கண்கள் மயங்கிய போது...  

                            

   

     ராக்போர்ட், டவுன் ஸ்டேஷனில் வந்து நின்று அவசரம், சீக்கிரம் ஏறுங்கள், கிளம்ப வேண்டும் என்றது. ஸ்டேஷனில் அத்தனை கூட்டம் இல்லை. இருந்த சிலரும் பெட்டி படுக்கைகளுடன் இடம்பிடிக்க ஓடி ஏறினர். கார்டு பச்சைக் கொடி காட்டுவதற்கு தயாரானார்.

     விசிலடித்தபடி காவிரியைப் பார்த்துக்கொண்டு ஸ்கூட்டரை செலுத்தின் கார்த்திக் ரயில் பாலத்தில் உருவம் ஒன்று நடப்பதை நிலா வெளிச்சத்தில் கண்டு, சட்டென்று நிறுத்தினான்.

     இந்த ராத்திரியில் ரயில் பாலத்தில் யார் நடக்கிறார்கள்? ஒரு வேளை தண்டவாளம் ரிப்போர் பண்ணுகிறவர்களோ...? ரிப்பேர் ஆட்களுக்கு ராத்திரியில் என்ன வேலை? ஒரு வேளை அவர்கள் தான் என்றால் கையில் விளக்கு வைத்திருப்பார்களே... இது நிச்சயம் அவர்களில்லை.

    அப்படியென்றால் இது யார்...?

     பார்த்தால் பெண் மாதிரி தெரிகிறதே... ஒரு வேளை தற்கொலை கேஸோ...? சை! நாட்டில் வரவர தற்கொலை பெருகிவிட்டனப்பா! இந்த பொம்பளைங்க எதுக்குத் தான் தற்கொலை பண்ணிக்கிறதுன்னு வரைமுறையில்லாம போயிற்று!

     ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வாட்ச்சை பார்த்தவன், அட... ராக்போர்ட் வருகிற டையமாயிற்றே... என்று பதறினான். ஓடு ஓடி அவளை காப்பாற்று!

     அவன் சட்டென்று ஓட ஆரம்பித்தான். ராக்போர்ட், டவுன் ஸ்டேஷனிலிருந்து டாடா சொல்லிக்கொண்டு கிளம்பிற்று. வழியில் யாராவது இருந்தால் ஓதுங்கிக் கொள்ளுங்கள் என்று சங்கு வைத்து அது தன் வேகத்தை அதிகப்படுத்தியது.

     கார்த்திக் பேலன்ஸை தவறவிடாமல் தண்டவாளத்தில் ஓட ஆரம்பித்தான். ஏ... பெண்ணே, நில், நில்! என்று கத்த வேண்டும் போலிருந்தது வேண்டாம். நாம் வருவது தெரிந்தால் அவளும் ஓடக்கூடும் அவளுக்குத் தெரியாமலேயே ஓடி காப்பாற்றுவோம்.

     ரதிலா இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்க்கவில்லை. அவள் மனது ஒரே திசையிலேயே இருந்தது. நாம் சாக வேண்டும். நம் அப்பா அம்மாவிற்கு நம்மால் அவமானம் தான். அவர்கள் நமக்காக எவ்வளவோ சகித்திருக்கிறார்கள் தங்கள் தேவைகளை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நமக்காக கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

     அவற்றிற்கெல்லாம் நாம் திருப்பி வாங்கித் தந்தது அவமானமும் கேலி பேச்சுக்களும் தான் இதோ எல்லாவற்றிற்கும் இன்னும் சில நொடிகளில் தண்டனை கிடைக்கப் போகிறது. இந்த ரதிலா பீஸ் பீஸாய் ர...தி...லா...வாகப் போகிறாள்.

     ரயில்பாட்டிற்கு ஓடிக்கொண்டேயிருக்கும். நாளைய பேப்பரில் கல்லூரிப் பெண் ரயில் பாலத்தில் தற்கொலை என போட்டு நம் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். அதன் பின் இந்த ரதிலாவின் கேரக்டர் மோசமாய் பேசப்படாது. யாரும் அவளுக்காக மாப்பிள்ளை பார்க்கத் தேவையில்லை.

     தூரத்தில் ரயிலின் வெளிச்சமும், தடக் தடக்கும் கேட்க. ரதிலா இரண்டு தண்டவாளங்களுக்கிடையே அமர்ந்து தலையை முட்டியில் சரித்துக் கொண்டாள்.

     பத்து...ஒன்பது...எட்டு...ஏழு...இதோ ரயில் வருகிறது. ஆறு...ஐந்து...நான்கு...இதோ நெருங்கிவிட்டது. மூன்று...இரண்டு...

     ரயில் அவளை நெருங்கிட்ட கிளைமாக்ஸ் நொடியில் கார்த்திக் அவளை அப்படியே குத்துக்கட்டாய் தூக்கிக் கொண்டு சைடில் கட்டப்பட்டிருந்த கேபினில் சரணடைந்தான்.

     அவள், “விடு... விடு...என்னை” என்று திமிர, அவனுடைய பிடி அவளை இறுக்கியிருந்தது. “யார் நீங்கள்... என்னை எதற்காக காப்பாற்றினீர்கள்?”

     அவன் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ரயில் கடக்கும் வரை காத்திருந்துவிட்டு, “என்ன கேட்டாய்?” என்றான் அமைதியாய். அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.

     அவள் அவனை உதறிக்கொண்டு சை! என்றாள், “பாவிகள்” வாழவும் விட மாட்டார்கள்! சாகலாம் என்று வந்தால் அதற்கும் கூட இடைஞ்சல்!”

     “பார்த்தால் படித்த பெண் மாதிரி இருக்கிறாய். நீ இந்த காரியத்தில் இறங்கலாமா... தற்கொலை பண்ணிக் கொள்கிற அளவிற்கு உனக்கு என்ன பிரச்சனை?”

     அவள், “தெரிந்து ஆகப் போகிறதென்ன...?” என்று நடந்தாள்.

     “ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் எனக்கும் காரணம் புரியும். உனக்கும் ஒரு ஆசுவாசம் பிறக்கும்.”

     “என்னை யாருக்கும் வேண்டாம். நான் ஒரு அவமான சின்னம். அப்புறம் ஆசுவாசம் மட்டும் எதற்காம்!”

     “காதல் தோல்வியா?” என்று அவன் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான். தீக்குச்சி வெளிச்சத்தில் அவள் முகத்தையும் கண்களையும் பார்த்து “இத்தனை அழகாய் இருக்கிற உனக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்...?”

     “என் அழகுதான் எனக்கு எதிரி. இப்போ நீங்களும்.”

     “ஆமாம், நான் உங்கள் எதிரில் இருப்பதால் எதிரிதான்.” என்று சிரித்தான்.

     “உங்க பெத்தவங்க உங்களை எப்படி கூப்பிடுவாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

     “அவமான சின்னம்னு”

     “அப்படி ஒரு சின்னம் இருக்கிறதே இப்போதானே தெரியுது” என்று சிரித்தான். ‘நான் கேட்பது உங்க பெயரை.’

     அவள் அவனை முறைத்துவிட்டு ரோடில் இறங்கினாள். “ரதிலா” என்றாள் விரைப்புடன்.

     “ரதிலா! பொருத்தமான பெயர்! பை-த-பை உங்களுக்கு என்ன பிரச்சனை... என்ன கஷ்டம்னு இதுவரை சொல்லவேயில்லையே... !”

     “சொன்னால்...”

     “தீர்த்து வைக்க முயல்வேன்.”

     “எனக்கு உடனடியாக ஒரு மாப்பிள்ளை தேவை. பார்த்து கட்டி வைப்பீர்களா...?”

     “ப்பூ இவ்ளோதானே!” என்று அவன் சிகரெட்டை தூக்கி எறிந்தான். தன் பாக்கெட்டிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்து அவளிடம் நீட்டி, நாளை காலையில் பத்து மணிக்கு இந்த அட்ரஸில் என்னை வந்து பாருங்கள்!” என்றான் ஷ்யூராய்.

     “என்ன அப்படி பார்க்கிறீர்கள்? என் மேல் நம்பிக்கை இல்லையா?”

     “என் மேலே எனக்கு நம்பிக்கையில்லை.”

     “ஏன் நாளை வரை உயிரோடு இருப்போமா என்றா... கவலையே வேண்டாம். இனி உங்களால் இன்னொரு முறை தற்கொலைக்கு முயல முடியும்னு நான் நம்பலை. இனி உங்களால் முடியாது!”

     “ஏன் முடியாது...?

     “உன்னால் இனியும் முடியும் என்று நம்புகிறாயா...? அதோ ஒரு குட்ஸ் வருகிறது. அது இங்கே வந்து சேருவதற்குள் உனக்கு அவகாசம் இருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. போ, நான் உன்னை தடுக்கவில்லை. விஷ் யு ஆல் சக்ஸஸ்!”

     அவன் சொல்லிவிட்டு ஸ்கூட்டாரிடம் போனான்.

     “ஏன் இன்னும் நிற்கிறாய் பெண்னே? சாக மனமில்லையா, இல்லை தைரியமில்லையா... அது தான் சொன்னேனே... உன்னால் முடியாது! இப்போதாவது ஒத்துக் கொள்கிறாயா”

     அவள் பதில் சொல்லவில்லை. மவுனமாய் அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. கலங்கி சொட்டு சொட்டாய் கீழே இறங்கின.

     “அழுகிறாயா... நன்றாய் அழு! பாரம் குறையும் மனது லேசாகும். நாம் எத்தனை பெரிய அபத்தம் செய்யவிருந்தோம் என்று வெட்கம் வரும். சிந்திக்க சிந்திக்க குழப்பம் விலகும். நாமும் ஏன் வாழக் கூடாது, வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வெறி வரும். நான் சொல்வதெல்லாம் நிஜம்தானே...?”

     அவள் இப்போது தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

     “எப்படி இத்தனை துல்லியமாய் உன் மனதை கலைக்கிறேன் என்று வியக்கிறாயா... எனக்கு கொஞ்சம் மனோதத்துவம் தெரியும். பிறரின் மனோ நிலையை எடை போட்டு விட பயின்றிருக்கிறேன். இஃப் யு டோன்ட் மைன்ட் உன் பிரச்னையை என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதுவும் கூட இப்போதே வேண்டுமென்பதில்லை. நாளையோ, நாளை மறுநாளோ இந்த அட்ரஸில் என்னை தொடர்பு கொள்ளலாம்!”

     அவன் ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணி, வண்டியை திருப்பினான். “நீ எங்கே போக வேண்டும். ஏறி உட்கார். சிந்தாமணி வரை கொண்டு விடுகிறேன். அங்கிருந்து ஆட்டோ பிடித்துக்கொள்!”

     அவள் செலுத்தப்பட்டது போல ஏறி அமர்ந்தாள். கார்த்திக் சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் அவளை இறக்கி விட்டு, “ஆட்டோவுக்கு காசு இருக்கிறதா?” என்று கேட்டு “சீ நான் ஒரு மடையன்! தற்கொலை பண்ணிக் கொள்ள வந்தவள் காசுடனா வருவாள்? இந்தா இதில் இருபது ரூபாய் இருக்கிறது போதுமா...?”

     அவள் வாங்கிக் கொண்டு அவன் கண்களையே பார்த்தாள். அவைகள் கலங்கியிருந்தன. அவனுக்கு நன்றி சொல்லின.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles