கண்கள் மயங்கிய போது...  

                            

       

     “அப்போ நான் கிளம்பட்டா ரதிலா?”

     அவள் சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டு, “இந்த பணத்தை நாளை திருப்பி தந்து விடுகிறேன்” என்றாள்.

     “நல்லது. அப்போ, நாளை என்னைத் தேடி வருகிறேன் என்கிறீர்கள்! ஏய்...ஆட்டோ இந்தம்மாவை பத்திரமா கொண்டு போய் விட்டிருப்பா!” என்று அவளை ஏற்றிவிட்டான்.

     ரம்பா, ஊர்வசி தியேட்டருக்கு அவசராமாய் செகண்ட் ஷோவிற்கு ஓடினவர்களை ஓதுக்கிக்கொண்டு ஆட்டோ பறந்தது. ரதிலாவின் மனதும் பறந்தது. வாழ்வில் ஒரு புது தெம்பும் திருப்பமும் ஏற்பட்டது போன்ற உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது.

     மறுநாள். கார்த்திக்கின் அலுவலகத்தைத் தேடி ரதிலா நடந்தாள். அவனுடைய அலுவலகம் சிங்காரத் தோப்பில் ஜோதிஸ் டைலரிங்கை தாண்டி ராக்ஸி தியேட்டரின் எதிர் சந்திற்குள் இருந்தது.

     அந்த தெருவே எலக்ட்ரானிக் உபகரணங்களினால் மின்னியது பாட்டுக்களும் மியூசிக்கும் காதுகளை பிளந்தன. அவளுக்கு இந்த அலுவலகத்தை கண்டுபிடிக்க அதிக சிரமப்பட வேண்டியிருக்கவில்லை.

     “ரதி! ப்ளீஸ் டேக் யுவர் சீட்!”

     அவள் அமர்ந்து ரூமை வட்டமடித்தாள், அது டிராவல் ஏஜன்ஸியாக இருக்க வேண்டும். பஸ், லாரி, ரயில், விமானம் என்று எல்லாவற்றின் அட்டவணைகளும் சுவற்றில் தொங்கின. மர செல்ஃப்புகளில் பில் புத்தகங்கள்.

     “அப்புறம் என்ன சாப்பிடுகிறீர்கள்...?”

     “இந்தாருங்கள்!” என்று அவன் நேற்று கொடுத்த இருவது ரூபாயை நீட்டினாள்.

     “அப்போ நமக்குள்ள கணக்கு தீர்ந்து போச்சு!” என்று சிரித்தான். கால் வைக்கும் இடத்திலிருந்த பட்டனை அழுத்தி, பையன் ஓடி வந்ததும் “ரெண்டு கூல்டிரிங்ஸ்!” என்றான்.

     அவள் மறுக்கவில்லை. கூல்டிரிங்ஸ் வந்ததும் எடுத்து உறிஞ்சினாள். அவர்களுள் மவுனம். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த போதெல்லாம் அவளுடைய கண்கள் படபடத்தன. நெஞ்சு அடித்துக்கொண்டது. இனம் புரியாமல் அது என்ன சந்தோஷமா இல்லை பயமா என்று இனம் புரியாமல் என்னவோ ஒன்று உள்ளத்தை பிசைந்தது.

     “சரி, மவுனம் போதும். என் மேல், என் வார்த்தைகளின் மேல் உனக்கு நம்பிக்கை வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உன் பின்னணியை தெரிந்து கொள்ளலாமா...?”

     “இங்கே தரகு ஏஜன்ஸிகூட வைத்திருக்கிறீர்காள?”

     அவள் அப்படிக் கேட்டதும் அவன் சட்டென்று சிரித்து விட்டான்... “பரவாயில்லையே! சரியான கிண்டல் பேர்வழி போலிருக்கிறதே நீங்கள்! ஆமாம், தரகுகூட ஒரு பிசினஸ்தானே... சொல்லுங்கள், உங்களுக்கு, எத்தனை மாப்பிள்ளைகள் வேண்டும்?”

     “மாப்பிள்ளை எனக்காக இல்லை. எங்கள் பெற்றோர்களுக்காக. அவர்களது நச்சரிப்பிற்காக. அவர்களது சந்தோஷத்திற்காக என்றும் சொல்லலாம்.”

     “அப்போ உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு கணவர் வேண்டாம், உங்கள் பெற்றோர்களுக்கு மருமகன் வேண்டும் அப்படித்தானே! இண்ட்ரஸ்டிங்? உங்ககேஸ் வினோதமாயிருக்கு!”

     ‘வினோதம் மட்டுமில்லை, விகாரம்கூட.”

     “இப்படி ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தையோட நிறுத்திகிட்டா எப்படி... முழுசா பேசுங்க.”

     அவள் சுவற்றை வெறித்துக்கொண்டு தன் கதையை சொல்லி முடித்தாள். அதுவரை விரக்தியாய் பேசி வந்தவளின் குரல் சொல்லி முடித்ததும் கம்மிப் போயிற்று. கண்கள் கலங்கிப் போயிருந்தன.

     “இப்போது சொல்லுங்கள் நான் ஒரு அவமான சின்னம் தானே’ ஓடுகாலி! நான் ஒரு பீடை! தறுதலை! குடும்பத்திற்கு ஆகாதவள். கழிவு! என்னை யாருக்கும் வேண்டாம். சரி, செத்துப் போகலாம் என்று கிளம்பினால் ரயிலுக்குக் கூட என்னை வேண்டாம்!”

     “ரொம்பவும் உடைந்து பேசுகிறாய் நீ! இன்னொரு கூல்டிரிங்ஸ் சாப்பிடுகிறாயா” என்று கேட்டுவிட்டு, “முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் நல்லது.”

     “உங்கள் உபதேசம் எனக்கு வேண்டாம். உபதேசம் என்றாலே வெறுப்பாய் வருகிறது. அதுவும் ஆண்களின் உபதேசம்! சே...இந்த ஆண்களே நயவஞ்சகர்கள். சுயநலவாதிகள்!”

     “ஸ்டாப்! ஸ்டாப்! ரொம்பவே சபிக்கிறீங்க! சரியான கண்ணகி பரம்பரை போலிருக்கு. இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”

     “எனக்கில்லை, எங்க வீட்டினருக்கு!”

     “சரி, அவங்களுக்குதான்-ஒரு கல்யாணம் தேவை. அவ்ளோதானே. இனி என் பொறுப்பு”

     “மாப்பிள்ளை என்பவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவனுக்கு என் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். அவன் முழு மனதுடன் சம்மதிக்க வேண்டும்.”

     சொல்லிவிட்டு சட்டென்று எழுந்து கொண்டாள் “எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். அப்பா-அம்மா வெளியே போன தருணம் பார்த்து வந்தேன். முன்பு மாதிரி இப்போது நினைத்த நேரத்தில் வெளியே போக முடியாது. எனக்கு 144 சட்டம்!”

     ரதிலா இன்னும் கொஞ்ச நேரம் இருக்க மாட்டாளா என்றிருந்தது அவனுக்கு. நேற்று பார்த்தவளுக்கும் இன்று பார்ப்பவளுக்குமிடையே நல்ல வித்தியாசம் இருப்பதாய் அவன் உணர்ந்தான்.

     அவள் இன்னும் வருவாள், அவளுடைய மனதை சுத்தமாய் மாற்றிவிட முடியும் என்றும் நம்பினான்.

     வீட்டிற்கு வந்த ரதிலாவிற்கு எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

     அப்பா-அம்மாதான் கல்யாணம் கல்யாணம் என்று அலைகிறார்கள் என்றால் நாமும் கூடவா? இந்த சூழ்நிலையில் நமக்கு கல்யாணம் தேவையா? கல்யாணத்திற்கு பிறகு நம்மால் இயல்பாய் வாழ முடியுமா?

     அவளுக்கு குழப்பமாயிருந்தது. நாம் யாருக்காக வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்கிற மாதிரி சிந்தனைகள் மறுபடியும் போயின. கதவு ஜன்னல்களை மூடிக்கொண்டு அறைக்குள் அமர்ந்து சுவற்றை வெறிக்க வெறிக்க பார்த்தாள். அவளுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை.

     குளிக்க வேண்டி பாத்ரூமிற்குப் போனால் தண்ணீரை திறந்து விட்டு விட்டு வெறுமனே நிற்பாள். பல் விளக்க பிரஷ் எடுத்தால், பேஸ்டை பிதுக்கிவிட்டு சூன்யமாகி விடுவாள்.

     முன்பெல்லாம் தினம் ஒரு டிரஸ், தினம் ஒரு தலை அவங்காரம் என்றிருந்தவள் இப்போது ஏனோதானோ என்றாகிவிட்டிருந்தாள். இதே நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது அவளுக்கே புதிராயிருந்தது.

     நான்கு நாட்களுக்குப் பிறகு ரதிலா. அம்மாவிற்கு தலைவலி என்று மாத்திரை வாங்கப் போன போது கடை வீதியில் கார்த்திக்கை சந்திக்க நேர்ந்தது.

     அவன் ஸ்கூட்டரில் வழி மறித்து, “என்னை ஞாபகமிருக்கிறதா...” என்று புன்னகைத்தான்!

     இதே பழைய ரதிலாவாயிருந்தால், “ஓ நீங்கதானே குண்டக்கல் கோவிந்தராசு!” என்றிருப்பாள். ஆனால் இப்போது பதில் ஒன்றும் பேசவில்லை.

     “என்னுடன் சேர்ந்து ஒரு காபி சாப்பிடுவதில் ஆட்சேபனை இல்லையே...?”

     அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, “ப்ளீஸ்” என்று பக்கத்து ஹோட்டலுக்குள் நுழைந்தான். அவளையறியாமலேயே அவனை பின் தொடர்ந்தாள்.

     அவன் ஏஸியறைக்குள் புகுந்து, “உட்காருங்கள், பேசினபடி காபி மட்டும் போதுமா இல்லை...”

     அங்கே சீட்கள் எல்லாம் காலியாக இருந்தது அவனுக்கு சந்தோஷம் தந்தது. பேரரை அழைத்து, “காபி மட்டும் போதும் அதுவும் அரை மணி நேரம் கழித்து தந்தால் போதும்” என்று கிசுகிசுத்தான்.

     “அப்புறம்? என் அலுவலகத்திற்கு வருவாய் என்று எதிர்பார்த்தேன். என் மேல் நம்பிக்கை வரவில்லை என்று நினைக்கிறேன்.”

     இதற்கும் அவள் மவுனம். அவள் கண்கள்தான் படபடத்தன. அவள் பேரர் வருகிறாரா என திரும்பி பார்த்து விட்டு தன் வாட்சை பார்த்தாள்.

     ‘நேரமாகிறாதா சரி, சுருக்கமாய் விஷயத்திற்கு வருகிறேன். உனக்கு வேண்டியது மாப்பிள்ளைதானே. நான் பரவாயில்லையா...?”

     அவன் அப்படி கேட்பான் என்று அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை, அவள் சட்டென நிமிர்ந்து அமர்ந்து. “என்ன சொல்கிறீர்கள்...”

    “நான் சொன்னதுதான்!”

     “விளையாடுகிறீர்களா?”

     “நீ சம்மதித்தால் விளையாட தாயார்!”

     “என் பின்னணி தெரிந்திருந்தும் கூட மனப்பூர்வமாய் தான் கேட்கிறீர்காள?”

     “மனப்பூர்வமாய்தான்! மணப்போமா?”

     “அனுதாபத்தால் இந்த முடிவா?”

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19

தொடரும்

More Profiles