கண்கள் மயங்கிய போது...  

                            

 

   சோமசுந்தரத்தின் வீடு.

     அவர் இருமலும் தாடியுமாயிருக்க, எதிரே கல்யாண தரகர் பவ்யமாய் அமர்ந்திருந்தார். “ஜாதகம் எதுவும் கொண்டு வந்திருக்கிறீர்களா?”

    “இல்லை சார் நீங்க கூப்பிட்டனுப்பினதும் என்னவோ ஏதோன்னு ஓடி வந்துட்டேன்.”

     “என்னவோ ஏதோன்னா... உம்மை கல்யாணத்துக்கு இல்லாம வேறு எதுக்காக கூப்பிடுவாங்க. நீர் ஜாதகம் இல்லாம வரது கத்தியில்லாம செரைக்கப் போற மாதிரி இருக்கு!”

     சோமசுந்தரத்தின் கோபம் காரணமில்லாமல் தரகரின் மேல் பாய்ந்தது. அவர் மதுரை வரனிற்கு பிறகு இரண்டு மூன்று வரன்களை பார்த்திருந்தார். யாரும் பிடி கொடுக்கவில்லை. முகத்தில் கரியை பூசி விட்டு நழுவி விட்டனர்.

     அந்த கோபம் அவர் கண்களை மறைத்தது. ஆவேசம் நெஞ்சை பிழிந்தது. “இன்னும் ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ளே எம் பொண்ணுக்கு வரன் பார்த்தாகணும் பையன் நொண்டியோ, முடமோ, வசதியிருக்கவனோ இல்லியோ பரவாயில்லை. படிப்பு மட்டும் இருந்தால் போதும். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் டவுரி தர்றேன். என் பெண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடந்தாகணும். எம் பெண்ணு தவறு செஞ்சாங்கிறதுக்காக அவளை வாழ்நாள் பூரா கண் கலங்கடிக்கிறது என்ன நியாயம்?

     ஊர்ல எவனுமே தவறு செய்யறதில்லையா... அவனவன் செய்யற தவறு உள்ளுக்குள்ளேயே அமுங்கிப் போயிடறது. இவளோட போறாத காலம் வெளில் வந்துடுத்து. வெளில வந்ததுதான் தப்புன்னா அது அவளோட குத்தமில்லைய்யா. சரி கிளம்பும்! ஒரு வாரம் டைம்!”

     தரகருக்கு அவர் ஒரு வாரம் டைம் கொடுத்துவிட்டாரே தவிர அவரால் வீட்டில் பொறுமையாய் இருக்க முடியவில்லை. தினம் தினம் ஆள் அனுப்பி அவரை நச்சரிக்க ஆரம்பித்தார்.

     ஒரு வாரமாகியும் கூட தரகர் வராமல் போக, இவரே தரகர் வீட்டிற்கு போய் இறங்கினார். அவரை தன் வீட்டிற்கு எதிர்பார்க்காத தரகர் மேல் சட்டை கூட போடாமல் ஓடி வந்து வரவேற்றார்.

    “என்னய்யா ஆச்சு?”

     “எது சார்...?”

     “எம் பொண்ணுக்கு மாப்பிள்ளை... !”

      “சார்...அது வந்து மன்னிக்கணும். நானும் எத்தனையோ வரனை பார்த்துட்டேன். எல்லோருமே அந்த பொண்ணான்னு மிரள்றாங்க. நொண்டியோ, முடமோன்னாலும் பரவாயில்லை. இப்படி வலிய போய் கெட்டுப் போனவளை எதை நம்பி கட்டிக்கிறது-இவ கல்யாணத்துக்கப்புறமும் இப்படிபோக மாட்டான்னு என்ன நிச்சயம்னு முகத்தில் அடிக்கிற மாதிரி கேட்கிறாங்க.”

     “டவுரி பத்தி சொன்னீரா...?”

      “சொன்னேங்கய்யா. பணம்தான் முக்கியம்னா, விபச்சாரியைக்கூட கட்டிக்கலாமேங்கிறாங்க!”

     சோமசுந்தரத்தின் ரத்தம் அதைக் கேட்டதும் சுண்டிற்று. “அப்போ எம் பொண்ணுக்கு வரனே கிடைக்காதுங்கிறீரா...? போய்யா நீயும் உன் தெழிலும்! எண்ணிக்கோ இன்னும் பத்து நாள்ல எம் பொண்ணுக்கு வெளியூரிலிருந்து மாப்பிள்ளை கொண்டு வரலே எம் பேரை மாத்திவை!” என்று சவால் விட்டு விட்டு திரும்பினவருக்கு வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது நெஞ்சில் சின்னதாய் சுருக்கென்றது.

     அவ்ளோதான், அவர் அதன் பிறகு படுக்கையாகி விட்டார். அவருடைய பிரஷர் அதிகமாகி விட்டிருந்தது. டாக்டர்கள் ஓடி வந்தனர். பரிசோதனைக்கு மேல் பரிசோதனைகள். அவருடைய புலம்பல்கள் அதிகமானதே தவிர உடல் நலம் தேறுகிற மாதிரி தெரியவில்லை.

     அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட, அதன் எதிரொலி வரலட்சுமியிடமும் பிரதிபலித்தது. “பாவி... பாவி! நீ செஞ்ச காரியத்தால என் பொட்டும் பறிப்போயிரும் போலிருக்கே!” என்று ரதியை திட்டி தீர்க்க ஆரம்பித்தாள்.

     அந்த வீட்டின் அமைதி மெல்ல மெல்ல சீர்குலைந்து கொண்டிருந்தது. சோமசுந்தரம் ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் வரமாட்டேன். இங்கேயே செத்தா செத்துட்டுப் போறேன் என்று வீண் பிடிவாதத்திலிருந்தார்.

     இந்த நிலையில் ரதிலாவிற்கு வீட்டிலிருக்கவே பிடிக்கவில்லை. என்னதான் வசதியிருந்தும் கார் பங்களா என்று இருந்தும் என்ன பிரயோஜனம். நாம் செய்த ஒரு அல்ப காரியத்தினால் எல்லாமே பாழாயிற்று.

     இப்படி நடக்கும் நடக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. ஏதோ ஒரு ஜாலி மூடில் செய்த காரியம் இப்போது சந்தி சிரிக்கிறது. அப்பாவையும் படுக்கையில் கிடத்தி விட்டது. அம்மாவையும் நம்மேல் வெறுப்படைய வைத்திருக்கிறது.

     அவள் மனம் விரக்தியின் எல்லைக்குப் போயிற்று.

     ரதிலா அமைதி தேடி கோவிலுக்குப் போனாள். மலைக் கோட்டையிலும் அவளை தெரிந்த யாரோ அவளை கை காட்டி சிரித்து பேசினர். அது அவளது மனதை மேலும் புண்படுத்தியது. சரியென்று காமராஜ் லைப்ரரிக்கு போனாள்.

     அங்கேயும் கூட நிம்மதியில்லை. புத்தகம் எடுக்க வந்தவர்கள், புத்தகத்தை விட்டுவிட்டு அவளையே வெறித்தனர். கேலி புன்னகை வீசினர். இவையெல்லாம் அவள் மனதை பாதித்தது.

     நமக்கிருக்கிற வசதிக்கும் அழகுக்கும் எப்படியெப்படி யெல்லாமோ வாழவேண்டும். எல்லாவற்றையும் நம்முடைய விளையாட்டு புத்தியால் கெடுத்துக்கொண்டோம். நம்மால் வீட்டின் நிம்மதி போயிற்று. அப்பாவின் உடல் நிலை மோசமாயிற்று.

      வீட்டிற்குள்ளும் வெளியேயும் நமக்கும் நிம்மதியில்லை. காதல் என்று பழகின சேகரே நம்மை ஒதுக்கி விட்டான். தோழிகளும் நழுவி விட்டனர். நம்மை புரிந்து கொள்ளவும் அணுசரணையாக பேசவும் இந்த உலகத்தில் யாருமில்லை. இங்கே நம்மை யாருக்குமே வேண்டாம். நாம் எல்லோருக்கும் ஒரு பாரம். இனியும் நாம் யாருக்கு வேண்டி உயிர் வாழ வேண்டும்? நம்மால் ஏற்பட்ட கறையை நாமே போக்கி விடுவோம்.

     இனியும் உயிருடன் இருந்தால்தானே பிரச்சனை... நாம் போய் விட்டால்...?

     அவள் அந்த முடிவுக்கு வந்தாள். அன்று ராத்திரியே தன் முடிவை வைத்துக் கொள்ளவும் தீர்மானித்தாள்.

     ராத்திரி நேரம். மணி ஒன்பது இருக்கும். திருச்சியின் கடை வீதிகள் மின்சாரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, காவிரியோரம் இருட்டிலாழ்ந்திருந்தது. ஆற்றில் தண்ணீர் சலசலப்புடன் ஓடிற்று (காவிரியில் தண்ணீரா... எந்த யுகத்து கதை இது என சண்டைக்கு வர வேண்டாம். நேரில் தான் இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. கற்பனையிலாவது தண்ணீர் ஓடட்டுமே!)

     நிலா தன் உடலில் பாதியை யாருக்கோ கடன் கொடுத்து விட்டு மீதியில் சன்னமாய் ஒளி தந்து கொண்டிருந்தது. படித்துறையில் சில பேர் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். நாளைக்கு இவைகள் கசாப்பு கடைகளில் விநியோகிக்கப்படும்.

     ரோடோரத்தில் கழிவுகள்! அதற்கு அந்தப் பக்கம் வாழையும் தென்னையும் குளிரில் அடங்கியிருந்தன.

     கார்த்திக் ஆண்டாள் தெருவிலிருந்து தன் வீட்டிலிருந்து தன் வெஸ்பா ஸ்கூட்டரை வெளியே எடுத்து வைத்து தூசி தட்டினான். உதைத்து ஏறி அமர்ந்தான்.

     அவனுக்கு வயது முப்பது இருக்கலாம் நல்ல வனப்பான சரீரம். களையான முகம், முதல் பார்வையிலேயே யாரையும் வீழ்த்திவிடும் அசாத்திய கவர்ச்சி அவனிடம் இருந்தது. அவன் வண்டியை காவிரியை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.

     தினசரி இரவு நேரத்தில் அவன் காற்று வாங்க காவிரியை நாடுவது வழக்கம். நகரத்தின் இரைச்சல், உஷ்ண காற்று, வேலை டென்ஷன் இவற்றிலிருந்து விடுதலையும் கிடைக்கும். மனதிற்கு ஆசுவாசமும் கிடைக்கும்.

    அவனுக்கு கம்பெனி கொடுக்க இன்னும் சில நண்பர்கள் லாரி பாலத்தில் காத்திருப்பார்கள். அவர்களுடன் அரட்டையடித்து, புகைத்து, நகைத்து ஊர் கதை பேசி... பொழுது போவதே தெரியாது ராத்திரி வீடு திரும்புவதற்கு எப்படியும் பனிரெண்டாகிவிடும்.

     அவனை கண்டிப்பதற்கோ, ஏன் லேட் என்று கேட்பதற்கோ வீட்டில் யாருமில்லை. அவன் பாச்சிலர்.

     ராக்கோர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சிவாசிகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய புறப்படுவதற்கு தயாராயிருந்தது. கடைசி நொடி வரை காத்திருந்து ரயில் புறப்பட்டதும் ஓடி வந்து தொற்றிக் கொள்பவர்களை எச்சரிக்க வேண்டி அது கூகூ கூவிவிட்டு உஷ்ணத்துடன் கிளம்பிற்று.

     அது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பொன்மலை ஸ்டேஷனை தொடும். பத்தாவது நிமிடத்தில் டவுன் ஸ்டேஷனில் சற்று நிற்கும். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பதினைந்தாவது நிமிடத்தில் காவிரி பாலத்தை கடந்திருக்கும்.

     அது பாலத்தை கடக்கும் போது ஒரு உயிரை போக்கப் போவதை அறிந்திராமல் வேக வேகமாய் ஓட ஆரம்பித்தது.

     ரதிலா வைராக்கியத்துடன் காவிரி ஓரம் நடந்தாள், அவள் வாட்சை பார்த்தாள், தண்டவாளத்தை பார்த்தாள். இன்னும் சில நிமிடங்கள் தான் பாக்கி. இந்த ரதிலா இனி யாருக்கும் பாரமில்லை. அவனை நினைத்து இனி யாரும் வருந்த வேண்டாம். ரத்த கொதிப்படைய வேண்டாம் இனி எல்லோரும் நிம்மதியாயிருக்கலாம்.

     அவள் மனதை கல்லாக்கிக் கொண்டு ரெயில் பாலத்தில் ஏறினாள். இந்த பாலம்தான் வசதி வேறு எங்காவது என்றால் யாரும் பார்த்து காப்பாற்றி விடக்கூடும். இங்கே யாரும் கவனிக்க மாட்டார்கள். நம் கதையும் எளிதில் முடிந்துவிடும்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles