன். நமக்கு இப்படி ஒரு பெண்ணு பொறந்திருக்கவே வேண்டாம் லட்சுமி!

     “ஐயோ! மெதுவா பேசுங்க, அவ காதுல விழுந்திடப் போவுது! ஏற்கனவே ரதி நொந்து போயிருக்கா,”

     “அவ சாப்பிட்டாளா...?

     “சரியா சாப்பிடலை. உங்களை பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கா,”

     “என்னை எதுக்காக பார்க்கணும்... போய் சாப்பிடச் சொல்லு. சாப்பிடாம யாருக்கு மிச்சம் பண்ணித் தரப்போறா... காலேஜுக்குப் போனாளா...?”

     “போனாங்க. போன ரெண்டு மணி நேரத்திலேயே திரும்பிட்டா.”

     “சரி, இனி காலேஜ் போக வேண்டாம்னு சொல்லு அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சாதான் எனக்கு நிம்மதி! அவளை பெண் பார்க்கறதுக்கு மதுரையிலிருந்து வரேன்னிருந்தாங்களே... அப்புறம் எதுவும் தகவல் வந்ததா...?”

    “இல்லீங்க!”

    “அவங்க எதுக்காக வரப் போறாங்க...? ஓடுகாலியை கட்டிக்கணும்னு அவங்களுக்கென்ன தலையெழுத்தா...?”

    “ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க!”

     “அப்புறம் எப்படிடி பேசறது. அவ செஞ்ச காரியத்துக்கு...?” அவளுக்கு காலேஜ் டூர் போக பிடிக்கலே; தனியே போகணும்னு இருந்தா எங்கிட்ட சொல்லியிருக்கலாமே! நம்ம காரிலேயே டிரைவரையும் துணைக்கு அனுப்பியிருப்போனே! நான் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை புரிஞ்சுக்காதவளுக்கு இனி இந்த வீட்ல எந்த சுதந்திரமும் இல்லை. அவ அடைஞ்சே கிடக்க வேண்டியதுதான்! ஊர்ல எத்தனை அப்பன்கள், எத்தனை மகள்களுக்கு இத்தனை சுதந்நிரம் கொடுத்திருக்கான்னு போய் விசாரிச்சுப் பார்க்கச் சொல்! அப்போ என்னோட அருமை புரியும்!”

     அப்பாவின் இந்த காட்டமான பேச்சை ரதிலாவும் கேட்டுக் கொண்டிருந்தாள். கேட்டதும் கண் கலங்கினாள். அடுத்த ஒரு வாரம் அவளுக்கு நெருப்பாய் போயிற்று. மனம் புழுங்கிற்று. மதுரை வரனிடமிருந்து என்னவோ சாக்கு சொல்லி வரவில்லை என்று கடிதம் வந்தது.

     அவளுக்கு சேகரைப் பார்த்தால் தேவலாம் போலிருந்தது. அவனிடம் பேசினால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தாள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவனை அவள் சந்திக்கவே இல்லை.

     சந்திக்கும் துணிச்சலும் எழவில்லை. அவன் முன்னால் எப்படி நிற்பது? அவன் கண்களை எப்படி சந்திப்பது.கொடைக்கானல் திட்டத்தை சொன்னதுமே அவன் மறுத்திருந்தான். இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவள்தான் பிடிவாதமாய் கிளம்பியிருந்தாள்.

     இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் போவது...? நான் சொன்னேனே, கேட்டாயா... என்று கேட்டால் என்ன பதில் சொல்வது.

     அவன் என்ன சொன்னாலும் சரி, சந்திக்காமல் விடுவதில்லை. அவனிடம் விவரத்தை எடுத்துச் சொல்வோம். சேகர் நல்லவன் நம்மை புரிந்து கொள்வான். நமக்கும் ஒரு வடிகால் தேவை.

     அர்ச்சனாவும் கல்யாணியும் கூட நம்மை கண்டால் நழுவுகிறார்கள். இவர்களுக்கு நாம் என்ன உதவியெல்லாம் செய்திருப்போம்! நமக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது ஓடி ஒதுங்குகிறார்கள். நன்றி கெட்டவர்கள்.

     அவள் சேகரின் அலுவலகத்திற்கு போன் சுற்றினாள். அந்தப் பக்கம் நீண்ட நேர என்கேஜுக்கு பிறகு அவனே கிடைத்தான். பேசுவது ரதிலா என்பது தெரிந்ததும், “என்ன விஷயம், நான் பிசியாயிருக்கேன். அப்புறமாய் பேசுவோமா...?” என்றான்.

     “சேகர், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம்...”

     அதற்குள் அவன் வைத்து விட்டிருந்தான். அவளுக்கு முகத்தில் அறைந்த மாதிரியிருந்தது. அவனிடம்தான் எத்தனை மாற்றம்! இதே இவன் இதற்கு முன்பு போனிற்கு மேல் போனாய் பண்ணுவான். இவள் போதும் என்றாலும் கூட விடமாட்டான்.

     “உங்களுக்கு ஆபீஸ்ல வேலையேயில்லையா சேகர்?”

     “என் வேலை நீ தான். வேலையா, நீயா என்று கேட்டால் முதலில் நீதான். பிறகுதான் மற்றதெல்லாம்” என்பான் அவளாக வைக்கிறவரை அறுத்துக் கொண்டிருப்பான். அப்படிப்பட்டவன் இன்று பிஸி என்கிறான் என்றால் நிஜமாலுமே பிஸியா? இல்லை, நம்மை தவிர்க்க நினைக்கிறானா...?

     எதற்கும் அவனை நேரில் பார்த்து விடலாம் என்று அன்று மாலை அவன் வீட்டிற்குப் புறப்பட்டாள். அவனுடைய வீடு அண்ணா நகரில் இருந்தது. நீண்ட நேரம் பஸ் பயணத்திற்குப் பின்பு இறங்கி நடந்தாள்.

     வாசலிலேயே சேகரின் அம்மா அவளைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். இதே அம்மா இதற்கு முன்பெல்லாம் எத்தனை சந்தோஷத்துடன் வரவேற்பாள், அவளைக் கண்டதுமே “சேகர்!” என்று அவனை அழைத்து அவள் ஒதுங்கிக் கொள்வாள்.

     ஆனால் இன்று ரதிலா அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. எத்தனை அவமானங்கள் ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தில் தான் வந்திருந்தாள். சேகரின் அம்மா, அவளிடம் “இங்கே எதற்கு வந்தாய்... நாங்கள் மானத்துடன் வாழ ஆசைப்படுகிறோம். என் மகனை விட்டு விடு. உன்னை சேர்த்தால் எங்கள் குடும்பமே கெட்டுவிடும். இனி என் மகனை தொல்லை பண்ணாதே!” என்று விரட்டியடித்தாள்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles